ர்நாடக மாநிலம் குடகு மலையில் உற்பத்தியாகி தமிழகத்தின் வழியாக பாய்ந்தோடி வங்காள விரிகுடாவில் கலக்கின்ற வரை 800 கிமீ பாயும் காவிரி நதியானது, தமிழகத்தில் நீர் ஆதாரங்களிலும் முக்கியமான ஒன்றாகும்.

காவிரி டெல்டா பாசன மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கரூர், புதுக்கோட்டை, திருச்சி, அரியலூர் மட்டுமின்றி தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்கள் உள்ளிட்டு காவிரி நதிநீரை நம்பி தான் விவசாயத்தை செய்து வருகிறது.

இந்த நிலையில் கர்நாடகத்தில் உள்ள காவிரியின் நீர் வழங்குகின்ற அணைக்கட்டு பகுதிகளில் நீர் வரத்து குறைந்து போனாலும் அல்லது நீரின் அளவு குறைந்து போனாலும் தமிழகத்தின் தலையில் கை வைப்பதற்கு காரணமாக காட்டுவதை கர்நாடகா அரசு வாடிக்கையாக வைத்துள்ளது.

கர்நாடகாவில் காவிரியின் மீது கட்டப்பட்டுள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி, ஹேமாவதி, ஹேரங்கி ஆகிய அணைக்கட்டுகள் அனைத்தும் நிரம்பி வழிந்து, இனியும் தேக்கி வைக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டால் மட்டும்தான் உபரியான தண்ணீர், தமிழகத்திற்கு திறந்து விடப்படுகிறது. மற்றபடி தமிழகத்தின் உரிமை என்ற அடிப்படையில் காவிரி நீர் தரப்படுவதில்லை.

கிட்டத்தட்ட 226 ஆண்டு கால போராட்டம், 2007-ல் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பினால் முடிவுக்கு வந்தது. அதன் பிறகு அந்த தீர்ப்பு 2013 ஆம் ஆண்டு இந்திய ஒன்றிய அரசின் அரசிதழில் (கெஜட்) வெளியிடப்பட்டது. அதன் மீது எழுப்பப்பட்ட வழக்குகள் அனைத்து 2018 முடித்து வைக்கப்பட்டது. காவிரியில் தமிழகத்தின் உரிமையை பாதுகாக்க வேண்டும் என்பதை உச்ச நீதி மன்றம் உத்தரவிட்ட பிறகும், ஒவ்வொரு மாதம் மற்றும் காலாண்டுகளில் ஒழுங்காக நீர் திறந்து விடப்படுகிறதா என்பதை கண்காணிப்பதற்கு காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்று குழு அமைக்கப்பட்ட பிறகும் இதுதான் நிலைமை.

நடைமுறையில் இந்த தீர்ப்புகள், ஆணைகள் எதையும் கர்நாடகா அரசு, அது பாரதிய ஜனதா கட்சியாக இருந்தாலும் சரி, காங்கிரஸ் கட்சியாக இருந்தாலும் சரி மதிப்பதே கிடையாது.

கடும் வெப்ப அலை உருவாகி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தண்ணீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடி வருகிறது. இந்த சூழலில் குடிநீருக்காக கூட காவிரியை திறந்து விட முடியாதபடிதான் தமிழகத்தின் மேட்டூர் அணை நிலைமை உள்ளது.

உச்ச நீதிமன்ற இறுதி தீர்ப்பின்படி, தமிழகத்துக்கு 2023 ஜூன் மாதத்தில் இருந்து 2024 ஏப்ரல் 28-ம் தேதி வரை கர்நாடக அரசு 174.497 டிஎம்சி நீர் திறந்துவிட்டிருக்க வேண்டும். ஆனால்,78.728 டிஎம்சி மட்டுமே திறக்கப்பட்டுள்ளது. இன்னும் 95.770 டிஎம்சி நீர் நிலுவையில் உள்ளது.

இதுதவிர, பிப்ரவரி முதல் ஏப்ரல் 28 வரை பிலிகுண்டுலுவில் 7.333 டிஎம்சி நீரை சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக கர்நாடகா திறந்துவிட்டிருக்க வேண்டும். ஆனால், இதுவரை 2.016 டிஎம்சி மட்டுமே திறக்கப்பட்டுள்ளது. இதில், 5.317 டிஎம்சி நிலுவையில் உள்ளது.

தற்போது மேட்டூர் அணையில் 20.182 டிஎம்சி நீர் இருப்பில் உள்ளது. குடிநீர் தேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக தினமும் 1,200 கன அடி நீர்திறக்கப்படுகிறது. கர்நாடகாவில் உள்ள4 அணைகளின் நீர் இருப்பை கணக்கிட்டு, தமிழகத்துக்கு மே மாதத்தில் வழங்க வேண்டிய 25 டிஎம்சி நீரை திறக்க உத்தரவிட வேண்டும். சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான 2.5 டிஎம்சி நீரையும் கர்நாடகா திறந்துவிட வேண்டும்.

ஆனால் கர்நாடகா தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது என்று பிடிவாதமாக முன்வைக்கின்றது. கர்நாடகத்தின் அணைக்கட்டுகளில் போதுமான தண்ணீர் இருந்தால் மட்டும்தான் திறந்து விட முடியும் என்று வாதம் புரிவது ஒரு பித்தலாட்டமே.

சட்டத்தின் படியும் சரி, சமூக நீதியின் பதிலும் சரி, சர்வதேச நதிநீர் பங்கீடு தொடர்பான வழிகாட்டுதல்கள் அடிப்படையிலும் சரி, இறுதியாக உச்சநீதிமன்றம் கொடுத்துள்ள இறுதி தீர்ப்பு அடிப்படையிலும் சரி தமிழகத்திற்கு காவிரி நதி நீரில் முழு உரிமை உள்ளது.

காவிரி எங்கு உற்பத்தியாகிறதோ அந்தப் பகுதிக்கு காவிரியில் என்ன உரிமை இருக்கிறதோ? (தலை மடை) அதே உரிமை, அது கடலில் சென்று சேருகின்ற பகுதிகளுக்கும் (கடை மடை) இருக்கின்றது என்பதுதான் நதிநீர் மேலாண்மை பற்றிய அறிவியல் பூர்வமான வழிகாட்டுதலாகும்.

ஆனால் இதையெல்லாம் கர்நாடக அரசு ஒருபோதும் ஏற்றுக் கொள்வதில்லை தொடர்ச்சியாக போராடுவதன் மூலம் அல்லது ஒரு சில சமயங்களில் உச்ச நீதிமன்றம் உத்தரவிடுவதன் மூலம் குறைந்தபட்ச அளவு தண்ணீரை கர்நாடக அரசு திறந்து விடுகிறது.

முதன்மை பணியாக காவிரியில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டுவதற்கு ஒரே குரலாக தமிழக மக்கள் ஒன்றிணைந்து போராட வேண்டும். எழுந்து நிற்க வேண்டும். தமிழகத்தை ஆளும் திமுக, கர்நாடகாவை ஆளும் காங்கிரஸ், இந்தியா கூட்டணியில் உள்ளது என்பதை மனதில் வைத்து மென்மையாக அணுகுவது, மீண்டும் மீண்டும் உச்ச நீதிமன்றத்திற்கு சென்று வழக்கு தொடர்வது, பேச்சுவார்த்தை என்று நடத்தப்படும் நாடகங்களுக்கு தமிழக மக்களை பலியாக்குவது போன்ற அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். கர்நாடகத்திற்கு எதிரான அனைத்து வகையான முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும், தமிழகத்திற்கு தேவையான நீரைப் பெற்றுத் தர வேண்டும்.

இரண்டாம் பட்சமாக தமிழகத்தில் உள்ள அனைத்து ஏரிகள், குளங்கள், மற்றும் அணைக்கட்டு பகுதிகளில் கோடைக்காலமான தற்போது தண்ணீர் இல்லாத நிலைமையை பயன்படுத்திக் கொண்டு போர்க்கால அடிப்படையில் தூர்வாரப்பட வேண்டும். ஆறுகள், வாய்க்கால்கள் செப்பனிடப்படுவது உடனடிப் பணியாக மேற்கொள்ளப்பட வேண்டும்.

இதையும் படியுங்கள்:

காவிரி நீரை பெற்று தருவது தொடர்பாக தமிழகத்தில் நடந்த போராட்டங்களில் புரட்சிகர அமைப்புகளின் பங்கு குறிப்பிடத்தக்கது 1985 ஆம் ஆண்டு துவங்கி 2023 வரை பல்வேறு காலகட்டங்களில் டெல்டா பாசன பகுதிகள் மட்டுமின்றி, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பல்வேறு வகையான போராட்டங்களை நடத்தியது புரட்சிகர அமைப்புகள்.

காவிரியில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டுகின்ற வகையில் பல்வேறு துண்டு பிரசுரங்கள், ”தன்னுரிமை கேட்டால் தண்ணீர் தானாக வரும்” என்ற முழக்கத்தை முன்வைத்த வெளியீடு முதல் மேலும் வகையான வெளியீடுகள் வரை தயாரித்து பல்லாயிரக்கணக்கான பிரதிகள் தமிழகத்தில் விநியோகம் செய்தது, தெருமுனைக் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், மறியல்கள் பொதுக்கூட்டங்கள், நடைப்பயணம், உள்ளிட்டு தமிழக மக்களின் வாழ்வுடன் ஒன்றியுள்ள காவிரியின் மீதான தமிழகத்தின் உரிமைப் போரை பாட்டாளி வர்க்க பார்வையுடன் நடத்தியுள்ளது புரட்சிகர அமைப்புகள்.

அதே உணர்வுடன் தற்போது கர்நாடக காங்கிரஸ் அரசு செய்துவரும் அடாவடித்தனங்களுக்கு எதிராக தமிழகத்தின் நீர் தேவையை முன்னிறுத்தி தமிழகத்தின் வீதியெங்கும் போர்க்குணமிக்க போராட்டத்தை நடத்துவோம்.

  • மருது பாண்டியன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here