கடந்த வாரத்தில் டெல்லியில் சட்டவிரோத முறையில் சமூக செயல்பாட்டாளர்களை கடத்துவது, கட்டாயமாக காணாமல் அடிக்கப்படுவது மற்றும் செயற்பாட்டாளர்கள் டெல்லி போலீசின் காவலின் கீழ் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்ட சம்பவங்கள் அதிர்ச்சியூட்டும் வகையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.
அரசு அடக்குமுறைக்கு எதிரான பிரச்சாரம் (CASR) படி, ஜூலை 9 ஆம் தேதி, பகத்சிங் சத்ரா ஏக்தா மஞ்சை சேர்ந்த மாணவர் ஆர்வலர்கள் கௌரவ், குர்கிராய் மற்றும் கௌராங் ஆகியோர் கைது வாரண்ட் இல்லாமல் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
இரண்டு தினங்களுக்கு பிறகு ஆபரேஷன் ககார் என்ற பெயரில் பழங்குடிகள் மற்றும் மாவோயிஸ்டுகளுக்கு எதிராக நடத்தப்படும் பயங்கரவாத தாக்குதல்களை எதிர்த்து உருவாக்கப்பட்டுள்ள நிறுவனமயமாக்கல் மற்றும் இராணுவமயமாக்கலுக்கு எதிரான மன்றத்தைச் சேர்ந்த எஹ்தெமாம்-உல் ஹக் மற்றும் பாதல் ஆகியோரும் டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவால் கைது செய்யப்பட்டனர். உளவியலாளரும், சமூக ஆர்வலருமான சாம்ராட் சிங், ஜூலை 12 அன்று ஹரியானாவில் உள்ள அவரது வீட்டிலிருந்து எந்த சட்ட அறிவிப்பும் இல்லாமல் கைது செய்யப்பட்டார்.
ஜூலை 19 அன்று, மற்றொரு ஆர்வலர் ருத்ரா புது தில்லி ரயில் நிலையத்தில் இருந்து காணாமல் போனார், இன்னும் காணவில்லை.
டெல்லி பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மத்தியில் வேலை செய்து வரும் பகத்சிங் சத்ரா ஏக்தா மன்ச் என்ற அமைப்பைச் சார்ந்த மாணவர் செயல்பாட்டாளர்களை கொடூரமான முறையில் சித்திரவதை செய்துள்ளது அம்பலமாகியுள்ளது.
இவர்கள் கைது செய்யப்பட்டதை பற்றி குடும்பத்திற்கோ அல்லது வெளி உலகத்திற்கு தெரியாத வகையில் ரகசியமாக வைத்திருந்ததன் மூலம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள குற்றவியல் சட்ட திருத்தத்தின் அடிப்படையில் அனைவருக்கும் பாதுகாப்பு வழங்கப்படும் என்று மாய்மாலம் செய்து வந்த ஆர்.எஸ்.எஸ் பாஜகவின் முகமூடி கிழித்தெறியப்பட்டுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் மீது உடனடியாக எந்தவிதமான முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்படவில்லை என்பது மட்டுமின்றி கைது செய்யப்பட்டவர்களின் குடும்பங்களுக்கும் தகவல்கள் எதையும் தெரிவிக்கவில்லை.
அதைவிட கொடுமையாக அவர்களை டெல்லியின் சிறப்பு போலீஸ் பிரிவு நிர்வாணப்படுத்தியும், பிறப்புறுப்புகளில் மின்சாரத்தை பாய்ச்சியும், கழிப்பறைக்குள் அவர்களின் தலையை மோதி சித்திரவதை செய்தும், தலையை தண்ணீருக்குள் மூழ்க வைத்து மூச்சு திணற வைக்கின்ற கொடூரமான சித்திரவதை முறைகளை கையாண்டு தாக்குதலை நடத்தியுள்ளது என்பவை அனைத்தும் மனித உரிமை அமைப்புகளின் அறிக்கைகள் மற்றும் வட இந்திய ஊடகமான முஸ்லிம் மிரர் போன்ற பத்திரிகைகளில் வெளியாகி உள்ளது.
2026 மார்ச் மாதத்திற்குள் மாவோயிஸ்டுகளை இந்தியாவில் இருந்து துடைத்தெறிந்து விடுவோம் என்று கொக்கரித்து வரும் உள்துறை அமைச்சரான அமித்ஷா மற்றும் இந்திய ஒன்றியத்தின் பிரதமரான மோடி கூட்டணி சட்டவிரோதமான முறையில் உள்நாட்டு உளவு நிறுவனமான ரா மற்றும் ஐபி ஆகியவற்றுடன் இணைத்து கொலைகாரப்படையான என்ஐஏ ஆகியவற்றை கையாண்டு வருகிறது.
அரசியலமைப்புச் சட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ள மனித உரிமைகள் பற்றியோ அல்லது அவர்களே முன் வைத்துள்ள புதிய குற்றவியல் சட்டத் திருத்தங்களின் அடிப்படையிலோ இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதில்லை.
சொந்த நாட்டு மக்களுக்கு எதிராக கார்ப்பரேட் கும்பலின் நலனுக்காகவும், பார்ப்பன பாசிசத்தை அமல்படுத்துகின்ற வகையிலும் கொடூரமான பச்சை படுகொலைகளை நிகழ்த்தி வருவது மட்டுமின்றி, ரத்தத்தை உறைய வைக்கும் கொடூரமான காட்டுமிராண்டித்தனமான போலீஸ் சித்திரவதை முறைகளையும் கையாண்டு வருகின்றனர்.
மாவோயிஸ்டுகளின் தலைமை கமிட்டி முதல் அதன் மக்கள் விடுதலை ராணுவம் என்ற பெயரில் செயல்பட்டு வரும் மக்கள் விடுதலை கொரில்லா ராணுவத்தை முற்றாக அழித்தொழிப்பது என்ற கண்ணோட்டத்தில் ராணுவ பயங்கரவாத நடவடிக்கைகளை தொடர்ச்சியாக ஏவி விடுகிறது ஆர்எஸ்எஸ் பாஜக பாசிச கும்பல்.
பாசிச பயங்கரவாத ஆட்சியின் கீழ் சொல்லிக்கொள்ளப்படும் அரசியலமைப்புச் சட்டம் செயல்பாட்டை இழந்துள்ளது என்பது மட்டுமின்றி தனது அரசு பயங்கரவாத நடவடிக்கைகளை நியாயப்படுத்துவதற்கு பொருத்தமாக சட்ட திருத்தங்களை உருவாக்கிக் கொண்டு சட்டப்படி ஆட்சி நடத்துவதாக பாசிஸ்டுகள் இந்திய மக்களை ஏய்த்து வருகின்றனர்.
பாசிசத்தின் தோற்றுவாயான நிதி மூலதனத்தின் ஏகபோக அதிகாரம், ஆகக்கொடுமையான தன்மை கொண்ட ஆதிக்கம் மற்றும் சுரண்டல் கொள்ளை ஆகியவற்றை பற்றி ஓரளவு புரிந்து கொண்டுள்ள இடதுசாரி அமைப்புகள் கூட இன்னமும் இந்தியாவில் பாசிசம் அதிகாரத்திற்கு வரவில்லை என்று பழைய பல்லவியை பாடி வருகின்றனர்.
படிக்க:
♦ டெல்லி பல்கலைக்கழகத்தில் கல்வியை காவிமயமாக்கும் முயற்சி!
♦ பரோலில் குர்மீத் ராம் ரஹிம் – சிறையில் உமர் காலித்! ஓர் ஒப்பீடு!
மதுரையில் அகில இந்திய மாநாடு நடத்திய சிபிஎம் கட்சியினாரோ இந்தியாவில் நவ பாசிசம் உள்ளது என்று பாசிசத்தை பற்றிய வரையறையை நீர்த்துப்போக செய்துள்ளனர்.
நாட்டையும், நாட்டு மக்களையும், நாட்டு மக்களுக்காக போராடுகின்ற உண்மையான தேசப்பற்றாளர்களையும் எந்தவிதமான வரையறையும் இன்றி கொடூரமான அடக்குமுறையின் கீழ் அவர்களை சிறையில் அடைப்பதும் கொலைகாரப்படையான என்ஐஏ நிறுவனத்தை பயன்படுத்தி அவர்களை கைது செய்து ஊபா சட்டத்தின் கீழ் அடைப்பதும் தொடர்ச்சியான நிகழ்ச்சி போக்காக மாறி உள்ளது.
ஆயுதமேந்தி போராடுகின்ற மாவோயிஸ்டுகளை, பழங்குடி மக்களை பஸ்தார் காடுகளில் இருந்து முற்றாக அழித்து ஒழிக்கின்ற ராணுவ பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் அதே வேளையில் அதற்கு இணையாகவே நகர்புறத்தில் இத்தகைய அடக்குமுறைகளுக்கு எதிராக சட்டப்பூர்வமான வழியில் அவர்களே முன்வைக்கின்ற ஜனநாயக வழிமுறையில் போராடுகின்ற இயக்கங்களின் மீது அடுத்த சுற்று தாக்குதலை ஆர்எஸ்எஸ் – பாஜக கும்பல் துவங்கியுள்ளது என்பதன் அடையாளம் தான் டெல்லியில் உள்ள செயல்பாட்டாளர்களின் மீது நடத்தப்பட்டுள்ள கொடூரமான சித்திரவதைகள் மற்றும் தாக்குதல்கள் ஆகும்.
இத்தகைய அடக்குமுறைகளை பாட்டாளி வர்க்கத்திடம் எடுத்துச் சொல்லி ஒன்றிணைந்த முறையில் அவர்களை அணிதிரட்டுவதும், சொல்லிக் கொள்ளப்படும் மனித உரிமைகள், அரசியலமைப்பு சட்டம் வழங்குகின்ற அரைகுறை உரிமைகள் அனைத்தும் பாசிச சர்வாதிகாரத்தின் கீழ் துடைத்தெறியப்பட்டுள்ளது என்ற உண்மையை உணர்த்தி அதற்கு எதிரான போர்க்குணமிக்க போராட்டத்தை நடத்துவதும், மக்கள்திரள் பாதையின் கீழ் கோடிக்கால் பூதமாக மக்கள் ஒன்றிணைந்து எழவேண்டிய காலகட்டம் இதுதான்.
இன்று இதற்கு எதிராக போராடவிட்டால் நாளை பாதிக்கப்படக்கூடிய நபர்கள் நீங்களாகவும் இருக்கலாம்.
◾மருது பாண்டியன்.
நன்றி: புதிய ஜனநாயகம் தினசரி







பழங்குடியினர், மாவோயிஸ்டுகள், சமூக செயற்பாட்டாளர்கள், ஜேஎன்யு மாணவர்கள்
என அனைவரின் மீதும் ஆர் எஸ் எஸ் பாசிச பாஜக காவிக் கூட்டம் கட்டவிழ்த்துட்டுள்ள
கொடுமையான தாக்குதல்கள் அனைத்தும் ‘அரசியல் சட்டத்தின் படி – ஜனநாயக மாண்புகளின்படி’ -யே நடத்துகின்றன இந்த சங் பரிவார் கூட்டம். அதனைத் திட்ட தெளிவாக விளக்கியுள்ளார் கட்டுரையாளர் தோழர் மருது பாண்டியன். இந்த பாசிச போக்குகளை சரியான அரசியல் கண்ணோட்டத்தில் புரிந்து கொண்டு அனைத்து புரட்சிகர மற்றும் ஜனநாயக சக்திகள் நாட்டு மக்களைத் திரட்டி களமாடவில்லை என்றால், மாபெரும் மக்கள் அழிவை சந்திக்க நேரிடும் என்பதனை கட்டுரை உணர்த்துகிறது. தோழருக்கு
வாழ்த்துக்கள்.