படைப்பாளி செ.கணேசலிங்கத்திற்கு
 எமது அஞ்சலி!


ஈழத்தில் மார்க்சிய சிந்தனையுடன் இலக்கியங்களை படைத்தவர்களின் முக்கியமான இடத்தைப் பெற்றவர் செ.கணேசலிங்கன். இந்த கண்ணோட்டத்திலிருந்து பெரும்பான்மை மக்களை சென்றடையும் வகையில் எளிய நடையில் நாவல்கள், சிறுகதைகள் சிறுவர் இலக்கியங்கள், சமூக கண்ணோட்டம் சார்ந்த கட்டுரைகள் ஆகியவற்றை எழுதியுள்ளார்.

இலங்கையில் நிலவி வந்த நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பை சித்தரிக்கின்ற புதினங்களை தனது எழுத்தின் மூலமாக வெளிப்படுத்தினார். குறிப்பாக நீண்ட பயணம், சடங்கு, செவ்வானம் ஆகிய மூன்று புதினங்களும் யாழ்ப்பாணத்தை மையமாக வைத்து அங்கு நிலவுகின்ற நிலவுடமை அமைப்பு சிக்கல்களை சித்தரிக்கின்ற வகையில் எழுதப்பட்டிருந்தது என்று ஈழத்தின் மற்றொரு எழுத்தாளர் பேராசிரியர். கைலாசபதி குறிப்பிடுகிறார்.

1980-களில் தமிழகத்திற்கு புலம்பெயர்ந்த பிறகு சென்னையில் குடியேறி குமரன் பதிப்பகம் என்ற பதிப்பகத்தின் மூலமாக தமது நாவல்களையும், படைப்புகளையும் எழுதி வெளியிட்டு வந்தார். எமது மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடான புதிய ஜனநாயகம் மற்றும் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாத இதழான புதிய கலாச்சாரம் ஆகியவற்றுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தார்.

1990-க்கு பிறகு இந்து குழுமத்தின் என்.ராம் மூலம் அதன் ஆங்கில இதழான பிரண்ட் லைன் அலுவலகத்தில் தனி அங்கீகாரம் பெற்று பணியாற்றி வந்தார். வயதில் மூத்தவர் என்ற போதிலும் இளைஞர்களிடம் சகஜமாக பழகும் இனிய குணம் படைத்தவர் என்று அனைவராலும் அங்கீகரிக்கப்பட்டவர்.

ஒரு படைப்பாளி என்ற முறையில் சமகாலத்தில் நிலவுகின்ற சமூகத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்துகின்ற எழுத்துக்களை படைப்பதற்கு முயற்சி செய்தாலும், குறிப்பான சம்பவங்களின் போது உறுதியான நிலைப்பாடுகளை எடுக்காமல் பார்வையாளராக இருந்த குறைபாடு அவரிடம் இருந்தது.

தான் கற்றுக்கொண்ட மார்க்சிய அரசியலை மாணவர்களுக்கு, இளைஞர்களுக்கு, பெண்களுக்கு சென்றடைகின்ற வகையில் நாவல்கள், கட்டுரைகள் எழுதி அதன்மூலம் பாட்டாளி வர்க்கத்திடம் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்துக்கொண்டார். கணேசலிங்கன் சிறுகதைகள், குந்தவிக்கு கடிதங்கள், மான்விழிக்கு கடிதங்கள், குமரனுக்கு கடிதங்கள் போன்றவை இயக்கவியல் பொருள்முதல்வாதத்தையும், சமுதாய வரலாற்று சுருக்கத்தை எளிய முறையில் இளம் தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்தியது.

நீண்ட பயணம் என்ற முதல் நாவலுக்காக இலங்கை அரசின் சாகித்திய அகதமி விருதையும், மரணத்தின் நிழலில் நூலுக்காக தமிழக அரசின் பரிசையும் பெற்றிருந்தாலும், பொதுவுடைமை சிந்தனையை கற்றுக்கொள்ள விரும்பும் இளம் தலைமுறையினருக்கு எளிய முறையில் அறிமுகப்படுத்தியதன் மூலம் அவர் பெற்றுள்ள விருதுகள் வரலாற்றில் நீண்ட காலம் நிலைத்து நிற்கும்.

இன்று (04-12-2021) இயற்கை எய்திய அவருக்கு எமது அஞ்சலியை செலுத்துகிறோம்.

                                                                   ஆசிரியர் குழு,
                                                                                          மக்கள் அதிகாரம்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here