“மாப்ளா எழுச்சி” விடுதலை போராட்டம் இல்லை; அதில் கலந்துக் கொண்டவர்கள் விடுதலை போராட்ட வீரர்கள் இல்லை; அந்த போராட்டத்தில் எழுப்பப்பட்ட முழக்கங்கள் தேசியத்தை உயர்த்திப்பிடித்ததாகவோ, பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரானதாகவோ இல்லை; அது மதமாற்றத்தையே அடிப்படையாக கொண்டிருந்தது; அந்த எழுச்சி வென்றிருந்தால் அங்கு ஷரியத் சட்டத்தை அடிப்படையாக கொண்ட காலிஃப் ஆட்சி தான் அமைந்திருக்கும் என்று பொய் காரணங்களை கூறி மாப்ளா எழுச்சி மாவீரர்களின் பெயர்களை ”இந்திய விடுதலை போராட்ட தியாகிகள் அகராதியிலிருந்து” நீக்க Indian Council for Historical Research நியமித்த மூன்று பேர் குழு பரிந்துரைத்துள்ளது. வரலாற்றை திருத்துவது என்ற பெயரில் பார்ப்பன கும்பலின் பூணூலில் சரடு திரிக்கும் மோசடிப் பேர்வழிகளை முறியடிக்காமல் உண்மையான வரலாற்றை அறிய முடியாது.

இந்த மூவர்குழு கொடுத்த பரிந்துரைகளின்படி விடுதலை போராட்ட வீரர்கள் பட்டியலில் மாற்றம் கொண்டுவரப்படும் என ICHR இயக்குநர் ஓம் ஜீ உபாத்யாய் தெரிவித்துள்ளார். இந்த திருத்தம் அப்பட்டமாக வரலாற்றை திரிக்கும் நடவடிக்கையாகும். இந்துராஷ்டிர அரசியலுக்கு ஏற்ற வகையில் வரலாற்றை திரிக்கும் RSS கும்பலின் அயோக்கியத்தனம் நீண்ட பாரம்பரியம் கொண்டது. இந்திய வரலாற்றை அன்னியர்களான மாக்ஸ் முல்லர் போன்ற மிலேச்சர்கள், இதுநாள் வரை பாடநூல் இயக்குனரகங்களில் பணியாற்றிய கே.எம்.பணிக்கர் போன்ற இடதுசாரிகள் எழுதியது அதனால் நிராகரிக்கப்பட வேண்டும் என்று சதிராடுகின்றனர்.
ICHRயின் இந்த ”இந்திய விடுதலை போராட்ட தியாகிகள் அகராதி” 2020யில் தான் முதன்முறையாக ஐந்து பாகங்களாக வெளியிடப்பட்டது. இதில் ஐந்தாம் பாகம் தென்னிந்திய மாநிலங்களை சேர்ந்த விடுதலை போராட்டத் தியாகிகளின் பட்டியலை கொண்டுள்ளது. அதில் “மாப்ளா எழுச்சி” வீரர்கள் ஹாஜி, அலி முஸ்லியார் உட்பட 387 பேரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. அதனை ’ஹிந்து ஐக்கிய வேதி’ என்ற பார்ப்பன – இந்துத்துவ அமைப்பு எதிர்த்தது; அதனை தொடர்ந்து அந்த பிரச்சினையை பற்றி பரிசீலிக்க மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
கடந்த ஆகஸ்டு 19ந்தேதி விஸ்வ சம்வேத கேந்திரம் என்ற அமைப்பு நடத்திய “மாப்ளா கலவர தியாகிகள் நினைவு ஆண்டு” துவக்க விழாவில் பேசிய ஆர்.எஸ்.எஸ் சித்தாந்த வாதியான ராம் மாதவ் “தாலிபனின் வன்முறை மனநிலையை கொண்ட முதல் சமூகம் கேரளாவில் தான் இருந்தது என்றும், அந்த இஸ்லாமிய அடிப்படைவாத மனநிலை தான் 1947 யில் நிகழ்ந்த இந்தியப் பிரிவினைக்கு காரணம் என்றும் கூறினார். பிரிவினைக்கு ஜின்னா, காந்தி, நேருதான் காரணம் என்பதிலிருந்து இன்னும் கொஞ்சம் பின்னே சென்று மாப்ளா எழுச்சி வீரர்களையும் அந்த பட்டியலில் இணைத்துக் கொண்டுள்ளனர்.
இந்தியா, பாகிஸ்தான் பிரிவினை வரலாற்றை RSS கும்பல் திரித்து புரட்டுவதை வரலாற்று புரட்டுகளே ஆர்.எ.ஸ்.எஸ்–சின் மூலதனம் என்ற கட்டுரையில் பார்த்திருந்தோம். தற்போது அதன் தொடர்ச்சியாக, நூற்றாண்டை எட்டியிருக்கும் “மாப்ளா எழுச்சி”யின் வரலாற்றையும் திரித்துப் புரட்ட முயல்கின்றனர். அதற்கு துணையாக அம்பேத்கரையும் அழைத்துக் கொள்கின்றனர். ஆனால் அம்பேத்கர் கூறிய படுகொலை என்ற கூற்று பிரிட்டிஷ் அரசின் அறிக்கைகளை தொகுத்து கூறுவதாகும். அது இந்து-முஸ்லிம் பிரச்சினை நாட்டில் அதிகம் வளர்ந்துவிட்டதை சுட்டிக்காட்டுவதற்காக கூறப்பட்டது. பிரிட்டிஷ் அரசின் அறிக்கையின் லட்சணம் என்னவென்றால், இன்று மோடி அரசு போராடுபவர்கள் மீது போடும் FIR க்கு இணையானது தான் என்பதால் அதற்கு மதிப்பு கொடுக்க வேண்டியதில்லை.
மாப்ளா எழுச்சியை தாலிபன் மனநிலை கொண்ட இஸ்லாமியர்கள் செய்த கலவரம் என்று புனைவதற்கான காரணம் அந்த எழுச்சியின் முதன்மை தலைவர்களான அலி முஸ்லியாரும் வரியம்குன்னத் குஞ்சஹம்மத் ஹாஜியும் இஸ்லாமியர்கள் என்பதும் அந்த போராட்டத்தில் பெருமளவில் இஸ்லாமியர்கள் கலந்துகொண்டனர் என்பதுமேயாகும். முஸ்லிம்களின் கலகம் என முத்திரைக் குத்த M.P நாராயண மேனன், கப்பாட் கிருஷ்ணன் நாயர் போன்ற முக்கிய பங்காற்றியவர்களின் பெயர்கள் மறைக்கப்பட்டே வருகிறது.
மாப்ளா போராளிகளின் பெயர்கள் அவர்கள் மதம் சார்ந்து இருந்ததால் நீக்கப்பட வேண்டுமாயின் லாலா லஜபதி ராய், திலகர் போன்ற இந்து தேசிய மனநிலை கொண்டவர்களையும், ஏன், ராமராஜ்யம் அமைய வேண்டும் எனக் கூறிய காந்தியையும் சுதந்தர போராட்டத் தியாகிகள் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும். அது தான் நியாயமானதாக இருக்கும். மாப்ளா எழுச்சி போராட்டக்காரர்களின் தியாகம் இவர்களையும் தாண்டியதாகும். அது மக்கள் தங்கள் சொந்த அனுபவத்தில் நிலப்பிரபுவத்துக்கும் ஏகாதிபத்தியத்திற்கும் எதிராக எழுந்த நின்ற உண்மையான விடுதலைக்கான மாபெரும் போராட்டமாகும். RSS புளுகர்கள் வரலாற்றை திரிக்கும் போது அவற்றை முறியடிக்க மீண்டும் அவற்றை நினைவுபடுத்திக் கொள்வது நம் கடமையாகிறது.
***********************************
அந்த வகையில் மாப்ளா எழுச்சியை சுருக்கமாகப் பார்ப்போம்.
விடுதலைப் போரின் வீர மரபே “மாப்ளா எழுச்சி”-
1921, ஆகஸ்ட் 20-ந்தேதி நடந்த மாப்ளா எழுச்சிப் போராட்டம் ஒரு தனித்த நிகழ்வல்ல. மலபார் பகுதியில் நிலப்பிரபுக்களாக இருந்த ‘ஜன்மி’க்களுக்கும் அவர்களுக்கு ஆதரவாக இருந்த பிரிட்டிஷ் ஆட்சிக்கும் எதிராக 1836 ஆம் ஆண்டு தொடங்கி நடைபெற்ற பல்வேறு கலகங்கள் நடந்து வந்தன. மலபார் பகுதியில் நெடுங்காலமாக ஜன்மிக்களாக பெருமளவில் நம்பூதிரிகளும், நாயர்களுமே இருந்து வந்தனர். முதலாம் மைசூர் போருக்கு பிறகு ஐதர் அலி மற்றும் திப்பு சுல்தான் கட்டுப்பாட்டில் வந்த மலபார் பகுதியை சேர்ந்த ஜன்மிக்கள் குறிப்பாக, கிழக்கிந்திய கம்பெனிக்கு ஆதரவாக இருந்தவர்கள் வேறு பகுதிகளுக்கு தப்பியோடினர். அவர்களின் நிலங்களில் விவசாயம் செய்துவந்த விவசாயிகளுக்கு வரி குறைக்கப்பட்டது. அந்த பகுதியில் சாதி கொடுமையில் அழுத்தி வைக்கப்பட்டிருந்த தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சாதி மக்கள் இயல்பாக இஸ்லாமியத்தை தழுவத் தொடங்கினர்.
1792-யில் திப்பு சுல்தான் கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிரான போரில் தோற்ற பிறகு மலபார் பகுதி மீண்டும் ஜன்மிக்கள் மற்றும் கிழக்கிந்திய கம்பெனி கட்டுப்பாட்டுக்கு வந்தது. முன்பு இருந்ததைவிட குத்தகை பலமடங்கு உயர்த்தப்பட்டது. அறுவடை செய்யப்படும் பயிரில் 12% மட்டுமே விவசாயிகளுக்கு கிடைக்கும் நிலை ஏற்பட்டது. இப்படி குத்தகை உயர்த்தப்பட்டதை தொடர்ந்து தனிநபர்கள் தலைமையில் பல்வேறு கிளர்ச்சிகள் நடைபெற்றன. அந்த பகுதியில் இந்துக்கள் இருப்பினும் மாப்ளா முஸ்லிம்களே இந்த போராட்டங்களில் தலைமை வகிப்பதும் அதிகம் பங்குபெறுவதும் நடைபெற்றது.
இந்த எதிர்ப்புகளின் காரணமாக 1887 ஆம் ஆண்டு மலபார் குத்தகைதாரர் மேம்பாட்டு சட்டம் இயற்றப்பட்டது. அதனையும் நம்பூதிரி ‘ஜன்மி’க்கள் மதிக்கவில்லை; மாறாக, குத்தகை சுரண்டலை அதிகப்படுத்தி விவசாயிகளை இன்னும் அதிகமாக விரட்டினர். இத்தகைய கொடூர ஜன்மிக்களை அழித்தொழித்துவிட்டு மரணமடைந்தால் சொர்க்கம் நிச்சயம் என மாப்ளா முஸ்லிம் விவசாயிகள் நம்பினர். அந்த அளவுக்கு ஜன்மிக்களால் துன்புறத்தப்பட்டனர்.
1920 ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையில் நடத்தப்பட்ட ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்து கொள்ள மாப்ளா விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதே சமயத்தில் நடந்த கிலாபத் இயக்கமும் நடந்துவந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த போராட்டங்கள் பிரிட்டிஷ் அரசுக்கு எதிரானதாக மட்டுமே இருந்தன. ஆனால் மாப்ளா விவசாயிகள் தங்களை சமூக, பொருளாதார ரீதியாக சுரண்டும் நம்பூதிரி ஜன்மிக்களையும் எதிர்க்க முடிவெடுத்தனர். இதனால் காங்கிரஸ் மற்றும் கிலாபாத் இயக்கத் தலைவர்கள் மாப்ளா விவசாயிகள் போராட்டத்தில் இருந்து ஒதுங்கியிருந்தது மட்டுமல்லாமல் அதற்கு எதிராகவும் பேசினர்.
1921 ஆகஸ்டு 20ந்தேதி திருரங்காடியை மையமாக கொண்டு மாபெரும் எழுச்சி தொடங்கியது. அந்த எழுச்சியை அலி முஸ்லியார், ஹாஜி உள்ளிட்டவர்கள் தலைமை தாங்கினர். மலபார் மாவட்டப்பகுதியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். பிரிட்டிசாருக்கும் ஜன்மிக்களுக்கும் உதவியர்களுக்கு இஸ்லாமியர் உட்பட தண்டனை அளிக்கப்பட்டது. அங்கொன்றும் இங்கொன்றுமாக சில மதமாற்ற நிகழ்வுகள் நடந்தது உண்மைதான். எனினும் அவை இன்று RSS பார்ப்பன புளுகர்கள் சொல்வதை போல் அவை திட்டமிட்டு நடத்தப்பட்டவை அல்ல;
மேலும் நம்பூதிரி ஜன்மிக்களின் சொத்துக்கள் பறிக்கப்பட்டதையே இந்துக்களின் சொத்துக்கள் கொள்ளையடிக்கப்பட்டதாக பொய்களை பரப்பினர். இந்த பொய்களை மறுத்து ஹிந்து நாளேட்டுக்கு வரியம்குன்னத் ஹாஜி கடிதம் எழுதினார். இறுதியாக பிரிட்டிஷ் அரசின் பெரும்படை வந்து அந்த மாப்ளாக்களின் குறுங்கால ஆட்சியை தகர்த்தது. அலி முஸ்லியார், ஹாஜி உள்ளிட்டவர்களுக்கு மரணதண்டனை கொடுத்து சுட்டுக்கொல்லப்பட்டனர்.
பிரிட்டன் அரசுக்கு மன்னிப்புக் கடிதம் எழுதிய மாபெரும் ‘விடுதலை’ வீரரான சாவர்க்கரோ இந்த எழுச்சியை பற்றி தனது பொய்புரட்டுகளை அடிப்படையாக கொண்டு ஒரு புனைவு நாவலையே எழுதியுள்ளார். இவற்றையெல்லாம் தாண்டி நாம் மாப்ளா எழுச்சி நினைவு கூர்வது மட்டுமல்ல அதன் நிறைகுறைகளில் இருந்து கற்க வேண்டிய பாடம் உள்ளது. இன்று தலைநகர் டெல்லியில் நடக்கும் வேளாண் சட்ட திருத்தங்களை திரும்ப பெறக் கோரும் சமகால வரலாற்று சிறப்பு மிக்க போராட்டங்களை முன்னுதாரணமாக கொண்டு விவசாயிகள் எழுச்சியை நாடு முழுவதும் உருவாக்குவோம். விவசாயிகளுடன் ஒட்டுறவில்லாத நகர்புற மேட்டுக்குடிகளின் தலைமையில் நடக்கும் வரலாற்று புரட்டுகளை முறியடித்து முன்னேறுவோம்.
- சதாம் ஹூசேன்.