அனைவருக்கும் வீடு:
சோவியத் நாட்டில் அனைவருக்கும் அரசாங்கம் வீட்டு வசதி செய்து தந்தது. வீட்டிற்கு வாடகை எவ்வளவு தெரியுமா ? அந்த வீட்டில் வசிக்கும் குடும்ப உறுப்பினர்களில் யார் அதிக சம்பளம் வாங்குகிறார்களோ அவர்களுடைய சம்பளத்தில் வெறும் 4சதவீதம் மட்டுமே வாடகை. அதாவது, 4000 ரூபாய் வாங்கினால் 160 ரூபாய் வீட்டு வாடகை. சோவியத்தில் சொந்த வீடு கட்டிக் கொள்ள அனுமதிக்கப்படவில்லை என்று கூறி பலர் பூச்சாண்டி காட்டுகிறார்கள். ஆனால் அங்கு கூட்டு மாடி வீடுகளை (apartments) கட்டிக் கொள்ள அரசாங்கமே 60சதவீத தொகையை கடனாகக் கொடுக்கிறது. அந்த கடனை 10 முதல் 15 வருடங்களில் திருப்பி செலுத்தினால் போதுமானது. ஆனால், ஒருவருக்கு ஒரு வீடு மட்டுமே உரிமையாக இருக்க முடியும்.
இந்த வீடு பிரச்சினை குறித்தும் அகிலன் எழுதியுள்ளார். அவர் கூறுவதாவது,
”உறைவிடத்தைப் பொறுத்த வரையில் நான் அங்கு கண்டது இதுவே, வீடில்லாமல் எந்த குடிமகனும் எந்த நகரத்திலும் கிராமத்திலும் நடுத்தெருவில் திரிந்து அலையவில்லை. வசதியான வீடு இன்னும் சிலருக்கு கிடைக்காமல் இருக்கலாம், ஆனால் எல்லோருக்குமே அங்கு உணவும், உடையும் கிடைத்துள்ளதை போல உறைவிடமும் கிடைத்துள்ளது என்பது தான் முக்கியமானது.” (அதே நூல், பக்கம் 61)
மேலும் சில விசயங்கள்..
இரசிய மக்கள் என்றுமே தங்கள் தாய்நாட்டை எதற்காகவும் விட்டுத்தராதவர்களாய் இருந்தனர். ஏனெனில் அவர்களுக்கு நாடு என்றால் மனிதர்களும் சேர்ந்ததே ஒழிய அவர்கள் வரைபட தேசபக்தர்கள் அல்ல. இங்கோ எரியும் இந்தியக் கொடியை அணைப்பவனே மிகப் பெரிய தேசபக்தன். அங்கு ஒவ்வொருவனும் தேசப் பற்றாளன் தான். சோசலிச சமுதாயத்தை அவர்கள் தங்கள் உயிரினும் மேலாக மதித்தார்கள். உதாரணத்திற்கு பல நிகழ்வுகளைக் கூறலாம்.
ஒருமுறை என்.எஸ்.கிருஸ்ணனும் அவருடைய நண்பரும் சோவியத்தின் பிரபல எழுத்தாளர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தனர். இதனை ஒரு மொழிபெயர்ப்பாளர் மொழிபெயர்த்துக் கூறிக் கொண்டிருந்தார். என்.எஸ்.கேயின் நண்பர் “எங்கள் நாட்டின் காந்தியமும் உங்கள் நாட்டின் சோசலிசமும் ஒன்று தான்” என்று கூறினார். மொழிபெயர்ப்பாளர் இதனை மொழிபெயர்க்க மறுத்து விட்டார். பொய் சொல்கிறார்கள் என்று கூறி மொழிபெயர்க்க முடியாது என்றும் கூறிவிட்டார். இதிலிருந்து தெரியவில்லையா அவர்கள் சோசலிசத்தை எவ்வளவு நேசித்தார்கள் என்று.
அங்கு இரயில்களில் செக்கிங் கிடையாது. சோவியத் இரசியாவில் பூட்டு தயாரிக்கப்படுவதில்லை! ஏனெனில், வீடுகளில் பூட்டை மாட்ட கொண்டியே இருக்காது. ஏனெனில் அது திருட்டே இல்லாத நாடு! மக்கள் யாரும் யாரையும் ஏமாற்றுபவர்களாக இல்லை. பஸ்ஸில் ஏறும் போதும் டிக்கெட்டை நாமாக தான் எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு முறை இங்கிருந்து சென்ற காங்கிரஸ் தலைவர் காமராஜர் டிக்கெட்டை எடுக்காமல் பேருந்தில் ஏறி உட்கார்ந்து கொண்டார். அருகில் இருந்த சோவியத்தை சேர்ந்த தோழர் இவரையே கவனித்துக் கொண்டிருந்திருக்கிறார். ஒன்றிரண்டு நிறுத்தங்கள் வரைப் பார்த்தவர் மூன்றாவது நிறுத்தம் தாண்டிய பிறகும் காமராஜர் பயணச்சீட்டு வாங்காததால் நேராக அவரே எழுந்துச் சென்று தனது பணத்தை போட்டு பேருந்து செல்லும் கடைசி நிறுத்தம் வரைக்கும் டிக்கெட்டை எடுத்து வந்து அதை அவருடைய கையில் கொடுத்து விட்டு அமர்ந்தார். அங்கே யாராவது தவறு செய்ய நினைத்தாலும் அதை மக்கள் அனுமதிக்கமாட்டார்கள். அந்த மக்களின் தேசப் பற்று என்பது இதுதான்.
கவிஞர் கண்ணதாசன், அங்கு சென்று தனது கோணல் புத்திக்கு ஏற்றவாறு, ஒரு ஹோட்டல் பணிப் பெண்ணிடம் கேட்டாராம் “ உங்கள் நாட்டில் விலைமாதுக்கள் உண்டா?” என்று. அந்தப் பெண் ’இல்லை’ என்று பதிலளித்திருக்கிறார். ”நான் உன்னை இங்கு பலவந்தப்படுத்தினால் என்ன செய்வாய்?” என்றாராம். பதிலுக்கு “எனது துப்பாக்கிக்கு வேலை வரும். அவ்வளவு தான்” என்று கூறிச் சென்றாளாம் அந்தப் பெண்.
சோவியத்தின் விஞ்ஞான வளர்ச்சி பற்றி யாரும் தனியே சொல்லித் தெரிய வேண்டியதில்லை. வான்வெளி ஆராய்ச்சியில் அமெரிக்காவுக்கு முன்னதாக சாதித்துக் காட்டியது இரசியா தான். மருத்துவத் துறையில் மிகச்சிறப்பான பல சாதனைகளை செய்ததும் இரசியா தான். விளையாட்டில் அது அள்ளிச் சென்ற பதக்கங்கள் தான் எத்தனை ? எத்தனை ? இவ்வாறு அறிவியல்துறையிலும், மருத்துவத் துறையிலும், விளையாட்டுத் துறையிலும் பல சாதனைகளை எவ்வாறு ரசியாவால் சாதிக்க முடிந்தது ?
அங்கே கல்வி தனியாரிடம் இல்லை. கல்வி காசுக்காக நடைபெறும் வியாபாரமாக இல்லை. அங்கு அனைவருக்கும் விளையாட்டுப் பயிற்சி நிலையங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள் போன்றவை இலவசமாக கிடைக்கப்பெற்றன. அனைவரும் தனது நாட்டிற்கு ஏதாவது செய்யவேண்டும் என்று ஆர்வம் கொண்டிருந்தனர். அவர்களுக்கு பணியாற்ற, பயிற்சி எடுக்க சிறந்த சோதனைச் சாலைகளும் விளையாட்டரங்குகளும் இருந்தன. இவையெல்லாம் எப்படி வந்தன ? கல்வியை வியாபாரமாக்கி கடை நடத்தும் ஓட்டுப்பொறுக்கிகள் அங்கே இல்லை.
ஒரு ரூபாய்க்கு அரிசியும், கலர் டிவியில் மானாட மயிலாடவை போட்டுவிட்டு கோவணத்தை உருவும் கொள்ளைக்காரர்கள் அங்கு இல்லை, மொத்தத்தில் நாட்டை முன்னேற்றுகிறேன், நாட்டை முன்னேற்றுகிறேன்னு நாட்டை காட்டி கொடுக்கிற கைக்கூலி ஆட்சியாளர்கள் அங்கு இல்லை, எனவே தான் சோவியத் அந்த சாதனைகளை நிகழ்த்த முடிந்தது. அது நம்மாலும் முடியும். ஆம், இரசியாவை போலவே சாதனை நிகழ்த்திய சீன மக்களின் உதாரணம் ஒன்று கீழே.
ஒரு பிரெஞ்சு பத்திரிகையாளர் ’தி டைம்ஸ்’ என்கிற பத்திரிகைக்கு 1970ல் பீகிங்கிலிருந்து அனுப்பிய பத்திரிகை செய்தி.
பீகிங்கிலிருந்து பன்னிரெண்டே மைல் தொலைவில் ஒரு லட்சம் சீனர்கள் இரவு பகல் பாராமல் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் ஒரு நதியின் போக்கை மாற்ற கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். கருவிகளாக அவர்களிடம் உள்ளவை தள்ளுவண்டிகள், மண்வெட்டிகள், கொந்தளங்களும் மா சே துங்கின் சிந்தனைகளும் தான்.
தலை நகருக்கு தென் கிழக்கே உள்ள விமான நிலையத்துக்கு செல்லும் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கிற அயல் நாட்டுத்தூதுவர் யாராக இருந்தாலும் சரி அனைவருமே வென் யு நதியின் மீதுள்ள பாலத்தைத் தாண்டும் பொழுது தங்கள் கார்களின் வேகத்தை குறைத்துக்கொண்டு அடிவானம் வரை கருந்திட்ட்டாய் விரிந்து, எறும்புக் கூட்டம் போல் இயங்கும் மனிதர்களையும், அவர்களிடையே புள்ளிகளாய் செறிந்து கிடக்கும் எண்ணற்ற செங்கொடிகளையும் பேராச்சரியத்துடன் உற்றுப்பார்க்கிறார்கள்.
விடியும் காலை ஒளியில் இக்காட்சி மேலும் வசீகரமாய் தெரிகிறது. இதை காணும் எவரும், சீன நடப்பு இது தான் என அயல் நாட்டினருக்கு காட்டுவதற்காகத் தயாரிக்கப்பட்ட வழக்கமான மாதிரிக்காட்சிகளில் இதுவும் ஒன்றோ என்று எண்ணத் தூண்டப்படலாம்.
வென் யு நதி வளர்ச்சித் திட்டமானது வட கிழக்கு சீனாவில், ஹாய் நதி பாயும் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியே என்று அதிகாரிகள் விளக்குகிறார்கள். ஹாய் நதியின் வரலாற்றில் வெள்ளங்களும், வறட்சியும் ஏராளம், ஏராளம்.
ஹாய் நதியை ’பணிய’ வைக்குமாறு 1963 ல் மாவோ அறைகூவல் விடுத்த போது, பல நூறாயிரம் உழவர்கள் அதற்கு செவி மடுத்தனர் என சீனப் பத்திரிகைகள் கூறுகின்றன. அன்று தொட்டு உலகைச் சுற்றி 37முறை – 3அடி உயரமும் அதே அளவு அகலமும் கொண்ட தடுப்புச் சுவரொன்றை எழுப்புவதற்குத் தேவைப்படும் மண் வெட்டி எடுக்கப்பட்டிருக்கிறது.
ஹாய் நதியில் இணையும் 19 முதன்மையான துணை நதிகளுக்கு, வடிகால்களும், 900மைல்கள் நீள மண் கரைகளும் எழுப்பியதால் நதியின் முக்கியமான வடிகால் பகுதியான சியண்ட்சினில் வினாடிக்கு 9000 கன அடிகளாக இருந்த நீர்ப்பாய்வு, வினாடிக்கு 1,27,000 கன அடிகளாக உயர்ந்து விட்ட்து. இதனால் 8,25,000 ஏக்கர் சாகுபடி நிலங்கள் வெள்ளத்தால் ஏற்படும் தேசங்களிலிருந்து காப்பாற்றப்பட்டு விட்டன.
ஹாய் நதியின் துணை நதியான வென் யு வில் 34 மைல் பரப்பில் வேலை செய்ய, அக்டோபர் மாத இறுதியில் ஹோபெய் மாநில உழவர்கள், படை வீரர்கள், துணைப் படை வீரர்கள், மற்றும் பீகிங் நகர மக்கள் ஆகியோரை அதிகாரிகள் ஒன்று திரட்டினர்.
நான்கு மாதங்கள் எடுத்திருக்க வேண்டிய இப்பணியில் ஏற்கெனவே ஐந்தில் நான்கு பங்கு முடிந்துவிட்டது என அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.
அண்மையில் நான் வேலை நடக்கும் இடங்களுக்கு சென்று பார்த்தேன். அங்கு எந்திரங்களின் இரைச்சல் ஏதும் இருக்கவில்லை,கொந்தாளங்களை ஓங்கிப் போடும் மனிதர்களின் மூச்சொலிகள், மட்டக் குதிரைகளின் கனைப்புகள், வண்டியோட்டிகளின் கூச்சல்கள், தொழிலாளர்களின் முழக்கங்கள் ஒலி பெருக்கிக் கருவிகளில் இசைக்கப்பட்ட புரட்சிக் கீதங்களின் இன்னிசை ஆகியவை மட்டுமே வெளியை நிரப்பிக்கொண்டிருந்தன.
ஆற்றுப்படுகையில் மண் தோண்டி எடுக்க, மூடிக்கிடக்கும் பணி பாளத்தை எடுப்பது அவசியம். இருந்த போதும் தன் கொந்தாளத்தை வீசுவதற்கு வசதியாக இருக்கிறது என்பதற்காக, இடுப்புவரை திறந்த மேனியுடன் நிற்கும் ஒரு அறுபது வயது மனிதர் வேலை செய்து கொண்டிருப்ப்பதைக் கண்டேன்.
இரவும், பகலும், இடைவிடாது, எட்டெட்டு மணி நேர வேலைகளில் சில சமயம் உறை நிலைக்கும் கீழாகி போன கடும் குளிரிலும், அடுத்தடுத்து பணியாற்றும் அணியினர் ஆற்றுப்படுகையை ஆழப்படுத்துகின்றார்கள், மண் கரைகள் எழுப்புகிறார்கள், ஆற்றுக்கு ஒரு புது படுகையை உருவாக்குவதற்காக பல துணை நதியை அழித்து வருகிறார்கள்.
மாவோவின் அறைகூவலுக்கு செவி சாய்ப்பதில் எத்தகைய வேலை முறைகளும் தொழிலாளிகளுக்கு ஏற்புடையனவாகிவிடுகின்றன. அவர்கள் தம் உடல் பாரத்தைக் கொண்டே வேரோடு மரங்களைச் சாய்த்து விடுகிறார்கள்.
இவர்கள் குடிசைகளிலோ அல்லது பணிக்காற்றைத் தடுப்பதற்காக சிறிய மண் சுவர்களாலும் வைக்கோலாலும் சூழப்பட்ட பெரிய கூடாரங்களிலோ வசிக்கிறார்கள். பெரிய பெரிய பானைகளில் ஆவி பறக்கும் உணவு, வேலை நடக்கும் இட்த்திற்கே கொண்டு வரப்படுகிறது
(மார்க்ஸ் முதல் மாவோ வரை, பக்கம் 193)
ரசியாவிலும், சீனாவிலும் சோசலிச மக்கள் படைத்திட்ட சாதனைகள் தான் எவ்வளவு அருமையானது, லாபவெறி பிடித்தலையும் முதலாளித்துவவாதிகளின் சுரண்டலை ஒழித்துக்கட்டி, அடிமைகளாக்கப்பட்டிருந்த உழைக்கும் மக்களுக்கு அனைத்து உரிமைகளையும், அனைத்து மகிழ்ச்சியையும் வழங்கி நல்வாழ்வளித்த நவம்பர் புரட்சி தான் எவ்வளவு மகத்தானது!!. இரண்டரை கோடி மக்களை பலி கொடுத்து பாசிஸ்ட் இட்லரிடமிருந்து இந்த உலகை காப்பாற்றிய சோவியத் மக்களின் தியாகம் எவ்வளவு உயர்ந்தது. அந்த சோவியத்தையும், சோசலிசத்தையும், கம்யூனிசத்தையும் சர்வாதிகாரம் என்றும், அதன் தலைவர்களை கொலைகாரர்கள் என்றும் அவதூறு செய்பவர்கள் யார் ? உழைக்கும் மக்களா ? இல்லை, கம்யூனிசத்தின் எதிரிகள் யாரோ அவர்கள் தான் இத்தகைய அவதூறுகளை உலகம் முழுவதும் பில்லியன் கணக்கில் செலவு செய்து பரப்பி வருகிறார்கள்.
ஏனெனில், கம்யூனிசம் ஆட்சிக்கு வந்தால் ஓட்டைக் குடிசையிலும், குப்பைத் தொட்டிகளிலும் வாழ்ந்து வரும் பல கோடி மக்கள் முதலாளிகள் மீது அதிகாரம் செலுத்துவார்கள். அப்போது அம்பானி என்கிற இரத்தக்காட்டேரி 5000 கோடி ரூபாய்க்கு மாளிகை கட்ட முடியாதல்லவா? உழைக்கும் மக்களின் இரத்தத்தை உறிஞ்சிக் கொழுக்க முடியாதல்லவா? எனவே தான் கம்யூனிசம் குறித்த பொய்களையும், புளுகுகளையும் பரப்பிக் கொண்டே இருக்கிறார்கள். அவை அனைத்தையும் மேற்கண்ட உண்மைகள் அம்பலமாக்கியிருக்கின்றன.
கம்யூனிசம் தோற்றுப்போய் விட்டதென்றால் சின்னஞ்சிறிய நாடான நேபாளத்தைக் கண்டு அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் அஞ்சுவது ஏன்? வல்லரசாகப்போகிற இந்தியா அஞ்சுவது ஏன்? ஏனெனில், கம்யூனிசம் தோற்கவில்லை என்பது அதன் கையால் புதைகுழிகளுக்குள் தள்ளப்படப்போகிற இவர்களுக்கு நன்றாக தெரியும்.
முதலாளித்துவம் யாரைக்கண்டு அஞ்சி நடுங்குகிறதோ அந்த பூதம், கம்யூனிசம் என்கிற அந்த கோடிக்கால் பூதம் வந்தே தீரும், அது இவர்களுடைய அனைத்து அநீதிகளுக்கும் தீர்ப்புகளை வழங்கியே தீரும்!
கோடிக்கணக்கான மக்களுக்கான சொர்க்கத்தையும், சுரண்டல் கூட்டத்தின் மீதான ’சர்வாதிகாரத்தை’ யும் நமது நாட்டிலும் ஏற்படுத்த நக்சல்பாரி பாதையில் உங்களையும் இணைத்துக்கொள்ளுங்கள் இந்த நவம்பர் புரட்சி நாளில்.