சோவியத் ஆட்சி முறை

கம்யூனிச ஆட்சி என்பதே மக்கள் மீதான சர்வாதிகாரம் என்றும், கம்யூனிச ஆட்சியில் மக்களுக்கு எந்த உரிமைகளும் இருக்காது என்றும் இன்னும் இது போன்ற விதவிதமான கதைகளையெல்லாம் முதலாளித்துவவாதிகள் பரப்பிவைத்திருக்கிறார்கள். அவை அனைத்தும் எத்தகைய பச்சை பொய்கள் என்பதை இந்த தலைப்பின் கீழ் காணலாம்.

1917ல் புரட்சி நடந்த சில நாட்களுக்கு பிறகு இரசிய மக்களை நோக்கி தோழர் லெனின் கூறினார்.

“உழைக்கும் மக்களே இப்பொழுது நீங்கள் தான் ஆட்சி பீடத்தில் இருக்கிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அனைத்து அரசியல் விவகாரங்களையும் நீங்கள் உங்களுடைய கைகளில் எடுத்துக் கொள்ளாவிடில் உங்களுக்கு யாரும் துணை புரியப்போவதில்லை. இப்பொழுது முதல் உங்களுடைய சோவியத்துகள் தான் அரசு அதிகார உறுப்புகள், முழு அதிகாரம் படைத்த சட்ட மன்றங்கள். உங்களுடைய சோவியத்துகளின் மூலம் ஒன்று திரளுங்கள், அவற்றை பலப்படுத்துங்கள், நீங்களே நேரில் பணிகளில் இறங்குங்கள்”  (லெனின் நூல் திரட்டு, ஆங்கிலம், தொகுதி 26 பக்கம் 297)

சோவியத்தில் ஒன்றியத்தில் யார் வேண்டுமானாலும் உள்ளாட்சி துறை, மற்றும் சுப்ரீம் சோவியத் தேர்தலில் போட்டியிடலாம். தகுதியானவர்களை மக்களே தேர்ந்தெடுப்பார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட வர்களே மக்கள் பிரதிநிதிகளாக பாராளுமன்றத்திற்கு சென்றனர். இவர்கள் ஒரு தொழிற்சாலையின் தொழிலாளியாகவோ அல்லது மாட்டுப் பண்ணையில் பால் கறப்பவர்களாகவோ கூட இருந்தார்கள்.

மக்களால் மக்களுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர்கள் இந்திய ஓட்டுப்பொறுக்கிகளை போல ஏதேனும் சிறு தவறு செய்தால் கூட உடனடியாக அவர்களை திருப்பியழைக்கும் உரிமையும் உடனடியாக வேறு பிரதிநிதியை தேர்ந்தெடுக்கும் உரிமையும் அந்த மக்களுக்கு இருந்தது. இது வெறுமனே ஏட்டில் எழுதி வைத்துக்கொள்வதற்காக அல்ல. அவ்வாறு தவறிழைத்தவர்கள் திருப்பியழைக்கப்பட்டிருக்கிறார்கள். சோவியத் வரலாற்றில் அவ்வாறு சில ஆயிரம் உள்நாட்டு பிரதிநிதிகளையும் சில நூறு சுப்ரீம் சோவியத் பிரதிநிதிகளையும் மக்கள் திருப்பியழைத்திருக்கின்றனர்.

எல்.சூசயெவா என்பவர் கூட்டுப்பண்ணையில் பால்காரப் பெண்ணாக வேலை செய்பவர். மக்கள் அவரை சுப்ரீம் சோவியத்துக்கு பிரதிநிதியாக தேர்ந்தெடுத்து அனுப்பினர். அங்கே அவர் உரையாற்றுகையில் ஒரு சுவையான அனுபவத்தை கூறினார்.
“இரண்டு ஆண்டுகளுக்கு முன் நான் சோவியத் இளந்தலைமுறையினர் தூதுக்குழுவில் ஓர் உறுப்பினராக அமெரிக்காவிற்கு சென்றிருந்தேன். அங்கே எனக்கு  ஏற்பட்ட அனுபவத்தை உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன்.
அமெரிக்கர்கள் எவ்வளவு சுதந்திரமாக வாழ்கிறார்கள் என்பதை எங்களுக்கு காட்ட வேண்டுமென்று அமெரிக்க செனட்டர்களை நாங்கள் நேரில் சந்தித்து பேசுவதற்கு ஏற்பாடு செய்தார்கள். ஜன்நாயகத்தைப் பற்றி இந்த செனட்டர்கள் நிறையவே பேசினார்கள். அமெரிக்க ஜனநாயகத்தின் சிறப்புகளை சொல்லி தமது சமூக அமைப்பை வானளாவ புகழ்ந்து கொண்டார்கள்.
ஆனால் இங்கேதான் அவர்கள் தோல்வியடைய நேர்ந்தது. நான் யார் என்று என்னிடம் கேட்டார்கள். இரசிய சமஷ்டிக் குடியரசின் சுப்ரீம் சோவியத்தில் ஓர் உறுப்பினர், பசு பராமரிக்கும் பால்காரியாக கூட்டுப்பண்ணையில் பணி புரிகிறேன் என்று சொன்னேன். அமெரிக்க செனட்டர்கள் வியப்புற்றுவிட்டனர், அவர்களுடைய செனட்டில் பால்காரிகள் யாரும் இல்லை. அவர்களுடைய ஜனநாயகம் அதற்கு இடம் தரவில்லை.
நான் சொல்வது உண்மைதானா என்று சோதித்து பார்ப்பது என்று அவர்கள் முடிவு செய்து கொண்டார்கள், சைராக்கியூசில் திரு லீ என்னுடைய கைகளை காட்டுமாறு கேட்டார். என் கைகளை திறந்து அவரிடம் காட்டி இதோ பாருங்கள் உழைக்கும் பெண்ணின் கைகள் என்றேன்.
ஆனால் அவர்கள் திருப்தியடையவில்லை. திரு லெஷர் என்ற அமெரிக்க விவசாயியின் பால் பண்ணைக்கு நாங்கள் சென்றிருந்த போது, பால் கறந்து காட்டும்படி சொன்னார்கள். நான் கறந்து காட்டினேன். சோவியத் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பால் கறக்கவும் தெரிகிறது என்று புரிந்து கொண்டார்கள். (சோவியத் நாட்டில் மனித உரிமைகளும் சுதந்திரங்களும். ரா.கிருஷ்ணையா,பக்கம் 33)

அதே போல சோவியத் நாட்டில் ஜனநாயகம் எவ்வளவு பரந்து விரிந்ததாக இருந்தது என்பதை புரிந்து கொள்ள இன்னொரு விசயத்தையும் கூறலாம். சோவியத்தின் புதிய அரசியலமைப்புச்சட்டம் எழுதப்பட்டு அதன் நகல் விவாதத்திற்காக மக்களிடையே சுற்றுக்கு விடப்பட்டது. கிட்ட்த்தட்ட நான்கு மாதங்களாக இது தொடர்பான விவாதங்கள் நடைபெற்றன. பதினான்கு கோடிக்கு மேற்பட்ட சோவியத் மக்கள் இந்த விவாத்த்தில் பங்கெடுத்துக்கொண்டனர். மாஸ்கோவில் மட்டும் ஐம்பத்தைந்து லட்சம் பேர் விவாதித்தார்கள். அரசியல் சட்ட ஆணைக்குழுவுக்கு நான்கு லட்சம் ஆலோசனைகள் அனுப்பி வைக்கப்பட்டன.

விவாதம் நடைபெற்ற மாதங்களில் இது குறித்து பிராவ்தா செய்தியேட்டுக்கு 30,510 கடிதங்கள் வந்தன. இவ்வாறு ஒரு நாட்டின் சட்டம் குறித்து நாட்டு மக்களிடம் கருத்து கேட்டு, நான்கு மாதம் விவாதம் நடத்தி அதன் பிறகு அதை அமுல் படுத்திய சோவியத் யூனியன் ஜனநாயக நாடா ? அல்லது இந்த நாட்டு மக்களுக்கே தெரியாமல் பல இலட்சம் கோடி ரூபாய் மதிப்புமிக்க கனிம வளங்களை உள்ளடக்கிய மாபெரும் மலைகளை யாருடைய அனுமதியும் பெறாமல் பன்னாட்டு கம்பெனிகளுக்கு எழுதிக்கொடுப்பது ஜனநாயகமா ?

பெண்களின் நிலை, குழந்தை வளர்ப்பு மற்றும் கல்வி

காலம் காலமாக ஆணாதிக்கத்தால் ஒடுக்கப்பட்டு வந்த பெண்களுக்கு சமூகத்தின் அனைத்து துறைகளிலும் சம உரிமையை வழங்கியதோடு அதை சட்டமாக்கி நடைமுறைப்படுத்திய ஒரே நாடு  சோவியத் இரசியா மட்டும்தான். ஆண்களைப் போலவே அனைத்து துறைகளிலும் பெண்கள் வேலை செய்தார்கள். உடல் உழைப்பு மூளை உழைப்பு இரண்டிலும் ஈடுபட்டார்கள். வேலைகளில் ஆண்களுக்கு நிகரான ஊதியமும் பெண்களுக்கு கொடுக்கப்பட்டது.

பெண்களை இழிவு படுத்தும் பத்திரிக்கைகளோ, சினிமாவோ, நாடகங்களோ எதுவும் சோவியத்தில் கிடையாது. அவ்வாறு பெண்களை இழிவுபடுத்தியோ அல்லது ஆபாசமாகவோ சித்தரித்தால் அதற்கு சட்டப்படி கடும் தண்டனை உண்டு. நமது வீட்டுப் பெண்களை ஆபாசமாக சித்தரிக்கும் படங்களையும், நாடகங்களையும் நாம் அனுமதிக்க முடியுமா ? முடியாதல்லவா ? அதே போலத் தான் சோவியத் அரசாங்கம் தனது நாட்டு பெண்கள் எந்த விதத்திலும் ஆபாசப் பொருளாகவோ, போகப் பொருளாகவோ சித்தரிக்கப்படுவதை அனுமதிப்பதில்லை. அங்கே பெண்களை இழிவுபடுத்தும் அனைத்தும் தடை செய்யப்பட்டிருந்தன. வறுமையையும், தற்குறித்தனத்தையும் ஒழித்துக்கட்டியதைப் போலவே விபச்சாரத்தையும் ஒழித்துக்கட்டிய ஒரே நாடு சோசலிச இரசியா மட்டும் தான்.

பெண்களுக்கு அவர்கள் கருவுற்றிருக்கும் காலங்களில், குழந்தை பிறப்பதற்கு முன்னால் 52 நாட்களுக்கும், குழந்தை பிறந்த பிறகு 52 நாட்களுக்கும் முழுமையான ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்பவர்களுக்கு ஊக்கத்தொகைகளும் பல்வேறு சலுகைகளும் அளிக்கப்பட்டன. கர்ப்பகாலத்தில் வீடு தேடி வந்து மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டன. அவர்களுக்கான சத்துணவு மிகக் குறைந்த விலைகளில் விற்கப்பட்டன. அனைத்துத் துறைகளிலும் பெண்களுக்கு சம உரிமை என்பதால் பெண்கள் நாட்டின் அனைத்துத் துறையிலும் தலைசிறந்து விளங்கினர். சமூகத்தில் சோவியத் பெண்கள் ஈடுபடாத துறையே இல்லை என்பதை அகிலனின் கீழ்கண்ட சித்திரம் எடுப்பாக உணர்த்துகிறது.

ஆல்மா ஆட்டாவில் ஓட்டல் ஆல்மா ஆட்டா வின் எட்டாவது மாடியில் இருந்த என் அறையில் நின்றபடி தெருவில் பெய்து கொண்டிருந்த மழையை வேடிக்கை பார்த்தேன். காலை நேரத்தில் இளம்வெயில் அடித்தபின் திடீரென பெருமழை பிடித்துக்கொண்ட்து. தெருவில் தண்ணீர் ஓடியது. அந்த நேரத்தில் எங்கிருந்தோ ஒரு லாரி வந்து தெருவில் நின்றது. அதிலிருந்து மழைக்கோட்டும் குல்லாயும் கால்களில் நீண்ட்தொரு பூட்சும் அணிந்த ஒரு பெண்மணி குதித்தார். கையில் நீண்ட ஒரு கம்பி.
தெருவிலிருந்த மழை நீர் வடிகால் பள்ளத்தின் இரும்பு மூடியைத் திறக்கத் தம் கடப்பாறையால் போராடி நெம்பினார். மூடியை நகர்த்தியவுடன் நீஇர் உள்ளே பாய்ந்த்து. பிறகு மூடியை முன் போல் இணைத்து விட்டு, கடப்பாறையை லாரியில் போட்டார். அவர் ஏறிக்கொண்டவுடன் லாரி நகர்ந்த்து. (அகிலனின் மேற்கூறிய நூல், பக்கம் 69)

சோவியத்தில் பெண்கள் வேலை செய்யாத துறை என்று ஒன்றுமே இல்லை என்பதை புரிந்து கொள்வதற்கு மேற்கூறிய ஒன்றே போதுமானது.

அப்படியானால் குழந்தைகளை யார் பார்த்துக் கொள்வது? என்கிற கேள்விக்கு விடை தான் ”யாஸ்லிகள்” . இந்த யாஸ்லிகள் என்பது குழந்தைகளை வளர்க்கும் நம்ம ஊர் பாலவாடிகள் போன்றது (ஆனால், நம்ம ஊர் பாலவாடிகளை போன்று கேவலமாக இருக்காது) இவை அரசாங்கத்தால் நடத்தப்படுபவை. பெற்றோர்கள் வேலைக்கு செல்கையில் இந்த யாஸ்லிகளில் தமது குழந்தைகளை விட்டுச் செல்கின்றனர். யாஸ்லிகளில் குழந்தைகள் மகிழ்ச்சியோடு இருப்பதற்கான சூழலில் அமைக்கப்பட்டிருக்கும். ஒரு தாய் தன்னுடைய குழந்தையை கவனித்துக் கொள்வதை போலவே அக்கரையோடு வளர்க்க பல தாதியர்கள் யாஸ்லிகளில் இருக்கின்றனர். அவர்கள் குழந்தைகளைத் தாலாட்டி தூங்க வைப்பதிலிருந்து குளிப்பாட்டி, உணவூட்டி, விளையாட்டுப் பொருள்களை கொடுத்து அவர்களோடு விளையாடுவது வரை இன்முகத்துடன் செய்கின்றனர்.

அங்கு தவறாது குழந்தைகளுக்கும் சரிவிகித உணவு வழங்கப்படுகிறது. ஒவ்வொரு யாஸ்லிகளிலும் பல மருத்துவர்கள் இருப்பார்கள். அங்கு இருக்கும் குழந்தைகளுக்கு அவ்வப்போது மருத்துவ பரிசோதனை செய்து அவர்களில் ஏதேனும் நோயுற்ற குழந்தை இருந்தால் அக்குழந்தையை மட்டும் தனியே வைத்து மருத்துவம் செய்கிறார்கள். அந்த குழந்தையின் உடல் நிலை முழுமையாக சரியான பிறகு தான் மற்ற குழந்தைகளுடன் இணைந்து விளையாட அனுமதிப்பர்.

எல்லாம் சரி தான். தாயைப் போல் அன்பு செலுத்தலாம். அக்கறை காட்டலாம், ஆனால் தாய்ப்பால் ? அதையும் திட்டமிட்டுத்தான் இந்த யாஸ்லிகள் அனைத்தும் தொழிற்சாலைகளுக்கு அருகிலேயே அமைக்கப்பட்டிருந்தன. தொழிற்சாலைகளில் அக்குழந்தைகளின் தாய்மார்களுக்கு ஒரு நாளைக்கு இரண்டு வேளை குழந்தைகளுக்கு பால் கொடுக்க சென்று வர அனுமதிக்கப்படுகிறது. ஒரு வேளைக்கு அரை மணி நேரம் எடுத்துக்கொள்ளலாம். இவ்வாறு போய் வரும் 1 மணி நேரமும் அவர்களுடைய வேலை நேரத்தில் சேர்த்தே கணக்கிடப்படுகிறது.

முதல் மூன்றாண்டுகள் இந்தக் குழந்தைகள் யாஸ்லிகளில் வளர்க்கப்படுகிறார்கள். இந்தப் பொழுதில் குழந்தைகளுக்கு தெளிவாக பேசுதல், எந்த வேலையையும் சீராகச் செய்தல் போன்ற பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த யாஸ்லி முறை குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே கூட்டுணர்வை ஏற்படுத்தி அவர்களுடைய மனதில் கூட்டுறவு சிந்தனை முறையையும், கூட்டுறவு வேலை பாணியையும் கற்றுத்தருகிறது.

மூன்றாண்டுகளுக்குப் பிறகு குழந்தையின் ஏழாம் வயது வரை இக்குழந்தைகள் தோட்டப்பள்ளிகளில் சேர்க்கப்படுகின்றனர். தோட்டப் பள்ளிகளில் குழந்தைகளை யாரும் படி.. படி.. என்று கொடுமைப்படுத்தி மொக்கைகளைப் போல புத்தகப் புழுக்களாக வளர்ப்பதில்லை! குழந்தைகளுக்கு விருப்பமான கலைகளில் அவர்கள் சிறந்து வளர உதவப்படுகிறது. மாதமொரு முறை காடு, மலை, அருவி போன்ற பகுதிகளுக்கு தக்க பாதுகாப்புடன் அழைத்துச் சென்று அவர்களுக்கு நேரடியாக இயற்கையை பற்றிய அறிவு ஊட்டப்படுகிறது. இங்கு கூட்டாக சுத்தம் செய்தல், தாம் சாப்பிட்ட பாத்திரங்களைத் தாமே கழுவுதல் போன்ற வேலைகளைக் குழந்தைகளையே செய்யச் சொல்லி சுய ஒழுங்கு கற்றுத்தறப்படுகிறது. எந்தத் தொழிலும் இழிந்தது அல்ல என்ற உணர்வு குழந்தை பருவத்திலேயே ஊட்டப்படுகிறது.

தோட்டப் பள்ளிப் படிப்பு முடிந்ததும் இவர்கள் பள்ளிகளில் சேர்க்கப்படுவார்கள். அங்கு அவர்களுக்கு அவர்களது தாய்மொழி, ரஸ்ய மொழி, மற்றுமொரு கட்டாய அயல்நாட்டு மொழி சொல்லித்தரப் படுகிறது. இது தவிர அறிவியல், கணிதம், விஞ்ஞானம் போன்ற பாடங்கள் நேரடியான பல சோதனைகள் மூலம் நிரூபித்துக் காட்டப்பட்டு பயிற்றுவிக்கப் படுகிறது.

இவர்களுக்கு ஆசிரியர்களாக இருப்பவர்கள் சாதாரண ஆட்களாக இருக்க முடியாது. குழந்தைகளுக்கு மட்டுமல்ல அவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் பரீட்சை உண்டு. அவர்கள் அங்கு தேர்ச்சியடைந்தால் தான் குழந்தைகளுக்கு ஆசிரியராக நீடிக்க முடியும். மாணவர்கள் படிக்கும் போதே பகுதி நேரமாக தொழிற்கூடங்களில் நேரடிப் பயிற்சி பெறும் வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படுகிறது. அதன் மூலம் அவர்கள் படிக்கையில் அந்த அந்தப் பாடத்தில் உள்ளவற்றை நடைமுறையோடு பொருத்தி தெளிவாக புரிந்து கொள்கிறார்கள்.

பத்தாம் வகுப்பு வரையிலான கல்வி கட்டாயமாக்கப்பட்ட ஒன்று. இங்கு கல்வி அரசாங்கத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் இலவசமாக சொல்லித் தரப்படுகிறது. இதன் காரணமாக சோசலிச இரசியாவில் இரு பத்தாண்டுக்குள்ளாகவே படிக்காதவர்கள் இல்லை என்னும் நிலை உருவானது. முதியவர்களும் கூட இரவு நேர கல்விக் கூடங்களில் கற்றனர்.

இத்தகைய அறிவியல் பூர்வமான கல்வியைப் கற்று வளர்ந்த மாணவர்கள் தான் அறிவியல் விஞ்ஞானத் துறையில் சோவியத் நாடு தலை சிறந்து விளங்க காரணமானவர்கள்.

தொடரும்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here