இராணுவ தளவாட உற்பத்தி கார்ப்பரேட்மயம்!
தேசபக்தர்களின்முகமூடி கிழிந்தது!


இந்தியாவில் இயங்கி வரும் பாதுகாப்பு துறை தளவாட உற்பத்தி நிறுவனங்களை ஒன்றுபடுத்தி கார்ப்பரேட் மயமாக்குவது என்ற நோக்கத்தின் கீழ் ராணுவ அமைச்சகம் இதுவரை இயங்கிவந்த ஆயுத தொழிற்சாலை வாரியத்தை (OFB) அக்டோபர் 1 முதல் கலைத்து விட்டது. அதில் பணியாற்றிய தொழிலாளர்கள், நிர்வாகம் மற்றும் அதன் சொத்துக்களை 7 பொதுத்துறை நிறுவனங்களாக பிரித்து இனி அவை தனித்தனி  பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்களாக (DPSU)  இயக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.

இது பற்றி 2021 மே மாதம் 16 ஆம் தேதியே ’ஆத்ம நிர்பார் பாரத்’ திட்டத்தின் கீழ் மத்திய அரசு இராணுவ தளவாட உற்பத்தியில் சுயசார்பு தன்மையையும், தன்னாட்சி திறன் அதிகரிப்பதையும், பொறுப்புடன் செயல்படுவது பற்றியும் கணக்கிலெடுத்துக் கொண்டு OFB-பியை கார்ப்பரேட் ஆக மாற்றுவது என்று கொள்கை முடிவு எடுக்கப்பட்டது. இதன் கீழ் உள்ள 41 ஆயுத தளவாட உற்பத்தி ஆலைகளும் இனி 7 பொதுத்துறை நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் தான் இயங்கும் என்று அதிரடியாக அறிவித்துள்ளனர்

இந்த பாதுகாப்பு நிறுவனங்களின் பெயர் இனிமேல் ஆயுத தொழிற்சாலை வாரியம் (Ordinance Factory Board) என்று அழைக்கப்படாமல் வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படும். உதாரணமாக தமிழகத்தில் இயங்கி வரும் நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேசன் என்பது மாறி ’என்.எல்.சி இந்தியா’ ஆனது. அதுவரை என்.எல்.சி தமிழகத்தின் முக்கிய பொதுத் துறை நிறுவனம், அதில் தமிழகத்திற்கும் பங்குண்டு என்ற நிலைமை மாறி அகில இந்திய தன்மையை அடைந்தது. அதனால் வேலை வாய்ப்பு முதல் ஈவு பங்கீடு வரை அனைத்தும் பறிபோனது.

அது போலவே இதுவரை நமது பாதுகாப்பு தளவாட உற்பத்தி நிறுவனங்கள் OFB என்று அழைக்கப்பட்டு வந்தது. இனிமேல் இவை முனிஷன்ஸ் இந்தியா லிமிடெட், கவச வாகனங்கள் நிகாம் லிமிடெட், மேம்பட்ட ஆயுதங்கள் மற்றும் உபகரணங்கள் இந்தியா லிமிடெட், ட்ரூப் கம்ஃபோர்ட்ஸ் லிமிடெட், யந்திரா இந்தியா லிமிடெட், இந்தியா ஆப்டெல் லிமிடெட், மற்றும் கிளைடர்ஸ் இந்தியா லிமிடெட் என்று அழைக்கப்படும். இது நாள் வரை வாரியமாக இருந்தபோது தொழிலாளிகளுக்கு கிடைத்த உரிமைகள் அனைத்தும் பறிபோகும்.

இந்தியாவில் பாதுகாப்புத் துறையில் 309 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் ஆர்டினன்ஸ் பேக்டரிகளை பிரிட்டன் காலனி ஆதிக்கத்தின் போது 1801 – இல் முறைப்படுத்தினாலும், அது 1712 லேயே தோற்றுவிக்கப்பட்டது. அப்போது அதன் நோக்கம் கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவின் ராணுவ. பொருளாதார மற்றும் அரசியல் பிடியை ஒருங்கிணைக்கும் வகையில் கொல்கத்தா கோட்டை வில்லியம் நகரில் ஆயுத தளவாட உற்பத்தி வாரியத்தின் தலைமையிடமான ஆயுத்பவன் உருவாக்கப்பட்டது.

உயர் பதவிகள், ஆயுதப் படைகள் மற்றும் துணை இராணுவ மற்றும் போலீஸ் படைகள் அனைத்திற்கும் தேவையான பொருட்களை இந்த ஆயுத தளவாட உற்பத்தி நிலையங்கள் தயாரித்து கொடுத்து வந்தனர். இதில் 80,000 தொழிலாளர்கள் பணியில் உள்ளனர். அவர்களின் தயாரிப்புகளில் சிவில் மற்றும் இராணுவ ஆயுதங்கள், விமான ஆயுதங்கள், விமான எதிர்ப்பு ஏவுகணைகள், வெடிமருந்துகள், வெடிபொருள்கள், டாங்கிகள், கவச வாகனங்கள் துப்பாக்கிகள், மின் சேமிப்பு சக்திகள் மற்றும் ஏவுகணை அமைப்புகள், ஆப்டிகல் மற்றும் மின்னணு சாதனங்கள், பாராசூட்டுகள், இரசாயனங்கள், அரசுக்கு தேவையான தற்காப்பு உபகரணங்கள், துருப்புகளுக்கு தேவையான உடைகள் மற்றும் ஆயுதப் படைகளுக்கு தேவையான பொது அங்காடிப் பொருள்கள் ஆகியவை அனைத்தும் அடங்கும்.

ஆண்டுக்கு 22,389.22 கோடி வருவாயுள்ள இந்த பாரம்பரியமிக்க நாட்டின் அதி உயர் பாதுகாப்பு தன்மைக் கொண்ட நிறுவனத்தை தான் கார்ப்பரேட் மயம் ஆக்குவதற்கான முயற்சியில் மோடி கும்பல் ஈடுபட்டுள்ளது. இந்த ஆயுத தளவாட உற்பத்தி நிறுவனங்களை 7 பொதுத்துறை நிறுவனங்களாக மாற்றுவதாக மோடி 2021- ஆம் ஆண்டு துவக்கத்தில் அறிவித்திருந்தார். மோடி அரசின் இராணுவ அமைச்சகம் ஜூன் 17, 2021 அன்று அறிவித்தது, அது முதற் கொண்டே இந்த மாற்றத்தை எதிர்த்து வாரியத்தின் கீழ் பணியாற்றும் தொழிலாளர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்

இந்த ஆர்டினன்ஸ் துறைகளை ஒன்றிணைத்து கார்ப்பரேட் நிறுவனமாக அறிவிப்பதை எதிர்த்து அக்டோபர் 25 ஆம் தேதி பாதுகாப்புத் துறையில் பணியாற்றுகின்ற தொழிலாளர்கள் அனைவரும் தங்கள்  குடும்பத்துடன் எதிர்ப்பு தெரிவிக்க போவதாக அறிவித்துள்ளதுள்ளனர். ஆர்டினன்ஸ் ஃபேக்டரி போர்டு என்ற பெயரில் இருந்த இந்த நிறுவனங்களை ஒன்றிணைக்க முயற்சிப்பது, தமது பணி பாதுகாப்பு மட்டுமின்றி நாட்டின் பாதுகாப்புத் துறையையே ஒழித்துக்கட்டும் அபாயம் இருக்கிறது என்று தொழிலாளர் சங்கங்கள் அறிவித்துள்ளனர்..

இந்த பாரம்பரியமிக்க ஆயுத தளவாட தொழிற்சாலை வாரியத்தை 7 இராணுவ பொதுத் துறைகளாக மாற்றுவதற்கான முடிவு பெரும் உள் நோக்கம் கொண்டது. தனியார்மயம்-தாராளமயம், உலகமயம் என்ற மறுகாலனியாதிக்க கொள்கைகள் மன்மோகன் காலத்தில் தீவிரமானதை ஒட்டி 2005 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் டபிள்யு புஷ் உடனான விரிவான கலந்துரையாடல்களுக்கு பின்னர் இந்திய- அமெரிக்க அணு ஒப்பந்தம் – 123 என்ற ஒப்பந்தம் போடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக போடப்பட்ட இந்திய – அமெரிக்க இராணுவ ஒப்பந்தம் மெல்ல மெல்ல அமுலாகி, இன்று பாதுகாப்பு துறையையே தனியாருக்கு தாரை வார்க்க துணிந்து விட்டனர். இந்த கார்ப்பரேட் மயமாக்கும் சதிக்கு பின்னால் அமெரிக்க ஓநாய் ஒளிந்திருக்கிறது.

இந்தியாவின் சுயசார்புக்கு பொருத்தமான கொள்கைகளை வகுப்பதாக கூறிக் கொண்டு, பாதுகாப்பு உற்பத்தித் துறையையும் கூட விட்டு வைக்காமல் மோடி கும்பல் தேர்ந்தெடுத்து கார்ப்பரேட்மயம் என்று முன்மொழிகிறது. விவசாயத்தில் பசுமைப் புரட்சி போலவும், பால் உற்பத்தியில் வெண்மை புரட்சி போலவும், பாதுகாப்புத் துறையில் பொதுத் துறை – தனியார் கூட்டாண்மையை கொண்டு வருவதன் மூலம் முன்னேற்றத்தை காட்ட முடியும் என்று கூறுகிறது மோடி கும்பல்.

அதாவது “போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், டாங்கிகள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்கள் உள்ளிட்ட பெரிய பாதுகாப்பு திட்டங்களுக்கான வாய்ப்புகளை நாங்கள் திறந்து இருக்கிறோம். இது எதிர்காலத்தில் எங்கள் தனியார் நிறுவனங்கள் உலகளாவிய நிறுவனங்களாக மாற உதவும்” என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங்  பச்சையாக கூறுகிறார்.

இனி நாம் தான் இந்த நாட்டை காக்கும் உண்மையான ’தேசபக்தியுடன்’ களத்தில் இறங்க வேண்டும். அது பார்ப்பன இந்திய தேசியமோ, பிராந்தியவாதமோ, ஏகாதிபத்திய சேவை புரியும் குறுகிய இனவாதமோ அல்ல! மாறாக நாட்டை கார்ப்பரேட்- காவி பாசிச தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் உணர்வும், உண்மையான ஜனநாயகத்திற்கான போராட்டமும் ஆகும்.

  • இளஞ்செழியன்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here