மெரிக்க விமானி லிட்டில் பாய் அணுகுண்டை ஜப்பானின் தலை மீது போடுவதற்கு முந்தைய மூன்று வருட போர் குறிப்புகளை நாவலாக்கி கொடுத்து இருக்கிறார், கரன் கார்க்கி.

இரண்டாம் உலகப் போரி்ல் பாசிச இட்லருக்கு போட்டியாக, உலகை ஆளும் கனவோடு போர் நடத்திய ஜப்பான், கிழக்கு ஆசிய நாடுகளின் மக்களை சிதைத்த வலி மிகுந்த வரலாற்றை ஜார்ஜ் கஃபே என்ற கதாப்பாத்திரத்தின் ஊடாக போர்களத்துக்கே நேரில் அழைத்துச் சென்று காட்டி இருக்கிறார்.

காலனியாதிக்க இந்தியாவின் சென்னை துவங்கி, கப்பல் வழி சிங்கப்பூர் பயணத்தையும், மலேசியாவை கைப்பற்றிய பின்னர் சிங்கப்பூரை தன் முழுக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து அதை காலனியாக்கிய கொடூரத்தையும், சயாம் மரண ரயில் பாதையை அமைக்க ஆங்கில போர் கைதிகளையும், தமிழ் கூலிகளையும் கருவிகளை போல பயன்படுத்தி கொன்றழித்த, பாசிச ஜப்பானின் கொலைவெறியாட்டத்தையும் ஜார்ஜ் கஃபே யின் கண்கள் வழியே காட்டுகிறார் ஆசிரியர்.

கதை நாயகனின் சிறுவயதில் அனுபவித்த பண்ணையடிமை கொடுங்கோன்மை; சிங்கப்பூர் கிருஷ்ணன் கதாப்பாத்திரத்தின் மூலம் இந்திய சமூகத்தின் சாதிப் படிநிலை; போர்க்களத்தில் பியுனஸ், லூலி, சன்னிப்பூர்ன் ஆகிய பெண்களின் கபடமற்ற அன்பு; தவறினால் தலை இருக்காது எனும் நிலையிலும் போர் கைதிகள், தங்களுக்குள் ஒருங்கிணைந்த வகையில் தகவல் பரிமாறிக் கொள்வது; என ஒவ்வொரு சுழலிலும் மனிதர்கள் எப்படி சிந்திக்கிறார்கள், அந்த சூழலுக்கு ஏற்ப எப்படி தம்மை தகவமைத்துக் கொள்கிறார்கள் என்பதை நூல் முழுக்க இழைத்திருக்கிறார்.

பாலுக்காக தொண்டை காய்ந்து அழும் தன் குழந்தைக்கு பாலூட்ட, நாற்று நட்டுக் கொண்டிருக்கையில் பாதியில் கரையேரும் பண்ணையடிமையான ஜார்ஜ் கஃபே யின் தாயை, வயலில் இருக்கும் அத்தனை கூலிகளுக்கு முன்னால் வைத்து அடித்தே கொல்கிறான் கங்காணி…சயாம் ரயில் பாதையை அமைக்க நயவஞ்சகமாக அழைத்துச் செல்லப்பட்ட கூலிகளை அனைவரின் கண்முன் தலைகளை சீவுகிறார்கள் ஜப்பான் கங்காணிகள்…

தன் கண் முன்னே சக தொழிலாளியை, சக மனிதனை கொல்லும் போதும் அமைதியாக வேடிக்கை பார்ப்பதை தவிர வெறொன்றும் செய்ய இயலாத ஒடுக்கப்பட்டவர்களின் கையறு நிலை எல்லாக் காலத்திலும், எல்லா நாடுகளிலும் ஒன்று போலவே உள்ளது. இந்த கொடும் வரலாற்றை மனித சமூகம் சுமந்து கொண்டு திரிவது ஆகப் பெரிய சாபக்கேடு!

இதையும் படியுங்கள்: நூல் அறிமுகம் : உப்பிட்டவரை

சயாம் ரயில் பாதை அமைத்து இந்தியாவுக்கு சென்று, இந்தியாவை ஆங்கிலேயரிடம் இருந்து மீட்க போகிறோம் என ஏமாற்றி அழைத்துச் சென்று ஆயிரக்கணக்கான கூலிகளை கொன்று குவித்து அந்த மலைக் காடுகளை பிணக்காடுகளாக மாற்றி இருந்தது ஜப்பான்.

வியர்வை, இரத்தம் சிந்தி வேலை செய்வது அல்லது செத்து மடிவது என்கிற இரண்டே வாய்ப்புகளுக்கு மத்தியில் சரிபாதி மக்களை சாகக் கொடுத்து, குற்றுயிரும் குலையுயிருமாக மீண்டு வந்தது பாதிக்கூட்டம்..

ஒருவேளை, போர் வெறி பிடித்த இட்லரை சோவியத் ரஷ்யா அழிக்காமல் இருந்திருந்தால், இட்லரின் உலகை ஆளும் ஆசைக்கு இன்னும் எத்தனை கோடிக்கணக்கான மக்கள் தம் உயிரைக் கொடுத்திருக்க வேண்டுமோ??
இட்லர், முசோலினி, ஜப்பான், அமெரிக்கா என போர் வெறி பிடித்து அலைந்த ரத்த வெறியர்களால் இந்த பூமிப் பந்தே அழிக்கப்பட்டிருக்கும்…

வரலாறு நெடுக பாசிச கொடுங்கோலர்களுக்கு உழைக்கும் வர்க்கம் புகட்டியுள்ள பாடத்தை புரிந்து கொள்ளாமல், சமூக மாற்றத்துக்காக போராடுவது என்பது ஆயுதமின்றி போருக்கு போவதற்கு ஒப்பானதாகும்.

பாசிஸ்டுகளுக்கு எதிரான போர்க்களத்தில் மரப்பாலம் நாவல் நிச்சயம் ஒரு ஆயுதமாக இருக்கும். வாசியுங்கள்! நன்றி.

  • செல்வா
ஆசிரியர்: கரன்கார்க்கி
உயிர்மை வெளியீடு
விலை: 500

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here