தமிழ்நாட்டைப் போலவே மேற்கு வங்கத்திலும் சட்டமன்றத் தேர்தல் மிக நெருங்கி வருகிறது. இத்தருணங்களில் பாசிச பாஜக கும்பல் வழக்கம்போல் மேற்கு வங்கத்தில் மம்தாவின் செல்வாக்கைக் குறைக்க தனது கைத்தடியான அமலாக்கத் துறையைக் களம் இறக்கி விட்டது. ஆம், ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வியூக நிறுவனமான ‘ஐ-பேக்’ நிறுவனர் பிரதீப் ஜெயின் வீடு மற்றும் அலுவலகங்களில் ஜனவரி 8 அன்று ED கூலிப்படை களம் இறங்கியது.

இந்த சோதனையின் போது பிரதிக் ஜெயின் வீட்டிற்கு நேரடியாகச் சென்ற மம்தா பானர்ஜி, அங்கிருந்து கட்சியின் வேட்பாளர் பட்டியல் மற்றும் முக்கிய ஆவணங்கள்  அடங்கிய கோப்புகளையும், தமது கட்சி சார்ந்த எண்ணற்ற கணினித் தரவுகள்,  மென்பொருள்களையும் மாநகர் காவல் ஆணையர் தலைமையிலான காவல் படையுடன்சென்று துணிச்சலாகவும், சட்டப்படியும் எடுத்துச் சென்று விட்டார். அல்லது ED கூலிப்படையிடமிருந்து பறித்துச் சென்று விட்டார். மேலும், அமலாக்கத்துறையின் இந்த கேடுகெட்ட நடவடிக்கைகளுக்கு எதிராக மம்தா தமது கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கூலிப்படையான அமலாக்கத்துறை கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மேற்குவங்க அரசின் மீது புகார் வழக்கு தொடுத்துள்ளது. அதே நேரத்தில் திரிணாமுல்  காங்கிரசும் தமது கட்சி நிறுவன அலுவலகங்களில் இருந்து அமலாக்கத்துறை முக்கிய ஆவணங்களை திருடிச் சென்று விட்டதாக கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளது. ‘சபாஷ்! சரியான போட்டி!’ – என்பது போல, இந்தியாவில் வேறு எந்த ஒரு முதலாளித்துவ அரசியல் கட்சிகளும் செய்யத் துணியாத செயல்களை செய்ததன் மூலம் மம்தாவின் இந்தத் துணிச்சல் மிகுந்த நடவடிக்கைகளைப் பாராட்டலாம்.

ஒவ்வொரு அசைவிலும் பாசிசமயத்தை நிரூபிக்கும் மோடி – அமித்ஷா கும்பல்…!

மாநிலங்களவை  எம்.பி. கபில்சிபல் குறிப்பிட்டுள்ளது போல ‘அமலாக்கத் துறையை உச்ச நீதிமன்றத்தால் மட்டுமே கட்டுப்படுத்த முடியும் என்ற நிலை உள்ளது. (உச்சநீதிமன்றம் மட்டும் என்ன வாழுகின்றது)

திட்டமிட்டே ஒவ்வொரு எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் மட்டுமே குறி வைக்கப்படுகின்றன. மேற்கு வங்கத்தில் சட்டமன்றத் தேர்தல் வர உள்ள நிலையில் இது நடக்கிறது. ‘கூட்டாட்சித் தத்துவமே அமலாக்கத்துறையின் கருணையில் தான் உள்ளது…’ என்கிறார் கபில் சிபில்.

ஜம்மு முன்னாள் முதல்வர் மெகபூபாமுப்தி மம்தாவின் துணிச்சலைப் பாராட்டி இப்படிக் கூறுகிறார்: ‘மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி மிகவும் தைரியமானவர்; அவர் ஒரு பெண் புலி; அவர்களை (காவி மயத்தை) எதிர்த்து அவர் தைரியமாகப் போராடுவார்; அடிபணிய மாட்டார் என உறுதியாக நம்புகிறேன்’என்பதாகக் கூறுகிறார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அமலாக்கத்துறை மேற்குவங்கத்தில் நடந்து கொள்கின்ற இழி செயலை வன்மையாக கண்டித்துள்ளார்.

இத்தருணத்தில் பாஜக ‘மூத்த தலைவர்’ ரவிசங்கர் பிரசாத், ‘அமலாக்கத்துறை அதிகாரிகளை மிரட்டியதற்காகவும், சோதனையின் போது அவர்களிடமிருந்து ஆவணங்களை பறித்து சென்றதற்காகவும் மம்தா மீது வழக்கு பதிய வேண்டும்; மம்தா பானர்ஜியின் இந்தக் காட்டுமிராண்டித்தனமான செயலைச் சுற்றி பல சந்தேகங்களுக்கு இடமான சூழ்நிலைகள் உள்ளன’ -என்று ‘நியாயவான்’ போல அமலாக்கத்துறையைக் காப்பாற்ற பதறுகிறார்.

ஐ-பேக் நிறுவனத் தலைவரின் வீடு மற்றும் அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனையின் போது முதல்வர் மம்தா, மூத்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் பிறரின் பங்கு குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்’ – என்று ‘யோக்கிய சிகாமணி’ அமலாக்கத்துறை காவிக் கும்பல், கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளது.

திரிணாமுல் காங்கிரஸோ, ‘ED சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களை தவறாக பயன்படுத்துவதற்கும் பரப்புவதற்கும் தடை விதிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.

மேலும் கொல்கத்தாவில் மாபெரும் கண்டனப் பேரணியை தமது தலைமையில் வெற்றிகரமாக நடத்தி காண்பித்த மம்தா, ‘அமித்ஷாவின் நிலக்கரி சுரங்க ஊழல் தொடர்பாகத் தான் வைத்திருக்கும் பென்- டிரைவ் மூலமாக முகத்திரையைக் கிழித்து காண்பிப்பேன்; அதற்கான தக்க நாளை விரைவில் தீர்மானிப்பேன்’ – எனச் சூளுரைத்துள்ளார்.

இந்நிலையில் மேற்கு வங்க காங்கிரசும் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் அமலாக்கத் துறைக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மம்தாவை எதிர்த்து கருத்துக்கள் தெரிவிப்பது என்பது துரதிருஷ்டவசமானது. கண்டனத்திற்குரியது. இன்றைய நாளில் பிரதான எதிரியான ஆர்எஸ்எஸ் பாஜக இந்துத்துவ சக்திகளை முறியடிப்பதற்கான முன்னெடுப்புகளை மழுங்கச் செய்வதாக அமைகிறது.

ஆக, நாம் ஏற்கனவே பலமுறை சுட்டிக் காண்பித்தது போல கீழமை நீதிமன்றம் முதல் உச்சநீதிமன்றம் வரையிலான நீதிபதிகள்; தேர்தல் ஆணையம், அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சிபிஐ, ராணுவம், ஐஏஎஸ், ஐபிஎஸ், காவல்துறை, அதிகாரங்கள் பெருத்த இன்ன பிற துறைகள் அனைத்திலும் ஆர் எஸ் எஸ் பாஜக மோகன் பகவத் – மோடி – அமித்ஷா கும்பல் திட்டமிட்டே பாசிசமயப்படுத்தி விட்டன.

இதன் மூலம் பாசிச சர்வாதிகாரத்தை நாடு முழுமைக்கும் விரிவுபடுத்தி தமது எஜமானர்களான கார்ப்பரேட்டுகளுக்கு சேவை செய்யும் நோக்கில் நாட்டின் அனைத்து வளங்களையும் திட்டமிட்டே தாரை வார்க்கின்றன.  இவற்றை முற்றிலும் மறைப்பதற்கே மதவெறி போதை ஊட்டப்பட்டு மக்களை மடைமாற்றி விடுகின்றன இந்தக் காவிக் கும்பல்.

அதே நேரத்தில் தொழிலாளர்கள், விவசாயிகள், இன்ன பிற உழைக்கும் மக்கள், சிறு-பெரு தொழில் முனைவோர் உள்ளிட்ட கரத்தாலும், கருத்தாலும் உழைக்கும் மக்களின் வாழ்வாதாரங்களை இந்த பாசிச காவிக் கூட்டம் சூறையாடுகிறது.

பாசிச எதிர்ப்பு சக்திகள் ஆற்ற வேண்டிய பணிகள் தான் என்ன?

நிலைமைகள் இவ்வாறு இருக்கின்ற பொழுது, எதிர்க்கட்சிகள், ஆம் முதலாளித்துவ எதிர்க் கட்சிகள், பாசிச பாஜக கும்பலை வீழ்த்துவதற்கான  பணிகளை செவ்வனே ஆற்றுகின்றனவா என்பது பெரும் கேள்விக்குறியாக உள்ளது?

இந்தப் போலி நாடாளுமன்ற ஜனநாயகத் தேர்தல் மீது இன்னமும் மிகுந்த நம்பிக்கை வைத்துக்கொண்டு அதன் மூலமாக இந்த பாசிச காவி கூட்டத்தை வீழ்த்திட முடியும் என்று கனவு காண்கிறார்கள். ஆனால் அவர்களோ தமது காவி பாசிசத்தை நிலை நாட்டிட பாராளுமன்றத் தேர்தல் வழிமுறைகளை மட்டும் நம்பி இருக்கவில்லை. ‘மிகச்சரியாக’வே திட்டமிட்டு அவர்களுக்கே உரிய கலவரப் புத்தியில் வீதிகளில் இறங்கி களமாடுகிறார்கள். நமக்கு பாடம் எடுக்கிறார்கள். ஆனால் எதிர்க்கட்சிகளோ போலி ஜனநாயகத் தேர்தலில் மட்டுமே நம்பிக்கை கொண்டு அவர்களை அவர்கள் பாணியிலேயே வீதிகளில் எதிர்த்து நின்று களமாடி வீழ்த்துவதற்கான செயல் திட்டங்களை வகுத்திட எவரும் முனைந்திடவில்லை.

தேர்தல் ஆணையம், உச்ச நீதிமன்றம் அமலாக்கத்துறை உள்ளிட்ட அனைத்தையும் கையில் வைத்துக்கொண்டு எதிரிகளை ஒடுக்கி தேர்தல்களில் SIR, EVM உட்பட எண்ணற்ற தில்லு முல்லு மோசடிகளை அரங்கேற்றி இந்த போலி ஜனநாயகத் தேர்தலை அரியானா பாணியில் – பீகார் பாணியில் நடைபெற இருக்கும் சில மாநில சட்டமன்ற தேர்தல்களை காவி கூட்டம் சந்திக்க இருக்கிறது. வெற்றிவாகையும் ஈட்ட முடியும் என்று பாராளுமன்றத்திலும் தமிழ்நாட்டிலும் அமித் ஷா குரைக்கிறார்.

திருப்பரங்குன்றத்தில் (தர்கா‌ அருகில்) தீபம் ஏற்ற மறுக்கும் தமிழர்களை முட்டாள்கள் என்கிறார் ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான். பீகார் தேர்தல் நடந்த பொழுது, ‘தமிழ்நாட்டில் பீகார் உழைக்கும்  மக்களைக் கடுமையாகத் தாக்கி ஒடுக்குகிறது திமுக அரசு’ – என்று மோடி புரூடா விட்டார்.

ஒரிசா தேர்தலின் போது தமிழ் ஐஏஎஸ் அதிகாரி பாண்டியன் பிஜு பட் நாய்க்-கிற்கு ஆதரவாக இருக்கிறார் என்ற காரணத்தினால், பூரி ஜெகநாதர் கோவில் பெட்டக சாவியைத்திருடி தமிழ்நாட்டில் வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று பேசினர் அமித்ஷா மற்றும் மோடி கும்பல்.

படிக்க:

 பாசிச ஆட்சியின் கீழ் அண்டப் புளுகே அரசியலாகிறது!

 கொல்கத்தா மருத்துவ மாணவர் கொலைக்கு  எதிரான போராட்டமும் மம்தாவின் பாசிச ஒடுக்குமுறையும்.

இப்படிப்பட்ட ஹிட்லர் முசோலினி பாணியிலான நாசிச, பாசிச சக்திகளாக உருவெடுத்துவிட்ட இந்துத்துவ மதவெறி கும்பலான மோகன் பகவத் மோடி அமித்ஷா கும்பலையும் அவற்றுக்கு பாதம் தாங்கிகளாக உரு மாறிப் போய், பிழைப்புவாதிகளாகச்  சீரழியும் சூத்திர – பஞ்சம அடியாள் கூட்டம் நாட்டை கலவர பூமி ஆக்கி களமாடுகிறது. அதன் அண்மை உதாரணமே திருப்பரங்குன்றம் விவகாரம்.

எத்தனையோ மக்கள் வழக்குகளை எல்லாம் ஓரங்கட்டி விட்டு நீதிபதி சுவாமிநாதனுக்கு திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது ஒன்றே தன் வாழ்நாள் லட்சியம் என்று கருதி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக இந்த வழக்குகளை கூர்மைப்படுத்துவதும், வழக்கை இழுத்தடிப்பதும், மாவட்ட ஆட்சியரை, காவல் அதிகாரிகளை, கோவில் அதிகாரிகளை நேரடியாக அழைத்து மிரட்டுகின்ற போக்குகள் அனைத்திற்கும் ஒன்றிய பாஜக அரசும் ஆர்எஸ்எஸ் கூட்டத்தின் தலைமையும் பின்புலமாக இருக்கின்றன.

இதுதான் பாசிச எதார்த்த சூழ்நிலை எனும் போது நாம் முன்னிலும் பன்மடங்கு முன்னேறி பாசிசத்தை வீழ்த்துவதற்கான களம் காண வேண்டி உள்ளது.

அந்த வகையில் முதலாளித்துவ எதிர்க்கட்சிகள் அனைத்தும் தொலைநோக்குப் பார்வையின்றி பலவீனமாகவும், ஆற்ற வேண்டிய போராட்டக் கடமைகள் குறித்து பார்வையும் இல்லாமலேயே இருக்கின்றன என்பதை ஒப்புக்கொண்டு தான் தீர வேண்டும்.

இந்நிலை தவிர்க்கப்பட வேண்டும். உளமாற கார்ப்பரேட் -காவிப் பாசிசத்தை வீழ்த்த வேண்டும் என எண்ணுகின்ற அனைத்து ஜனநாயக சக்திகளும் புரட்சிகர இயக்கங்களும் இதில் ஒருமித்த கண்ணோட்டத்தில், வீதிகளில் இறங்கி களம் காண வேண்டும்!

கார்ப்பரேட் காவிப் பாசிசத்தை வீழ்த்தியே ஆக வேண்டும்!
ஒன்றுபடுவோம்!  போராடுவோம்!  முன்னேறுவோம்!

  • எழில்மாறன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here