ஜெய்பீம் தொடர்பான சர்ச்சைகள் அதிகரித்துக் கொண்டே போகிறது. அந்தத் திரைப்படத்தில் போலீஸ் லாக்கப் கொலையை நடத்தியவர் வன்னியர் சாதியைச் சேர்ந்த போலீஸ் அதிகாரி என்பதைப் போல சித்தரிக்கப்படுவதாகவும், ’குருமூர்த்தி’ பெயரை வைத்து இழிவு படுத்தி விட்டதாகவும், அதனால் வன்னியர்களின் மானம் கப்பலேறி விட்டதாகவும், அந்த மானத்தின் விலை ஐந்து கோடி என்றும் முன்வைத்திருக்கிறது வன்னியர் சங்கம்.

Thanthi TV - #Justin: 'ஜெய் பீம்' பட நடிகர் சூர்யா, தயாரிப்பாளர் ஜோதிகா மற்றும், இயக்குனர் ஞானவேல் உள்ளிட்டோருக்கு வன்னியர் சங்கம் சார்பில் ...

1980- வரை தமிழக சினிமா துறையில் இசை என்பது பார்ப்பன மற்றும் உயர் சாதி மேட்டுக்குடி குடும்பங்கள், பக்தி படங்கள், காவிய நாயகர்களின் புகழைப் பாடுகின்ற பாடல்கள் வரிகளைக் கொண்டு மட்டுமே இசைக்கப்பட்டு வந்தது. திரைப்பட உலகமும் அக்ரஹாரத்து அம்பிகள் கையில் மாட்டிக் கொண்டிருந்தது. எண்பதுகளில் இசைத்துறையில் தென்றலாக உள்ளே நுழைந்து, புயலாக வீசிய இளையராஜா எளிய மக்களின் இசையை, திரை மொழியில் வெளிப்படுத்தினார்.

உடனே ஆதிக்க சாதி வெறியர்கள் அக்ரஹாரத்துடன் கூட்டு சேர்ந்து கொண்டு, அவரை ’தவில் கம்பெனி’ என்று இழிவுபடுத்தினர். நேரடியாக சாதியைச் சொல்லி பேசுவதற்கு தைரியம் இல்லாத கோழைகள், இசைக்கருவிகளை அடையாளமாகக் கொண்டு தவில் கம்பெனி என்று இழிவு படுத்தினர். ஆனாலும் 1931-ல் முதல் தமிழ் திரைப்படம் வந்து ஐம்பது ஆண்டுகளுக்கு பிறகு எளிய மக்களுடைய குரல் திரையிசையில் ஒலிக்கத் தொடங்கியது.

அதன் பிறகு கிராமத்து திரைப்படங்கள் என்றெல்லாம் காட்டப்பட்டாலும், அதிலும் இரண்டு தனி நபர்களுக்கு இடையில் அல்லது ஒரு குடும்பத்திற்குள் நடக்கும் அக்கப் போர்களை மட்டுமே வைத்து திரைப் படங்களாக எழுதித் தள்ளினர். இதையே பல கோணங்களில் படங்களை எடுத்து, தனிப்பட்ட நபர்களின் பயம், வீரம், இழிப்பு, அற்புதம், இன்பம், அவலம், நகைச்சுவை, கோபம், நடுநிலை உள்ளிட்ட நவரசம் ததும்பும் திரைப்படங்களை எடுத்து காசு பார்த்தனர். இதில் சில விதி விலக்குகள் இருக்கலாம்.

இதிலும் கொடுமையாக பவுடர் அப்பிய பன்றிக் குட்டிகள் மற்றும் சொட்டை தலையில் மயிர் வைத்த கிழடுகள், ஐஸ் கட்டியில் சுருக்கத்தை சரி செய்துகொண்டு 16 வயது இளைஞன் போல தன்னைக் காட்டிக்கொண்டு, சிறு வயது கதாநாயகிகளுடன் கூத்தடிப்பதை எல்லாம் ’கேரக்டர்’ ’கதாநாயகன்’ என்றெல்லாம் நமது தலையில் கட்டினார்.

இரண்டு சதைகளுக்கு இடையில் நடக்கும் ஊடல், கூடல், ஆடல், பாடல் என்பதையே கலர் கலராக பின்னிப்பிணைந்து, கற்பனையாக மரங்களை சுற்றியும், காடுகள், மலைகள் அருவிகள், ஓடைகள், குன்றுகள், பனிப் பிரதேசங்கள் என்று ஓடி ஓடி திரைப்படத்தை எடுத்துக் காட்டிக் கொண்டிருந்தனர். கேடுகெட்ட பல இயக்குனர்கள் தங்களுக்கு தாங்களே அல்லது விசுவாசிகளை வைத்து சிகரம், இமயம், லொட்டு, லொசுக்கு என்றெல்லாம் பெயர் வைத்துக் கொண்டார்கள்.

முதல் திரைப்படம் வெளிவந்து 90 ஆண்டுகள் கழித்து, 2020 ஆம் ஆண்டுக்கு பிறகு தான் சமூகம் சார்ந்த திரைப்படங்கள் ஒன்றிரண்டு வரத் துவங்கியுள்ளது. அசுரன், கர்ணன், சார்பட்டா பரம்பரை வரிசையில் தற்போது ஜெய்பீம் வந்துள்ளது. இது போன்ற திரைப்படங்கள் வர துவங்கியதும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நிலவும் வருண-சாதி சமூகத்தில், சாதி என்ற பார்ப்பனக் கோட்டைக்குள் நின்றுகொண்டு, மனிதர்களை படிப்படியாக ஒருவனுக்கு கீழ் ஒருவன் என்ற இழிபடுத்தும் ஆதிக்க மனோபவத்தை கைவிட மறுக்கின்றனர்., ஒடுக்கப்பட்ட மக்களின் அவலங்களை திரைமொழியில் காட்டுவதையே பெரும் குற்றமாக சித்தரிக்க துவங்கி விட்டனர்.

அதனை மறைக்க தனது சாதியை இழிவு படுத்தி விட்டதாக நுணுக்கமாக கண்டு பிடித்து, தனது ஆதிக்க சாதி வெறியை கக்கத் துவக்கி விட்டனர். அதில் வரும் ஒவ்வொரு கேரக்டர்களின் பெயர்களை குறிப்பிட்டு இந்த சமூகப் பின்னணி, அந்த சமூகத்தினர் என்றெல்லாம் பேசிக்கொண்டு அதை முடக்குவதற்கான செயலில் ஈடுபடுவது படு கேவலமாக உள்ளது.

யாரோ ஒருவன் அந்த திரைப்படத்தில், நமது அக்னி குண்டத்தை இன்ஸ்பெக்டர் வீட்டில் வைத்து நமது சாதியை இழிவு படுத்தி விட்டான் என்று வாட்ஸ் அப்பில் செய்தி பகிர்ந்ததும், காட்டுத் தீ போல பரவுகிறது. ’நமது சாதிக்கு எதிராக அவனவன் சாதி சிந்தனையோடு இருக்கிறான்’, ’எனக்கு மானம் போய்விட்டது’, ’உனக்கு தில் இருக்கிறதா’. ’உன்னை செருப்பால் அடிப்பேன்’. ’உதைப்பேன்’, ’நாக்கை அறுப்பேன்’ என்றெல்லாம் தனது பவரைக் காட்ட துவங்கிவிட்டனர் வன்னிய சாதிவெறியர்கள்.

Police Deployed At Actor Surya's House For His Protection Regarding Jai Bhim Controversy | ஜெய் பீம் பட விவகாரம்: நடிகர் சூர்யா வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு!

கம்மாபுரம் ’லாக் அப் படுகொலைக்கு’ எதிராக போராடிய தோழர். கோவிந்தன் பிறப்பால் ஒரு வன்னியர் என்பதை மறைக்கின்றனர் என்று பொங்குகின்றனர். அவரை தேடிச் சென்று சாதிய அடையாளத்தை வெளிப்படுத்தக் கோரி பேரம் பேசுகின்றனர். அது முடியாமல் போனதும் அவதூறுகளைப் பரப்புகின்றனர்.

லாக்கப் படுகொலைகள் மட்டுமின்றி போலீஸ் லத்தி கம்புக்கும், துப்பாக்கிச் சூட்டுக்கும், அடக்குமுறைகளுக்கும், பலியான வன்னியர்களுக்கு எதிராக நடந்த பல கிரிமினல் குற்றச் செயல்களைக் கண்டு நடைமுறையில் பொங்காத, இந்த ’இருட்டடி வீரர்கள்’ திரைப்படத்தில் ஒரு காட்சியில் வன்னிய சமூகத்தை இழிவு படுத்தி விட்டார்கள் என்று கொந்தளிப்பது அருவருப்பானது.

2014 தேர்தலின்போது 50-க்கும் மேற்பட்ட சாதிகளை ஒன்றிணைத்து சாதிய கூட்டணி அமைத்து பார்ப்பன (இந்து) மதத்தை பாதுகாக்கும், பாசிச பயங்கரவாத அமைப்பான பாஜகவுடன் கூட்டு சேர்ந்து தேர்தலை எதிர்கொள்வது என்று முடிவெடுத்த பாமக அப்பட்டமான ஒரு சாதிவெறி கட்சியாகும். அதே சமயத்தில் அது வன்னியர்களின் ஒட்டுமொத்த பிரதிநிதியும் அல்ல! பிறப்பால் வன்னியர்களாகவும் வர்க்க வாழ்க்கையில் விவசாயிகள், தொழிலாளர்கள், வியாபாரிகள் என்று பல்வேறு வேலைகளில் ஈடுபட்டு வரும் வன்னியர்கள் இதுபோன்று சாதிய கட்சியில் உறுப்பினராவதும் இல்லை. சாதிய சிந்தனையுடன் கிளம்புவதும் இல்லை.

ஆதிக்க சாதி வெறியும், சிந்தனையும் புரையோடிப் போயிருக்கும் சமூகத்தில் தமது சாதி இழிவாக காட்டப்படுகிறது என்று யாரோ ஒருவர் வாய்வழியாக புரளி கிளப்பி விட்டால், அதை வைத்துக்கொண்டு அதிலுள்ள சிலர் வெறியோடு வீச்சருவாள், கத்தியை எடுத்துக் கொண்டு வீதியில் இறங்கி, தாதாகிரி வேலைகளை செய்வதை அனுமதிக்கக் கூடாது. அதை நேரடியாக கண்டிக்க தைரியம் இன்றி அந்தப்படத்தில் ’இவர் இவ்வாறு செய்தாரே!’ ’அவர் அவ்வாறு செய்தாரே!’ என்று நியாயம் கேட்பது போல எழுதுவதும், அவர்கள் தப்பிக்க சந்து வைப்பது கோழைத்தனமாகும்,

திரை மொழி, படைப்பு சுதந்திரம் என்பதை பற்றி எதுவுமே அறியாத பாமரர்களையும், விடலைகளையும் உருவாக்குவதே இது போன்ற ’போலி சமூக நீதி’ பேசும் அரசியல் கட்சிகளின் வேலையாக இருக்கிறது. கலை, இலக்கியம் என்பது நிலவுகின்ற சமூகத்தின் பிரதிபலிப்புதான் என்பதை மருந்துக்கு கூட இவர்கள் தனது அணிகளுக்கு சொல்லிக் கொடுப்பது இல்லை. ’உழ், உழ்’, ’வாழ்க, ஒழிக’, ’வவ்வாலா, சவ்வாலா’ போன்ற வீரியமிக்க முழக்கங்களை தவிர வேறு ஒன்றையும் கற்றுக் கொடுப்பது இல்லை.

சாதியை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட, போலி ’சமூக நீதி’ பேசும் பா.ம.க போன்ற கட்சிகள் இவ்வாறு பேசுவதில் பெரும் வியப்பில்லை. ஆனால் சாதியே கிடையாது என்று வாய் கிழிய பேசும் கட்சிகளில் சிலர் தமது ’கட்சியை பாதுகாப்பதாக’ கூறிக்கொண்டு அப்பட்டமாக சாதியை முன்னிறுத்தி, அவன் செட்டி, இவன் நாடார், இவன் பார்ப்பான், இவன் பறையன், இவன் தமிழன், அவன் மலையாளி என்று பேசி சாதி, இன வெறியர்களாக சீரழிவதையும், தரம் தாழ்ந்து போவதையும் நடைமுறையில் நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

ஒரு பேச்சுக்கு எடுத்துக்கொண்டால் கூட வன்னியர் சங்கம் கேட்டிருக்கின்ற 5 கோடி ரூபாயை கொடுத்து விட்டால், இனி யார் வேண்டுமானாலும் தரக்குறைவாக பேசலாம் என்று அனுமதியை வழங்குவதற்கு அனுமதிப்பது ஆகிவிடாதா? மானத்தின் விலை வெறும் 5 கோடி தானா? தூண்டிவிட்ட அப்பா-மகன் கூட்டணியின் உண்மையான வாழ்க்கையை கீழே உள்ள உழைப்பாளி வன்னிய மக்கள் உணர்ந்திருக்கிறார்களா? என்றெல்லாம் கேள்வி எழுப்பினால் உடனே பதில் கிடைக்காது. அவதூறுகளும், வசை மொழிகளும், மிரட்டல்களும் தான் பதிலாக கிடைக்கும். அதனால்தான் தொண்டர்களை உசுப்பி விட்டு விட்டு, தைலாபுரம் என்ற மிகப்பெரும் பண்ணைக்குள் அமர்ந்துகொண்டு ’குட்டி சாம்ராஜ்யத்தை’ நடத்தி வருகிறார் மருத்துவர் அய்யா.

90-களில் தனியார்மயம், தாராளமயம், உலகமயம் அமல்படுத்த துவங்கியபோது, அதற்கு எதிராக விவசாயிகள், தொழிலாளர்கள் வர்க்கமாக ஒன்றிணைந்து விடக்கூடாது என்பதற்காகவே உருவாக்கப் பட்ட ’அடையாள அரசியல்’ என்பது தான் இவர்களின் பின்னணி ஆகும். வன்னியர் என்ற அடையாளத்தை வைத்துக்கொண்டு அறக்கட்டளை துவங்குவது, சொத்து சேர்ப்பது, வன்னியர்களின் வாக்குகளை வங்கியாக பயன்படுத்தி, அதை வைத்துக்கொண்டு 5-6 எம்.எல்.ஏ, 1-2 எம்பி சீட்டுகளை வாங்கி அதன்மூலம் மாநில, மத்திய அரசின் பதவிகளைப் பெறுவது, அதையும் தனது சுயநலத்துக்கு பயன்படுத்தி வரும் இந்த அப்பா-மகன் தைலாபுர கூட்டணி, வன்னியர்களுக்காக போராடுகிறது என்று அங்கீகரிப்பதே முட்டாள்தனமாகும். உண்மையில் இவர்கள் ஆர்.எஸ்.எஸ் உருவாக்க துடிக்கும் பார்ப்பன பேரரசின் குறுநில மன்னர்களாக துடிக்கும் அதிகார போதை கொண்ட ’புத்தி’சாலிகள்.

தமிழ் திரைப்படம் வெளி வந்து ஏறக்குறைய ஒரு நூற்றாண்டை நெருங்கும் சமயத்தில் சமூக பிரச்சனைகளை வெளிப்படுத்த துணிந்திருக்கும் ஜெய் பீம்களையும், அதில் நடித்திருக்கும் சூர்யா போன்ற நடிகர்களையும் பாசிச முறையில் அச்சுறுத்தும் குண்டர்களையும், நேருக்கு நேர் எதிர் கொள்ள பழகுவோம். படைப்பு சுதந்திரம் மட்டுமல்ல! ஆயிரக்கணக்காண ஆண்டுகளாக ஒடுக்கப்பட்டு, நசுக்கப்பட்டு, இழிவுபடுத்தப்பட்டு வாழும் மக்களின் சுயமரியாதைக்காகவும், சமத்துவ வாழ்க்கைக்காகவும் போராடுவோம்.

  • இளஞ்செழியன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here