சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலான ஒரு காணொளி பலரையும் பதைபதைக்க வைத்தது. போலிசாரின் துப்பாக்கிகள் தொடர்ச்சியாக வெடித்துக் கொண்டிருக்கும் போது, கையில் கம்போடு சிலரை துரத்திக்கொண்டு ஓடிவரும் நபர், குண்டுக்கு பலியாகி வீழ்கிறார். அவரது இறந்த உடலை சூழ்ந்து நின்று சிலர் கட்டைகளால் தாக்குகின்றனர்.

அவரால் துரத்தப்பட்டவர்களில் ஒருவனான போட்டோகிராபர், அந்நபரின் மார்பின் மீது கொலைவெறியோடு எகிறி, எகிறி மிதிக்கிறான். துப்பாக்கிக் குண்டுக்கு பலியான அந்த நபர் தீவிரவாதியா என்ன? இல்லை. 28 வயதே நிரம்பிய மொய்னுல் ஹக் எனும் பெங்காலி முஸ்லிம் விவசாயிதான் அவர்!

நெஞ்சை உலுக்கும் இச்சம்பவம் நடந்தது அஸ்ஸாமின் தரங் மாவட்டத்தில் உள்ள தால்பூர் கிராமத்தில்தான். அப்பகுதியின் நிலங்களை சீர்படுத்தி, சிறிய அளவில் விவசாயம் செய்து அங்கு நான்கு தலைமுறைகளாக வாழ்ந்து வரும் பெங்காலி முஸ்லிம்களை, அங்கிருந்து அப்புறப்படுத்த அரசு பயங்கரவாதிகள் முயன்றபோது நிகழ்ந்த கொடூர சம்பவம்தான் அது.

அங்கு வசித்து வந்த இருநூறுக்கும் மேற்பட்ட குடுப்பத்தினர், வீடுகளை காலி செய்து விட்டு வெளியேற வேண்டும் என இரவு 10 மணிக்கு, அதுவும் வாட்ஸ் அப்பில் தகவல் அனுப்பி விட்டு, காலையில் ஆயுதம் தாங்கிய போலிசு படை, பொக்லைன்கள் மற்றும் படம்பிடிக்க உள்ளூர் புகைப்படக் காரர் சகிதம் அங்கு படையெடுத்தனர் பிஜேபி அரசின் அதிகாரிகள்.

இச்சம்பவம் நிகழ்ந்தது சென்ற மாதம் 23- ம் தேதி. வெறும் 12 மணி நேர அவகாசத்தில், தங்களது வாழ்வாதாரங்களை விட்டு வெளியேற வேண்டும் என்றால், இந்த அராஜகத்தை எதிர்த்து நிற்பதைத் தவிர அவர்களுக்கு வேறு என்ன வழி உள்ளது? தங்களிடம் உள்ள கம்புகளோடு திரண்டார்கள். மூன்று பேரை சுட்டுக் கொன்றுவிட்டு, வீடுகளை பொக்லைன் மூலம் இடித்துத் தள்ளி தங்களது ‘கடைமையை’ நிறைவேற்றியது பிஜேபி அரசு.

கடந்த 6 ஆண்டுகளாக அஸ்ஸாமை ஆளும் பிஜேபி அரசானது, சிறிதும் மனிதாபிமானமின்றி, அதிகாரத் திமிரோடு சர்வாதிகாரமாக நடந்து கொள்கிறது. இந்த ஆண்டு முதல்வராக பொறுப்பேற்ற ஹிமந்த பிஸ்வ சர்மா, தரங்கில் உள்ள சிவன் கோவிலை சுற்றி வசிக்கும் பெங்காலி முஸ்லிம்களை அப்புறப்படுத்த வேண்டும் என அச்சமூட்டும் வகையில் பேசினார். அங்கு கட்டாய மதமாற்றம் நடப்பதாக வதந்தி பரப்பப்பட்டது. தேசிய குடிமக்கள் பதிவேட்டின் இறுதி பட்டியலில் எப்படியாவது அவர்களது பெயர்களை நீக்கிவிட வேண்டும் எனத்துடித்த பிஜேபி- யினரின் முயற்சி பயனளிக்கவில்லை என்பதால் அந்த அப்பாவி முஸ்லிம்கள் மீது வெறுப்பை உமிழ ஆரம்பித்தனர்.

இதன் விளைவாகதான், சட்ட வரையறைகளை அப்பட்டமாக மீறி, வன்முறை வெறியாட்டம் மூலம் அவர்களை அப்புறப்படுத்தும் அராஜகத்தை ஆங்காங்கே அரங்கேற்றி வருகின்றனர் பாசிச பாஜக – வினர். வரலாற்றை சற்று திரும்பிப் பார்த்தால், ஆங்கிலேயர்கள் சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு, பெங்காலி மக்களை குறைந்த கூலிக்கு கொத்தடிமைகளாக அஸ்ஸாமில் குடியேற்றி, நிலங்களை சீர்படுத்தி விவசாயம் செய்ய வைத்தனர். எனவே அஸ்ஸாமின் வேர்கள் இவர்கள்தான். அப்படி குடியேறிய பெங்காலிகள் இன்று அஸ்ஸாமின் மக்கள் தொகையில் 3 – ல் ஒரு பங்கு வசித்து வருகின்றனர். இதில் 70 லட்சம் முஸ்லிம்களும், 60 லட்சம் இந்துக்களும் அடக்கம்.

1970 களில் RSS அங்கு காலூன்ற தொடங்கியதில் இருந்தே, இவர்கள் வேற்று நாட்டினர் என்ற வெறுப்புப் பிரச்சாரத்தை தொடங்கியது. அதன்பிறகு அவர்களை சட்டவிரோத குடியேறிகள்/ ஆக்கிரமிப்பாளர்கள் எனவும், இப்போது ஊடுறுவல் காரர்கள் என்றும் பலவிதமாக முத்திரை குத்தி, தொடர்ச்சியாக பல்வேறு அடக்குமுறைகள் மூலம் சித்திரவதைகளுக்கு ஆளாக்குகின்றனர்.

குஜராத்தில் நிகழ்த்தப்பட்ட முஸ்லிம்கள் படுகொலைக்கு இணையான சம்பவம் 1983 தேர்தல் சமயத்திலேயே அஸ்ஸாமில் அரங்கேறியது. நெல்லீ எனும் பகுதியில் வசித்த 2200க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் ( அரசின் புள்ளிவிவரப்படி) கொல்லப் பட்டனர். ஆனால் இந்த எண்ணிக்கை 3 மடங்கு இருக்கும் என பிறகு கணிக்கப்பட்டது. 1993 லிலும் பலநூறு வீடுகளை கொளுத்தி அவர்கள் நிர்கதியாக்கப் பட்டனர். இதுபோன்ற தொடர் நிகழ்வுகள் பெங்காலி முஸ்லிம்கள் மீது மட்டுமல்லாமல், சந்தால் மற்றும் முண்டா பழங்குடிகள், பீஹாரின் புலம்பெயர் மக்கள் மீதும் நடந்து கொண்டுதான் உள்ளது. இதுபோன்ற வன்முறைகளால் மாநிலத்துக்குள்ளே நடக்கும் இடப்பெயர்வுகளை அங்கு வாழும் 54% மக்கள் மேற்கொண்டுள்ளதாக 2011 கணக்கெடுப்பு கூறுகிறது. இயற்கை சீற்றம் ஒருபுறம் என்றால், மத, இன, மொழி ரீதியிலான துவேசக் கருத்துகளால் நிகழும் தாக்குதல்கள் மறுபுறமாக அவர்கள் பெரும் இன்னல்களை அவ்வப்போது அனுபவிக்கின்றனர்.

இப்போது இவர்களை சட்டப்பூர்வமாகவே வெளியேற்றத்தான் 2018 ல் BJP அரசால் அமைக்கப்பட்ட பிரம்மா கமிட்டியின் அறிக்கை வழிவகுத்துள்ளது. அந்த அறிக்கையின் படி, பல தலைமுறைகளாக வசிக்கும் அவர்கள் சட்டவிரோத குடியேறிகள் என வரையறுத்து, அவர்களது நிலங்களைப் பறித்து ‘மண்ணின் மைந்தர்களுக்கு’ அளிக்க வேண்டும் அல்லது சூழல் தேவைக்காக காலியாக வைக்கப்பட வேண்டும் எனவும் அங்கு வசித்து வருபவர்களை தடுப்பு முகாம்களில் அடைக்க வேண்டும் எனவும் பரிந்துரை செய்கிறது. இதன் தொடர்ச்சியாக 2019 ல் திருத்தம் செய்யப்பட்ட அஸ்ஸாமின் நிலக்கொள்கை அடிப்படையில் அந்த அப்பாவி மக்கள், தங்களது வாழ்வாதார இருப்பிடங்களில் இருந்து பிடுங்கி எறியப்படும் அவலம் தொடர்கிறது.

BJP அரசின் இத்தகைய கட்டாய வெளியேற்ற நடவடிக்கையானது, அதன் தீய உள்நோக்கத்தை பறைசாற்றுகிறது. அங்கு வசிக்கும் 1.3 கோடி மக்களின் வாழும் உரிமை உள்ளிட்ட அடிப்படை மனித உரிமைகளை மறுத்து, இந்திய அரசியல் அமைப்பின் 14,15 மற்றும் 21 போன்ற விதிகளை அப்பட்டமாக மீறி அவர்களின் வாக்குரிமை, குடியுரிமையை பறித்து நாடற்றவர்களாக்கி, அனைவரையும் தடுப்பு முகாமில் தள்ளும் அபாயம் உள்ளது. இதுபோல வாய்ப்புள்ள இடங்களில் எல்லாம் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமலாக்க ஒன்றிய மோடி அரசு தனது பரிவாரங்களின் மூலம் முயல்கிறது.
இந்துராஷ்டிர கனவை நிறைவேற்ற மூர்க்கமாக முனைப்பு காட்டி முன்னேறும் பாசிச பாஜக வினருக்கு முட்டுக்கட்டை போட்டு தடுத்து நிறுத்த வேண்டியது உண்மையான தேசபக்தர்களின், முற்போக்கு மற்றும் ஜனநாயக சக்திகளின் கடமையாக உள்ளது.

தமிழில்- குரு

நன்றி: தீஸ்தா செதல்வாத்,
Frontline

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here