ந்திராவின் துணை முதல்வர் என்று பொறுப்பை ஏற்றுக் கொண்டு கடந்த 10 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து, கோவில் கோயிலாக சென்று படிக்கட்டுகளை சுத்தம் செய்த சனாதனத்தின் காவலர் திருவாளர் பவன் கல்யாண் சினிமாவில் இருந்து அரசியலுக்கு குதிக்க நினைக்கின்ற சினிமா கழிசடைகளுக்கு ஒரு ‘நல்ல’ எடுத்துக்காட்டாகும்.

ஆந்திராவின் நடிகர்கள் என்றவுடன் நமக்கு நினைவுக்கு வருவது ஒரே சட்டையை ஏழெட்டு கலர்களில் போட்டுக் கொண்டு, பேண்டை இரண்டு கால்களிலும் இரண்டு விதமான கலரில் அணிந்து கொண்டு, காதில் கடுக்கன், தலையில் சவுரி முடி என்று ஒரு டைப்பான நடிகர்களைத் தான்.

இத்தகைய நடிகர்களில் ஒருவரும், தான் நடித்த படங்களில் அதிகமாக பலவிதமான நடனங்களை ஆடிய நடிகர் என்று கின்னஸ் சாதனையில் பெயர் பெற்ற நடிகருமான சிரஞ்சீவியின் தம்பியான பவன் கல்யாண் திடீரென்று ஊடகங்களினால் மிகப் பிரபலம் செய்யப்படுகிறார். பவன் கல்யாண் (Pawan Kalyan, பிறப்பு: 2 செப்டம்பர் 1971) ஒரு தெலுங்கு மொழி திரைப்பட நடிகர், தயாரிப்பாளர், திரைக்கதையாசிரியர், இயக்குநர் மற்றும் அரசியல்வாதி ஆவார்.

1996 ஆம் ஆண்டு ’அக்கட அம்மாயி இக்கட அப்பா’ என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவுக்கு வந்த பவன் கல்யாண் மிக விரைவிலேயே தெலுங்கு திரைப்பட உலகத்தில் ’பவர் ஸ்டார்’ என்ற பட்டத்தை பெற்றுக் கொண்டார். பவர்ஸ்டார் என்றவுடன் தமிழகத்தில் கோமாளியாக திகழும் பவர் ஸ்டார் சீனிவாசனை நீங்கள் நினைத்துக் கொள்ளலாம். இருவருக்கும் புத்தி ஒன்றுதான், ஆனால் அந்தஸ்து வேறு வேறானது.

இன்றளவும் இந்தியாவில் உள்ள பிரபலங்களின் பட்டியலை வெளியிடும் போர்ப்ஸ் பத்திரிக்கையின் பிரபல 100 பேர் பட்டியலில் பவன் கல்யாண் இடம்பெறுகின்றார். தனது அண்ணன் சிரஞ்சீவி துவங்கிய பிரஜா ராஜ்யம் என்ற கட்சியில் 2009-ல் இணைந்து இளைஞர் அமைப்பு பதவி பொறுப்பேற்று கொண்டு செயல்பட்டு வந்தவர் சினிமா மற்றும் அரசியல் தோல்விகளின் காரணமாகவும், அண்ணன் காங்கிரசை ஆதரித்த அதிருப்தி காரணமாகவும் தற்காலிகமாக பின்னடைந்தார்.

மீண்டும் 2014 ஆம் ஆண்டு ஜனசேனா என்ற அமைப்பை துவங்கி, தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தார். ”ஆட்சியில் பங்கெடுக்க மாட்டேன்! ஆந்திராவின் வளர்ச்சிக்கு பாடுபடுவேன்” என்றெல்லாம் வாய்ச்சவடால் அடித்து வந்தார். இவர் துவங்கிய ஜனசேனா கட்சியின் முக்கியமான கொள்கை முழக்கங்கள் இதுதான்.

♠ பல்வேறு சாதிகளை இணைக்கும் மனநிலை.

♠ மத பாகுபாடு இல்லாத அரசியல்.

♠ மொழியியல் பன்முகத்தன்மையை மதிக்கும் பாரம்பரியம்.

♠ நமது பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை பாதுகாக்கும் சமூகம்.

♠ பிராந்திய அபிலாஷைகளை புறக்கணிக்காத தேசியவாதம்.

♠ ஊழலுக்கு எதிராக இடைவிடாத போராட்டம்.

♠ சுற்றுச்சூழலை பாதுகாக்கும்.

இந்த முழக்கங்களை முன் வைத்து முதலில் தனியாகவும், பின்னர் கூட்டணி சேர்ந்தும் கடைசியில் மோடியுடன் இணைந்தும் தனது அரை வேக்காட்டு அரசியலை காட்டிக் கொண்டார். ”இன்றைய அரசியலில் மாற்றம் வேண்டும் என்பதை வலியுறுத்தி ஜனசேனா நடத்திய பிரம்மாண்ட அரசியல் விழிப்புணர்வு நடைபயணத்தில் லட்சக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர். இந்தப் பிரம்மாண்ட பேரணிக்கு வழக்கம் போலவே போலி இடதுசாரி மற்றும் தலித் அமைப்புகளும் தங்களது ஆதரவை தெரிவித்தன. அவர்கள் சிவப்பு மற்றும் நீல வண்ணக் கொடிகளை ஏந்தி தங்களது ஆதரவை வெளிப்படுத்தி, இந்த அரசியல் விழிப்புணர்வை வரவேற்றனர்.

அப்போது பிளவுபட்ட ஆந்திர பிரதேசத்தின் வளர்ச்சிக்காகத் தனது கட்சி தேர்தலில் போட்டியிடாது என்று அறிவித்தார். வளர்ச்சிக்காக தெலுங்கு தேசம், பா.ஜ.க.வை ஆதரிப்போம் என்றார். பிறகு தேர்தலில் சந்திரபாபு மற்றும் மோடியுடன் இணைந்து பவன் பிரசாரம் செய்தார்.

அதே சமயத்தில் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து தொடர்ந்து பிரச்சாரம் செய்து வந்தவர் 2023 ஆம் ஆண்டு வாராஹி என்ற பயணத்தை துவங்கி ஆந்திரா முழுவதும் பிரச்சாரம் செய்து தனது பிரபலத்தை பயன்படுத்தி அரசியலாக மாற்றிக் கொண்டார். 2024 ஆந்திரா சட்ட மன்ற தேர்தலில் தெலுங்கு தேசம் சந்திரபாபு நாயுடுவுடன் இணைந்து போட்டியிட்டு த்ற்போது துணை முதல்வராகவும் ஆகிவிட்டார்.

ஆட்சிக்கு வந்தும் பிரபலமாகாத நிலையில், திருப்பதி லட்டு சர்ச்சையை தொடர்ந்து, செப்டம்பர் 22ஆம் தேதி முதல் 11 நாட்கள் பரிகார பூஜை நடத்தப்படும் என்று துணை முதல்வர் பவன் கல்யாண் அறிவித்தார்.

லட்டு தொடர்பாக தமிழ் சினிமா நடிகர் கார்த்தி பேசியதை சுட்டிக்காட்டி, ”சனாதன விஷயத்தில் கருத்து தெரிவிக்கும் முன்பு 100 முறை யோசிக்க வேண்டும்” என எச்சரிக்கை விடுத்தார். உடனே இதற்கு கார்த்தியை மிரட்டி மன்னிப்பு கோர வைத்தனர்..

”பிரபலங்கள் என்ற முறையில் ஒற்றுமை மற்றும் மரியாதையை வளர்க்கும் பொறுப்பு நம்மிடம் இருக்கவேண்டும். குறிப்பாக மிகவும் மதிக்கும் கலாச்சாரம் மற்றும் ஆன்மீக விஷயத்தில் கூடுதல் கவனம் வேண்டும். சினிமாவில் இருந்துகொண்டு இந்த கலாச்சார உணர்வுகளை உயர்த்த முயலுவோம்.” என்று பிதற்றும் இந்த கழிசடைதான் மதச்சார்பற்ற அரசியல் என்று தனது அரசியலை துவங்கியது.

”பிரசாதத்தில் கலப்படம் செய்யப்பட்டது குறித்து நான் சொல்கிறேன், இதற்கும் பிரகாஷ்ராஜுக்கும் என்ன சம்பந்தம்?, நான் வேறு எந்த மதத்தையாவது குறை கூறுகிறேனோ?, பிரசாதத்தில் தீட்டு, கலப்படம் போன்ற எதுவும் நடக்கக் கூடாது என்று சொல்லும் போது, அதுகுறித்து பேசக் கூடாது என்பதற்கு என்ன அர்த்தம்? மத சார்பின்மை என்பது ஒரு வழிப் பாதை அல்ல, இந்துக்கள் தாக்கப்படுவது பற்றி பேசுவது தவறாகுமா?” என்றும் தனது சனாதன வெறியை வெளிக்காட்டிக் கொண்டுள்ளார்.

படிக்க:

♦ திருப்பதி லட்டு விவகாரமும்! சந்தி சிரிக்கும் உண்மைகளும்!.

♦ சச்சின்முதல் ஷாருக்கான் வரை; விளம்பரத்தில் நடிக்கும் நடிகர்களுக்கு சமூக பொறுப்பு உள்ளதா?

திருப்பதி லட்டு விவகாரத்தின் மூலம் தனது பார்ப்பன பாசிச ஆதரவு அரசியலை அகில இந்திய அளவிற்கு ப்ரொமோட் செய்வதற்கு பயன்படுத்திக் கொண்ட பவன் கல்யாண் இந்துக்களின் அதாரிட்டி என்பதை போலவும், சனாதனத்தை பாதுகாப்பது ஒன்றே தனது வேலை என்பதை போலவும் பிதற்றிக் கொண்டு திரிகின்றார்.

ஆந்திரா மட்டுமின்றி தமிழகத்திலும் விஜயகாந்த் முதல் சீமான், விஜய் போன்றவர்கள் வரை திடீரென்று அரசியலில் குறித்து 6 மாதங்களில் முதல்வர் பதவியை பிடிக்க வேண்டும் என்று நாக்கில் எச்சில் ஒழுக அலையத் துவங்குகின்றனர். ஆனால் இலவு காத்த கிளியாக பறந்து போகின்றனர்.

”கொள்கை, லட்சியம் அனைத்தும் பதவியை கைப்பற்றுவது, அதன் மூலம் அதிகாரத்தை பயன்படுத்தி கருப்பாகவும், வெள்ளையாகவும் சேர்த்த திரண்ட சொத்துக்களை பாதுகாத்துக் கொள்வது” என்பதை தாண்டி இவர்களுக்கு விழுமியங்களோ< சமூகத்தைப் பற்றிய அக்கறையோ துளியளவும் கிடையாது.

பவன் கல்யாண் துவங்கிய கட்சியின் பெயரில் ’ஜன’ என்று வந்தவுடன் கண்மூடி கொண்டு ஆதரித்த அம்பேத்காரிய, போலி இடதுசாரி அமைப்புகள் தற்போது சனாதனத்தை பற்றி பகிரங்கமாக பேசிக் கொண்டிருக்கும்போது ’கடப்பாரை முழுங்கியவனை போல திருதிரு’ என்று விழித்துக் கொண்டு, ’சிவந்த கண்களுடன்’ இலங்கையில் இடதுசாரி வெற்றி என உற்சாகத்தில் மிதக்கின்றனர். இதே வேலையை தான் தமிழகத்திலும் விஜயகாந்தை ஆதரித்து அவர்கள் பின்னால் ஓடினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மருது பாண்டியன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here