இன்னும் இந்த நாட்டில் பாசிசம் அதிகாரத்திற்கு வரவில்லை. பாசிஸ்டுகள் தான் ஆளுகிறார்கள் பாசிசம் ஆட்சிக்கு வரவில்லை என்றெல்லாம் தர்க்கரீதியாக பாசிசத்தை பற்றி ஆய்வு செய்து கொண்டிருக்கிறார்கள் சமூக ஜனநாயகம் பேசும் போலிகள்.

இதோ இந்த ஹிஜாப் விவகாரம், அதைத்தொடர்ந்து இஸ்லாமிய மாணவர்கள் கல்வி பெறும் உரிமையிலிருந்து விரட்டியடிக்கப் படுவது எதைக் காட்டுகிறது.

புதிய கல்வி கொள்கை என்ற பெயரில் மனுதர்மத்தை கல்வி நெறியாக மாற்றியதன் மூலம் இந்த நாட்டின் பெரும்பான்மை மக்களான தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, பழங்குடி மக்கள் கல்வி பெறும் உரிமையிலிருந்து விலக்கி வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

பல்கலைக்கழகங்களில் க்யூட் தேர்வு, மருத்துவக் கல்வியில் நீட் தேர்வு போன்றவை ஏழை மக்களை கல்வி உரிமையிலிருந்து தடுப்பதாக பொதுவாக புரிந்து கொள்வது மிகப்பெரும் தவறாகும். “இந்து” என்று தம்மைக் கருதிக் கொள்ளும் மக்களில் பார்ப்பனர் மற்றும் பிற மேல் சாதியினரை தவிர ஆகப் பெரும்பான்மையான மக்களுக்கு கல்வி கற்கும் உரிமையை புடுங்குவது தான் இதுபோன்ற சட்டங்களாகும்.

ஒரே நாடு, ஒரே கல்வி, ஒரே தேர்தல், இந்த வரிசையில் ஒரே கட்சி, ஒரே அதிபர் என்பதை நோக்கி பாசிச பயங்கரவாத காட்சியை நோக்கி இந்தியா சென்று கொண்டுள்ளது.

இவற்றை புரிந்துகொள்ள மறுப்பவர்களுக்கு பல சான்றுகள் மூலம் ஆர்எஸ்எஸ்-பாஜக பயங்கரவாத கூட்டம் மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டிருக்கிறது.

ஏகாதிபத்திய நிதி மூலதனத்தின் மறுகாலனியாதிக்கத்தை நிலைநாட்டுவதற்கு, கார்ப்பரேட்டுகள் கையில் நாட்டை மொத்தமாக ஒப்படைப்பதற்கு காவி பாசிசம் என்ற பார்ப்பன பாசிசம் வெறியுடன் களம் இறங்கி ஏறித்தாக்கி வருகிறது.

பாசிசத்தை வீழ்த்துவதற்கு தனித்தனியாக போராடினால் எதிர்வரும் பேரழிவிலிருந்து நாட்டை பாதுகாக்க முடியாது. ஒன்றுபட்டு போராடினால் மட்டுமே வீழ்த்துவதற்கு வழிபிறக்கும்.

000

இந்த விவகாரத்தில் இஸ்லாமியர்களை குறை சொல்வதை தவிர்க்க முயற்சி செய்யுங்கள்.

ஹிஜாபை விட்டுக்கொடுத்து படிப்பை பெறுவது தர்க்கபூர்வமாக சரியாக இருக்கலாம்.

ஆனால் அப்படி தர்க்க அடிப்படையில் முடிவெடுக்கக்கூடிய நிலையிலா நாடு அவர்களை விட்டு வைத்திருக்கிறது?

ஒரு நாடு தம் சிறுபான்மை மக்களை கைவிட்டுவிட்டது எனும் நிலையில் இருந்து நகர்ந்து அவர்களை குறி வைத்து செயல்பட ஆரம்பித்திருக்கிறது. இது ஒரு முற்றுகை. ராணுவம் தவிர்த்து கிட்டத்தட்ட எல்லா அமைப்புகளும் ஒத்துழைப்பை வழங்கும் ஒரு முற்றுகை.

கோயில் விழாக்களில்அவர்களின் கடைகள் மூடப்படுகின்றன, கேட்பாரில்லை. மாணவி ஒருவர் ஹிஜாப் அணிந்து யாருமற்ற வகுப்பில் தொழுகை செய்த காரணத்துக்காக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது ஒரு மாநிலம்.

ஊடகங்கள், நாட்டின் கூட்டு மனசாட்சி, நீதிமன்றம் என எல்லாமே கபடத்தனமாக வேடிக்கை பார்க்கையில் அவர்கள் யாரை நம்பி பள்ளிக்கு அனுப்புவார்கள்?

இஸ்லாமியர்கள் பற்றிக்கொள்ள மதத்தை தவிர வேறு என்ன போக்கிடம் இருக்கிறது?

இன்று ஹிஜாபை தூக்கி எறிய சொல்லும் நாடு நாளை வேறு ஒன்றை கேட்டால் நான் என்ன செய்ய முடியும் என ஒரு இஸ்லாமியக் குடும்பம் யோசிப்பதில் என்ன பிழை இருக்க முடியும்?

ஆமாம், அவர்கள் எப்பாடுபட்டாவது படிப்பை தொடர வேண்டும். ஆனால் அந்த ஆலோசனை எழவு வீட்டில் லாஜிக்கோடு அழச்சொல்லும் அறிவுரையாக இருக்கக்கூடாது. அது இன்னொரு வகையான சாடிசம்.

  • வில்லவன் ராமதாஸ்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here