பாசிச மதவெறி பிடித்த மோடி நாடாளுமன்றத் தேர்தலில் வென்றே ஆக வேண்டும் என்பதற்காக இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பு பேச்சை தொடர்ந்து பேசிக் கொண்டிருப்பது அனைவரும் அறிந்ததே. முதலில் “வெளியில் இருந்து ஊடுருவியர்கள்” என்றார், பின்னர் “காங்கிரஸ் இந்து பெண்களின் தாலியைப் பறித்து முஸ்லிம்களுக்கு தந்துவிடும்”, “SC, ST, OBC இட ஒதுக்கீட்டை பறித்து முஸ்லிம்களுக்கு தந்துவிடும்” என்றார்.

இப்படி பிரதமர் உள்ளிட்ட ஆர்எஸ்எஸ்-பிஜேபி கும்பல் இஸ்லாமியர்களுக்கு எதிரான ஏராளமான அவதூறுகளையும் வெறுப்புகளையும் நாட்டு மக்களிடையே பரப்புவதற்கு முயன்று கொண்டு இருக்கிறார்கள். அதன் ஒரு பகுதியாக பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவைக் கொண்டு இந்து மக்கள் தொகையைவிட முஸ்லிம் மக்கள் தொகை  வேகமாக அதிகரிப்பதாக அறிக்கை பகிர்ந்துள்ளனர்.

அதை வைத்துக்கொண்டு இஸ்லாமியர்கள் ஏராளமான பிள்ளைகளை பெற்றுக் கொள்கிறார்கள். இதன் காரணமாக வருங்காலத்தில் இந்தியாவில் இந்துக்களை விட முஸ்லிம்களின் மக்கள் தொகை அதிகமானதாக இருக்கும். இந்திய நாடு இஸ்லாமிய நாடாக மாற்றப்பட்டு விடும்’ என்கிற ரீதியில் சங்கிகள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

இது உண்மையா? புள்ளி விவரங்கள் கூறுவது என்ன? என்பதைப்  பற்றி இங்கு பார்ப்போம்.

ஒரு பெண் தனது ஆயுள் காலத்தில் எவ்வளவு பிள்ளை பெறுகிறார் என்பதை Total Fertility Rate (TFR) என்று ஆங்கிலத்தில் குறிப்பிடுகிறார்கள். தேசிய குடும்ப சுகாதார ஆய்வு 5(NFHS 5) ன் மூலம் TFR குறித்து நமக்குத் தெரிய வருவது என்ன? (2019-21 ல்)இந்து பெண்கள் தமது வாழ்நாளில் 1.94 குழந்தைகள் பெற்றுக் கொள்கிறார்கள் என்றால் இஸ்லாமிய பெண்கள் 2.36குழந்தைகளை பெற்றுக் கொள்கிறார்கள்.

இதிலிருந்து பார்க்கப்போனால் இந்து பெண்களை விட இஸ்லாமிய பெண்கள் அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்கிறார்கள்  என்பது உண்மைதான். ஆனால் வருங்காலத்தில் இந்துக்களின் மக்கள் தொகையை விட, இஸ்லாமியர்களின் மக்கள் தொகை அதிகமாகிவிடும் என்ற நிலை தான் இந்தியாவில் உள்ளதா? என்றால், அது இல்லவே இல்லை என்று உறுதியாகக் கூற முடியும்.

மேற்கண்ட அட்டவணையில் இந்து பெண்களும் முஸ்லிம் பெண்களும் குழந்தை பெறும் அளவு பற்றிய விவரம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்து பெண்களை விட முஸ்லிம் பெண்கள்  எந்த அளவுக்கு அதிக குழந்தைகள் பெறுகிறார்கள் என்ற விபரமும் கொடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி பார்க்க போனால், 1998-99ல்  இந்து பெண்களை விட இஸ்லாமிய பெண்கள் 0.81 என்ற அளவிற்கு அதிகமாக குழந்தை பெற்றார்கள். இது அடுத்தடுத்த ஆண்டுகளில் குறைந்து கொண்டே வந்தது. 2019-21 ல் இந்து பெண்களை விட இஸ்லாமிய பெண்கள் 0.42 என்ற அளவிற்கு அதிகமாக குழந்தைகள் பெற்றிருக்கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது.

இதில் இருந்து நாம் என்ன முடிவிற்கு வர முடியும்? இந்துக்களைவிட இஸ்லாமியர்கள் அதிக குழந்தை பெற்றுக் கொள்ளும் நடைமுறை என்பது வேகமாக குறைந்து கொண்டே வருகிறது .வருங்காலத்தில் அது இந்துக்கள் குழந்தைகள் பெற்றுக் கொள்ளும் அளவிற்கு சமமாக வந்துவிடும் என்பது தான் உண்மை. இதிலிருந்து ஆர்எஸ்எஸ் – பிஜேபி கூட்டம் அயோக்கியத்தனமாக இஸ்லாமியர்கள் குறித்து விசத்தை கக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது தெளிவாகிறதா, இல்லையா?

பெண்கள் அதிகமாக அல்லது குறைவாக குழந்தைகள் பெற்றுக் கொள்வதற்கான காரணங்கள் என்ன?

கல்வியறிவு இல்லாமை, ஏழ்மை போன்ற காரணங்களால் தான் பெண்கள் அதிகமான குழந்தைகள் பெற்றுக் கொள்கிறார்கள் என்பது பல ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்களுடன் ஒப்பிடும் பொழுது உத்தரப்பிரதேசத்தில் இந்து பெண்கள் குழந்தை பெற்றுக் கொள்ளும் அளவு அதிகமாக உள்ளது. அவ்வளவு ஏன் தமிழ்நாடு, கேரளாவில் உள்ள இஸ்லாமிய பெண்கள் பெற்றுக் கொள்ளும் குழந்தைகளை விட உத்தர பிரதேசத்தில் உள்ள இந்து பெண்கள் பெற்றுக் கொள்ளும் குழந்தைகள் அதிகம் என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன. விரிவாக தெரிந்து கொள்ள இக்கட்டுரையின் இறுதியில் அது தொடர்பான கட்டுரைகளின் இணைய சுட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது.

2006ல் வெளிவந்த சச்சார் கமிட்டி அறிக்கையின் மூலம் நாட்டு மக்களுக்கு தெரிய வருவது என்ன? இஸ்லாமியர்களில் 80 % பேர் (இந்துக்களில் உள்ள பிற்படுத்தப்பட்ட சாதியினர் போலவே) கல்வியில், வருமானத்தில், அரசியல் அதிகாரத்தில்,  செல்வவளத்தில், சமூக ரீதியில்  பின்தங்கிய நிலையில் இருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட இஸ்லாமியர்கள் தான் பெரும்பான்மை இந்துக்களுக்கு ஆபத்தானவர்கள். இவர்களால்தான் பெரும்பான்மை இந்துக்களின் வாழ்க்கை வளமற்றதாக, முன்னேற முடியாததாக இருக்கிறது என்றும் வருங்காலத்தில் இஸ்லாமியர்களின் மக்கள் தொகை அதிகரிக்கும் பொழுது இந்தியாவின் ஆட்சி அதிகாரத்தை இஸ்லாமியர்கள் கைப்பற்றி விடுவார்கள் என்றும் சங்கிகள் விசம் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

பெரும்பான்மை இந்துக்களின் மீது ஏராளமான வரிகளைப் போட்டு சுரண்டுவதன் மூலம் கிடைக்கும் தொகையை அம்பானி, அதானிகளுக்கு கொடுத்துக் கொண்டிருப்பது யார்?  இந்துக்களான மோடி – அமித்சா கும்பல் தானே? மக்களுக்கு சொந்தமான அரசின் நிறுவனங்களை, நாட்டின் சொத்துக்களை அடிமாட்டு விலைக்கு அம்பானி – அதானிகளுக்கும் கார்ப்பரேட்டுகளுக்கும் விற்றுக் கொண்டிருப்பது யார்? இதே  இந்துக் கும்பல் தானே?

இப்பொழுது அரசின் உயர் பதவிகளில் இருப்பவர்கள் யார்? பெரும்பான்மை இந்துக்களா? இல்லவே இல்லை. இந்துக்களில் வெறும் 3%  மட்டுமே உள்ள பார்ப்பன சாதியினர்தானே அரசின் உயர் பதவிகளில் இருந்து கொண்டு நாட்டை ஆண்டு கொண்டிருக்கின்றனர்.

இப்பொழுது இந்துக்களின் ஆட்சி தானே இந்தியாவில் நடந்து கொண்டிருக்கிறது. இப்பொழுது இந்துக்களின் நிலை என்ன? ஆகப் பெரும்பான்மையான இந்துக்கள் வேலையற்றவர்களாக வறுமையின் கோரப்பிடியில் சிக்கித் தவிப்பவர்களாகத்தானே இருக்கிறார்கள்? அதைப் பற்றி உண்மையை வெளிக்கொண்டு வர சாதிவாரி கணக்கெடுப்பு (Socio Economic Caste Census) நடத்த பாஜக ஏன் அஞ்சுகிறது?

கையளவே உள்ள ஒரு சிறு கூட்டம் இந்திய நாட்டின் வளங்களையும் அரசு அதிகாரங்களையும் கைப்பற்றிக் கொண்டு இந்தியாவையே சுரண்டி கொழுத்து வருகிறார்கள்;  பெரும்பான்மையாக உள்ள ‘இந்து’ மக்களையும் சேர்த்துதான் அடக்கி ஒடுக்கி வருகிறார்கள்.

இந்த விசயங்களில் இருந்து நாட்டு மக்களின் கவனத்தை திசை திருப்பி ஓட்டுக்களை பெற்று  தமது சுரண்டலையும் ஆட்சியதிகாரத்தையும் தொடர வேண்டும் என்பதற்காகத்தான் ‘இஸ்லாமியர்களின் மக்கள் தொகை அதிகரித்து கொண்டே வருகிறது… எதிர்காலத்தில் இந்தியாவே இஸ்லாமியர்களின் நாடாக மாறிவிடும்…  இந்துக்கள் சிறுபான்மையினராக மாறிவிடுவார்கள்… ‘ என்றெல்லாம் பாசிச பாஜக ஆர் எஸ் எஸ் காரர்கள் அயோக்கியத்தனமாக பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

குமரன்

ஆதாரம்

http://amp.scroll.in/article/813651/socio-economic-factors-not-religion-influence-indias-fertility-rate-and-population-growth

https://www.jatinverma.org/fertility-rates-of-hindus-and-muslims-converging-study

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here