உலக மயமாக்கப்பட்ட களங்கம்
குண்டு வைத்தவனையோ,
குழந்தையைக் கொன்றவனையோ,
டவரைத் தகர்த்தவனையோ ,
சத்தியமாய்
எனக்குத் தெரியாது .
தன் கரங்களில்
படிந்த இரத்தத்தை
அவன்
எந்த நீர் கொண்டோ
அழித்திருக்கலாம்.
என் தாடியில்
அதன் தடயங்களை
விசாரிக்கும்
உன் கண்களில்
ஒளிந்திருக்கிறது
வரலாற்றின் கொப்புளம்.
ஒரே திசை நோக்கி வணங்குவதால்
அவன் தவறுகளுக்கு
நான் பொறுப்பேற்க வேண்டுவதை
வேதனையோடு கவனிக்கிறது
நாம் சேர்ந்து விளையாடிய மண்.
உன் கோபம்
என் பெயர் மீது எனில்,
மன்னிக்கவும் ;
என் தந்தை இறந்து விட்டார்.
குருதி கொப்பளிக்கும் கனவுகள்
உன்னைப் போலவே
எனக்கும் வருகின்றன;
ஆனால்,
விடிந்தவுடன்
மனைவியின் புலம்பல்களுக்கு நடுவே
பணிக்குச் செல்லும் வாழ்க்கைதான்
இருவருக்கும் வாய்த்திருக்கிறது.
பொம்மைத் துப்பாக்கியை
கையில் ஏந்தி விளையாடும் குழந்தைக்காகக் கூட
மனம் பதைத்து
ஓடி வரும் உணர்வைத்தான்
நான்
கடவுள் என்று புரிந்து வைத்திருக்கிறேன்.
அந்தளவிற்கு இல்லையென்றாலும்
காஃபிர்கள் மற்றும் யஹூதிகளின்
தலைகளை உதைத்து விளையாடும்
கால்பந்து வீரனாக
கடவுள் இருக்க முடியாது.
நியாயத் தீர்ப்பு நாளின்
கேள்விகளை விட
அடர்த்தியானவை
சக மனிதனின்
கண்ணீரும், இரத்தமும்.
என்னை தினந்தோறும்
சீதையாக்கி தீயில் தள்ளுகிறாய் ;
ஒவ்வொரு
அக்னி பிரவேசத்திற்குப் பிறகும்
யாரோ ஒருவருக்கு
பட்டாபிஷேகம் நடக்கிறது ;
எனக்கோ
சொந்த ஊரே காடாகிறது.
சிலரின் தவறுகளாலும்,
பலரின் சந்தேகங்களாலும்,
பக்ரீத் ஆடாகப்
பரிதவிக்கிறேன் நான்.
மீண்டும் வரப் போகும் இயேசு
தன் எல்லா விசுவாசிகளையும்
புறந்தள்ளி விட்டு
என்னை கட்டித் தழுவும்
தருணத்தில்
ஒருவேளை அழிக்கப்படலாம்
என்
உலக மயமாக்கப்பட்ட களங்கம்.
- மானசீகன்