நாங்க சுடலமாடனுக்கு காவு குடுத்து கட்டாந்தரையில் கடாவெட்டி அங்க உடுக்க சிலம்புல பாட்டுப்பாடி, “”சுடலை மாடன் வந்து….. நின்றான் நின்றானங்கே” நின்றான், நின்றான்னு அரைமணி நேரமா நிற்கிறோமே, நானும் இந்து. சேரிக்குள்ளயே சாமி வரக்கூடாதுன்னு அடம்புடிச்சிக்கிட்டிருக்கிற நீயும் இந்துவா? என்னுடைய மரபும் உன்னுடைய மரபும் ஒன்றா? இந்தக் கேள்வியைத்தான் இன்றைக்கு இங்கே எழுப்புகிறோம். இந்திய தத்துவ மரபுக்கும் இந்து மதத்துக்கும் என்ன சம்பந்தம்? இந்திய தத்துவ மரபு மிகப் பெரியது. அகலமானது. ஆழமானது. அது சாங்கியர் என்று சொல்லப்படுகிற கபிலரிலே ஆரம்பித்து புத்தரிலே தொடர்ந்து வள்ளலார் வரை வந்து இன்றைக்கும் பாமர மக்களென்று சொல்லப்படுகின்ற உழைக்கும் வர்க்கத்தினரிடையே வாழ்ந்து கொண்டிருக்கிற ஒரு மரபு இந்திய தத்துவ மரபு.

இந்திய மரபு என்று சொல்லும் பொழுது அது வடக்கே, இமயமலையிலிருந்து, கங்கையாறு போல் குதித்து வந்த மரபு மட்டுமல்ல, நம்முடைய தென்பெண்ணை, பாலாறு, தாமிரபரணி, காவிரி இந்தக் கரையிலே இருந்தெல்லாம், இமயத்தை நோக்கியும் சென்றது இந்த மரபு. இந்திய மரபு என்பது வடக்கேயிருந்து வந்தது என்று தவறாக புரிந்து கொள்ள வேண்டாம். தமிழ்நாட்டிலே இருந்து போனது இந்திய மரபு. இது நமக்கு தெரியலை என்பதை வைத்துக் கொண்டுதான் எப்பப்பார்த்தாலும், இந்துக்கள் என்றால் இந்தியர்கள், இந்தியர் என்றால் இந்துக்கள், இதுல முஸ்லீம்களெல்லாம் வெளியில இருந்து வந்துட்டாங்கன்னு இராமகோபாலன் அண்ட் கம்பனி பிரைவேட் லிமிடெட் புருடா உட்டுக்குனு வராங்க! டுபாக்கூரு! யோசிச்சு பாருங்க. ஊர் ஊருக்கு வந்து மீட்டிங் போட்டு சொல்றாரு இராமகோபாலு. என்னான்னு சொல்றாரு? ஊர் ஊருக்கு வந்து நம்ம கிராமத்துல முஸ்லீம் கடையில் எதுவும் வாங்காத. அப்படி என்னா வாங்கிட்டோம், நாங்க எங்க ஊரு முஸ்லீம் கடையில 50 பைசாவுக்கு தேங்காய் எண்ணெய் வாங்குவோம். ஒரு 10 பைசாவுக்கு கடுகு வாங்குவோம். இத தவிர வேற என்னா மூ­ட்ட மூ­ட்டையா வாங்கறதுக்கு எங்ககிட்ட காசு இருக்குது. நாங்க என்னமோ பெரிசா முஸ்லீம் கடையில வாங்குற மாதிரி இஸ்து கட்டிக்கினு, கோமணத்தை வெளியே கட்டிக்கிட்டு. கோமணத்த உள்ள கட்டி வௌசாயம் பாத்தவன், வேட்டிய வெளிய கட்டிக்கிட்டு இருக்கான். இவன் கோமணத்தையே வெளியில கட்டிக்கிட்டு நம்ம ஊருக்கு வந்து நம்மகிட்ட சொல்றான் முஸ்லீம் கடையில் எதுவும் வாங்காதே, எதுவும் வாங்காதேன்னு. அப்படி என்ன வாங்கிட்டோம்னு கேக்கறன் நானு. தயவு செய்து யோசியுங்கள். எங்கள முஸ்லீம் கடையில எதுவும் வாங்காதன்னு சொல்ற அந்த இராமகோபலன் மெட்ராஸ்ல இருந்து கார்ல வரும்போது, அரேபியாவுல இருந்து முஸ்லீம் எடுத்த பெட்ரோல ஊத்திக்கிட்டுதான் வரானே தவிர, முருகப் பெருமான் சொன்னாமாதிரி அவரு போன மாதிரி மயிலுமேல ஏறியா வரான். முருகப்பெருமான் மயில்ல ஏறி வந்த மாதிரி நீயும் மயில் ஏறி கீர் போட்டுக்கினு எங்க ஊருக்கு வா. அப்புறம் முஸ்லீம் கடையில எதுவும் வாங்காம இருக்கலாம். இப்ப, சொல்றது வேற, செய்றது வேறன்னு இருக்குறாங்கன்னு புரியுதா உங்களுக்கு?

இந்திய மரபு என்பது எங்கள் மரபு. தமிழனுடைய மரபு. தெலுங்கனுடைய மரபு, மலையாளியுடைய மரபு. மராட்டியனுடைய மரபு. குஜராத்தியுடைய மரபு. இது பார்ப்பானுடைய மரபு இல்லை, இல்லை. இந்து மரபு என்று இவன் சொல்லுவது, பார்ப்பான் மரபு மட்டுந்தான். அந்த மரபு என்னன்னு எடுத்த எடுப்புலேயே சொல்றேன். இந்து சமய மரபுல கொஞ்சம் குடுமி மயிரும், கிழிஞ்சிபோன கோமணத்தையும் தவிர வேற ஒரு மசுருமில்ல. தத்துவ பேராசிரியராக 32 ஆண்டுகளாக பச்சையப்பன் கல்லூரியில இருக்கிற நான் சொல்றேன். இன்றைக்கு இந்து தத்துவ மரபுன்னு சொல்லுவதை நான் சும்மா இந்த கூட்டத்துல பேசிட்டு போகல. இதே இராமகோபாலன வச்சிக்கிட்டு விவாதம் பண்ணேன், அந்தாளு டி.வியில ஒத்துக்கிட்டான்.

இந்து தத்துவ மரபுல ஒரு மசுருமில்லேன்னு சங்கராச்சாரியார்கிட்ட நான் குமுதத்துக்காக பேட்டி கண்டு விவாதித்து அது பத்திரிக்கையிலேயே வந்தது. அதையும் ஒத்துக்கிட்டான். அந்த ஆளுக்கு எதுவும் தெரியலேன்னு. இப்ப நான் மக்கள் மத்தியிலே இந்த விசயங்களை எடுத்து வைக்கிறேன். இந்து தத்துவ மரபு வேறு, இந்திய தத்துவ மரபு வேறு. இந்திய தத்துவ மரபு என்பது, கொஞ்சம் கவனியுங்கள் தோழர்களே, கொஞ்சம் கடினமாக இருந்தாலும் புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். சாங்கியம், யோகம் என்று ஒரு மரபு, தத்துவ மரபு. யோகம் என்று ஒரு தத்துவ மரபு, யோகாசனமெல்லாம் பண்றாங்களே அது. சாங்கியம், யோகம், மீமாம்சம், ஞாயம், வைசேஷிகம், வேதாந்தம். இது வரைக்கும் இந்திய தத்துவ மரபு ஆறு.

இது இல்லாமல், பௌத்தம், ஜைனம், இதுக்கப்புறம் சித்தாந்தம் அதுக்கப்புறம் வேறு மரபுகள் இருக்கிறது. இதுல வேதத்தை ஒப்புக் கொள்கிற மரபு எது என்று பார்த்தால் வேதாந்தம் என்று சொல்லுகின்ற அந்த ஒரே ஒரு மரபுதான் வேதத்தை ஒப்புக் கொள்ளுவதாய் பெயரளவில் சொல்லுகிறது. அதுவும் நான்கு வேதத்தை ஒப்புக் கொள்வதில்லை. ஆரண்யகங்களை ஒப்புக் கொள்வதில்லை. வேதாந்த மரபு உபநிடதங்களை மட்டுமே ஒப்புக் கொள்கிறது. உபநிடதம் என்பது வரலாற்றுப்படி பௌத்தத்துக்கு பின்னால் வந்தது, அல்லது சமகாலத்தில் வந்தது என்று சொல்லலாம். உபநிடதம் எத்தினின்னு சங்கராச்சாரியார கேட்டேன். எத்துனையோ இருக்குது, அதெப்படி சொல்றது அப்படின்னான் அந்தாளு. அட எத்தனையோ இருக்குது அதுல அஞ்சு, ஆறு, நாலு, ஏழு, சொல்லுடான்னு கேட்டா, அது எத்துனையோ இருக்கு அதெப்படி சொல்றதுன்னு சொன்னான். ஏதாவது ஒண்ணு சொல்லுயான்னா தெரியல. அப்பதான் நான் கேட்டேன்.

உபநிடதங்கள் எத்தினின்னு தெரியாதவன் பெரிய ஜாதி, தெரிஞ்ச நானு சின்ன ஜாதியாடா நாயேன்னு கேட்டேன். கோவம் வந்தா கேட்பேனா? கேக்கமாட்டேனா? இதுதான் கேட்டேன், பத்திரிக்கையில் இதை ரொம்ப நாகரிகமா போட்டாங்க. உங்களுக்கு இது தெரிந்து இருக்கும் என்று நினைத்து நான் சொன்னேன்னு எழுதியிருக்குறான். உனக்கு இது தெரியாத நீ பெரிய ஜாதி தெரிஞ்ச நான் சின்ன ஜாதியா? பஜகோவிந்தம்னு சொல்றியே, பஜ கோவிந்தம் என்ன பாட்டுன்னு கேட்டேன். ஆதிசங்கரர் எழுதிய பஜகோவிந்தம், நன்னா தெரியுமேன்னாரு. எத்தினின்னு கேட்டேன். தெரியலையேன்னாரு. அதுல உண்மையா என்ன இருக்குதுன்னா பன்னிரண்டு பாட்டுதான் அந்த ஆளு எழுதியிருக்கிறான். நான் எழுதப்போறது 12 பாட்டுன்னு சொல்லி அதுக்கு முன்னால ஒரு பாட்டெழுதியிருக்கிறான்.

“”துவாதச மஞ்சரி காபிர தெக்ஷ”, பன்னிரண்டு பாடல்களை நான் எழுதப்போகிறேன். இது எதுக்குத் தெரியுமா? “”வையா கரணி ஸ்பண்டித வைஷ்ய” பண்டிதர்களுக்காக இந்தப் பாட்டை நான் எழுதுகிறேன்னு சொல்லியிருக்கிறான். அதில் பஜகோவிந்தமே இல்லை. அந்த பன்னிரண்டு பாட்டுக்கும் ஒரு முன்னுரை தான் இருக்கிறது. இந்த நூலுக்கு என்னடா பேருன்னா, எழுதுன ஆதிசங்கரர் சொல்லியிருக்கிறாரு, துவாதச மஞ்சரிகாரி. துவாதசன்னா பன்னிரண்டுன்னு பேரு, சமஸ்கிருதத்துல. நாம பத்து இரண்டு பன்னிரண்டுன்னு சொல்லுவோம். சமஸ்கிருதத்துல இப்படி சொல்வாங்க இரண்டு பத்துன்னு. துவாதசன்னா இரண்டு தச பத்து, இரண்டு பத்துன்னுவான், நமக்கு இரண்டு பத்துன்னா இருபது, இந்த இரண்டு மரபும் ஒரு மரபா? பத்தும்ரெண்டும் பன்னிரண்டுன்னு சொல்றது என் மரபு, உன் மரபு, இல்லையா? இரண்டு பத்துன்னு சொன்னா பன்னிரண்டுன்னு அர்த்தமாம். நமக்கு இரண்டு பத்துன்னு சொன்னா இருபதுன்னு பாட்டியம்மாவுக்கு கூட தெரியும். உண்டா இல்லையா? அப்போ இந்த துவாதச மஞ்சரி பிரவேகவு. துவாதச மஞ்சரிதான்னு அவரு எழுதுனாரே, அதுவும் அவனுக்கு தெரியல.

தொடரும்…

இந்திய தத்துவ மரபு இந்து மரபு இல்லை – பெரியார்தாசன் பகுதி1 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here