திருப்பூர் தமிழகத்தின் 7 வது பெரிய நகரமாகவும், வர்த்தக நகரமாகவும் பெயர் பெற்று வந்தது இதற்கு காரணம் 1980-களில் வளரத் துவங்கிய பின்னலாடை உற்பத்தி (KNITS) மற்றும் பின்னலாடை வர்த்தகம் தான். இவ்வாறு வளரத் துவங்கிய பின்னலாடை உற்பத்தி மூலம் தயாரிக்கப்படும் பொருட்களானது, இந்தியா மட்டுமின்றி உலகின் பல நாடுகளுக்கும் சென்று சேர்ந்தது.
திருப்பூரில் 1200 ஏற்றுமதி சார்ந்த உற்பத்தி நிறுவனங்கள், 3000 உள்நாட்டு உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் ஜாப் ஆர்டர் எனப்படும் ஒப்பந்த நிறுவனங்கள் உள்ளன. இது தவிர 850 பின்னலாடை நிறுவனங்கள், 400 சாய ஆலைகள், 50 பிளீச்சிங் நிறுவனங்கள், 600 பிரிண்டிங் நிறுவனங்கள், 400 எம்பிராய்டரிங் நிறுவனங்கள், 750 கம்போடிங் நிறுவனங்கள் மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பின்னலாடை சார்பு நிறுவனங்கள் உட்பட சுமார் 8350 பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களும், ஆயிரக்கணக்கான சிறு நிறுவனங்களும் இயங்குகின்றன.
பின்னலாடை தொழிலில் மட்டும் நேரடியாக சுமார் ஆறு லட்சத்திற்கும் அதிகமானவர்கள் வேலை செய்து வருகிறார்கள். நாட்டின் ஆயத்த ஆடைகள் மொத்த ஏற்றுமதியில் 30 சதவீதமும், டி ஷர்ட், பனியன் ஏற்றுமதியில் 46 சதவீதமும் இங்கிருந்துதான் செல்கின்றன.
15,000 முதல் 20,000 கோடி வரை மிகப்பெரிய அளவிற்கு அன்னிய செலாவணியை ஈட்டிக் கொடுத்து வருகிறது.
அடிடாஸ், குரோகொடைல் போன்ற உலக அளவிலான பிரபல பிராண்டுகள் துவங்கி பிரபலமடையாத பிராண்டுகள் வரை தன்னுடைய பின்னலாடை உற்பத்தியை திருப்பூரில் உற்பத்தி செய்யத் துவங்கியது. இந்த பின்னலாடைத் தொழில் வளர்ந்ததால் ஏறக்குறைய 15,000 முதல் 20,000 கோடி வரை மிகப்பெரிய அளவிற்கு அன்னிய செலாவணியை ஈட்டிக் கொடுத்து வருகிறது.
சில ஆண்டுகளுக்கு முன்னர், திருப்பூரின் பின்னலாடை ஏற்றுமதியை 2020- ஆம் ஆண்டில் ஒரு லட்சம் கோடியாக உயர்த்துவோம் என்ற திருப்பூர் தொழில் துறையினர் பிரகடனம் செய்தனர். ஆனால் அதற்கு நேர்மாறாக உற்பத்தி சரிந்துள்ளது. அதற்கு முக்கிய காரணம் திருப்பூரில் இருந்து ஏற்றுமதி ஆகும் பின்னலாடையின் அளவு 15 சதவீதம் சரிந்தது என்பதுடன், மிகப்பெரிய பாதிப்பையும் சந்தித்தது.
திருப்பூரை பொருத்தவரை இரண்டு விதமான உலகம் இருக்கிறது. ஒன்று, உள்நாட்டு சந்தைக்கு மட்டும் உற்பத்தி செய்யப்படும் பனியன், ஜட்டி சம்பந்தப்பட்ட தயாரிப்பு வகைகள் ஆகும். இரண்டாவது ஹொசைரி கார்ட்மெண்ட்ஸ் என்று அழைக்கப்படும் வெளிநாட்டு சந்தைக்கான தயாரிப்புகள் ஆகும்.
இந்தியாவின் ஆயத்த ஆடைகள் ஐரோப்பா, அமெரிக்கா, கனடா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு பெருமளவு ஏற்றுமதி செய்யப்படுகிறது. உலகளாவிய ஆயத்த ஆடைகளின் உற்பத்தியில் இந்தியாவின் பங்கு 3.8 சதவீதம் ஆகும். இந்தியாவின் பின்னலாடை ஏற்றுமதியில் 48 சதவீதத்தை திருப்பூர் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்கிறது. இதனை கொண்டுதான் திருப்பூரின் ஏற்றுமதியை ஒரு லட்சம் கோடியாக உயர்த்த முடியும் என்ற நம்பிக்கையுடன் இலக்கு வைத்தனர்.
இந்த இலக்கில் முதல் அடியை 2016 ஆம் ஆண்டு பாசிச மோடி அரசால் கொண்டு வரப்பட்ட பணமதிப்பு நீக்கம் கொடுத்தது. அந்த பாதிப்பின் போது நான்கு மாதங்களுக்கு ஊழியர்களுக்கு மாத சம்பளம் கூட கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. அதற்கு முக்கிய காரணம் பல நூறு கோடி ரூபாய் முதல் சில ஆயிரம் கோடி ரூபாய் வரையிலான மதிப்பில் பின்னலாடை ஏற்றுமதி செய்யும் பின்னலாடை நிறுவனங்கள் உட்பட அனைத்தும் சிறு சிறு ’ஜாப் வொர்க் யூனிட்’கள் துணையுடன் இயங்குவது என்பது திருப்பூரின் இயல்புகளில் ஒன்றாகும்.

இந்த நிறுவனங்கள் அனைத்தும் தங்களுக்குள் பணத்தை ரொக்கமாகவே புழங்கி வந்தது. இந்த முறையை திடீரென்று ஒரு நள்ளிரவில் மாற்றி டிஜிட்டல் முறையில் பரிமாற்றத்தை கொண்டு வந்தவுடன் தொழில் திக்கு முக்காடியது. மோடியின் பணமதிப்பு நீக்கம் பல லட்சம் தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்தது.
அதன் பிறகு இரண்டாவது அடியை 2017 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட ஜிஎஸ்டி கொடுத்தது. ஜி.எஸ்.டி அறிமுகமான உடன் ஏற்றுமதிக்கு வழங்கப்பட்ட சலுகைகள் 5 முதல் 7 சதவீதம் வரை குறைக்கப்பட்டன. ஜிஎஸ்டி கவுன்சில் சாயமேற்றுதல் மற்றும் பிரிண்டிங்கிற்கான வரியை 5%லிருந்து 12% மாக உயர்த்தியுள்ளது. மேலும் விலை உயர்ந்த ஆடைகளுக்கான வரியையும் 12% மாக உயர்த்தியுள்ளனர். இவை மீண்டும் பின்னலாடை தொழிலின் மீது மரண அடியாக விழுந்தது. தற்போது பின்னலாடைக்கு பயன்படும் பஞ்சு விலை ஏற்றம் மீளமுடியாத அளவுக்கு மிகப்பெரும் பாதிப்பை உருவாக்கியுள்ளது.
மற்றொருபுறம் இந்தியாவின் அண்டை நாடுகளான இலங்கை, வியட்நாம், வங்கதேசம், கம்போடியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் திறந்தவெளி ஒப்பந்தம் (OPEN TENDER) மூலம் ஐரோப்பிய நாடுகளுக்கு தமது பின்னலாடை உற்பத்தி பொருட்களை ஏற்றுமதி செய்கின்றனர். அவர்கள் நம்முடைய நாட்டை விட 10 சதவீதம் குறைவான விலைக்கு விற்பனை செய்கிறார்கள்.

அந்த நாடுகளில் தொழில் முனைவோர்களுக்கு சலுகைகள், வசதிகள், தொழில் கட்டமைப்பு ஆகியவை காரணமாக உற்பத்தி செலவு குறைகிறது. இதனால் சர்வதேச சந்தைக்கு குறைந்த விலையில் ஏற்றுமதி செய்ய முடிகிறது. இந்த போட்டியினால் நமது நாட்டில் இருந்து நடக்கும் ஏற்றுமதி சுமார் 50% சரிந்துள்ளது. பின்னலாடை உற்பத்தியும் தேக்கமடைகிறது. இது மட்டுமின்றி ஏற்றுமதிக்கு வழங்க்கப்பட்ட 4% ஊக்க தொகையும் பாசிச மோடி அரசால் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது. இவை அனைத்தும் சேர்ந்து பின்னலாடை தொழில் வீழ முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
இவ்வளவு துயரங்களுடன் கொரானா பதிப்புக்கு பிறகு சிறிதளவு மீளத் துவங்கிய திருப்பூர் பின்னலாடை தொழிலின் மீது மீண்டும் பாசிச மோடி அரசு தாக்குதலை துவங்கியுள்ளது. நவம்பர் 1-ஆம் தேதி முதல் பின்னலாடை உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் பருத்தி நூல்களின் விலை உயர்த்தப்பட்டதன் காரணமாக திருப்பூரில் இயங்கும் பின்னலாடை உற்பத்தி தொழில் கடும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளது.
நூல்கள் விலை உயர்வு
நூல்கள் விலை உயர்ந்ததன் காரணமாக திருப்பூர் பின்னலாடை உற்பத்தியில் ஈடுபடும் 6 லட்சம் பேரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இயங்கும் நூற்பாலைகளுக்குத் தேவையான 108 லட்சம் பேல்களில், ஏறக்குறைய 50% பஞ்சை இந்திய பருத்தி கழகத்திடம் இருந்துதான் தமிழக அரசு வாங்குகிறது. இந்த நூற்பாலைகளுக்கு இந்திய பருத்தி கழகம் (CCI), பஞ்சை நேரடியாகத் தராமல் இடைத்தரகர்களின் மூலமாகவும், சந்தை விலைக்கே கொடுப்பதாலும் பஞ்சின் விலை அதிக அளவிற்கு விற்கப்படுகிறது.
பின்னலாடை உற்பத்திக்கு முக்கியமாக பயன்படும் 20 ஆம் எண் நூல் தொடங்கி 40 ஆம் எண் வரை 2016 ஆம் ஆண்டு கிலோ ஒன்றுக்கு ரூபாய் 190 முதல் ரூபாய் 260 வரை விற்பனை செய்யப்பட்டது. அந்த ஆண்டின் மத்தியிலேயே கிலோவுக்கு 22 ரூபாய் விலை அதிகரித்து விட்டது. அப்போதே உற்பத்தியில் பாதிப்புகளை அடைய துவங்கி விட்டது. சென்ற மாதம் இதன் விலை ஒரு கிலோவுக்கு 210 ரூபாய். ஆனால் அதன் விலை தற்போது ஒரு கிலோவுக்கு 340 ரூபாயாக உயந்துள்ளது. நவம்பர் 1 முதல் அதன் விலை கிலோவுக்கு 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.
திருப்பூர் பின்னலாடை துறை வரலாற்றில் இல்லாத அளவிற்கு நூல் விலை தற்போது உயர்ந்துள்ளது. அதாவது இந்த மாதம் மட்டும் கிலோவுக்கு ரூபாய் 50 உயர்ந்து உள்ளது. அந்த வகையில் 100 கிலோ கொண்ட ஒரு கேஸ்க்கு 5000 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது. மோடி அரசோ உள்நாட்டு உற்பத்திக்கு முன்னுரிமை அளிப்பதை விட வெளிநாட்டு ஏற்றுமதிக்கே முன்னுரிமை வழங்குகிறது. மோடியின் குஜராத் தான் பருத்தி உற்பத்தியில் நாட்டின் முதலிடத்தில் இருக்கிறது என்பது குறிப்பிட தக்கது.
இந்தியாவில் 130 லட்சம் ஹெக்டேரில் பருத்தி பயிரிடப்படுகிறது. இதன் மூலம் 355 லட்சம் பேல்கள் பருத்தி பஞ்சு உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் மூன்றில் ஒரு பங்கை அதாவது 120 லட்சம் பேல்களை ஏற்றுமதி செய்கிறது. அதை தவிர உள்நாட்டு சந்தையிலும் முன் பேர வர்த்தக் சூதாடிகளின் கையில் பஞ்சு விற்பனை செய்யும் உரிமையை தாரை வார்த்து விட்டது மோடி கும்பல்.
இந்த லாப வேட்டைக்கு பலியாவதால், அதிகரிக்கும் நூல் உயர்வை கண்டித்து நவம்பர் 26 ஆம் தேதி திருப்பூரில் நடைபெற்ற மாபெரும் போராட்டத்தில் திருப்பூர் பின்னலாடை மற்றும் அதனை சார்ந்த சைமை, டீமா, நிட்மா, டெக்மா, சாய ஆலை உரிமையாளர்கள் சங்கம், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் என பல்வேறு உற்பத்தியாளர்கள், சிறு தொழில் முனைவோர்கள் மற்றும் தொழிற்சங்கங்களை சேர்ந்த 117 அமைப்புகள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
பஞ்சு நூல் விலையை கட்டுபடுத்தி, பல லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரமாக உள்ள பின்னலாடை துறையை பாதுகாப்பதற்காகவே முழு அடைப்பு மற்றும் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டது. மத்திய அரசு பஞ்சு நூல் ஏற்றுமதியை கட்டுப்படுத்தி, உள்நாட்டு ஆடை உற்பத்தித் துறையை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், அரசுக்கு தமது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் திருப்பூரில் 80% பின்னலாடை நிறுவனங்கள் அடைக்கப்பட்டது. ஒரு நாளில் மட்டும் ஏறக்குறைய 300 கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது என்பதையும் ஏற்றுக் கொண்டுதான் இந்த போராட்டத்தை நடத்தியுள்ளனர்.
அது போலவே திருப்பூர் மற்றும் பல்லடம் பகுதிகளில் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. நூல் விலை உயர்வால் பின்னலாடைத் தொழிலை போல, விசைத்தறி தொழிலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
பல்லடத்தில் ஜவுளி சந்தை ஒன்றை அமைக்க வேண்டும், அரசு ஏற்கனவே போட்டுள்ள ஒப்பந்தத்தின் அடிப்படையில் கூலி உயர்வை நடைமுறைப்படுத்த வேண்டும், உள்நாட்டு தேவைகளைக் கணக்கில் கொண்டு, அதற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் திட்டமிட வேண்டும். அதன் பிறகே வெளிநாட்டுக்கு பருத்தி ஏற்றுமதி செய்யப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை விசைத்தறி தொழிலாளர்களின் சார்பில் முன்வைத்து இந்த போராட்டத்தில் கலந்துக் கொண்டனர்.
திருப்பூரில் இயங்கும் சாய ஆலைகள் சுற்றுச்சூழலை கடுமையாக பாதிப்பதால் 2010-ஆம் ஆண்டு 826 சாயத் தொழிற்சாலைகள் மூடப்பட்டது அப்போது கூட திருப்பூரில் உற்பத்தி மற்றும் பொருளாதாரம் இந்த அளவுக்கு பாதிக்கப்படவில்லை.
ஆனால் மோடி அரசு கொண்டு வந்த பணமதிப்பு நீக்கம் மற்றும் (சரக்கு மற்றும் சேவை வரி) ஜிஎஸ்டி ஆகியவை திருப்பூரின் தொழிலை நிலைகுலையச் செய்துவிட்டது. அதுபோல ஏற்றுமதி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு வந்த ’டிராபேக்’ உட்பட, அதாவது ஏற்றுமதி செய்யும் போது செலுத்தப்பட்ட வரிகளை திரும்பப் பெறுவது (Duty drawback) போன்ற சலுகைகளை குறைத்ததன் காரணமாக திருப்பூரில் உள்ள பின்னலாடை தொழில் துறை மிகப்பெரும் நெருக்கடியை சந்திக்க தொடங்கியது. தற்போதைய பஞ்சு நூல் விலையேற்றம் காரணமாக மீண்டும் நிலைகுலைவு ஏற்பட்டுள்லது.
‘டாலர் நகரம்’ என்று பெருமையாக அழைக்கப்படும் திருப்பூர் கடந்த சில ஆண்டுகளில் டல்லடிக்கும் நகரமாக தனது பொலிவை இழக்க துவங்கி விட்டது. தமிழகத்தின் மூலை முடுக்குகளில் இருந்து வந்தவர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கி வந்த திருப்பூர் நமது கண்ணெதிரே அழிவதை நாம் வேடிக்கை பார்க்கக் கூடாது. திருப்பூரில் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பை உடனடியாக கட்டுவோம். அவர்களுடன் கோவை, திருப்பூர் மாவட்டங்களின் உள்ள அனைத்து பிரிவு தொழிலாளர்கள் – விவசாயிகள் கூட்டமைப்பையும் உருவாக்கி ஒன்றிணைந்து போராடுவோம். திருப்பூர் பின்னலாடை உள்ளிட்ட தேசிய தொழில்களை பாதுகாப்போம்.
- இளஞ்செழியன்.