பார்ப்பன பயங்கரவாத எதிர்ப்பு
மாநாட்டில் பெரியார்தசன் பேசிய உரையின் தொகுப்பு


 

நேற்றைய பதிவின் தொடர்ச்சி

பநிடதத்திலே பெரிய கேள்வி. பிரம்மம் வேறா? ஆன்மா வேறா? ரொம்ப முக்கியம். தஞ்சாவூர்ல அரிசி விலை ஏறிப் போச்சு, பருப்பு விலை ஏறிப் போச்சு ஏன் ஏறிப்போச்சின்னு கவலைப்பட வந்தா இந்துவே முன்னணிக்கு வா! இந்து முன்னணிக்கு வான்றானே எதுக்கு வரணும் நானு. உன்னுடைய உபநிடதம், உன்னுடைய ஆரண்யகம் அதற்கு முன்னால் நான்கு வேதமும் பிரச்சனை எதைத் தீர்க்கும்? தயவு செய்து யோசிங்க. நம்ம பிரச்சனை எதைத் தீர்க்கும் உபநிடதம்? பிரம்மம் வேறா ஆன்மா வேறா என்று ஆராய்ந்து பிரம்மம் வேறல்ல, ஆன்மா வேறல்ல. பிரம்மம்தான் ஆன்மா, அதைத் தெரியாமல் நடுவிலே அவித்யா குறுக்கே கோடு போட்டிருக்கிறது இதான் உபநிடதச் சாரம்.

உபநிடதம் என்ன சொல்கிறது என்றால் மொத்தம் 108 உபநிடதம் இருக்கிறது. அதில் 18 பிரதானமான உபநிடதங்கள் ஒன்றை ஒன்று முரண்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை. இப்படி முரண்படுகிற இந்த உபநிடதங்கள் இந்து தத்துவ மரபு என்று சொன்னால் அது எங்களுக்கு இல்லை. எங்கள் இந்திய மரபில் அதற்குத் தேவையும் இல்லை. அது எங்களுக்குத் தேவை இல்லை என்கிறோம். சரி, உபநிடதங்கள் இப்படி போச்சு. அதுக்கப்புறம் சாஸ்திரங்கள். ஆறு சாஸ்திரங்கள். இப்பொழுது, உழைக்கும் தோழர்களும், தோழிகளும் கொஞ்சம் கூர்மையாய் கவனியுங்கள், சாஸ்திரம், சாஸ்திரம் என்று சொல்றானே, எது நமக்கு இவன், சாஸ்திரம் என்று சொல்லியிருக்கிறானென்றால், ஆறு சாஸ்திரமும் சமம். நீங்கள் யாரை வேண்டுமானாலும், பார்ப்பன, பண்டித சாமவேதி, யசூர்வேதி, விஷிஸ்டாத் வைதியை கூடக் கேளுங்கள், தஞ்சாவூர்ல தான் நிறைய பேர் இறைஞ்சி கிடப்பாங்க. எவனையாவது பிடிச்சி கேட்டுப் பாருங்க, ஆறு சாஸ்திரம்னு சொல்றீங்களே அப்படீன்னா என்னான்னு கேட்டுப்பாருங்க. பத்திரிக்கையாளர்கள் தயவு செய்து கேளுங்கள். பத்திரிக்கையில் இந்த பெரியார்தாசன், இந்த கேள்வியை கேட்டான் என்றே கேளுங்கள். எந்தப் பார்ப்பன, வித்யாபூஷண, விதாரண, வைத்யா ஆசாரண, சாஸ்த்ர, ­மூத்ர, எந்த பாப்பானாவது பதில் சொல்வானா பார்க்கலாம்.

எது ஆறு சாஸ்திரம்? கௌடில்யரின் அர்த்த சாஸ்திரம், விபரீதமான அரசியல் தத்துவம். அது ஒரு சாஸ்திரம். கௌடில்யரின், சாணக்கியரின் அர்த்த சாஸ்திரம், பிற்காலத்திலே 1542 வாக்கிலே இத்தாலியிலே, மாக்கியவல்லி என்பவன் எழுதிய பிரின்ஸ் என்கிற விபரீதமான, கொடுங்கோல் அரசியலுக்கு ஆதாரமாக எழுதப்பட்ட நூல்தான். இந்த தேசத்தில் அலகாபாத் கோர்ட்டிலே, சின்ஹா என்பவர், இந்திராகாந்தியை நாளையிலிருந்து, நீ பிரதமருமில்லை, வெங்காயமுமில்லை என்று தூக்கியடிச்சவுடனே அன்றைக்கு இரவு அந்த அம்மா, கொடுங்கோன்மையாக, மக்கள் விரோதமாக எமர்ஜென்ஸி என அறிவித்து, எல்லா கிழவனையும், 60 வயதுக்கு இருக்கிற எந்த கிழவனா இருந்தாலும், அது மொரார்ஜிதேசாயா இருந்தாலும் சரி, சரண்சிங்கா இருந்தாலும் சரி, பெருந்தலைவர் காமராசராக இருந்தாலும் சரி, எல்லாக் கிழவனையும் உள்ள போடுன்னாங்களே அதுக்கு ஐடியா உனக்கு எப்படியம்மா வந்ததுன்னு பி.பி.சி.இண்டர்வியூ ஒண்ணுல கேட்டபோது, அந்தம்மா சொன்னாங்களே அன்னைக்கு ராத்திரி இந்த கேசுல தீர்ப்பு வந்தவுடனே நான் ரொம்ப சோர்ந்து போயி மாக்கியவல்லியோட பிரின்ஸ் படிச்சேன் அதுலதான் ஐடியா கெடச்சுதுன்னு சொன்னாங்களே.

அந்த மாக்கியவல்லிக்கு மாமாதான் கௌடில்யரின் அர்த்த சாஸ்திரம். கொடுங்கோலனுக்கு ஆதரவாக எழுதப்பட்ட விபரீத சாஸ்திரம் அது. அது ஒரு சாஸ்திரம். இது நம்ம இந்திய மரபா? இப்ப இருக்கிற இந்தியனும் சரி, இதுவரைக்கும் வாழ்ந்த இந்தியர்களும் சரி, எந்த இந்தியர்களுக்கு இதிலே உடன்பாடு. மொகலாயர்களால் ஆளப்பட்டவர்களுக்கு உடன்பாடா? நம்ப வரலாற்று புத்தகத்திலே படிக்கிறோம், பிள்ளைகளுக்கெல்லாம் கற்றுத் தருகி÷றாம். ஏன் கற்றுத் தருகிறோம் என நமக்கும் தெரியறதில்ல, ஏன் கத்துக்குறோம் என அவங்களுக்கும் தெரியறதில்லை.

1526இல் பாபர் வந்தார். வந்தா வந்துட்டு போறார். நாம என்ன பண்ண முடியும். நாம லெட்டர் போட்டு கூப்டோமா அவங்கள. அவரு வந்தாரு. அத நாம பெருசா படிக்கிறோம், 1526இல் பாபர் வந்தார் அவருக்குப் பின் அவர் மகன் ஹிமாயூன் ஆட்சிக்கு வந்தார். இறந்த பிறகு அக்பர் ஆட்சிக்கு வந்தார். இதுவரைக்கும் நல்லா கவனிச்சு பாருங்க வேறு ஏதாவது சொல்லிருக்கிறோமா? இதெல்லாம் வெறும் நேம்லிஸ்ட். ஸ்கூல்ல அட்டனன்ஸ் எடுக்கற வாத்தியாரு இதே வேலையத்தான் செய்றாரு, மணிமேகலை வந்தாச்சு மலர் விழி வந்தாச்சு, சின்சாமி வந்தாச்சு, பெரியசாமி வந்தாச்சு வெறும் நேம்லிஸ்ட், இது எங்கடா இருந்து வந்துச்சு.

வரலாற்று முறைன்னு பார்த்தால், காலைல சுப்ரபாதம் பாடறாங்களே, நல்லா கேட்டு பாருங்க, சனிக்கிழமை காலைல ரேடியோவுல கீச்சுக்கினு ஆடுதே, அத கேட்டுபாருங்க, “”ஸ்ரீபத்மநாப புருசோத்தம வாசுதேவ, வைகுண்டநாத ஜனார்த்தன சக்ரபாணி ஸ்ரீமத் ஜகந்நாத பாரிஜாத ஸ்ரீ வேங்கடாசல பதே தவசுப்ரபாதம்.” அருள் இன்னமோ பொழியுதாம் ரேடியோவில கூர்ந்து கவனிச்சா நல்லா இதென்னமோ நம்மாளுக்கு ரொம்ப புரிஞ்சுட்ட மாதிரி நாமகாரு இப்டி இப்டி போட்டுக்குறாரு. என்ன புரிஞ்சுது ஒனக்கு? புரியும். வெறும் நேம்லிஸ்ட். அட்டடென்ஸ் லிஸ்ட் கடைசியா தவசுப்ரபாதம். ஸ்டேண்டப் ஆன் தி பெஞ்ச்னு அர்த்தம். எழுந்துடுறாப்பான்னு அர்த்தம். இது இன்னான்னே தெரியாம தொட்டுத் தொட்டு கும்பிட்டுகினுகிறான் டேப் ரெக்கார்டரை நம்மாளு. இதே முறைதான் இந்த வரலாற்றில இருக்குது. 1526ல பாபர் வந்தாரு. அவரு மகன் வந்தாரு, வெங்காயம் வந்தாரு, வெள்ளபூண்டு வந்தாருன்னு. வரலாறு என்பது என்ன என்று கார்ல் மார்க்ஸ்தான் மிகச் சரியாக சொன்னார்.

மன்னர்கள் செய்த போர்களும் அவர்கள் விதித்த வரிகளும் ஆடிய அந்தரங்க விளையாட்டுகளும், கட்டி வைத்த கோட்டைகளும் மட்டும் அல்ல வரலாறு. மனிதர்கள் வர்க்கங்களாகப் பிளவுபட்டு வர்க்கங்களுக்கு இடையே நடந்த மோதல்தான் வரலாறு. இந்த வரலாறு நமக்குத் தெரியக்கூடாதுன்னுதான் இந்த பிலிம் காட்றது. இப்ப தோழர்களும் தோழியரும் பாடறாங்களே நாமக்கட்டி ஆளப்போகுது உசாருன்னு இந்த நாமக்கட்டி வந்ததுன்னா நமக்கு வரலாறே இந்த வரலாறுதான். எந்த வரலாறு ? பாபர் வந்தாரு. அவர் மகன் ஹிமாயூன் வந்தாரு. வந்தா வந்துகினு போறாரு. நாம என்ன பண்றது. உண்மையான வரலாறு இது இல்லை. வரலாறு மக்கள் வரலாறாக இருக்க வேண்டும். மக்கள் சந்தித்த பிரச்சனைகளின் வரலாறாக இருக்க வேண்டும். மக்கள் போராடிய போராட்டங்களின் வரலாறாக இருக்க வேண்டும் என்றுதான் அறிகிறோம். இப்ப இந்த கௌடில்யரின் அர்த்தசாஸ்திரம் விபரீத அரசியல் என்று சொன்னேன். இரண்டாவது சாஸ்திரம் மனுவினுடைய சாஸ்திரம். இது அதைவிட விபரீதம். அது சமுதாய சாஸ்திரம்.

தொடரும்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here