முஸ்லீம்களையும் தலித்துகளையும் இங்கு மாறிவரும் சூழலில் நாம் நடத்தும் விதத்தைப் பற்றியும் பேச வேண்டும். ஆர்தர் மில்லரின் அமைப்பான ‘எழுதுவதற்கான சுதந்திரம்’ உரையில் நீங்கள் இவ்வாறு குறிப்பிடுகிறீர்கள்: “கடந்த ஐந்தாண்டுகளில் இந்தியா கொலைகார நாடு என்ற பெயரை சம்பாதித்திருக்கிறது. முஸ்லீம்களும் தலித்துகளும் பொதுஇடங்களில் சவுக்கடிபட்டிருக்கிறார்கள், பட்டப்பகலில் இந்து கண்காணிப்புக் கும்பல்களால் அடித்துக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இந்த ‘கொலை வீடியோக்கள்’ பிறகு பெருமையோடு யூட்யூபில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கின்றன.” அப்படியென்றால், நாம் மிருகத்தனமான நாடாக ஆகிக்கொண்டிருக்கிறோமா? அல்லது இன்னும் சரியாகக் கேட்கவேண்டுமென்றால், நம்முடைய அரசாங்கம் நம்மை மிருகத்தனமாக ஆக்கிக்கொண்டிருக்கிறதா?

நாம் எப்போதுமே மிருகத்தனமான நாடாகத்தான் இருந்துவருகிறோம். இப்போது புதிதாக ‘ஆகிக்கொண்டிருக்கவில்லை’. நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்து, இந்திய ராணுவம் அதன் சொந்த மக்களுக்கு எதிராக, வடகிழக்குப் பகுதியிலோ, கஷ்மீரிலோ, ஹைதராபாத்திலோ நிறுத்தப்பட்டிருக்காத ஒருநாள்கூட இருந்ததில்லை. மேலும், இங்கு இருப்பதைப் போல சாதிக் கொடுமைகள் நடக்கும் எந்த நாடும் மிருகத்தனமான நாடாகத்தான் இருக்க முடியும். ஜாதியின் அடிப்படையில் இங்கு நிலவுவது ஒரு மிருகத்தனமான படிநிலை அமைப்பு. இது இருந்தால்தான் கீழ்ச்சாதியினரின் போராட்டங்களையும், அவர்கள் அவ்வப்போது காட்டும் எதிர்ப்புகளையும் சமூகரீதியாக, பாலியல்ரீதியாக, உளவியல்ரீதியாக அடக்கி கட்டுக்குள் வைத்திருக்க முடியும். இது ஹத்ராஸில் நடந்ததைப் பார்த்திருக்கிறோம், கயர்லாஞ்சியில் நடந்ததைப் பார்த்திருக்கிறோம். தினம் தினம், ஒவ்வொரு நாளும்.

அரசியல் கட்சிகள் தலித் வாக்குகளை தம் பக்கம் இழுப்பதற்காக முயன்றுகொண்டிருக்கும்போதே நடக்கின்ற இந்த வன்முறைகளை சமுதாய வன்முறை என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் முஸ்லீம்கள் மீதும், கிறிஸ்தவர்கள் மீதும் நிகழ்த்தப்படுபவை பலாத்காரங்களும், கும்பல்கொலைகளும் (lynching) கூட்டுக்கொலைகளும், படுகொலைகளும். இந்தக் காரியங்களைச் செய்தால் அவர்கள் பாஜகவில் சேர்த்துக்கொள்ளப்படுவதற்கு வாய்ப்பு அதிகம். அவர்களுக்கு மாலையிடப்படும், அமைச்சராக்கப்படுவார்கள். ஒருநாள் பிரதமராகவோ, உள்துறை அமைச்சராகவோகூட ஆகிவிடலாம், கடவுள்தான் அறிவார்.

இந்த வகுப்புவாத அணிதிரட்டலுக்கு உள்ளே இருக்கும் ஒரு முக்கியமான அம்சத்தை கவனிக்க வேண்டும். “கடந்த 100 வருடங்களாக நாம் மொகலாயர்களை எதிர்த்துப் போராடிவருகிறோம்,” என்கிறார் அமித் ஷா. அதாவது முஸ்லிம்கள் என்பதற்கு இடக்கரடக்கலாக முகலாயர்கள் என்கிறார். அதாவது, முஸ்லிம்கள் இந்தியாவைக் கைப்பற்றி ஆட்சி செய்தவர்களின் நேரடி வாரிசுகள்; கிறிஸ்தவர்கள் மேலை நாட்டவர்களின் ஏஜென்ட்டுகள்.

உண்மை என்னவென்றால், ஜாதி என்பது இதற்குள் பொதிந்திருக்கிறது. ஜாதி கொடுமைகளிலிருந்து தப்பிப்பதற்காகவே லட்சக்கணக்கான இந்தியர்கள் இஸ்லாத்துக்கும், கிறித்துவத்துக்கும், சீக்கியத்துக்கும் மாறியிருக்கிறார்கள். இந்து ஜாதியமைப்பின் கொடுமைகளில் பாதிக்கப்பட்ட இவர்கள்தான் இப்போது மொகலாயர்களின், ஆங்கிலேயர்களின் வழித்தோன்றல்களாகச் சித்தரிக்கப்படுகிறார்கள்.

இதனால் நீங்கள் சொல்லவருவது?

நான் சொல்லவருவது, இந்த மிருகத்தனமும், வகுப்புவாத அணிதிரட்டலும் இந்த நாட்டின் சமூக அமைப்புக்குள்ளேயே பொதிந்திருக்கின்றன என்பதுதான். வெறும் அரசாங்கம் மட்டும் இந்நிலைமையை உருவாக்கிக்கொண்டிருக்கவில்லை. இச்சமூகமே மிருகத்தனமாகத்தான் நடந்துவருகிறது.

நம்முடைய பாரம்பரிய குணாம்சத்தில் இருக்கும் மிருகத்தன்மையை அரசாங்கம் ஊக்கப்படுத்திக்கொண்டிருக்கிறதா?

ஆம், அதைத்தான் செய்துகொண்டிருக்கிறது. வெறும் ஊக்கப்படுத்தல் மட்டுமல்ல, அது தூண்டிவிட்டுக்கொண்டிருக்கிறது, சுரண்டிக்கொண்டிருக்கிறது, பலவீனமான இடங்களைத் தாக்கிக்கொண்டிருக்கிறது.

அரசாங்கம் நம்மை மிருகத்தனமாக்கிக்கொண்டிருக்கிறதா?

ஆம், நிச்சயமாக. இதில் சந்தேகமே இல்லை.

சரி, இந்தப் பின்னணியில், நான் உங்களிடம் கேட்க விரும்பும் முக்கியமான விஷயத்துக்கு வருகிறேன். இந்தியா ஒரு பாசிஸ நாடாகிவிட்டதா? உங்களுடைய சமீபத்திய நூலான ‘ஆசாதி’யின் முன்னுரையில் நீங்கள் எழுதியிருப்பது: “பாசிஸத்தின் கட்டமைப்பு நம் முகத்துக்கெதிரே முறைத்துப் பார்த்துக்கொண்டிருக்கிறது, ஆனால், அதை இன்னமும் அதை வெளிப்படையாக ஒப்புக்கொள்வதற்கு தயங்கிக்கொண்டிருக்கிறோம்.” நான் என்ன கேட்க வருகிறேன் என்றால், நம்மைச் சூழ்ந்திருக்கும் பாசிஸத்தின் அறிகுறிகளாக எவற்றைப் பார்க்கிறீர்கள்? நம் முகத்துக்கெதிரே முறைத்துக்கொண்டிருக்கும் எந்த அறிகுறிகளை நாம் அடையாளம் கண்டுகொள்ளாமல், அவற்றை ஒப்புக்கொள்ளாமல் இருக்கிறோம்?

பாசிஸம் பற்றிய கேள்வி வரும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன். இந்தியாவில் மட்டுமல்ல, பொதுவாகவே எல்லா இடங்களிலும் தலைதூக்கத் தொடங்கியிருக்கும் பாசிஸத்தின் அறிகுறிகளை ஒரு பட்டியலிட்டு வைத்திருக்கிறேன். அவற்றை இப்போது உரக்க வாசிக்கிறேன், நீங்களும், வாசகர்களும் இந்த அறிகுறிகளை அடையாளம் கண்டுகொண்டிருக்கிறீர்களா என்று சரிபார்த்துக்கொள்ளுங்கள். ஏனென்றால் இப்போதெல்லாம் ‘பாசிஸம்’ என்பது ஒரு சகஜமான, சாதாரணமாகப் பயன்படுத்தும் சொல்லாகிவிட்டிருக்கிறது. அதனால் இந்தக் கேள்வியை எதிர்பார்த்து, கொஞ்சம் வீட்டுப்பாடம் செய்து இந்த அறிகுறிகள் பட்டியலைத் தயாரித்தேன்:

ஒன்று: ‘ஒரு கடுமையான சமூக நெருக்கடியை நடைமுறையில் இருக்கும் சமூகப் படிநிலைக்கு அச்சுறுத்தலாகக் காண்பது.’ அதுதான் ஆரம்பம். மண்டல் கமிஷன் அறிக்கை வெளிவந்தவுடன் இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீடு வந்துவிடுமோவென்ற அச்சம் தலையெடுக்கிறது. உடனே புதிய ஜாதி கட்சிகள் முளைக்கத் தொடங்குகின்றன: மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, லாலு யாதவின் ராஷ்ட்ரிய ஜனதாதள், முலாயம் யாதவின் சமாஜ்வாடி கட்சி.

இரண்டு: மிகவும் பரிசுத்தமான உயர்குடி சூப்பர்மேன் பிம்பம் ஒன்றை கற்பனையில் உருவாக்கி, அதன் வழியே தேசிய எழுச்சியை வீரியமாக்குவதற்காக புராண காலத்திய தொன்மங்களை மீட்டெடுப்பது. என்னவென்று புரிகிறதா? பிராமணர்கள் என்போர் பூதேவர்கள் – பூமியில் வாழும் தெய்வங்கள் – என்று நம்பும் ஒரு மேலாண்மைச் சமூகம் ஒரு பக்கத்திலிருந்து ஒன்னொன்றுக்கு பக்கவாட்டில் இடமாற்றம் செய்ய வேண்டியிருக்கிறது.

மூன்று: ‘தேசிய ஆளும் வர்க்கத்தின் சில பிரிவினரின் ஆதரவோடு மாபெரும் கூட்டு இயக்கம் ஒன்றை நடத்துவது.’ பாபர் மசூதியை இடித்துத் தள்ளும் குறிக்கோளோடு அத்வானியின் ரத யாத்திரை நடக்கிறது; அதே நேரத்தில் இந்தியச் சந்தைகள் திறந்து தனியார்மயம் அதீதமாக அதிகரிக்கிறது. இதன் விளைவாக இடஒதுக்கீட்டு தத்துவமே நீர்த்துப்போகிறது. இது உத்தர பிரதேச தேர்தலில் முக்கியப் பங்காற்றப் போகிறது.

நான்கு: ‘மேலாதிக்கப் போக்கு கொண்ட அராஜக கட்சி ஒன்றின் எழுச்சி.’

ஐந்து: ‘நாட்டுக்கு உள்நாட்டு, வெளிநாட்டு அச்சுறுத்தல்கள் அதிகரித்திருப்பதாக புனைச்சுருட்டுகளைக் கட்டமைப்பது.’ இவை பெரும்பாலும் வகுப்பு, மதம், இனம் சார்ந்ததாகவே இருக்கும்.

ஆறு: ‘முதலாளி வர்க்கத்துக்கு எதிரான உழைக்கும் வர்க்கத்தின் கிளர்ச்சிகளை மூர்க்கத்தனமாக அடக்கி நசுக்கும் அராஜக அரசாங்கம்.’

ஏழு: ‘சுதந்திரமான ஜனநாயகச் சிந்தனை வெளிப்பாடுகளுக்குத் தடை விதிப்பது.’

எட்டு: ‘எதிர்தரப்பினரைப் பொது இடங்களில் வைத்துத் தாக்குவது, ஆயுதங்களோடு வந்து மிரட்டுவது, சில நேரங்களில் கொல்வது.’ உ-ம்: ஆர்எஸ்எஸ் படையினர், பஜ்ரங் தள், விஸ்வ இந்து பரிஷத்.

ஒன்பது: ‘ஆணாதிக்க மிரட்டல்கள், பெண்ணிய எதிர்ப்பு, ஜாதி வெறித் தாக்குதல்கள் (ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் இவை நிறவெறித் தாக்குதல்கள்) அந்நியர் வெறுப்பு.’

பத்து: ‘மற்றவர்கள் தனக்கு தீங்கு செய்வதற்கு எப்போது தயாராக இருப்பதைப் போன்ற பிரமையில் இருப்பது.’ உ-ம்: பெகாஸஸ்.

உங்களுக்கு ஒன்று சொல்லட்டுமா? நீங்கள் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருப்பவர்களில் ஒரு சிலராவது, இது எல்லாமே சுத்த அபத்தம், என்பார்கள். ‘உலகத்தில் பல நாடுகள் அவர்களுடைய பழம் பெருமைகளை, கடந்த கால பொற்காலத்தை பெருமை பேசிக்கொண்டிருக்கிறார்கள். பிரிட்டன் அதைத்தான் எப்போதும் செய்துகொண்டிருக்கிறது. பல நாடுகளில் ஒரேயொரு வலுவான கட்சிதான் ஆட்சி செய்துகொண்டிருக்கிறது, எதிர்க்கட்சிகள் மிகவும் பலவீனமாக, உதிரிக் கட்சிகளாக இருக்கின்றன. ஜனநாயகத்தைப் பொறுத்தவரை பல நாடுகளில் இதுதான் நிலைமை’ என்பார்கள். நீங்கள் இவற்றையெல்லாம் வரிசையாகப் பட்டியலிட்டு, இதுதான் பாசிஸம் என்கிறீர்கள். இது சரியா?

இதோ பாருங்கள், நான் ஒன்றும் இவர்கள் மகத்தான கடந்த காலத்தைப் பேசுகிறார்கள் என்று சொல்லவில்லை. இவர்கள் பேசுவது மகத்தான புராண காலத்தை, தொன்மக் கதைகளை என்கிறேன். ஜெர்மன் நாசிகள் தம்மை ஆரிய வம்சம் என்று அழைத்துக்கொண்டதைப்போல இவர்கள் தம்மை மனிதர்களில் உயர்ந்த ஜாதி என்று பிரகடனப்படுத்திக்கொள்வதைப் பற்றிச் சொல்கிறேன். பிரிட்டனில் பஜ்ரங் தள்ளும், ஆர்எஸ்எஸ் ஆயுத அணியும் இருக்கிறதா? அவர்கள் மக்களை நடுத்தெருவில் கொன்றுகொண்டிருக்கிறார்களா? அவர்கள் முஸாஃபர் நகர், குஜராத்போல கலவரங்களை நடத்திக்கொண்டிருக்கிறார்களா?

நாம் ஒரு பாசிஸ நாடாகிவிட்டோம் என்பதை ஏன் நம்ப முடியவில்லை என்று சொல்கிறேன்: விவசாயிகள் போராட்டத்துக்கு அரசு பணிகிறது; அரசின் மீது கடுமையான விமர்சனங்களை எழுப்பும் ஊடகங்கள் சிலவாவது இருக்கின்றன; தேர்தல்களில் அரசுகள் தோற்கடிக்கப்படுகின்றன; மோடி தேசிய அளவில் தொடர்ந்து வெற்றிபெற்றுக்கொண்டிருக்கலாம், ஆனால் மாநில அளவில் தோற்கடிக்கப்படுகிறார்; அரசை அவ்வப்போது கண்டிக்கும் நீதிமன்றங்களும் நீதிபதிகளும் இங்கு உண்டு; பெகாசஸ் விவகாரத்தில் நீதிமன்ற நடவடிக்கை ஓர் உதாரணம். இதெல்லாம் உண்மையில் பாஸிஸமா?

நம்மை ஆள்வது ஒரு பாசிஸ அரசு என்று நான் சொல்லவில்லை. ஆட்சியில் இருப்பவர்கள் அடிப்படையில் பாசிஸ்ட்டுகளாக இருப்பவர்கள்தான் என்றும், நம்மை அந்தத் திசை நோக்கித்தான் வழிநடத்திச் செல்கிறார்கள் என்றும் சொல்கிறேன்.

நரேந்திர மோடி அடிப்படையில் ஒரு பாசிஸ்ட் என்கிறீர்களா?

ஆம், அவருடைய ஆர்எஸ்எஸ்ஸும் பாசிஸ அமைப்புதான்.

பாஜக என்பதே முற்றிலுமாக பாசிஸ கட்சிதானா?

ஆம். ஆர்எஸ்எஸ்ஸின் கொள்கை வகுப்பாளர்கள் வெளிப்படையாகவே முசோலினியை, ஹிட்லரைப் பாராட்டியவர்கள். முஸ்லீம்களை ஜெர்மனியின் யூதர்களோடு ஒப்பிட்டவர்கள். இவையெல்லாமே நாம் அறிந்ததுதான். இவர்கள் இந்தியாவை ஒரு இந்து நாடாக பிரகடனம் செய்ய முடிவெடுத்ததையும் நாம் அறிவோம். இனத்தை மேம்படுத்தி வளம்பட உயர்த்தும் ‘யூஜெனிக்ஸ்’ பரிசோதனைகள் பற்றியும் நமக்குத் தெரியும். இந்த முயற்சிகளிலெல்லாம் அவர்களுடைய பிடி தளர்ந்து வருவதாகத்தான் நினைக்கிறேன். அவர்களால் வெற்றிபெறமுடியுமென்று தோன்றவில்லை. ஆனால் இந்த இருட்குகையை நாம் கடந்துசென்றாகத்தான் வேண்டும். இறுதியில் இந்நாட்டின் மக்கள் இவர்களுடைய முயற்சிகளை நிச்சயமாகத் தோற்கடித்துவிடுவார்கள், அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

வாசகர்களுக்குத் தெளிவாகப் புரிய வேண்டும் என்பதற்காகக் கேட்கிறேன்: நாம் ஒரு பாசிஸ நாடாக இன்னும் ஆகிவிடவில்லை என்கிறீர்கள். ஆனால் அதைநோக்கித்தான் சென்றுகொண்டிருக்கிறோம் என்கிறீர்கள், அப்படித்தானே?

அதை நோக்கித்தான் சென்றுகொண்டிருக்கிறோம். சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்பு நிலைமையே வேறாக இருந்தது. இவர்களுடைய பரிசோதனைகள் வெற்றிகரமாக செயல்படுத்தப்படும் அபாயம் மிகவும் நெருங்கியிருந்தது. இப்போது எவ்வளவோ பரவாயில்லை.

எது மாற்றியிருக்கிறது?

மிகப் பெரிய போராட்டங்கள், விவசாயிகளின் போராட்டம். இப்போது உத்தர பிரதேசத்தில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்று பாருங்கள்.

எனவே இந்தியா எதிர்த்துப் போராடுகிறது என்கிறீர்கள்? மக்கள் எதிர்த்துப் போராடுகிறார்களா?

ஆம், மக்கள் எதிர்த்துப் போராடுகிறார்கள், அரசியல் கட்சிகள் அல்ல.

நீங்கள் சொல்வதில் இரண்டு விஷயங்கள் ஒன்றுக்கொன்று சற்றே முரண்படுகின்றன: ஒரு பாசிஸ நாடாக மாறிக்கொண்டிருப்பதாகச் சொல்கிறீர்கள்; இரண்டு வருடங்களுக்கு முன் அந்த அபாயம் இப்போதைவிட அதிகமாக இருந்ததாகச் சொல்கிறீர்கள். இன்று நிலைமை மாறியிருப்பதற்குக் காரணம், மக்கள் – குறிப்பாக விவசாயிகள் எதிர்த்துப் போராடத் தொடங்கியிருப்பது என்கிறீர்கள், இல்லையா?

தேசிய குடிமக்கள் பதிவேட்டுத் திட்டத்தை (NRC) எதிர்த்தும் மக்கள் போராடுகிறார்கள்.

ஆனால் அது இரண்டு வருடங்களுக்கு முன்பு…

ஆனால் இந்தக் கட்டுரை எழுதப்பட்டது அதற்கு முன்பு; அந்தப் போராட்டங்கள் தொடங்குவதற்கு முன்பு.

சரி, இன்று நிலைமை எப்படி உள்ளது? இந்தியா பாசிஸ வழியில்தான் சென்றுகொண்டிருக்கிறதா?

பாசிஸக் கொள்கைகள் இப்போது சற்று வலுவிழந்திருப்பதாகத்தான் சொல்வேன்.

அப்படியென்றால்?

உத்தர பிரதேசம் போன்ற இடங்களில் நடப்பவற்றையும், விவசாயிகள் போராட்டங்களையும் பார்க்கும்போது, மக்களுக்கு இவ்வளவு காலமாக தாம் ஏய்க்கப்பட்டு வந்திருப்பது புரிந்துவிட்டதாகத்தான் தெரிகிறது.

அதாவது, பாசிஸ நாடாகிவிடும் அபாயம் வெகுவாகக் குறைந்திருப்பதாகச் சொல்கிறீர்கள். ஆகவே நிலைமை சீரடைந்துவருகிறது எனலாமா?

ஆம், அப்படித்தான் நினைக்கிறேன்.

எனவே நீங்கள் ஜொனாதன் ஷெல் உரையில் குறிப்பிட்டிருப்பதைப் போன்ற நிலைமை ஒன்றரை வருடங்களுக்கு முன் அதை நீங்கள் எழுதும்போது இருந்தது, இப்போது மாறியிருக்கிறது.

அதற்கு ஓரளவுக்குக் காரணமாக இருந்தது மக்களும், எழுத்தாளர்களும், போராட்டக்காரர்களும், களப்போராளிகளும், ஊடகர்களும்-

எதிர்வினையாற்றியிருக்கிறார்களா?

அவர்கள் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள், அதைபற்றிப் பேசியிருக்கிறார்கள். மக்கள் அவற்றுக்கு செவிமடுத்திருக்கிறார்கள், என்ன நடந்திருக்கிறது என்பதை மக்கள் சிந்தித்துப் பார்த்திருக்கிறார்கள்.

நாம் இன்று எதிர்நோக்கும் அபாயத்தின் தன்மை என்னவென்று சொல்வீர்கள்? நாம் பாசிஸ நாடாக மாறிவிடும் அபாயம் இன்னமும் இருக்கிறதா?

முக்கியமான அபாயம் நமது தேர்தல் அமைப்பு துல்லியத்தன்மையை இழந்திருப்பதுதான். எதிர்க்கட்சிகள் மிகவும் சிதறியும், தமக்குள் ஒற்றுமையின்றியும் இருக்கின்றன. ஒருவிதத்தில் இது கூட்டாட்சி வளர்வதற்கு உதவும் என்று நினைக்கிறேன்.

என் கேள்விக்கு நீங்கள் பதிலளிக்கவில்லை. நாம் பாசிஸ நாடாக மாறிவிடும் அபாயம் இன்னமும் இருக்கிறதா?

இருங்கள், நான் இன்னும் சொல்லி முடிக்கவில்லை. ‘இந்துத்துவ’ பிரச்சாரம் முழு மூச்சில் நடந்து முடிந்திருக்கிறது. இந்தச் சூழலில் உத்தர பிரதேசத்தில் தேர்தல் நடக்கிறது. முடிவுகள் எப்படியிருக்கும் என்று தெரியவில்லை. ஆனால், பாஜக தேர்தலில் தோற்றுவிட்டால் அது மிகப் பெரிய அபாயத்துக்கு வழிவகுக்கும் என்று சொல்லலாம்.

உத்தர பிரதேசத்தில் பாஜகவின் தோல்வி பாசிஸத்துக்குப் புத்துயிரூட்டிவிடும் என்றா நினைக்கிறீர்கள்?

இல்லை, உ.பி. யில் பாஜக தோற்றுவிட்டால், அது பழையபடியே மதரீதியான வன்முறைகளைத் தூண்டிவிட முயலும் என்கிறேன். இதனை உறுதியாகத் தடுத்து நிறுத்தும்படியான அரசு அங்கு அமையுமென்றால்…

கொஞ்சம் பொறுங்கள், பாஜக ராஜஸ்தானில் தோற்றிருக்கிறது, அங்கு வன்முறைகளில் ஈடுபடவில்லை; மத்திய பிரதேசத்தில் தோற்றிருக்கிறது, அங்கு எதுவும் நடக்கவில்லை; சட்டீஸ்கரில் தோற்றிருக்கிறார்கள், அங்கு எந்தக் கலவரமும் செய்யவில்லை. மோடி வந்தபிறகு பல மாநிலங்களில் அவர்கள் தோற்றிருக்கிறார்கள்.

ஆனால், உத்தர பிரதேசம் அவர்களுக்கு மிகவும் முக்கியமானது.

ஆகவே, பாஜக தோற்றுவிடுவது அது வெற்றி பெற்றுவிடுவதைவிட அதிகக் கவலையளிப்பது என்கிறீர்கள்.

இல்லை, பாஜக தோற்றுவிட்டால் அடுத்து யார் ஆட்சிக்கு வந்தாலும் மதரீதியிலான அணிதிரட்டல் நிகழாமல் மிகவும் எச்சரிக்கையோடு பார்த்துக்கொள்ள வேண்டும் என்கிறேன்.

ஆனால், நாம் ஒரு பாசிஸ நாடாக மாறிவிடும் அபாயத்தில் இருக்கிறோமா என்று உங்களிடம் கேட்டதற்கு கிடைத்த பதிலின் குழப்பத்தை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. இரண்டு வருடங்களுக்கு முன் இந்த அபாயம் அதிக அளவில் இருந்ததாகச் சொல்கிறீர்கள். அதன் பிறகு மக்கள் எதிர்த்துப் போராடத் தொடங்கிய பின் அபாயம் குறைந்திருக்கிறது என்கிறீர்கள். ஆனால், இப்போது பாஜக தோல்வியடைந்தால் இந்த அபாயம் மறைந்துவிடும் என்று பெரும்பாலான மக்கள் கருதும்போது, நீங்கள் அது புத்துயிரூட்டப்படும் என்கிறீர்கள்.

அது புத்துயிரூட்டாது, ஆனால் அந்த அபாயத்துக்கு புத்துயிரூட்டுவதற்கான தீவிரமான முயற்சிகள் நடக்கும். மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.

கரண் தாப்பர், மூத்த பத்திரிகையாளர்.

நன்றி: அருஞ்சொல்
முந்தைய பதிவுகள்
இந்தியா என்பது ஒரு சமூக ஒப்பந்தம்: அருந்ததி ராய் பேட்டி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here