சிறை செல்வத்திலிருந்து தப்பிக்க மாபெரும் குறுக்குவழி!

ED மற்றும் CBI விசாரணைக்கு பிறகு பா.ஜ.க -வில் இணைந்த எதிர்க்கட்சித் தலைவர்கள்!


டந்த பிப்ரவரி மாதம், மும்பையில் செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றிய காங்கிரஸ் கட்சியின் மகாராஷ்டிரா பொறுப்பாளர் ரமேஷ் சென்னிதலா, பாரதிய ஜனதா கட்சி (பா.ஜ.க) ஒரு “வாஷிங் மெஷின்” என்று கூறி இருந்தார். ஏனெனில், இவர்கள் அமலாக்க இயக்குநரகம் (ED) அல்லது மத்திய புலனாய்வுத் துறை (CBI) போன்ற மத்திய நிறுவனங்களின் மூலம் விசாரணைக்கு உள்ளாகும் எந்தவொரு எதிர்க்கட்சித் தலைவரும் பா.ஜ.க -வை உடனடியாக ஏற்றுக்கொள்வதன் மூலம் தன்னை புனிதவான்களாக காட்டிக்கொள்கின்றனர் என்று கூறினார். இதேபோல், கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா மத்திய ஏஜென்சிகளை “பா.ஜ.க -வின் துணை அமைப்புகள்” என்றும், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஏஜென்சிகளை “பாஜகவின் ஜவான்கள்” என்றும் அழைத்தார்.

சென்னிதலா, சித்தராமையா மற்றும் கார்கே சொல்வது ஒன்றும் புதிதல்ல. ஏனெனில், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பல தலைவர்கள் தங்கள் மீது பாதகமான நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அச்சத்தில் பாஜக அல்லது அதன் கூட்டணிக் கட்சிகளில் சேர்ந்துள்ளனர். குறிப்பாக, மத்திய நிறுவனங்களின் கிரிமினல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுவரும் எதிர்க்கட்சிகளிலிருந்து கடந்த சில மாதங்களில் மட்டும் பா.ஜ.க -வில் இணைந்த அரசியல்வாதிகளின் மாநில வாரியான பட்டியலை ”தி வயர்” தனது ஊடகத்தில் வெளியிட்டுள்ளது.

இது ஒரு முழுமையான பட்டியலாக இல்லையென்றாலும், உறுதிசெய்யபட்ட சில கட்சி மாறுதல்களை ஆதாரத்துடன் இங்கு குறிப்பிட்டுள்ளனர்.

மகாராஷ்டிரா

பாவனா கவாலி: 2020 -ஆம் ஆண்டில், மகாராஷ்டிராவின் யவத்மால்-வாஷிம் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரும், மகிளா உத்கர்ஷா பிரதிஸ்தான் என்ற பொது அறக்கட்டளையின் தலைவருமான பாவனா கவாலியை, 7 கோடி ரூபாய் முறைகேடாக பயன்படுத்தியதாக அமலாக்க இயக்குநரகம் குற்றம் சாட்டியது.

சில மாதங்களுக்குப் பிறகு, அவரது உதவியாளர் சயீத் கானை அமலாக்கத்துறை கைது செய்தது. 2021 மற்றும் 2022 -ஆம் ஆண்டுகளில், கவாலி விசாரணைக்காக அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு பல முறை அழைக்கப்பட்டார். இதற்கிடையில், இந்த வழக்கில் கவாலி உட்பட ஐந்து பேரின் மீது FIR போடப்பட்டது. அமலாக்க இயக்குநரக குற்றப்பத்திரிகையில், கவாலியுடன் தொடர்புடைய பொது அறக்கட்டளையும் சேர்க்கப்பட்டது.

இந்நிலையில், ஜூலை 2022 கவாலி, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சியில் சேர முடிவு செய்தார். இதையடுத்து அவர் மக்களவையில் கட்சியின் தலைமை கொறடாவாக அறிவிக்கப்பட்டார். அதன்பிறகு, கவாலி மீதான அமலாக்கத்துறையின் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருந்தது. அதுமட்டுமின்றி, தனது துணை குற்றப்பத்திரிகையையும் அமலாக்கத்துறை தாக்கல் செய்யவில்லை; விசாரணைகளுக்கு கவாலி அழைக்கப்படவுமில்லை.

பிரதாப் சர்நாயக்: இவர் ஓவாலா-மஜிவாடா தொகுதி எம்.எல்.ஏ -வாக இருந்து வந்தார். கடந்த ஜூன் 2021 -ல், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவில் இருந்தபோது, பா.ஜ.க -வுடன் உள்ள முரண்பாடுகளை சரிசெய்யுமாறு சர்நாயக் தாக்கரேவுக்கு கடிதம் எழுதியிருந்தார். “இது மத்திய புலனாய்வு அமைப்புகளின் விசாரணையிலிருந்து கட்சியைக் காப்பாற்றும்” என்று கடிதத்தில் தெரிவித்திருந்தார்.

ஏனெனில், அதே நேரத்தில்தான் சர்நாயக் மற்றும் அவரது குடும்பத்தினரின் ரூ.5,600 கோடி மதிப்புள்ள தேசிய ஸ்பாட் எக்ஸ்சேஞ்ச் லிமிடெட் (NSEL) ஊழல் தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணையை எதிர்கொண்டனர். அமலாக்க இயக்குநரகம் அவரை விசாரித்ததோடு, அவரது நிறுவனத்திற்கு சொந்தமான 112 வீட்டு மனைகளையும் கையகப்படுத்தியது.

ஜூன் 2022-ல், ஏக்நாத் ஷிண்டே தாக்கரே முகாமுக்கு எதிராக சதி செய்து பா.ஜ.க -வுடன் சேர முடிவு செய்தபோது, சர்நாயக் முதலில் போய் தன்னை பா.ஜ.க -வுடன் இணைத்துக்கொண்டார்.

தாக்கரே மாநில முதல்வராக இருந்தபோது, இந்த வழக்கை முதலில் மாநில பொருளாதார குற்றப்பிரிவு (EOW) கையாண்டது. விசாரணைக்கு பிறகு மாநில பொருளாதார் குற்றப்பிரிவு தனது இறுதி அறிக்கையை தாக்கல் செய்தது. ஆனால், அத்தோடு விடாமல் இந்த வழக்கை அமலாக்கத்துறை கையில் எடுத்தது. சர்நாயக் ஷிண்டேவுடன் கூட்டு சேர்ந்தவுடன், அமலாக்கத்துறை எதிர்பார்த்தபடி தனது விசாரணையை மெதுவாக்கி கண்டுக்கொள்ளாமல் இருந்தது.

ஹசன் முஷ்ரிஃப்: மார்ச் 2023 இல், பணமோசடி வழக்கு தொடர்பாக மும்பை மற்றும் கோலாப்பூரில் உள்ள முஷ்ரிப்பின் வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. சார் சேனாபதி சாந்தாஜி கோர்படே சர்க்கரை ஆலை, அப்பாசாகேப் நல்வாடே காதின்லாஜ் தாலுகா கூட்டுறவு சர்க்கரை ஆலை மற்றும் முஷ்ரிப் தலைவராக உள்ள கோலாப்பூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஆகியவற்றில் நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக பா.ஜ.க தலைவர் கிரித் சோமையா முஷ்ரிப் மீது குற்றம் சாட்டியிருந்தார்.

முஷ்ரிப் நீதிமன்றத்திற்கு சென்றார். அது அவருக்கு இடைக்கால நிவாரணம் வழங்கியது. இருப்பினும், முஷ்ரிப் கைது செய்யப்பட்டார். அதனையடுத்து, ஜூலை 2023 இல், அஜித் பவார் தேசிய காங்கிரஸ் கட்சியை (NCP) உடைத்து பா.ஜ.க -வுடன் கைகோர்க்க முடிவு செய்தபோது அவருடன் முஷ்ரிப்பும் சென்றார். அதன்பிறகு, அவரது வீட்டில் மேற்கொண்டு எந்த விசாரணையும் நடைபெறவில்லை. சோதனைகள் குறித்து எந்த தகவலும் வெளியிடவில்லை. ஆனால், இந்த வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

யாமினி ஜாதவ்: இவர் சிவசேனாவின் பிரபல எம்.எல்.ஏ -வும், பிரஹன் மும்பை மாநகராட்சியின் (PMC) நிலைக்குழுவின் முன்னாள் தலைவர் யஷ்வந்த் ஜாதவ் -ன் மனைவி ஆவார். இவர் அந்நிய செலாவணி மேலாண்மை சட்டத்தை (FEMA) மீறிய வழக்கில் அமலாக்கத்துறை குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். ஏப்ரல் 2022 இல், வருமான வரித் துறை யாமினி மற்றும் அவரது கணவருக்கு சொந்தமான 41 சொத்துக்களை முடக்கி, அமலாக்கத் துறை அவரையும் அவரது கணவரையும் விசாரணைக்கு அழைத்தது. பின்னர், இருவரும் ஷிண்டேவின் சிவசேனா கட்சியில் சேர்ந்தனர். பின்னர், தம்பதியினருக்கு விசாரணை மற்றும் வழக்குகள் ஏதுமின்றி அமைதியாக சென்றது. ஜூலை 2022 இல், சட்டமன்ற சபாநாயகர் தேர்தலின்போது ஷிண்டே கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ -வாக ஆதரவாளர்களின் எண்ணிக்கையை ஜாதவ் பதிவு செய்தார். அப்போது, எதிர்க்கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் “ED, ED” என்று கோஷமிட்டு அவரை அம்பலப்படுத்தினர்.

சகன் புஜ்பால்: தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மகாராஷ்டிராவில் வலுவான ஓ.பி.சி முகமுமான புஜ்பால் கட்சி மாறி அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் செல்ல முடிவு செய்தார். புஜ்பால் மாநில பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தபோது 2006 ஆம் ஆண்டில் மூன்று திட்டங்களுக்கு ரூ.100 கோடிக்கு மேல் ஒப்பந்தங்களை வழங்கியதில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்பட்டு, அது தொடர்பாக அவர்மீது விசாரணை நடந்துவந்தது. இந்நிலையில், கடந்த 2016 -ஆம் ஆண்டில் அமலாக்கத் துறையால் மற்றொரு பணமோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டு மத்திய நிறுவனத்தால் கைது செய்யப்பட்டார். புஜ்பால் அஜித் பவாருடன் சென்றாலும், தனது அதிருப்தியை தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வருகிறார். இருப்பினும், அவர் கட்சியை விட்டு வெளியேற முன்வரவில்லை.

அசோக் சவான்: காங்கிரஸ் மூத்த தலைவரும், மகாராஷ்டிராவின் இரண்டு முறை முதல்வருமான சவான், தானும் இந்த மாத தொடக்கத்தில் பா.ஜ.க -வில் இணைவதாக அறிவித்தார். அவர் எந்த காரணங்களையும் கூறவில்லை. மகாரஷ்டிராவின் நாந்தேட் நகரத்தின் 65 வயதான எம்.எல்.ஏ அசோக் சவான், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக சி.பி.ஐ விசாரணையை எதிர்கொண்டு வருகிறார் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

1999 -ஆம் ஆண்டு நடந்த கார்கில் போரில் பங்குபெற்ற வீரர்கள் மற்றும் உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்காக கட்டப்பட்ட ஆதர்ஷ் கூட்டுறவு வீட்டுவசதி சங்கம் என்ற 31 மாடி கட்டிடத்தின் முதன்மை பயனாளிகளாக அவரும் அவரது குடும்ப உறுப்பினர்களும் உள்ளனர் என்று குற்றம் சாட்டப்பட்டார். அமலாக்க இயக்குநரகமும் இந்த விவகாரத்தை விசாரித்து வருகிறது, இதில் சவான் ஒரு குற்றவாளியாக இருக்கிறார் என அறிவித்திருந்தது.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கடந்த 2018 -ஆம் ஆண்டு வழக்கு விசாரணைக்கு தடை விதித்து உத்தரவிட்டது. அதன்பிற்கு, சி.பி.ஐ வழக்கின் விசாரணையும் நடத்தவில்லை; அமலாக்கத்துறை கைது நடவடிக்கையை நிறுத்திக்கொண்டு, குற்றப்பத்திரிக்கையும் ஏதும் தாக்கல் செய்யவில்லை.

பாபா சித்திக்: 2017 ஆம் ஆண்டில் அமலாக்கத்துறை, குடிசை மறுவாழ்வு திட்டம் மற்றும் நில ஒப்பந்தத்தில் பணமோசடி நடந்திருப்பதாக கூறி சித்திக்குடன் தொடர்புடைய வளாகங்களில் சோதனை நடத்தியது. மும்பையின் பாந்த்ராவைச் சேர்ந்த மூன்று முறை எம்.எல்.ஏ -வான சித்திக், 2000-2004 க்கு இடையில் மகாராஷ்டிரா வீட்டுவசதி மற்றும் பகுதி மேம்பாட்டு ஆணையத்தின் (MHADA) மும்பை வாரியத்தின் தலைவராக இருந்த தனது பதவியை தவறாகப் பயன்படுத்தியதாகவும், மும்பையின் புறநகர் பகுதியான பாந்த்ராவில் ஒரு சேரியில் முறைகேடுகளை அனுமதித்ததாகவும் பாபா சித்திக் மீது குற்றம் சாட்டப்பட்டதாக அமலாக்கத்துறை தெரிவித்திருந்தது.

வழக்கு நிலுவையில் இருந்த நிலையில், சித்திக் மீதான நடவடிக்கையை அமலாக்கத்துறை தாமதப்படுத்தியது. ஏனெனில், பிப்ரவரி மாத தொடக்கத்தில் சித்திக் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது

அஜித் பவார்: தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவரான அஜித் பவார் திடீரென தனது மாமா மற்றும் கட்சி நிறுவனர் சரத் பவாருடனான உறவை முறித்துக் கொள்ள முடிவு செய்து கட்சியை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். அஜித் மீது மாநில அளவிலும், மத்திய அளவிலும் பல்வேறு அமைப்புகள் வழக்குகளை எதிர்கொண்டன. கூட்டுறவு வங்கி மற்றும் மாநில நீர்ப்பாசனத் திட்டம் தொடர்பான இந்த வழக்குகள் கிட்டத்தட்ட பத்தாண்டுகளாக இழுத்தடிக்கப்பட்டு வருகின்றன. எதுவாக இருந்தாலும் நடவடிக்கை எப்போதும் அதிகாரத்தில் உள்ள கட்சியைச் சார்ந்தே இருக்கும் என்பது நாம் அறிந்ததே.

உதாரணமாக, மகாராஷ்டிரா மாநில கூட்டுறவு வங்கி வழங்கிய கடன்களில் முறைகேடுகளை பவார் அனுமதித்ததாக மாநிலத்தின் பொருளாதார குற்றப்பிரிவு முதலில் குற்றம் சாட்டியது. பொருளாதார குற்றப்பிரிவின் இந்த விசாரணையின் அடிப்படையில், அமலாக்கத் துறையும் அவர் மீது பணமோசடி வழக்கு பதிவு செய்தது. 2019 -ஆம் ஆண்டில் மகாவிகாஸ் அகாதி ஆட்சிக்கு வந்தபோது, அவருக்கு எதிராக எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்று நிறுவனம் நீதிமன்றத்தில் தெரிவித்தது. சிறப்பு நீதிமன்றத்தில் மூடல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இருப்பினும் அமலாக்கத்துறை விசாரணை தொடர்ந்தது.

காங்கிரஸ் – என்.சி.பி அரசாங்கத்தில் நீர்வள அமைச்சராகவும், விதர்பா நீர்ப்பாசன மேம்பாட்டுக் கழகத்தின் தலைவராகவும் அஜித் இருந்தபோது, நீர்ப்பாசன திட்டங்களில் முறைகேடுகளை அனுமதித்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. பொதுநல மனுக்களின் அடிப்படையில், மகாராஷ்டிரா ஊழல் தடுப்புப் பிரிவு (ACB) இது தொடர்பாக நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணையைத் தொடங்கியது. இந்த வழக்கு மீண்டும் குளிர்பதனக் கிடங்கில் வைக்கப்பட்டு, 2019 ஆம் ஆண்டில், தேவேந்திர ஃபட்னாவிஸ் தனது அரசாங்கத்தை அமைத்த அடுத்த நாள், மகாராஷ்டிரா ஊழல் தடுப்புப் பிரிவு மும்பை உயர் நீதிமன்றத்தில் ஒரு அறிக்கையை சமர்ப்பித்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஆனால், இந்த அறிக்கையை நீதிமன்றம் இன்றுவரை ஏற்கவில்லை.

கோவா

திகம்பர் காமத்: லூயிஸ் பெர்கர் வழக்கு அசாம் மற்றும் கோவாவில் மேற்கொள்ளப்பட்ட நீர் மேலாண்மை திட்டங்களை உள்ளடக்கியது. முன்னாள் முதல்வர் திகம்பர் காமத் மற்றும் முன்னாள் மாநில பொதுப் பணித்துறை அமைச்சர் சர்ச்சில் அலேமாவோ ஆகியோர் லஞ்ச வழக்கில் குற்றம் சாட்டப்பட்டனர். இது முதலில் சி.பி.ஐ -யால் கையாளப்பட்டது. அடுத்த சில நாட்களிலேயே அமலாக்கத்துறையும் தன்னை இணைத்துக்கொண்டது. முதல் தகவல் அறிக்கையின்படி, நியூஜெர்சியைச் சேர்ந்த ஆலோசனை நிறுவனமான லூயிஸ் பெர்கரிடமிருந்து அரசியல்வாதிகளுக்கு 14 ஷெல் நிறுவனங்கள் கோடிக்கணக்கான ரூபாய் லஞ்சம் கொடுத்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

திகம்பர் காமத் மற்றும் அவரது சகாக்களுக்கு எதிராக 2015 -இல் தொடங்கிய வழக்கு விசாரணை 2022 -இல் தீவிரமடைந்தது. இதனையடுத்து, செப்டம்பர் 2022 காமத் மற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ -களுடன் பா.ஜ.க கட்சிக்கு தாவிச் சென்றார்.

ஆந்திரப் பிரதேசம்

2021 ஜூன் மாதம் பா.ஜ.க -வுக்கு தாவிய தெலுங்கு தேசம் கட்சியின் நான்கு மாநிலங்களவை உறுப்பினர்களில், தொழிலதிபர்களான சி.எம்.ரமேஷ் மற்றும் ஒய்.எஸ்.சவுத்ரி இருவரும் ஐ.டி, சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறையின் கண்காணிப்பின்கீழ் உள்ளனர்.

பா.ஜ.க -வில் இணைவதற்கு சில மாதங்களுக்கு முன்பு, பா.ஜ.க எம்.பி -யும், செய்தித் தொடர்பாளருமான ஜி.வி.எல்.நரசிம்ம ராவ், சவுத்ரி மற்றும் ரமேஷ் இருவரையும் “ஆந்திர மல்லையாக்கள்” என்று அழைத்தார். அவர்கள் மீது “பொருத்தமான நடவடிக்கை” எடுக்கக் கோரி மாநிலங்களவை நெறிமுறைக் குழுவுக்கும் ராவ் கடிதம் எழுதியிருந்தார்.

சில காலங்களாக, பல ஊழல் வழக்குகளை எதிர்கொண்டுள்ள ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு இருவரும் பா.ஜ.க -வுடன் இணக்கமாக இருக்கத் தொடங்கியுள்ளனர். ரெட்டிக்கு எதிரான வழக்குகளை மத்திய நிறுவனங்களான சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறை கையாண்டாலும், சந்திரபாபு நாயுடு விஷயத்தில் உள்ளூர் மாநில காவல்துறை தான் அவரை கடந்த ஆண்டு கைது செய்தது. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா -வின் மறைமுக ஆதரவு இல்லாமல் ஜெகன்மோகன் ரெட்டி, சந்திரபாபு நாயுடுவை கைது செய்திருக்க மாட்டார் என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை.

மேற்கு வங்காளம்

சுவேந்து அதிகாரி: 2017 -ஆம் ஆண்டில், சுவேந்து அதிகாரி திரிணாமுல் காங்கிரஸில் (TMC) இருந்தபோது, நாரதா ஸ்டிங் ஆபரேஷன் வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறையால் பல முறை சம்மன் அனுப்பப்பட்டது. ஒரு செய்தி நிறுவனம் நடத்திய ஸ்டிங் ஆபரேஷன் மூலம், பல அரசியல்வாதிகள் மற்றும் ஒரு உயர் பதவியில் உள்ள போலீஸ் அதிகாரி ஒரு நிறுவனத்திற்கு அதிகாரப்பூர்வமற்ற சலுகைகளை வழங்க லஞ்சம் பெற்றதாக ஏற்றுக்கொண்டனர்.

2020 ஆம் ஆண்டில், சுவேந்து அதிகாரி பா.ஜ.க -வில் இணைந்தார். இன்று மேற்கு வங்க சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக உள்ளார். 2021 சட்டமன்றத் தேர்தலில், முதல்வர் மம்தா பானர்ஜிக்கு எதிராக நந்திகிராம் தொகுதியில் சுவேந்து அதிகாரி வெற்றியும் பெற்றார்.

மொழிபெயர்ப்பு

  • செயலினி

(சமீபத்தில் டைம்ஸ் நவ் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த ஊழல் கறைபடிந்த பலர் பாஜகவில் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்களே? என்ற கேள்விக்கு “பாஜகவின் கதவுகள் அனைவருக்கும் திறந்துள்ளது” என்று பதிலளித்தார் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். நிர்மலா சீதாராமனின் இந்த பதிலைக் கேட்டு சங்கி நெறியாளர் நவிகா குமாரே அதிர்ச்சியடைந்தார். இதில் அதிர்ச்சியடைய எதுவுமில்லை. மேற்கண்ட தரவுகளில் இருந்து நாம் புரிந்துக்கொள்வது யாதெனில், ED, CBI, NIA, வருமான வரித்துறை என அனைத்தும் பாஜகவின் கிளைகளாக செயல்பட்டு வருகின்றன. பாஜகவை எதிர்த்தால் சிறைக்கு அனுப்புகின்றன, ஆதரித்தால் வழக்குகளை மூடப்படுகின்றன என்பதை புரிந்து கொள்ள முடியும். பாஜகவின் ஊழல் ஒழிப்பு கோஷம் வெறும் ஏமாற்று கூச்சல் என்பதையே மேற்கண்ட விவரங்கள் நிறுவுகின்றன. இந்த நாட்டைப் பிடித்தாட்டும் பெரும்ஊழல் கும்பலே ஒன்றிய மோடி அரசுதான். அதனைத் தூக்கியெறிவதே ஊழலை ஒழிக்கும் முதல் நடவடிக்கையாக இருக்கும் என்பதையும் உணர்த்துகின்றன)

– எமது குறிப்பு

https://m.thewire.in/article/politics/the-great-crossover-opposition-leaders-who-joined-the-bjp-after-action-by-central-agencies

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here