ஹிஜாப்பும் காவியும்!

ர்நாடகத்தின் கடலோர நகரான உடுப்பியில் பள்ளி வகுப்பறைகளில் ஹிஜாப் அணியும் உரிமை கோரி, மாணவிகள் சில நாட்களாகப்
போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இசுலாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்தால் நாங்கள் காவித் துண்டு அணிவோம்! என இந்து மாணவிகளை தூண்டிவிடுகிறது கர்நாடகாவை
ஆளும் பா.ஜ க மற்றும் ஆர்.எஸ்.எஸ்.

இளம் மனங்களில் மத நஞ்சை விதைத்து, பிரிவினை சிந்தனையை வளர்க்கிறது சங்பரிவார்.

அய்யப்பன் கோவிலுக்கு பெண்கள் போக முடியாது. எந்த ஒரு இந்து மடத்திலும் பெண்கள் ஆதீனகர்த்தவாக முடியாது. இவர்கள்தான் ஹிஜாப் அணிவது பிற்போக்குத்தனம். பள்ளிகளில் மத அடையாளங்களைப் பேணக்கூடாது! என்றெல்லாம் நியாயம் பேசுகிறார்கள்.

படிக்க:

பள்ளிகளில் ஹிஜாப் அணிவது குற்றமா? 

இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்பது வெறும் பெயருக்குதான். இங்கு எல்லா காவல் நிலையங்களுக்கு முன்னாலும் பிள்ளையார் கோவில் இருக்கிறது. விண்வெளியில் செலுத்தப்படும் ஏவுகணைகளுக்கும் இங்கு ஆயுதபூசை கொண்டாடப்படுகிறது. எல்லா பள்ளிகளிலும் விஜயதசமி அட்மிஷன் நடைபெறுகிறது.

ஆனால், முஸ்லீம் மாணவிகள் மட்டும் ஹிஜாப் அணியக் கூடாதாம். என்ன நியாயம்? கடுமையாக சீருடை பேணப்படும் ராணுவத்திலும் சீக்கியர்களுக்கு டர்பன் மற்றும் குறுங்கத்திக்கு அனுமதி உண்டு.

இந்தியாவில் வாழும் எல்லோருக்கும் அவரவர் மத அடையாளங்களைப் பேண , இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் வழிவகை செய்கிறது.

ஹிஜாப் என்பது ஒரு மத உடையே கிடையாது. அது ஒரு கலாச்சார ஆடை. முஸ்லீம் பெண்கள் ஒவ்வொரு நாட்டிலும் அந்தந்தக் கலாச்சாரத்துக்கு ஏற்ப பர்தா, ஹிஜாப், நிகாப், சடோர் என வெவ்வேறு வகையில் முகத்தை மறைத்து உடுத்தும் வழக்கம் உடையவர்களாக இருக்கிறார்கள்.

இசுலாம் மதம் உருவானதற்கு முன்னரே ஹிஜாப் அணியும் பழக்கம் சவுதி அரேபிய பெண்களிடம் இருந்தது. முஸ்லீம்கள் என்றில்லை. மேற்குலக பெண்களிடமும் முக்காடு அணிகிற பழக்கம் இருந்தது.

பனி, குளிர் போன்ற பருவகாலங்களிலிருந்து பெண்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும் இத்தகு பழக்கம் உருவாகியிருக்கக் கூடும்.

கிறித்துவப் பெண்களிடம் முக்காடு அணிகிற வழக்கம் இன்னமும் கூட இருந்து வருகிறது.

பர்தா, புர்கா, ஹிஜாப் போன்றவை அணியச் சொல்லி இசுலாத்தில்
எங்கும் குறிப்பிடப்படவில்லை. இது இசுலாம் மத வழக்கமில்லை. முஸ்லீம் பண்பாட்டின் ஓர் அங்கம் என்கிறார், பேராசியர் ஃபரிதா கானம்.

சுடிதார் போட்டு கோவிலுக்குப்போனால் இந்துப் பெண்களிடம் வன்முறை செய்யும் மத அடிப்படைவாதக் கூட்டம்தான், உடை விசயத்தை காட்டி இந்து மாணவர்கள் இசுலாமிய மாணவர்கள் என பிரிக்கப் பார்க்கிறது.

தாழ்த்தப்பட்ட பெண்களுக்கு ரவிக்கை அணியும் உரிமையை மறுத்தவர்கள் , இன்று ஹிஜாப் அணியும் உரிமையையும் மறுக்கிறார்கள்.

எப்படி ஹிஜாப் இசுலாமிய மத உடை இல்லையோ, அப்படிதான் காவியும். இந்திய மண்ணில் ஆரியர்கள் குடியேறுவதற்கு முன், இந்து மதம் தோன்றுவதற்குமுன் இங்கு வாழ்ந்த துறவிகள் உடுத்திய உடை காவி.

நம் மண்ணின் நிறம். இந்த மண்ணில் அமர்ந்ததும் படுத்தும், காவியானது துறவிகளின் உடை.

இசுலாத்துக்கு எதிராக போராடத் தூண்டுபவர்கள், மாணவர்களுக்கு பூணூல் அணிவிக்கவில்லை. மாணவிகளுக்கு மடிசார் கட்டவில்லை . ஆனால் காவித் துண்டு அணிவிக்கிறார்கள்.

பிப்ரவரி 14 அன்று ஒரு இந்து மாணவனையும் இந்து மாணவியையும் ஒன்றாக பூங்காவில் உட்கார அனுமதிக்குமா இந்த சங்பரிவார்?

இந்துவும் இந்துவும் என்றாலும் வெவ்வேறு சாதிகள் ஒன்றாகிவிடக் கூடாதல்லவா? இசுலாமை எதிர்க்க மட்டும் இந்து. மாட்டுக்கறி தின்றால் தீண்டத்தகாதவர்கள்.

மாணவர்களாக ஒன்றிணைந்து இருப்பவர்களை மதத்தை சொல்லி பிரிக்கப் பார்க்கிறார்கள். மாணவர்கள் பலியாகிவிடக்கூடாது!

  • கரிகாலன்

2 COMMENTS

  1. ஏது?….
    போகிற போக்கைப் பார்த்தால் கரிகாலனுக்கு விசிறி ஆகிவிடுவேன் போல…
    ரத்தின சுருக்கமான வரிகள் ஆனால் ஆழ்ந்த கருத்துக்களை தாங்கிப்பிடித்துள்ளது.
    வாழ்த்துக்கள் கரிகாலன்,
    தங்களது எழுத்துக்கள் தொடரட்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here