90களில் இந்தியா உள்ளிட்ட அரைக் காலனிய நாடுகளில் மீது புதிய தாராளவாதம் என்ற பெயரில் திணிக்கப்பட்ட மறுகாலனியாக்க கொள்கைகள் கடும் பாதிப்புகளையும், பொருளாதார வீழ்ச்சியையும் ஏற்படுத்தியது.

அதையடுத்து, பொருளாதார சிக்கல்கள் தீர்வு காணும் நோக்கில் கடந்த 1999-ம் ஆண்டில் ஜி-20 அமைப்பு தொடங்கப்பட்டது. இதில் அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான், சீனா, இந்தியா, கனடா, துருக்கி, தென் ஆப்பிரிக்கா, சவுதி அரேபியா, தென்கொரியா, மெக்சிகோ, இத்தாலி, இந்தோனேசியா, பிரேசில்,ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா ஆகிய 19 நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உறுப்பினர்களாக உள்ளன.

1997-99 ஆம் ஆண்டுகளில் ஏற்படுத்தப்பட்ட ஜி 20 நாடுகளுக்கான அமைப்பு, ஆண்டுக்கு ஒரு முறை உச்சி மாநாடு நடத்தும் அளவுக்கு அடுத்த நிலையை அடைந்தது. உலக அளவில் அமெரிக்கா உள்ளிட்ட பொருளாதரங்களின் அளவுக்கு வளர்ந்த பெரிய பொருளாதார கூட்டமைப்பாக உருவெடுத்த இந்த அமைப்பு சார்பில் ஆண்டுதோறும் உச்சி மாநாடு நடத்தப்பட்டு வருகிறது

ஒருபுறம் உலகை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர துடித்துக் கொண்டிருக்கும் ஒற்றைத் துருவ வல்லரசான அமெரிக்கா மற்றும் ஏகாதிபத்திய முதலாளித்துவ நாடுகளையும் உள்ளடக்கி ஜி 7 நாடுகள் என்ற கூட்டமைப்பு செயல்படுகின்ற போது மற்றொருபுறத்தில் ஜி 20 நாடுகள் என்று உருவாக்கப்பட்டது உள்நோக்கம் கொண்டதாகும்.

2008 உலக பொருளாதார நெருக்கடிக்கு பிறகு தன்னை மீண்டும் மேல்நிலை வல்லரசாகவே நீட்டித்துக் கொள்வதற்கு அமெரிக்கா தொடர்ந்து முயற்சித்து வருகிறது என்றாலும் நேர்மாறாக அமெரிக்காவின் பொருளாதாரம் தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து கொண்டே வருகிறது மற்றொருபுறம் நவீன சமூக ஏகாதிபத்தியமாக வளர்ந்துள்ள சீனா பல்வேறு துறைகளில் அமெரிக்காவிற்கு போட்டியாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது.

சீனாவின் தொடர்ச்சியான அரசியல் பொருளாதார தாக்குதல்களை எதிர் கொள்ள முடியாத அமெரிக்கா தொண்ணூறுகளின் இறுதியில் தான் கட்டியமைத்த ஜி 20 நாடுகளில் கூட்டமைப்பை வலுப்படுத்துவதும் காலனி, அரைக்காலனிய, நவீன காலனிய நாடுகளின் மீது சமனற்ற பல்வேறு ஒப்பந்தங்களை போட்டுக் கொள்வதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

உற்பத்தி, வேலைப் பிரிவினை, சந்தை விநியோகம், நுகர்வு அனைத்தும் சர்வதேசமயமாக்கி விட்ட பிறகு புதிய செல்வாக்கு மண்டலங்களை உருவாக்குவதும், உலக சந்தையை மறு பங்கீடு செய்து கொள்வதும் என்ற நோக்கத்தில் அமெரிக்க மேல்நிலை வல்லரசு ஒரு கூட்டமைப்பை உருவாக்கியுள்ளது. ஜி 7 நாடுகளுக்கு அடுத்து உலக அளவில் வளர்ந்து வருகின்ற நாடுகளை ஒரு கூட்டமைப்பாக கொண்டு உருவாக்கப்பட்டது தான் ஜி 20.

இந்த ஜி 20 கூட்டமைப்பிற்கு ஆண்டுக்கு ஒரு முறை உச்சி மாநாடு நடத்தப்பட்டு புதிய தலைமை தேர்வு செய்யப்படுகிறது.

இந்தோனேசியா அதிபர் ஜோகோ விடோடோ விடம் இருந்து இந்த தலைமை பொறுப்பை ஏற்றுக் கொண்ட இந்திய ஒன்றிய பிரதமர் மோடி தற்போது பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோவிடம் அதை ஒப்படைத்துள்ளார் இந்த ஓராண்டுக்குள் அவர்கள் செய்த அலப்பறைகள் ஏராளம். இந்த கூட்டமைப்பை பயன்படுத்திக்கொண்டு அமெரிக்க தலைமையிலான கார்ப்பரேட் நிறுவனங்கள் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஏராளம் ஏராளம்.

ஆண்டுக்கு ஒரு முறை தலைமை பொறுப்பு மாறுகின்ற இந்த ஜி20 தலைமையில் இந்தியா வந்தவுடன் மோடி “இந்திய தேசியக் கொடியில் இடம் பெற்றுள்ள நிறங்களான ஆரஞ்ச், வெள்ளை, பச்சை மற்றும் நீல நிறங்களிலிருந்து ஜி-20 இலச்சினை வரையப்பட்டுள்ளது. இந்தியாவின் தேசிய மலரான தாமரையுடன் கூடிய புவிச் சின்னம் சவால்களுக்கு இடையேயான வளர்ச்சியைப் பிரதிபலிக்கிறது. இயற்கையுடன் நல்லிணக்கத்துடன் வாழ்வதற்கான இந்தியாவின் புவி சார்ந்த அணுகுமுறையை பூமிச் சின்னம் பிரதிபலிக்கிறது. ஜி-20 இலச்சினைக்கு கீழே எழுதப்பட்டுள்ள “பாரத்” என்ற வார்த்தை தேவநாகிரி முறையில் இடம் பெற்றுள்ளது.

இலச்சினை வடிவமைப்பிற்கான திறந்தவெளி போட்டி மூலம் இது வடிமைக்கப்பட்டுள்ளது. இப்போட்டிற்காக 2,000 விண்ணப்பங்கள் மைகவ் இணையதளத்தில் பெறப்பட்டது.

இந்தியாவின் ஜி-20 தலைமைத்துவத்திற்கான கருப்பொருள் – வசுதைவக் குடும்பகம் அல்லது ஒரு பூமி, ஒரு குடும்பம், ஒரு எதிர்காலம் – என்பது மகா உபநிஷத்தின் பழமையான சமஸ்கிருத உரையிலிருந்து எடுக்கப்பட்டது.” என்று பிரதமர் அலுவலகத்தில் இருந்து செய்தி வெளியிடப்பட்டது.

தற்போது வெகு மிகவும் பல கோடி ரூபாய் வாரி இறைத்து உலகில் உள்ள ஏகாதிபத்திய முதலாளித்துவ நாடுகள் மற்றும் மேல்நிலை வல்லரசுகளை அழைத்து தன்னை மிகப்பெரும் தலைவராக காட்டிக் கொள்ள முயற்சித்த மோடியின் அலப்பறைகள் அனைத்தும் நேற்றுடன் முடிவடைந்தது.

ஆனால் இந்த சாதனையை, வரும் ஐந்து மாநில சட்டசபைத் தேர்தலின்போது பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்றும், அதற்கேற்ப நிகழ்ச்சிகளை வடிவமைத்துக் கொள்ள வேண்டுமென்றும் பா.ஜ., மேலிடத்திலிருந்து அறிவுறுத்தல்கள் வரத் துவங்கியுள்ளன.

விஸ்வகுரு மோடி.

இந்த வெற்றியை அடுத்த கட்டத்திற்கு பயன்படுத்திக் கொள்ளும் வகையிலான நடவடிக்கைகளில் இறங்க, பா.ஜ., மேலிடம் தீர்மானித்துள்ளது. இதன்படி, ‘உலகத்திற்கே வழிகாட்டியாக இந்தியாவை மாற்றியவர் பிரதமர் நரேந்திர மோடி’ என்ற கருத்துருவாக்கமும், ‘விஸ்வகுரு மோடி’ என்ற முழக்கமும் செய்ய முடிவெடுக்கப்படலாம் என கூறப்படுகிறது.

“ஜி20 மாநாட்டை இந்தியா நடத்துவதன் மூலம் பிரதமர் தன்னை ஒரு விஸ்வகுருவாக (உலகளாவிய தலைவர்) காட்டிக் கொள்கிறார். உக்ரைன் நெருக்கடி மற்றும் பிற உலகளாவிய பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் ஒரே தலைவராக இந்தியாவில் உள்ள முக்கிய செய்தி சேனல்கள் அவரை முன்னிறுத்துகின்றன – இந்தியாவில் நிலவுகின்ற உள்நாட்டு அமைதியின்மையை சரிசெய்ய முடியாத அவரது இயலாமையை கேள்விக்குள்ளாக்காமல் துதி பாடுகின்றன..

இதையும் படியுங்கள்:

 ‘வளர்ச்சி’யை மூடி மறைத்த மோடி!

உலகமே காறித்துப்பும் விஸ்வகுருவின் ஜனநாயகம்!

G20 உச்சிமாநாடு நடந்துள்ள இந்த வாரத்தில், இந்தியா தன்னை பன்மைத்துவ ஜனநாயக நாடாக தன்னை முன்னிறுத்திக் கொள்ள வேண்டியிருக்கும் தேவை இருக்கும்போது அதற்கு நேர்மாறாக ​​காலனித்துவச் சங்கிலிகளில் இருந்து விடுபட , “பாரத்” என்று மறுபெயரிடுவது பற்றி இப்போது விவாதங்கள் கவனம் செலுத்துகின்றன. “இந்து மகிமையை” தேசத்திற்கு மீட்டெடுக்க வேண்டும் என்ற அரசியல் வலதுசாரிகளின் விருப்பமே இந்த விவாதத்தின் அடிப்படையாக உள்ளது.

இப்போதைக்கு, G20 உச்சிமாநாட்டின் தலைவராக உள்ள இந்தியா அதன் வரலாற்றில் மிகவும் ஜனநாயகமற்ற காலகட்டங்களில் ஒன்றின் கீழ் தள்ளாடிக் கொண்டுள்ளது” என்று பிரபல பத்திரிக்கையாளர் ராணா அய்யூப் கடுமையாக விமர்சித்துள்ளார்.

அந்நிய நேரடி முதலீட்டை ஈர்ப்பதற்கான சரியான சூழலை உருவாக்குதல், ஆழமான மற்றும் சுதந்திரமான வர்த்தகம் மற்றும் உலகளாவிய மதிப்பு சங்கிலி ஒருங்கிணைப்பு, உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் (டிஜிட்டல் உட்பட) மற்றும் வங்கி மற்றும் வேகமாக வளர்ந்து வரும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறைகளில் தொடர்ச்சியான சீர்திருத்தங்கள் ஆகியவை இதில் அடங்கும். உள்நாட்டு தொழில்முனைவோரை ஊக்குவிப்பது மற்றொரு காரணியாகும் – இந்தியாவின் உள்நாட்டில் வளர்ந்த தொழில்முனைவோர் மற்றும் வணிகங்கள் மற்றும் ஒரு பெரிய நடுத்தர வர்க்க மக்கள் மற்ற பெரிய நாடுகளை விட போட்டித்தன்மையை வழங்குகிறார்கள். என்று பிசினஸ் ஸ்டாண்டர்ட் மதிப்பீடு செய்துள்ளது.

மோடிஜி இந்த அலப்பறைகளால் அதிகம் பயன் பெற்றவர்கள் அவரின் பொருளாதார கூட்டாளிகளான அதானி மற்றும் அம்பானி கும்பல் தான் என்பது சொல்லாமலே விளங்கும்.

  • மருது பாண்டியன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here