நேர்மறைகளும் எதிர்மறைகளும்!

எழுபதுகளில் நக்சல்பாரி இயக்கம் தோன்றிய பிறகு இந்திய புரட்சிகர இயக்கத்தின் வரலாற்றில் திரிபுவாத பாரம்பரியத்தில் இருந்து விடுபட்டு இந்திய புரட்சிக்கான கலங்கரை விளக்கமாக, விடிவெள்ளியாக விளங்குகிறது.

எழுபதுகளில் வலது சந்தர்ப்பவாத போக்கில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டாலும், குறுகிய காலத்திலேயே அதற்கு நேர்மாறாக இடது சந்தர்ப்பவாதத்தில் நக்சல்பாரி இயக்கம் விழுந்தது.

இந்த நிலைமையில் தலைமையின் தவறான போக்குகளை சுட்டிக்காட்டி இந்திய புரட்சிக்கான சரியான திசைவழியை “மக்கள் திரள் வழி” என்ற அரசியல் பாதையின் மூலம் முன்வைத்தது எமது அரசியல் தலைமை.

இந்த மக்கள் திரள் வழி அரசியலை ஏற்றுக் கொண்டு எண்ணற்ற இளைஞர்கள் எழுபதுகளின் இறுதியில் எமது அமைப்பில் தம்மை இணைத்துக் கொண்டனர். அவ்வாறு தஞ்சை பகுதியிலிருந்து எமது அமைப்பிற்கு கிடைத்த அரிய தோழர் தான் மணி என்கின்ற அருணாச்சலம்.

அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்ட நாள் முதல் ஓய்வு ஒழிச்சலின்றி அரசியலை கொண்டு செல்வதில் முன்னணி செயல் வீரராக செயல்பட்டார். தானொரு விவசாயப் பின்னணியில் இருந்து வந்திருந்த போதிலும் நிலமற்ற கூலி விவசாயிகள் முதல் படித்த பேராசிரியர்கள் வரை அனைவரிடமும் தங்குதடையின்றி புரட்சிகர அரசியலை கொண்டு செல்வதில் தோழரின் பங்கு அளப்பரியது.

குறிப்பாக ஜனநாயக மத்தியத்துவம் என்ற பாட்டாளி வர்க்கத்தின் உயர்ந்த கோட்பாட்டை தனது வாழ்க்கையில் கடைபிடித்த உன்னதமான தோழர் அவர். தனக்கு மாற்றுக்கருத்து இருந்தபோதிலும் அதை உரிய இடத்தில் மட்டுமே முன் வைத்து போராடுகின்ற பாட்டாளி வர்க்க பண்பாடும், தனது கருத்து சிறுபான்மையாக மாறினாலும் அதனை மாற்றிக் கொள்ள முடியாமல் அமைப்பு முறைகளில் உறுதியாக நின்று தனது கருத்தை நிலைநாட்டுவதற்கு முயற்சி செய்த போர்க்குணமும் ஒருங்கே பெற்ற தோழராக செயல்பட்டார்.

இதனால்தான் அவரை எந்த அரங்கில் வேலை செய்ய தலைமை பணித்தாலும் அந்த இடத்தில் தனக்கென்று ஒரு அடையாளத்தை உருவாக்கி சென்றுள்ளார்.

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் தனக்கு ஒரு மாற்றுக் கருத்து ஏற்பட்டால் அதை அமைப்பிற்குள் வைத்து போராடி சரி செய்வதற்கு பதிலாக உடனடியாக முகநூலில் எழுதுவது, தனக்குத் தெரிந்த ஒரு சிலரிடம் கிசுகிசுவாக பரப்புவது போன்ற கேடான அமைப்பு விரோத செயல்பாடுகளுக்கு மத்தியில் ஏறக்குறைய 30-35 ஆண்டுகள் அமைப்பில் செயல்பட்டுக்கொண்டு இடையில் தனக்கு மாற்று கருத்து இருந்த போதிலும் நேர்மையாக அமைப்புக்குள்ளேயே போராடிய அந்த முன்னுதாரணம் இன்று நாம் அனைவரும் கடைபிடிக்க வேண்டிய ஒன்றாகும்.

எளிமையான வாழ்க்கையும் கடினமான போராட்டமும் என்ற தோழர் மாசேதுங் வழி காட்டுதலில் ஊன்றி நின்று எளிமையான வாழ்க்கையில் பலருக்கும் முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர்.

ஒரு வாய்ப்பு கிடைத்துவிட்டால் தனது குட்டி முதலாளித்துவ அரிப்புகளை வெளிக்காட்டிக் கொண்டு, அதையும் புரட்சிகர கோட்பாடாக திரித்துப் புரட்டும் எண்ணற்ற போலிகளின் மத்தியில் புரட்சியாளனாக வாழ்ந்த அரிய மனிதர்.

ஒரு அமைப்பில் இருந்து வெளியேறி விட்டால் அல்லது வெளியேற்றப்பட்டு விட்டால் மக்கள் விரோதிகளாக சீரழிந்து போகாத வரை அவர்களை நட்பு சக்திகளாக ஏற்று உறவு கொள்வதற்கு கூட தடைவிதித்த அதிகாரத்துவ தலைமையினால் பல்வேறு தோழர்களின் இறுதிகாலத்தில் அவர்களுடன் உறவு கொள்வதும் உதவி செய்வதும் முடியாமல் போனது எமது அமைப்பின் தீராத களங்கமாக எமது முன்னே நிற்கிறது.

அன்று விதைகளாய் தன்னை ஊன்றி கொண்டவர்கள், வெளியில் தெரியாத பல தோழர்கள் இன்று விருட்சமாக வளர்ந்து புரட்சிகர அரசியலின் மணம் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். அந்த வரிசையில் திருவண்ணாமலை தோழர் சுப்ரமணியன், தஞ்சை தோழர் மணி போன்றவர்கள் புரட்சிகர இயக்க வரலாற்றில் பதிக்கத் தக்க உன்னத தோழர்கள்.

அதேசமயம் முன்னாள் தலைமை உருவாக்கிய கருத்துருவாக்கத்திற்கு பலியாகி “அவர் சொந்த வாழ்க்கையில் மூழ்கி விட்டார்,” “திரிபுவாதி,” “பிளவுவாதி”, “பார்ப்பான்” போன்ற நைச்சியமான சொல்லாடல்களை முன்வைத்து ஒரு தோழரை வெளியேற்றியதை அறிவித்துவிட்டால் அதற்கு எந்த மறுப்பும் கூறாமல், எந்த பரிசீலனையும் இன்றி ஏற்றுக்கொண்டது தவறு என்பதை தற்போது நாங்கள் சுய விமர்சனமாக உணர்கிறோம்.

தோழர் மணி புரட்சிகர அமைப்பில் தொடர்ந்து பயணிக்காவிட்டாலும், மக்களில் ஒருவர் என்ற முறையில் அவரின் உன்னதமான பண்புகளை நினைவு கூறுவதும், அதனை இளைய தலைமுறைக்கு அறிமுகப்படுத்தி கொண்டு செல்வதும் எமது கடமை என்று கருதுகிறோம்.

அந்த அடிப்படையில் தோழர் மணி பற்றிய இந்த இரங்கல் செய்தியையும், அவருடன் பணியாற்றிய தோழர் ராவணனின் நினைவேந்தல் கட்டுரையையும் வெளியிடுகிறோம்.

தோழமையுடன்,
ஆசிரியர் குழு,
மக்கள் அதிகாரம்.

தனக்கு தாரளவாதம், மற்றவர்களுக்கு மார்க்சிய கோட்பாட்டு நடைமுறை என்ற நடைமுறையற்ற அறிவாசான் மணித்தோழர்.

எனது மார்க்சிய- லெனினிய அறிவாசான்களில் ஒருவர் மணி தோழர் மறைந்துவிட்டார். ஒருங்கிணைந்த தஞ்சைமாவட்ட மகஇக, புமாஇமு, விவிமு தோழர்கள் பலருக்கு அவர்தான் ஆசான். இணையத்துண்டிப்பு உடனடியாக மீட்கமுடியாததாலும், தொடர்ச்சியான வேலைகள் காரணமாகவும் அவர்குறித்து உடனடியாக பதிவிட முடியவில்லை. ஐந்து நாட்களாக அவர்தான் சிந்தனையை ஆக்கிரமித்திருந்தார்.

சில ஆண்டுகளாக குடல்புற்று நோயால் துன்புற்றுக் கொண்டிருந்த அவரது இறப்பு முன்பே முன்னறிவிப்பு செய்யப்பட்ட ஒன்று. தஞ்சையில் 26.01.2022 இரவு அவரது இறப்பு உறுதி செய்யப்பட்டது. கந்தர்வக்கோட்டை அருகில் உள்ள அவரது சொந்த ஊரான சுந்தம்பட்டி கிராமத்திற்கு உடல் கொண்டு செல்லப்பட்டு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.

27.01.2022 மாலை 03.30 மணியளவில் தருமபுரி தோழர். இராமலிங்கம் தலைமையில் நடைபெற்ற புகழஞ்சலி கூட்டத்தில் மக்கள் அதிகாரம் மாநிலப் பொருளாளர் காளியப்பன், விவசாயிகள் விடுதலை முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் மோகன், மாநிலப் பொருளாளர் செல்வராஜ், வழக்குரைஞர் இராமலிங்கம் ஆகியோருடன் பல்வேறு மாவட்டங்களைச் சார்ந்த தோழர்கள் பங்கேற்றுத் தோழருக்கு விடைகொடுத்தனர்.

தொலைத்தொடர்புத் துறையில் பணியாற்றிய தோழர்கள் ஆர். கலியபெருமாள், என்.மோகன், கவிஞர் பாணன் (எ) பாலகிருஷ்ணன் ஆகியோரைச் சந்திக்க வரும்போது என்னையும் அடையாளம் கண்டுகொண்டார்.

மு. அருணாச்சலம் என்கிற இயற்பெயரைக் கொண்டவருக்குச் சாமானிய மக்கள் இட்டபெயர் ஒன்று உண்டு. அதுதான் “புள்ளபுடிக்கிறவன்”. இராவணனையும் பிடித்து கொண்டுவந்து நக்சல்பாரி முகாமில் விட்டுவிட்டார்.

திருவாரூரில் புகுமுகவகுப்பு படித்துக் கொண்டிருந்த காலத்தில் சிபிஐ மற்றும் எம்எல் லிபரேஷன் தோழர்கள் மூலம் பொதுஉடைமைச்சிந்தனை அறிமுகமாகி இருந்தாலும் குழந்தைத்தனமான சிந்தனையும் பரவசமான செயல்பாடும்தான் என்னை ஆட்கொண்டிருந்தது.

தபால் தந்தித்துறையில் நிரந்தரப் பணி செய்தாலும் எனது நட்புவட்டம் உதிரிப்பாட்டாளிகளுடன் இருந்ததால் எனது செயல்பாடுகள் ஒழுங்கற்றதாகவே இருந்தது. அவர் மேற்கொண்ட விடாமுயற்சியால் நான் தோழனானேன்.

உழைத்துக் கருத்த கட்டான கிராமிய உடல்வாகு, குழந்தை புன்சிரிப்பு அவருக்கு உரித்தான அடையாளம். அவருடன் பேருந்து இல்லாத ஊர்களுக்கு சைக்கிளிலும் நடந்தும் பயணித்த நாட்கள், பேருந்து இன்றி பயணிக்க முடியாமல் பேருந்துநிலைய கொசுக்களுடன் போராடிய தருணங்கள், சாக்கடை மணத்துடன் பெயிண்ட் வாசனை கலந்த சுவரெழுத்துப் பணிகள் என்று ஏராள அனுபவப் பட்டியல் உண்டு.

பத்திரிக்கை விற்பனை, நிதிவசூல் போன்ற மக்கள்திரள் வேலைகளில் என்னோடு இணைந்து செயலாற்றி ஊக்கப்படுத்திய ஒரு முழுநேரஊழியர்.

மற்றவர்களுக்கு மார்க்சிய கோட்பாட்டு நடைமுறை, தனக்கு தாரளவாதம் என்ற நடைமுறையை நான்அவரிடம் கண்டது இல்லை.

சுந்தம்பட்டியிலும், தஞ்சையிலும் அவரது குடும்பம் இருந்ததால் அவர் எங்கிருந்தாலும் என்னுடனும், தோழர் காளியப்பனுடனும் தொடர்புகொள்வது தவிர்க்க முடியாததாக இருந்தது. அதனால் மணித்தோழரை அதிகமாக சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்து. எங்கள் இருவரிடமும் உரிமையோடும் அக்கறையோடும் தோழமை பாரட்டினார். மந்தை ஆடுபோல இருக்கிறீர்களே என்று பலமுறை என்னை விமர்சித்திருக்கிறார்.

‘எனக்குவர்ர்ர’ கோவத்துக்கு வல்லாங்கையாலேயே அறையனும் போல இருக்கு என்று பல்லைக் கடித்துக்கொண்டு பலமுறை என்னிடம் பொறுமை இழந்திருக்கிறார்.

உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாதவர். விமர்சனம் என்ற பெயரில் கடித்துக் குதறாமல் பொறுமை காத்து உரிய நேரத்தில் ஏற்கும் வகையில் சுட்டிக்காட்டித் தவறுகளை களைந்து கொள்ள உதவுவார்.

ஒருகட்டத்தில் அமைப்புச் செயல்பாட்டில் நம்பிக்கையிழந்து விலகிக்கொள்வோமா என்று சிந்தித்துக் கொண்டிருந்தபோது எனக்கு நம்பிக்கையூட்டி அமைப்புப்பணியில் தொடரச் செய்தார். 2011-தொடக்கத்தில் அமைப்பிலிருந்து விலகப்போவதாக என்னிடம் கூறினார். நம்பிக்கையூட்டி பேச வார்த்தைகள் எனக்கு வரவில்லை. அதிகாரத்துவம் இல்லாமல் முன்னணி படை இயங்காது. உழைப்பு, தன்மானம், அடிமையாய் நீடிக்க அனுமதிக்காது.

அவர் மன உளைச்சலுடன் நக்சல்பரி முகாமை விட்டு வெளியேறினார் என்பதைவிட வெளியேற்றப்பட்டார் என்பதே எனது அழுத்தமான கருத்து.

பாட்டாளிவர்க்கப் பண்பாட்டு நெறிமுறைகள் என்ற பெயரில் பார்பனத்தூய்மை வேடம், இடது, வலது திரிபுவாதிகள் சமரசசக்திகளை அம்பலப்படுத்தித் தனிமைப்படுத்துவது என்ற திசைவழியில் குறுங்குழுவாக தனிமை படுதல், தேர்தலைச் செயல் தந்திர அடிப்படையில் பரிசீலித்து நடைமுறைக்குச் செல்லுதல் ஆகிய கருத்துகளைக் கொண்டிருந்தாலும் அவர் வெளியில் பிரச்சாரம் செய்ததில்லை. தெளிவாக வாதாடி வெற்றி பெறமுடியவில்லை என்றாலும் உரிய இடங்களில் முன்வைத்துப் பேசினார்.

அமைப்பை விட்டு வெளியேற்றப்பட்ட பிறகு அவருடன் தொடர்புடைய முன்னணி தோழர்களிடம் அவரது கடிதங்கள் மற்றும் கருத்துகளை ஆவணமாக்கிக் கொடுத்துவிட்டுச் சென்றிருக்கிறார்.

கருத்து மாறுபாடு இருந்த காலகட்டத்திலும் அமைப்பின் நிலைப்பாட்டில் ஊன்றி நின்று பல ஆண்டுகள் செயல்பட்டார்.

தோழரின் இறப்பு வேதனையைத் தந்தாலும் இறப்பு தவிர்க்கமுடியாது என்ற உண்மை மட்டுமே சற்று ஆற்றுப்படுத்துகிறது. நினைவில் வாழும் தோழர்களில் மணி தோழரும் ஒருவர்.

01-02-2022
இராவணன்.
மாநில இணை பொதுச்செயலாளர்.
மக்கள் கலை இலக்கியக் கழகம்.
தமிழ்நாடு.

1 COMMENT

  1. அதிகாரத்துவம் இல்லாமல் முன்னணி படை இயங்காது.
    உழைப்பு, தன்மானம், அடிமையாய் நீடிக்க அனுமதிக்காது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here