காஸா மீதான இஸ்ரேலின் இனஅழிப்பு போரை கண்டித்து திருச்சியில் மக்கள் கலை இலக்கிய கழகம் அதன் தோழமை அமைப்புகள் மற்றும் ஜனநாயக சக்திகளுடன் இணைந்து பேரணி கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.
பேரணி நடத்துவதற்கு காவல்துறை அனுமதி மறுத்திருந்தது. அதையும் மீறி தோழர்கள் காசாவில் பாதிக்கப்பட்ட மக்கள் வேடமணிந்து ஊர்வலமாய் சென்றதை பார்ப்போரை ஈர்க்கும் விதமாகவும் காசா மக்களின் துயரங்களை உணர்த்தும் விதமாகவும் இருந்தது.
அமெரிக்க ஏகாதிபத்திய கும்பலுடன் இணைந்து பாலஸ்தீன மக்களை கொன்று குவித்து வருகிறது இஸ்ரேல் ஜியோனிய இனவெறி அரசு. மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள், முகாம்கள் என எந்தவிதமான போர்விதிமுறைகளையும் மதிக்காமல் மிகப்பெரும் அழிவை அம்மக்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.
இதனை படம்பிடித்து செய்தியாக்கிய பத்திரிக்கையாளர்களையும் உயரிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி படுகொலை செய்துள்ளது. இதனை சர்வதேச அமைப்புகளான ஐநா உள்ளிட்டவை மேம்போக்காக கண்டித்துவிட்டு கண்டும் காணாமல் இருக்கிறது.
உலகம் முழுவதும் இஸ்ரேலின் இனவெறி படுகொலையை கண்டித்து ஜனநாயக சக்திகள், மாணவர்கள் மற்றும் புரட்சிகர அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த மாத தொடக்கத்தில் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் லட்சக்கணக்கான மக்கள் கூடி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தது உலக அரங்கில் பாலஸ்தீன மக்களுக்கான ஆதரவை பலப்படுத்தியுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துக் கொண்ட பேச்சாளர்கள் ஜியோனிச இனவெறியையும், அமெரிக்காவின் தலையீட்டையும் அம்பலப்படுத்தி பேசியுள்ளார்கள். இக்கூட்டத்தில் மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் தோழர் கோவன், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி மாநிலப் பொதுச் செயலாளர் தோழர் லோகநாதன், மக்கள் அதிகாரத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் தோழர் திருச்சி செழியன், மக்கள் அதிகாரத்தின் மாநில தலைமைக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் சி.ராஜூ புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி மாநிலக்குழு உறுப்பினர் தோழர் பால்ராஜ், விவசாயிகள் விடுதலை முன்னணி மாநிலக்குழு உறுப்பினர் தோழர் ராமலிங்கம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாமன்ற உறுப்பினர் தோழர் சுரேஷ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தோழர் பேராசிரியர் அப்துல் காதர் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில பொதுச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான அப்துல் சமது தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர்.
தொடர்புடைய கட்டுரை: களவாடப்பட்ட காஸாவின் வாரிசுகள் ! பல்லாயிரக்கணக்கான குழந்தைகளை கொன்ற இஸ்ரேல் !