ந்திய சமூக அமைப்பில் புரையோடிப் போயுள்ள சாதியத்தை வைத்துக்கொண்டு பாசிச பாஜக தனது அரசியலை நடத்திக் கொண்டிருக்கிறது என்றும், அவர்களின் காவி பாசிச பயங்கரவாத அரசியலுக்கு சாதியம் நீடிப்பதும், அதனை அப்படியே கட்டிக் காப்பதும் அவசியம்  என்பதை நேற்றைய புதிய ஜனநாயகம் தினசரியில் முன் வைத்திருந்தோம்.

அதனை உறுதிப்படுத்துகின்ற வகையில் நேற்று பத்திரிக்கையாளர்களை சந்தித்த பாசிச பாஜகவின் தேசிய தலைவர்களில் ஒருவரான ஹெச். ராஜா மற்றும் தமிழிசை சௌந்தரராஜன் ஆகிய இருவரும் இணைந்து பேட்டியளித்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நாங்குநேரியில் பட்டியலின மாணவர் சின்னதுரை நன்றாக படிக்கின்றார் என்பதை வகுப்பறையில் ஆசிரியர் பாராட்டியதை பொறுக்க முடியாமல் ஆதிக்க சாதி வெறிபிடித்த மாணவர்கள், அவரது வீட்டிற்கு சென்று ஆயுதங்களுடன் வெட்டியது மட்டுமின்றி அவரது தங்கையின் மீதும் தாக்குதலை நடத்தினார்கள்.

இதன்பிறகு அந்த மாணவர் நெல்லை பாளையங்கோட்டை பகுதியில் உள்ள தூய சவேரியார் பள்ளியில் படித்து நல்ல மதிப்பெண் பெற்றுள்ளார் என்பதெல்லாம் செய்தியாக வெளிவந்தது. இதற்கு அக்கம்பக்கமாகவே தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் நிலவுகின்ற சாதிய பாகுபாடு மற்றும் அப்படிப்பட்ட சூழல்கள் பற்றி ஆய்வு செய்து, அதனை எவ்வாறு தவிர்ப்பது அல்லது தடுப்பது என்பதை பற்றி பரிந்துரைக்குமாறு ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு மூலம் தனிநபர் கமிஷன் அமைத்து ஆய்வு செய்தது தமிழக அரசு.

அவ்வாறு ஆய்வு செய்த ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு 650 பக்கம் கொண்ட, ஆறு அத்தியாயங்கள் மற்றும் எட்டு இணைப்புகளை உள்ளடக்கிய தனது தனது பரிந்துரைகளை முன் வைத்தது மட்டுமின்றி, நீண்டகால அடிப்படையிலான தீர்வுகளையும், 20 வகையான உடனடி தீர்வுகளையும் முன்வைத்து அறிக்கை ஒன்றை சமர்ப்பித்து உள்ளார்.

ஒய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு தனது பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை தயார் செய்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் நேற்று (18-06-24) சமர்பித்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, ”பள்ளி பாடத்திட்டத்தில் சமூக நீதி, சமத்துவம், சாதி அடிப்படையிலான பாகுபாடு இல்லாத தலைப்புகளை சேர்க்க வேண்டும், இது தொடர்பான பொருத்தமான மாற்றங்களை பரிந்துரைக்க  கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்களைக் கொண்ட சமூக நீதி கண்காணிப்பு குழுவை குறிப்பிட்ட காலக் கெடுவுற்குள் நியமிக்க வேண்டும், அரசுப் பள்ளிகளின் பெயர்களில் ஆதிதிராவிடர் நலத்துறை, கள்ளர் சீர் மரபு உட்பட எந்தச் சாதிய அடையாளங்களும் இருக்கக் கூடாது. தனியார் பள்ளிகளில் உள்ள சாதி பெயர்களை நீக்க வேண்டும். குறிப்பிட்ட சாதி ஆதிக்கமாக உள்ள பகுதிகளில் அதே சமூகத்தைச் சேர்ந்தவர்களைத் தலைமை ஆசிரியர்களாக நியமிக்கக் கூடாது. கைகளில் வண்ணக் கயிறுகள், நெற்றித் திலகம் உள்ளிட்டவற்றுக்கு தடை விதிக்க வேண்டும். மாணவர்களின் வருகை பதிவேட்டில் எக்காரணம் கொண்டும் சாதி பெயர் இடம்பெறக் கூடாது. மாணவர்களின் சாதி விவரங்களை ரகசியமாக வைக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளது.

இந்தப் பரிந்துரையை படித்தவுடன் பாசிச பாஜகவில் உள்ள பார்ப்பன கும்பலுக்கு ரத்தம் கொதிக்கிறது குறிப்பாக பார்ப்பனக் கும்பலின் பொறுக்கி பேச்சாளரான திருவாளர் எச். ராஜா, ”பள்ளிகளுக்கு வருபவர்கள் ஹிஜாப் அணிந்து வருகின்ற போது, கயிறு கட்டிக் கொண்டு வருவதில் என்ன தடை உள்ளது. ஒய்வு பெற்ற நீதிபதி சந்துரு பரிந்துரையில் குறிப்பிட்ட மதத்தை குறிவைத்து அதற்கு எதிராக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.  தமிழக அரசு இதனை நிராகரிக்க வேண்டும்” என்று எகிறிக் குதித்துள்ளார்.

பார்ப்பனர்கள் மற்றும் பிற மேல் சாதிகளின் குலக்கொழுந்துகள் ஹைடெக் பள்ளிகளிலும், கேந்திரிய வித்யாக்களிலும், மான்போர்ட், ஸ்டான் போர்ட், ஊட்டி பள்ளிகள், சர்ச் பார்க் கான்வென்டுகளில் படிக்கின்ற வாய்ப்பு கொண்டவர்கள். அங்கு இது போன்ற அடையாளக் குறிகளை வைத்துக்கொண்டு வாலாட்ட முடியாது. அங்கே எல்லாம் மேல் வாயையும், கீழ் வாயையும் பொத்திக்கொண்டு அடக்கி வாசிக்கின்ற பார்ப்பனர்கள், சூத்திர, பஞ்சம சாதிகளைச் சார்ந்த ஏழை, எளிய மக்கள் படிக்கின்ற அரசு பள்ளிகளில் தற்போது கொண்டு வர முயற்சிக்கின்ற சீர்திருத்தங்களை தடுத்து நிறுத்த எத்தனிக்கின்றார்கள்.

”கயிறுகள், நெற்றியில் சாதி குறியீட்டு திலகங்கள் வைப்பதற்கான தடையை வரவேற்கும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி செயலாளர் சாமுவேல்ராஜ், “ பள்ளி மாணவர்கள் சாதிக் கட்சி அடையாளங்களாக நெற்றியில் திலகம் இட்டுக் கொள்கிறார்கள் என்று எச்.ராஜாவுக்கு தெரியாதா? ஏன் அதைப் பற்றி பேசுவதில்லை? நெற்றியில் பொதுவாக வைக்கப்படும் பொட்டு சிவப்பு அல்லது கருப்பு நிறத்தில் இருக்கும். அனைத்து இந்துகளும் அதே நிறத்தில் வைத்துக் கொள்ளட்டுமே. எச்.ராஜாவுக்கு இந்து மதத்தை விட சாதியின் மீதே அதிகப் பற்று இருப்பது போல் தெரிகிறது” என்கிறார்

இவர்களின் கொட்டத்தை அடக்க, ”நாங்குநேரி பள்ளி மாணவர் சின்னதுரை தாக்குதலுக்கு உள்ளான போது பாளையங்கோட்டை புனித சவேரியார் பள்ளிதான் அவருக்கு அடைக்கலம் கொடுத்தது, ஏன் ஒரிஜினல் பார்ப்பனர்களும், கருப்பு பார்ப்பனர்களும் நடத்தும் சங்கர வித்யாலயாவோ, சரஸ்வதி வித்யாலயாவோ, திருமதி லதா ரஜினிகாந்த் நடத்துகின்ற பத்மா சேஷாத்ரியிலோ இடம் கொடுக்கவில்லை” என்ற கேள்வியை நாம் எழுப்ப வேண்டும்.

”வெளியே தெரிகின்ற மதக்குறிகள் மட்டுமின்றி உள்ளே ரகசியமாக மறைத்து வைக்கப்படும் மதக்குறிகளையும் அகற்ற வேண்டும். அதன் மூலம் மாணவர்கள் மத்தியில் சமத்துவ உணர்வை உருவாக்குவதற்கு முயற்சிக்க வேண்டும்” என்ற கோரிக்கைகளை முன் வைக்க வேண்டும்.

படிக்க: 

 சைனிக் பள்ளிகளை கைப்பற்றிய காவிகள்! இராணுவத்தை ஆர்.எஸ்.எஸ் மயமாக்கும் பாஜக அரசு!
 நம்ம ஸ்கூல் பவுண்டேஷன் திட்டம்!அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்துமா? வீழ்த்துமா?

எவ்வாறு அனைத்து சாதி அர்ச்சகர்களை உருவாக்குகின்ற முயற்சியில் அர்ச்சகர்கள் பள்ளியில் அனைத்து சாதி மாணவர்களும் சேர்க்கப்படுகிறார்களோ அது போன்று சமஸ்கிருத பள்ளிகள், காஞ்சி சங்கர மடத்தின் வேத பாடசாலை போன்ற அனைத்திலும் சமத்துவ உரிமை கோர வேண்டும்.

பார்ப்பனக் கும்பல் கிளப்பும் சலசலப்புகளுக்கு அஞ்சாமல் பள்ளியில் படிக்கின்ற பிஞ்சு பருவத்திலேயே, பள்ளி மாணவர்கள் மனதில் சாதி உணர்வு மற்றும் சிந்தனை பதியாதவாறு அனைத்து விதமான முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.

பாடத்திட்டத்தில் அறிவியல் ஆய்வு மற்றும் அறிவியல் ரீதியிலான வகுப்புகள், நீதி போதனை வகுப்புகள் மற்றும் இலக்கிய மன்ற போட்டிகள், மாணவர்களின் தனித் திறன்களை வெளிக்கொண்டு வருகின்ற போட்டிகள், விடுதலை போராட்டத்தின் வீரப்புதல்வர்கள் பற்றிய மாறுவேட போட்டிகள் போன்றவற்றை தொடர்ச்சியாக ஆண்டுக்கு மூன்று, நான்கு முறையாக நடத்த வேண்டும். சாதிப்பற்றுக்கு பதிலாக நாட்டுப்பற்றை வளர்க்க வேண்டும்.

இதன் மூலம் பள்ளிகளில் கல்வி கற்பது மட்டுமின்றி, சமூகத்தை பற்றிய ஆழமான புரிதலையும், அதனை மேம்படுத்துவதற்கு தனது பங்களிப்பு அவசியம் என்ற ஜனநாயக உணர்வையும் உருவாக்குகின்ற வகையில் பள்ளிகளில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.

இத்தகைய சீர்திருத்தங்களின் மூலம் பாசிச பாஜக கொண்டு வரத் துடிக்கின்ற காவி கல்வி மற்றும் புதிய கல்வி கொள்கைக்கு ஆப்பறைய வேண்டும்.

  • மாசாணம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here