அரசியல், பொருளாதார, பண்பாட்டு ரீதியாக நாடு விடுதலை பெறாத நிலையில், அரைக்காலனிய சமூக அமைப்பில் நின்று கொண்டு புறவயமான போக்குகளை பரிசீலிப்பதில் அகநிலைவாதமும், விருப்பமும் மட்டுமே புரட்சியை சாதித்து விடாது. 1911-ல் சீனாவில் டாக்டர் சன்யாட்சென் தலைமையில் நடந்த முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி போன்ற ஒன்று இந்தியாவில் நடைபெறாத நிலையில், கம்யூனிஸ்டு கட்சி பிறரை குறை கூறிக் கொண்டு, செயலற்ற முறையில் வாளா இருப்பதும், அவர்களை கடுமையாக விமர்சிப்பதன் மூலம் சில புரட்சிகர விசிலடிச்சான் குஞ்சுகளை உருவாக்க உதவுமேயன்றி, சமரச சக்திகளை தனிமைப்படுத்துவது என்ற அரசியல் அம்சத்தை விரிவுபடுத்த ஒரு போதும் உதவாது.
புதிய ஜனநாயக புரட்சியின் கடமைகளுள் ஒன்று சமரச சக்திகளை தனிமைப் படுத்துவது தான் என்பதையே, பிரதான தாக்குதல் திசை வழியையே கொச்சையாக புரிந்துக் கொண்டு கிளிப் பிள்ளைகளை போல திரும்ப திரும்ப கூறுவது வாய் சவடால்களுக்கு உதவுமேயன்றி வேறு பயன் இல்லை.
புதிய ஜனநாயகத்தை புரட்சியை நடத்துவது பற்றிய எமது குறிக்கோளுக்கு சீனாவின் அனுபவத்தை கற்று அதன் படியும், நமது நாட்டுக்கு பருண்மையான நிலைமைகளுக்கு பொருந்தும் படியும் செயல்படுகிறோம். சீனாவின் வரலாற்றில் புதிய ஜனநாயகப் புரட்சியின் மூன்று கால கட்டங்களிலும், எதிரிகள் நண்பர்கள் வேறுபட்டு நின்றார்கள். அதற்கு பொருத்தமாக புரட்சிகர திசைவழி மாற்றப்பட்டு புரட்சி முன்னேறியது.
“உதாரணமாக வடதிசைப் படையெடுப்பு, விவசாயப் புரட்சி யுத்தம், ஜப்பானிய எதிர்ப்பு யுத்தம் ஆகிய காலங்கள் மூன்றிலும் புதிய ஜனநாயகத்தின் நமது பொதுத்திட்டம் ஒன்றாகவே இருந்தது. ஆனால், நமது குறித்த திட்டத்தில் மாறுதல்கள் இருந்தன. ஏனென்றால், இந்த மூன்று காலங்களிலும் நமது நண்பர்களும், எதிரிகளும் ஒன்றாக இருக்கவில்லை” என்று கூட்டரசாங்கம் பற்றிய கட்டுரையில் தோழர் மாவோ குறிப்பிடுகிறார்.
அதுமட்டுமல்ல, நமது நாட்டுக்கு பொருத்தமான புரட்சிப்பாதையை பற்றி “போர்த்தந்திர கட்டம் முழுவதற்கும் சக்திகளின் இந்த பொது ஒதுக்கீடு பொருந்தும் எனினும், புரட்சியின் ஒரு குறிப்பிட்ட தருணத்தில் சக்திகளைப் பருண்மையாக ஒதுக்குவது போர்த்தந்திரம், செயல்தந்திரம் – இரண்டாலும் தீர்மானிக்கப்படுகிறது. ஜனநாயகப் புரட்சிக் கட்டத்திலேயே பாசிச ஆட்சி வந்தால், பாசிச எதிர்ப்பு ஐக்கிய முன்னணி என்ற அமைப்பைக் கட்டி செயல்தந்திர ரீதியில் போரிடுவோம்.
அப்போது பாசிச எதிர்ப்பில் நிற்கும் ஆளும் வர்க்கத்தின் ஒரு பிரிவினரோடும் கூட சேர்ந்து போராடுவோம். அதாவது, சக்திகளை பொதுவாக ஒதுக்கீடு செய்யும் திட்டம், போர்த்தந்திர ரீதியிலான ஐக்கிய முன்னணிக்கான சக்திகளின் சேர்க்கையைக் குறிக்கிறது. குறிப்பிட்ட சமயத்தில் அமைக்கப்படும் ஐக்கிய முன்னணியின் சேர்க்கை, போர்தந்திரம் மற்றும் செயல்தந்திரம் இரண்டாலும் தீர்மானிக்கப்படுகிறது” என்று 1980-களில் எடுத்த அரசியல் முடிவுகளில் உறுதியாக நின்று அதன் அடிப்படையில் தான் இன்றுவரை செயல்பட்டு வருகிறோம்.
சீனாவில் டாக்டர் சன்யாட் சென் கோமிங்டாங் கட்சியைத் துவக்கிய போது புரட்சிகர கருத்துகளை பரப்புவதற்கு ‘மின்போ,’ அதாவது மக்கள் ஏடு ஒன்றை தொடங்கினார்கள். அதன் வாயிலாக நாடகக் குழுக்கள் அமைக்கப்பட்டன. புரட்சி உணர்வுடைய நாடகங்கள், கலை நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டன
சென்னுடைய சொற்பொழிவைக் கேட்ட பாரிஸ் நகரத்து சீன வணிகர் ஒருவர் 60 ஆயிரம் டாலருக்கு தன் கடையை விற்று அந்த பணத்தை புரட்சிக்காக அளித்தார். அமெரிக்காவின் பிலடெல்பியா நகரில் தொழில் நடத்தி வந்த ஒரு சீன சலவைத் தொழிலாளி தன் 20 ஆண்டுகால சேமிப்பை புரட்சிக்காக கொடுத்தார். மொச்சை பயறு வணிகர் ஒருவர் 4000 பவுன் புரட்சிக்காக வழங்கினார். இவ்வாறு உள்நாட்டு முதலாளிகள், வணிகர்களின் ஆதரவுடன் துவங்கப்பட்ட கோமிங்டாங் கட்சியின் சீர்திருத்த நடவடிக்கைகளில் சரியான அம்சங்களை தோழர். மாவோ வழி மொழிந்து கொண்டு சென்றார்.
டாக்டர்.சன்யாட்சென் முன்வைத்த மூன்று மக்கள் கோட்பாடுகளை தோழர் மாவோ தனது கூட்டரசாங்கத்தில் முன்னெடுத்து சென்றார். 1927-லிலிருந்து 1936 வரை சீன கம்யூனிஸ்ட் கட்சி நில முறையின் முழுமையான சீர்திருந்தத்திற்கான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு, டாக்டர் சென்னின் “உழுபவனுக்கே நிலம் சொந்தம்” என்ற கோட்பாட்டையும் நடைமுறைப்படுத்தியுள்ளது.
நீண்ட கால மக்கள் யுத்த பாதையின் (இதையும் சிலர் நமது நாட்டுக்கு பொருந்தாது என்று கைவிட்டு விட்டதாக கூறி வருகின்றனர்) அடிப்படையில் தளப்பிரதேசம் கட்டப்படும் போது கூட உடனடியாக சுயசார்பு பொருளாதாரத்தை கட்டி அமைத்து விட முடியாது. ஏகாதிபத்திய நிறுவனங்களின் சொத்துக்களை பறிமுதல் செய்தாலும், தேசிய முதலாளிகளுடன் ஒன்றிணைந்து சுயசார்பு பொருளாதாரத்தை கட்டியமைக்கும் வரை சுரண்டலுடன் கூடிய ஏகாதிபத்திய முதலாளித்துவ பொருளுற்பத்தி முறை, நாடு தழுவிய அளவில் நீடிக்கத்தான் செய்யும். வளர்ச்சிப் போக்கில்தான் சுய சார்பான பொருளாதாரத்தை கட்டமுடியும் என்பது தான் இயல்பு.
2021 சட்டமன்றத் தேர்தலில் ‘பாஜக – அதிமுக கூட்டணியை தோற்கடிப்போம்’ என்ற முழக்கத்தை நாங்கள் முன்வைத்த உடன் திமுகவிற்கு வேலை செய்கிறார்கள். திமுகவிடம் காசு வாங்கி விட்டார்கள் என்று கோயபல்ஸ்கள் சிலர், தற்குறித்தனமான முறையில் அவதூறுகளை கிளப்பினர். தேர்தல் புறக்கணிப்பு அரசியலை கைவிட்டுவிட்டார்கள், ஓட்டுப் பொறுக்க இவர்களும் கிளம்பிவிட்டார்கள், நக்சல்பாரி பாரம்பரியத்தை இழிவுபடுத்தி விட்டார்கள் என்றெல்லாம் எமது நிலைப்பாடுகளை அரசியல் தற்குறிகள் சிலர், நம்பூதிரி பாணியில் வியாக்கியானம் செய்து எமது அமைப்பின் மீது சேறடிக்கத் துவங்கினார்கள்.
2016 ஆம் ஆண்டு கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக, அதுவரை நடந்த தேர்தல்களில் புறக்கணிப்பு தொடர்பான எமது அனுபவத்தை கீழ்கண்டவாறு தொகுத்து தேர்தல் புறக்கணிப்பு தொடர்பான வேலைகளை கொண்டு சென்றோம். “தேர்தல் பாதை திருடர் பாதை! நக்சல்பாரியே நமது பாதை! போலி ஜனநாயகத் தேர்தலைப் புறக்கணிப்போம்! புதிய ஜனநாயகப் புரட்சிக்கு அணிதிரள்வோம்! தேர்ந்தெடுக்கவும் திருப்பி அழைக்கவும் உரிமை கொடு! சட்டம் இயற்றுபவரே சட்டத்தை அமல்படுத்தும் அதிகாரம் கொண்டவராக இருக்க வேண்டும், அனைத்து மக்களுக்கும் ஆயுதம் வழங்கு!” போன்ற புரட்சிகர அரசியல் முழக்கங்களை மாற்றாக முன்வைத்தும், ஓட்டுக்கட்சிகளின் அதிகாரங்களை அம்பலப்படுத்தியும், இரட்டையாட்சி முறை பற்றி விளக்கியும் மக்களிடையே நமது புரட்சிகர அரசியலை அறிமுகப்படுத்தி ஏற்க வைப்பது என்ற நோக்கத்துடன் செயல்பட்டோம்.
மக்களைப் பொறுத்தவரை தேர்தல் புறக்கணிப்பு தொடர்பான நமது கருத்துக்களை கேட்டு விட்டு ஆமாம் சரி,சரி என்று தலையை ஆட்டுகிறார்கள், ஏற்றுக்கொள்கிறார்கள், நம்மைவிட அதிக ஆவேசத்தோடு ஓட்டு பொறுக்கிகளை சாடுகிறார்கள். அடிக்கவேண்டும் உதைக்க வேண்டும் என்கிறார்கள். ஆனால் ஓட்டுப் போடாதீர்கள் என்று சொன்னால் மட்டும் நீங்கள் சொன்னதெல்லாம் சரிதான் தோழர், ஆனால் ஓட்டு போடாமல் எப்படி இருக்க முடியும் என வியப்பான முகத்துடன் கேள்வி எழுப்புகிறார்கள். சாத்தியமில்லாத ஒன்றை சொல்கிறார்கள் என நம்மை அனுதாபத்துடன் பார்க்கிறார்கள். நமக்கு வழங்கப்பட்டுள்ள ஒரு கௌரவத்தை, ஒரு அங்கீகாரத்தை புறக்கணிக்கச் சொல்கிறார்களே என கருதுகிறார்கள்.
நீங்கள் சொல்வது போல ஓட்டுப் போடாமல் இருந்து விட்டு வேறு என்ன செய்ய முடியும் என்றும் கேட்கிறார்கள். ஓட்டை கட்டாயமாக போட்டு விடுகிறார்கள். நமக்கு தெரியாமல் சென்று வாக்களிக்கின்றனர். எதிரெதிராக சந்தித்துக்கொண்டால் தர்மசங்கடமாக கருதுகிறார்கள். எதோ முக்கிய வேலைக்கு செல்வதாக சொல்லிவிட்டு தழுவுகிறார்கள். பணத்தை வாங்கிக்கொண்டு ஓட்டுப் போடுகிறார்கள். சாதி பார்த்து ஓட்டுப் போடுகிறார்கள். நாளைக்கு நமக்கு ஒரு பிரச்சனை என்றால் உதவுவார்கள் என்ற தேவையில் இருந்து ஓட்டு அளிக்கிறார்கள். நமது தோழர்கள், அவர்கள் குடும்பங்கள் தவிர ஒரு சிலர் மட்டுமே நம்முடன் சேர்ந்து தேர்தலை புறக்கணிக்கின்றனர்.
சாதி பார்ப்பது தவறு என்று ஏற்றுக் கொள்ளும் பலரும் நடைமுறையில் தொழில், சமூக உறவுகளில் சாதி பார்க்காமல் பழகினாலும், மாப்பிள்ளை – பெண் தேடும் போது சாதி அவசியம் என்று தூக்கிப் பிடிப்பது போல மக்கள் ஓட்டுப் போடுகிறார்கள் என்று பார்க்கலாம். கணவன் எவ்வளவு கொடுமை செய்தாலும் பொறுத்துக் கொண்டு குடும்பம் என்ற அலகை உடைக்க நமது சமுதாயத்தில் பெரும்பாலும் பெண்கள் முற்படுவதில்லை. நிலப்பிரபுத்துவ ஆணாதிக்க சமூக விழுமியங்கள் அவர்களை கட்டிப் போடுகின்றன. கோட்டை தாண்டி விட்டா செல்கிறாய்? அது எப்படி செய்ய முடியும் அது சாத்தியமில்லாத ஒன்றல்லவா? தவிர்க்க முடியாதது அல்லவா என்று தங்களைத் தாங்களே அமைதிப்படுத்திக் கொள்கிறார்களோ, அதைப் போன்றதொரு மனப்பான்மையில் தான் மக்கள் இருக்கிறார்கள் என்று தெரிகிறது.
நிலப்பிரபுத்துவ, பிற்போக்கு விழுமியங்கள் சாதி, மதம், தெய்வம், விதி, பரிகார நாயகர்கள் மீதான துதி பற்றிய மூட நம்பிக்கைகளில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உழன்று, உழன்று மக்களின் உளவியலிலேயே, நிலவுவதை தாண்டுவது புனிதத்தை இழப்பதற்கு சமம் என்ற உளவியல், அவர்களால் விளக்கமுடியாத இனம்புரியாத உளவியல் தான் இன்று தேர்தலிலும் அவர்களை வழிநடத்துகிறது.
எனவே, நமது செயல்தந்திர அரசியலை முன்வைத்து செய்யும் போராட்டங்களில் முதன்மையாக ஈடுபட்டும், தேர்தல் புறக்கணிப்பு அரசியலை இதனுடன் இணைத்து பிரச்சாரம் செய்வது தான் சரியாக இருக்கும் குறிப்பாக மூடு டாஸ்மாக்கை இயக்கத்தில் இணைத்து தேர்தல் புறக்கணிப்பு அரசியலை பிரச்சாரம் செய்வோம்” என்று முடிவு செய்து வேலைகளை கொண்டு சென்றோம். அது போலவே “கார்ப்பரேட்-காவி பாசிசத்தை முறியடிப்போம்! 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணியை புறக்கணிப்போம்!” என்று தேர்தல் புறக்கணிப்பை எமது செயல்தந்திர முழக்கத்துடன் இணைத்துக் கொண்டு சென்றோம்.
தொடரும்…