ஒரு சிலர் உளறுவதைப் போல திமுகவும் பாஜகவும் ஒன்னு என்ற வரையறுப்பு சரிதானா என்பதற்கு வாசகர்கள் சிலர் கேட்டனர் என்று ’போஸ்ட் கார்ட் நியூஸ்’ இதழ் பாணியில் முன்னுரையுடன் ஆரம்பிக்க வேண்டியதில்லை. தனக்கு வெளியில் இயங்கும் மெய்யான உலகை யதார்த்தமாக பரிசீலனை செய்தாலே போதும் உண்மை விளங்கும். திமுகவும் பாஜகவும் ஒன்னு என்று உளறுபவர்களுக்கு. “திமுகவும், அதிமுகவும் சமம் எனப் பார்ப்பனக் கும்பல் முன் வைக்கும் வாதம், அதற்கு வால் பிடிக்கும் மக்கள் நலக் கூட்டணி, பா.ம.க, நாம் தமிழர் கட்சிகளின் அரசியல் போக்கு, தமிழகத்தை பார்ப்பன பாசிசத்திற்கு முற்றும் முழுதாக அடிமைப்படுத்தும் தீய உள்நோக்கம் கொண்டது” என்று 2016 ஆம் ஆண்டு புதிய ஜனநாயகம் இதழில், திமுகவையும், அதிமுகவையும் சமப்படுத்துபவர்களின் நோக்கமென்ன? என்ற தலைப்பிட்டு அன்றே எழுதியுள்ளோம். திமுகவும், அதிமுகவும் சமமில்லை எனும் போது திமுகவும், பாஜகவும் ஒன்னு என்பது தீய உள்நோக்கம் கொண்டது மட்டுமல்ல! அதற்கு மேலும் ஒரு நோக்கம் கொண்டது.

“திமுகவும், அதிமுகவும் சமம் எனப் பார்ப்பனக் கும்பல் முன் வைக்கும் வாதம், அதற்கு வால் பிடிக்கும் மக்கள் நலக் கூட்டணி, பா.ம.க, நாம் தமிழர் கட்சிகளின் அரசியல் போக்கு, தமிழகத்தை பார்ப்பன பாசிசத்திற்கு முற்றும் முழுதாக அடிமைப்படுத்தும் தீய உள்நோக்கம் கொண்டது”

– புதிய ஜனநாயகம் 2016

“2017 ஜனவரியில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டம் என்பது ஒட்டு மொத்த தமிழகமும் ‘தமிழன்டா’ என்ற முழக்கத்தின் கீழ் ஆர்எஸ்எஸ் பிஜேபி மோடி கும்பலை, குறிப்பாக நடுத்தர வர்க்கத்திடம் இருந்து மோடியின் மீதான மாயையை துடைத்தெறிந்து மோடியை எல்லா முனைகளிலும் தாக்கி தனிமைப்படுத்திய ஒரு மகத்தான திருப்புமுனை போராட்டமாகும். அதைத்தொடர்ந்து தமிழ்நாடு எதிர் ஆர்எஸ்எஸ்-பாஜக, மோடி என்ற பரிமாணத்தில் ஒவ்வொரு பிரச்சனையிலும் அரசியல் கூர்மையுடன் போராட்டங்கள் நடந்து வருகின்றன. சென்னையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் போது மோடியை தமிழ்நாட்டில் கால் வைக்க விடாமல் கருப்புக்கொடி காட்டி துரத்தியடித்தது. ஆர்எஸ்எஸ்-பாஜக மோடி கூட்டத்திற்கு கொலைவெறி கொள்ள வைத்துள்ளது.. தனது  வாழ்நாளில் மோடி சந்தித்த மிகப்பெரிய அவமானம் இதுதான்.

மெரினாவில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டம்

திராவிட தமிழ் பாரம்பரியத்தை உயர்த்திப் பிடித்து வேத, பார்ப்பனிய, சமஸ்கிருத ஆதிக்கத்துக்கு சவால் விட்டு அதை முறியடிக்கக் கூடிய அளவிற்கு சித்தாந்த மேன்மை, மொழி தொன்மை, இலக்கிய இலக்கண வளம், உயர் பண்பாட்டுப் பின்புலம், பார்ப்பனிய எதிர்ப்பு வரலாறு கொண்டது தமிழ் தேசியம். இதனால்தான் பார்ப்பனப் பேரரசை (இந்துராஷ்டிரத்தை) நிறுவத் துடித்துக்கொண்டிருக்கும் ஆரிய-பார்ப்பன ஆர்எஸ்எஸ் கும்பலும், மார்வாரி, சிந்தி, பார்சி, குஜராத்தி பனியா – தரகு முதலாளி வர்க்கமும், சித்தாந்த பண்பாட்டு அரசியல் தளத்தில் தமிழ் தேசிய இனத்தை தங்களது பிரதான எதிரியாக பார்க்கிறது.

தமிழ் தேசிய இனத்தின் இயற்கை மற்றும் மனித வளங்களை சூறையாடி, தமிழகத்தை பாலைவனமாக்கி, தமிழ் தேசிய இன மக்களை அவர்களின் வாழ்வாதாரங்களை பிடுங்கிக் கொண்டு, அவர்களை சொந்த மண்ணில் இருந்து விரட்டியடித்து, தமிழர்களை சிதறடிப்பதன் மூலம் தமிழ்நாட்டை ஆரிய-பார்ப்பன மண்ணாக மாற்றுவது என்பதை லட்சிய வெறியாக கொண்டு செயல்படுகிறது. அதற்காக எண்ணற்ற பார்ப்பன நரி தந்திரங்களை முன்வைத்து பல முனைகளிலும் பல துறைகளிலும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

 “பாஜக, பிற அரசியல் கட்சிகளைப் போல ஒரு அரசியல் கட்சி அல்ல! அது பார்ப்பன பாசிசத்தை, பார்ப்பனப் பேரரசை நிறுவத்துடிக்கும் பயங்கரவாத இயக்கம்”

தரகு அதிகார வர்க்க மார்வாரி, சிந்தி, பார்சி, குஜராத்தி, பனியா முதலாளிகளின் சுரண்டல் ஆதிக்க நலன்களும் சரி; ஆரிய-பார்ப்பன ஆர்.எஸ்.எஸின் சித்தாந்த அரசியல் பண்பாட்டு மேலாதிக்க கனவுக்கும் சரி; சரியான எதிர் தாக்குதலைத் தொடுத்து வருகின்றன மக்கள் அதிகாரம் மற்றும் அதன் தோழமை அமைப்புகள், இடதுசாரிகள், போராட்டக் களத்தில் உள்ள சில தமிழ் இனவாத அமைப்புகள் தனிநபர்கள் ஆகியோரை தனது முதன்மை எதிரியாக அதிலும் குறிப்பாக மக்கள் அதிகாரம் உள்ளிட்ட எமது அமைப்புகளை முதன்மை எதிரியாகப் பார்க்கிறது” இந்த வகையில் பகையுடன் செயல்படும் பாஜக, பிற அரசியல் கட்சிகளைப் போல ஒரு அரசியல் கட்சி அல்ல! அது பார்ப்பன பாசிசத்தை, பார்ப்பனப் பேரரசை நிறுவத்துடிக்கும் பயங்கரவாத இயக்கம் என்று அரசியல் ரீதியாக முடிவு செய்து, எமது அமைப்புகள் அரசியல் போராட்டங்களை பாசிச பாஜகவுக்கு எதிராக கொண்டு சென்று வருகிறது.

தேர்தல் ஆணையத்தின் முன்வைக்கப்பட்ட வருடாந்திர தணிக்கை அறிக்கையில், 2019-2020 ஆண்டிற்கான நிதி ஆண்டில் தேர்தல் பத்திரங்கள் மூலம் கட்சி சுமார் 4,000 கோடி ரூபாய் வருவாயை ஈட்டி உள்ளது என்று பாரதிய ஜனதா கட்சி கூறுகிறது. இந்த வருமானம் 2018-2019 நிதி ஆண்டில் தேர்தல் பத்திரங்கள் மூலம் அந்தக் கட்சி ஈட்டிய ரூபாய் 1450 கோடியை விட 76 சதவீதம் அதிகம்.

அரசாங்கப் புள்ளி விவரங்களின்படி 2019-2020 நிதியாண்டில் 18 அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் சுமார் 1,441 கோடியை தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடையாக பெற்றனர். அந்த மொத்த தொகையில் 75% பாஜகவின் கணக்கில் வந்திருக்கிறது. இதேவேளையில் காங்கிரசிற்கு ரூபாய் 318 கோடியும் அதாவது காங்கிரஸ் பெற்றது வெறும் 9% மட்டும்தான். இதுமட்டுமன்றி பிற மாநில கட்சிகள் குறிப்பாக திரிணமூல் காங்கிரஸ் 100 கோடி, திமுக 45 கோடி, சிவசேனா 40 கோடி, தேசியவாத காங்கிரஸ் 20 கோடி, ஆம் ஆத்மி கட்சி 17 கோடி, ராஷ்ட்ரீய ஜனதாதளம் 2.5 கோடி நன்கொடையை பெற்றுள்ளனர்.

தேர்தல் பத்திரம் மூலம் நிதியை பெற்றுள்ள கட்சிகள் பற்றி, ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அரசு சாராத என்ஜிஓ அமைப்பு ஏ வி ஆர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றின்படி 2017-18 மற்றும் 2019-20 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் தேர்தல் பத்திரங்களில் இருந்து மொத்தம் 6,200 கோடிக்கும் அதிகமாக அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு கிடைத்துள்ளது. இந்த மொத்த தொகையில் சுமார் 68 சதவீதம் அளவிற்கு பாஜகவிற்கு கிடைத்தது, அதாவது 4500 கோடி ரூபாயாகும்.

படிக்க:

♦ பாஜகவிற்கு கார்ப்பரேட்டுகள் வீசி எறிந்த எலும்புத்துண்டே ₹ 2555 கோடி!

இந்த புள்ளி விவரங்கள் காட்டும் உண்மை என்ன? இந்தியாவை சூறையாடி வரும் கார்ப்பரேட் முதலாளிகளில் அம்பானி, அதானி, ஷிவ் நாடார், மித்தல் உள்ளிட்ட கையடக்கமேயான ஒரு பிரிவினருக்கு அரசியல் பொருளாதார ரீதியாகவும், சித்தாந்த ரீதியாகவும் அடியாள் வேலை பார்க்கும் பாஜக அதன் இயல்பிலேயே பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்கு எதிரானது, அதனை வராது வந்த மாமணியாக கருதும் மார்வாரி, சேட்டுகள் கோடிக்கணக்கில் கொட்டிக் கொடுக்கின்றனர் என்பதுதான் அந்த உண்மை. அந்த கார்ப்பரேட்டுகளின் மனம் கவர்ந்த கட்சியும், பிராந்திய அளவில் கார்ப்பரேட் சேவை செய்யும் திமுகவும் அடிப்படையிலேயே ஒன்றல்ல! இதனை ’ஆய்வு’ செய்துதான் கண்டுபிடிக்க வேண்டிய நிலைமை இல்லை.

இந்தியாவின் பொருளாதாரம் என்பது குஜராத்திகள், மார்வாரிகள், சேட்டுகள், சிந்திக்கள் நாட்டை சூறையாடுகின்ற பொருளாதாரம்தான். குஜராத், ராஜஸ்தான், மகராஷ்டிரா மாநிலங்களைச் சேர்ந்த உள்நாட்டு தரகு முதலாளிகளும், தேசங்கடந்த தரகு முதலாளிகளும் தான் இந்தியாவின் பொருளாதாரத்தை, 1947 ஆம் ஆண்டு பெறப்பட்டதாக கூறப்படும் சுதந்திரத்திற்கு முன்னும், பின்னும் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். 1967 ஆம் ஆண்டு திராவிட இயக்கங்கள் தமிழகத்தை ஆள தொடங்குகின்ற வரை வட இந்தியாவிற்கே அனைத்து சலுகைகளும் வழங்கப்பட்டது. குறிப்பாக குஜராத் மற்றும் மகாராஷ்டிரா இந்தியாவின் தொழில் நகரங்களாக திட்டமிட்டு வளர்க்கப்பட்டது.

’வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது’ என்பதை வலியுறுத்தி ’அடைந்தால் திராவிடநாடு; இல்லையேல் சுடுகாடு’ என்ற முழக்கம் முன் வைக்கப்பட்டது. “நாங்கள் திராவிடர்கள் எங்கள் நாடு திராவிட நாடு அடைந்தே தீருவோம் தனி திராவிட நாடு” என்ற கோரிக்கை 1944-ல் துவங்கிய திராவிடர் கழகத்தினால் தொடர்ந்து முன் வைக்கப்பட்டது. திமுக 1949 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட போதிலும்,1952 ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் தேர்தலில் போட்டியிடாமல் புறக்கணித்தது. “திராவிடர்களின் கருத்தை அறியாமலும், திராவிடர்களின் ஜீவாதார உரிமைக்கு ஊறு செய்யும் வகையிலும், ஒரே கட்சியரின் எதேச்சதிகார முறைப்படியும் தயாரிக்கப்பட்ட இந்திய அரசியல் சட்டத்தை திமுக கண்டிப்பதன் அறிகுறியாக தேர்தலில் தனது வேட்பாளர்களை நிறுத்தவில்லை” என்று விளக்கம் கொடுத்தது.

1963 ஆம் ஆண்டு இந்திய ஒன்றிய அரசின் அடக்குமுறைகளால், அதுவும் தனிநாடு கோருவது பிரிவினைவாத கோரிக்கை என்பதால் அது குற்றம் அதனால் திமுக கட்சி தடை செய்யப்படும் என்ற சூழலில், திராவிட நாடு கோரிக்கையை கைவிட்டு, மாநில சுயாட்சி என்று தனது கோரிக்கையை மாற்றி அண்ணா முழக்கமிட நேர்ந்தது. 1967 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் அமர்ந்த பிறகு டெல்லியில் அதிகாரத்தில் இருந்த காங்கிரஸ் கட்சி திமுகவை தடை செய்ய நேரம் பார்த்துக்கொண்டிருந்தது.

தமிழகத்தைப் பொருத்தவரை முருகப்பா குழுமம், எம்ஏஎம் குழுமம் போன்ற சிலரைத் தவிர, பார்ப்பனர்கள் கையிலேயே தமிழகத்தின் தொழில்துறை இருந்தது. டிவிஎஸ், சிம்சன், மெட்ராஸ் சிமெண்ட்ஸ், ஈசன் குரூப் என்று இந்தப் பட்டியல் மிகப் பெரியது. ஒருபுறம் இந்த பார்ப்பன தரகு முதலாளிகளை, கையாண்டு கொண்டே பார்ப்பனரல்லாத முதலாளிகளை வளர்ப்பதில் திராவிட இயக்கம் பல்வேறு போட்டிகள் இடையில் முன்னேறியது. 50 ஆண்டுகளில் இவ்வாறு போராடியதால் தான் தமிழகம், குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்திற்கு அடுத்த இடத்திற்கு வந்துள்ளது. தமிழகத்தின் மீதான வெறுப்புக்கு பொருளியல் அடிப்படையும் இதுதான்.

தமிழகத்தில் இன்றுள்ள தொழில்துறை கட்டுமானங்கள், பெரும்பாலும் திமுக ஆட்சிக் காலத்தில்தான் உருவாக்கப்பட்டன என்று ’திராவிடப் பொருளாதாரம்’ குறித்து ஆய்வு செய்துள்ள ஆய்வாளர்கள் மற்றும் முதலாளித்துவ ஊடகவாதிகளே ஏற்றுக் கொள்கின்றனர். திமுக என்ற அரசியல் கட்சி ஆரம்பத்தில் இருந்து போனபார்டிச கட்சியாக, காரியவாத, பிழைப்புவாத கட்சியாக தான் இருந்தது. அது ஒன்றும் சோசலிச பொருளாதாரத்தை முன் வைத்த கட்சி அல்ல! ஆனால் இந்தியாவை சூறையாடி கொழுத்த பார்ப்பன- பனியா முதலாளிகளுக்கு போட்டியாக திராவிட முதலாளிகள் சிலரை உருவாக்கியது. முரசொலி மாறன் மாநில சுயாட்சி நூலில் முன் வைத்த ’திராவிட மாடல் பொருளாதாரம்’ தமிழகம் புறக்கணிக்கப்படுவதன் விளைவால் ஏற்படும் பாதிப்புகளை ஈடு செய்யும் வகையில் சில பொருளாதார திட்டங்களை முன் வைத்து விளக்கியது.

தமிழகத்தைப் பொருத்தவரை 1967-1972 காலகட்டம் மிக முக்கியமானது. தமிழகத்தின் ஒவ்வொரு 50 கிலோ மீட்டரிலும் ஒரு தொழிற்பேட்டை இருக்க வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு திமுக செயல்பட்ட காலகட்டம் அது. சென்னை தொடங்கி நாகர்கோயில் வரையில் அப்போதுதான் பல தொழில் பேட்டைகள் அமைக்கப்பட்டன. தொழில் துறையில் மைய அரசின் அதிகாரத்தை கட்டுப்படுத்துகின்ற வகையில் மதுரை தமிழ்நாடு கெமிக்கல்ஸ், தூத்துக்குடி ஸ்பிக், காரைக்குடி டிசிஎல், மெட்ராஸ் பிளாசா போன்றவை அனைத்தையும் மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்களாக உருவாகினர். அதுபோலவே பூம்புகாரில் கப்பல் நிறுவனம் நிறுவனம், தமிழ்நாடு அக்ரி இண்டஸ்ட்ரி போன்றவை தமிழக அரசின் கூட்டுப்பங்கு நிறுவனங்களாக உருவெடுத்தன.

1990 களில் கொண்டுவரப்பட்ட மறுகாலனியாக்க கொள்கைகள் தமிழகத்திற்கு ஒரளவு முதலீடுகளை கொண்டு வந்தது. தமிழகத்தில் கார்ப்பரேட் நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு உள் நுழைய இந்த தனியார்மயம், தாராளமயம், உலகமயம் உள்ளிட்ட மறுகாலனியாக்க கொள்கைகள் காரணமாக இருந்தது. 1996-2001 காலகட்டத்தில் தகவல் தொழில்நுட்ப புரட்சியின் அடிப்படையில் சென்னையில் டைடல் பார்க் நிறுவப்பட்டு உலக அளவிலும், இந்திய நாட்டின் முன்னணி நிறுவனங்களும் தொழில் துவங்கினர்.

சென்னையில் அமைந்துள்ள டைடல் பார்க்

கவனியுங்கள்! இந்திய ஒன்றிய அரசின் ஆளுகைக்கு உட்பட்ட மாநிலங்கள் சுய சார்பு பொருளாதாரம் ஒன்றை முன் வைக்க முடியுமா? பார்ப்பன-பனியாக்களின் தொழில் போட்டியில் மற்ற மாநிலங்களை விட வளர்ச்சியில் முன்னேறியாக வேண்டிய நிலையில்தான் தமிழகம் உள்ளது. இந்திய பொருளாதாரமே ஏகாதிபத்திய சங்கிலியில் பிணைக்கப்பட்டு, ஏகாதிபத்திய உற்பத்தியின் பின் நிலமாக பார்ப்பன-பனியாக்களினால் மாற்றப்பட்டுள்ள நிலையில் தமிழகம் மட்டும் தனித்து செயல்பட்டிருக்க வேண்டும் என்பது அரசியல் தற்குறிகளின் கற்பனையான பார்வையாகும்.

இந்த நிலைமைகள் இருக்க “மணல் மாபியா, கிரானைட் மாஃபியா, சாராய ஆலை முதலாளிகள், கல்வி தந்தைகள் இவர்களெல்லாம் நட்பு சக்திகள் என்பது வேடிக்கை. மக்கள் ஜனநாயகப் புரட்சி நடக்கும் சமயத்தில் வந்து சேரக் கூடும். அது வரையில் ஊசலாட்டம் எல்லாம் கிடையாது. நமக்கு தெரிந்த பெரும் முதலாளி எல்லாம் ‘இட்லி, மெதுவடை, பொங்கல், கிச்சடி ரவாதோசை இருக்கு என்ன வேணும் சொல்லுங்க என்று கேட்கும் வேம்பு ஐயர் தான்! இங்கு இருக்கும் பிராமணர்களுக்கு வடநாட்டில் யாரெல்லாம் பார்ப்பன-பனியா என்றெல்லாம் தெரியாது’ பெரியார் போராடியது இங்கே அவர் காலத்திலும் சௌமியா நாராயணன் அடுக்கி இருக்கும் பட்டியலில் பெரிய மாற்றம் கிடையாது என்று நக்கலடிக்கிறார் முற்போக்கு பேசும் பார்ப்பனர் சஹஸ்ரநாமம் பத்மநாபன்..

“தமிழகம் பேச வேண்டிய பிற விஷயங்கள் 1) சில்லறை வணிகம் மிகப்பெரிய முதலீட்டை கொண்டது அதில் பார்ப்பன-பனியா பங்கு, 2) தமிழகத்தின் சிறு தொழில்கள் குறிப்பாக கோவையில் உள்ள எந்திர மோட்டார் தொழிற்சாலைகள் இதில் பார்ப்பன-பனியா பங்கு 3) தமிழக பட்டாசு தொழில் பார்ப்பன-பனியா பங்கு 4) தமிழக மணல் மாபியா குறைந்த மூலதனம் அல்ல, அதில் பார்ப்பன-பனியா பங்கு 5) தமிழக கிரானைட் தொழில் பார்ப்பன-பனியா பங்கு 6) தமிழக திரைத்துறை மூலதனத்தில் பார்ப்பன-பனியா பங்கு 7) தமிழக வட்டி தொழில் பார்ப்பன-பனியா பங்கு 8) தமிழக தொழில் மூலதனத்தில் பார்ப்பன-பனியா பங்கு அனைத்தும் பூஜ்ஜியம்தான், இதுபோல இன்னும் இப்படி பல துறைகள் எவர் கட்டுப்பாட்டில் உள்ளது என்றோ, அவர்கள் ஆளும் வர்க்கத்தின் ஆட்சி அதிகாரத்தில் செலுத்தும் செல்வாக்கு பற்றியோ கமுக்கமாக இருப்பது ’திறமை’ என்று சிலருக்கு நினைப்பு என்று கொந்தளிக்கிறார் செளமியா நாராயணன்..கவனியுங்கள் இவர்களின் வாதமும், அரசியல் தற்குறிகளின் வாதமும் திமுகவின் மீது வெறுப்பை கக்கும் புள்ளியில் ஒன்றிணைகிறது.

கலாநிதி மாறன் இந்திய பணக்காரர்களில் 78 ஆம் இடத்தில் இருக்கிறார். இவரின் சொத்து மதிப்பு ரூ 22,000 கோடி. எனவே கார்ப்பரேட் கலாநிதி காலை நக்குவதே ’முற்போக்கு’ என்று இழிவு படுத்துகிறது பார்ப்பன மற்றும் சற்சூத்திரக் கும்பல். இவர்கள் பட்டியலிடும் அனைவரையும் சேர்த்தால் கூட தமிழகம் மட்டுமல்ல, தென்னகம் முழுவதும் உள்ள பார்ப்பன-பனியா அல்லாதவர்களின் பங்கு இந்திய முதலாளித்துவத்தில் அதிக பட்சம் 4 அல்லது 5 விழுக்காடு தான் என்கிறது இந்தியப் பொருளாதாரம் குறித்த ஆய்வறிக்கை.

“பூர்சுவா முகாமிற்கு உள்ளேயே உள்ள பகைமைகளையும் மோதல்களையும் தொழிலாளி வர்க்கம் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் ஆனால் அதே சமயத்தில் பாசிசம் தானாகவே சக்தியிழந்து, செயலிழந்துவிடும் என்னும் பிரமையை பற்றிக் கொண்டிருக்க கூடாது. பாசிசம் தானாகவே வீழ்ச்சியடையாது.. தொழிலாளி வர்க்கத்தின் புரட்சிகரமான நடவடிக்கைதான் பூர்சுவா முகாமிற்குள் இயல்பாகவே தோன்றுகின்ற மோதல்களை பயன்படுத்திக்கொண்டு பாசிஸ்டு சர்வாதிகாரத்தை கீழே இழுத்து தள்ளுவதற்கும் தூக்கி எறிவதற்கு துணைபுரிகிறது” என்கிறார் தோழர் டிமிரோவ். ஆனால் கார்ப்பரேட் காவி பாசிசம் ஏறித்தாக்கி வரும் நிலையில் கூட முதலாளித்துவ முகாமிற்குள் இருக்கும் பகைத் தன்மையை பார்க்க கூட அஞ்சுவது என்ன வகை தர்க்கம் என்று நமக்கு புரியவில்லை.

பாசிசம் அதிகாரத்திற்கு வருவது என்பது சாதாரணமான முறையில் ஒரு பூர்சுவா சர்க்கார் போய் அடுத்த ஒரு பூர்சுவா சர்க்கார் வருவதை போல் அல்ல

– தோழர் டிமிட்ரோவ்

அது போல காங்கிரசு, திமுக போன்ற தரகு முதலாளித்துவ கட்சிகளுக்கும், அப்பட்டமான பாசிச கட்சியான பாஜகவிற்கும் உள்ள வேறுபாட்டை காண விரும்பாமல் இருவரும் ஒன்றுதான் என்ற வறட்டுத் தனமான, தற்குறி பார்வை உருவாக்கும் அபாயம் குறித்தும் தோழர் டிமிட்ரோவ் எச்சரிக்கிறார். “பாசிசம் அதிகாரத்திற்கு வருவது என்பது சாதாரணமான முறையில் ஒரு பூர்சுவா சர்க்கார் போய் அடுத்த ஒரு பூர்சுவா சர்க்கார் வருவதை போல் அல்ல. பூர்சுவா வர்க்கத்தின் ஓர் அரசாங்க வடிவத்திலிருந்து அதாவது பூர்சுவா ஜனநாயகத்தில் இருந்து அடுத்த வடிவம் பகிரங்கமான பயங்கர வடிவத்திலான, சர்வாதிகார முறையாக மாறி இடம் பெறுவதாகும். இந்த வேறுபாட்டை நாம் தெளிவாக காண வேண்டும்.

இல்லாவிட்டால் நாம் தவறு இழைக்கிறோம். அந்தத் தவறு பாசிஸ்டுகள் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றும் ஆபத்தை எதிர்த்துள்ள போராட்டத்தில் நகரத்திலும் கிராமப்புறங்களிலும் உள்ள விரிவான மக்கள் பகுதிகளை ஒன்று திரட்டுவதில் இருந்தும், பூர்சுவா வர்க்கத்துக்கிடையிலேயே உள்ள முரண்பாடுகளை முழுமையாக பயன்படுத்திக் கொள்வதில் இருந்தும் புரட்சிகரமான பாட்டாளி வர்க்கத்தை தடுத்துவிடும்” இந்த அறிவியல் பூர்வமான அணுகுமுறையை தான் திமுக விசயத்தில் எமது அமைப்பு கையாண்டு வருகிறது..

“ஆனால் பாசிச சர்வாதிகாரம் ஸ்தாபிக்கப்படுவதில் இன்று பூர்சுவா ஜனநாயக நாடுகளில் மேலும் மேலும் அதிகமான அளவில் முன் நடவடிக்கை எடுத்து பூர்சுவா வர்க்கம் பிற்போக்கான பல காரியங்களை உழைக்கும் மக்களுடைய ஜனநாயக உரிமைகளை அழிப்பது, பாராளுமன்றத்தின் உரிமைகளை பொய்யாக்குவதும், வெட்டிக்குறைப்பதும் புரட்சிகரமான இயக்கத்தின் மீது அடக்குமுறையை அதிகப்படுத்துவது முதலிய நடவடிக்கைகள் பலவற்றை எடுப்பதை பற்றிய முக்கியத்துவத்தைக் குறைத்து மதிப்பிடுவது எந்தவிதத்திலும் கடுமை குறைவான, அபாய குறைவான தவறு அல்ல”. என்கிறார். டிமிட்ரோவ். இது பாராளுமன்ற ஜனநாயகத்தை பயன்படுத்தும் முதலாளித்துவ நாடுகளில் உள்ள கம்யூனிஸ்டுகளுக்கு தோழர் டிமிட்ரோவ் சொன்னது நமக்கு பொருந்துமா என்று மக்களை வாயடைக்க சிலர் முயற்சிக்கலாம். ஆனால் அது பாசிசத்தை வீழ்த்த உதவாது என்பதே நிதர்சனம்.

திமுக கொண்டு வந்த பொருளாதாரக் கொள்கைகளின் காரணமாக, தமிழகத்தைப் பொருத்தவரை மகாராஷ்ட்ராவிற்கு அடுத்தபடியாக அதிக ஜிடிபி கொண்டுள்ள மாநிலமாகவும், தொழில் நிறுவனங்கள் கோருகின்ற போக்குவரத்து வசதிகள், துறைமுகங்கள், சீரான உள் கட்டமைப்புகள், எல்லாப் பிரிவுகளிலும் வேலை செய்ய ஆட்கள் அதோடு தயாரிக்கும் பொருட்களை வாங்கும் சக்தி கொண்ட மக்களிடம் பொருளாதாரமும் உள்ளன.

தொழில்துறை வளர்ச்சியில் தமிழகம் 64 பில்லியன் டாலருடன் இந்தியாவின் ஐந்தாவது இடத்தில் உள்ளது. அதாவது மொத்த தேசிய உற்பத்தி. தொழில் மயமாக்கத்தில் இரண்டாவது இடத்திலும், வெளிநாட்டு முதலீடுகளை பெறுவதில் இந்தியாவிலேயே மூன்றாவது இடத்திலும் உள்ளது. பிற மாநிலங்களை காட்டிலும் தமிழகம் தனித்து நிற்கிறது என்று நாடு முழுவதும் பேசப்படுகிறது என்றால் அதற்கு முக்கிய காரணமாக உள்கட்டமைப்பு, போக்குவரத்து, தொழில் வளர்ச்சி பொருளாதார முன்னேற்றம், மருத்துவம் மற்றும் கல்வி என பல துறைகளிலும் தமிழகம் முன்னே செல்கிறது என்பதுதான்.

மற்றொருபுறம் மகாராஷ்டிரா மற்றும் குஜராத் ஆகிய இரண்டும் தொழில் துறையில் வளர்ந்து இருந்தாலும் அவை ஒன்றிரண்டு தொழில்களில் மட்டுமே ஆதிக்கம் செய்கின்றன ஆனால் தமிழகத்தில் ஆட்டோமொபைல், ஜவுளி உட்பட பல முக்கிய தொழில்களாக உள்ளன சிறு-குறு தொழில்களில் எண்ணிக்கை தமிழகத்தில் தான் அதிகம் இதில் லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கிறது. தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சேவைத் துறை மூலம் 45 சதவீதமும் தொழில்துறை மூலம் 35 சதவீதமும், விவசாயத்தின் மூலம் 25 சதவீதமும் வருவாயாக கிடைக்கிறது.

தொடரும்…

முந்தைய பதிவுகள்:

♦  திமுகவும் – பாஜகவும் ஒன்னு! அரசியல் தற்குறிகளுக்கு காமாலைக் கண்ணு!

  திமுகவும் – பாஜகவும் ஒன்னு! அரசியல் தற்குறிகளுக்கு காமாலைக் கண்ணு! | பகுதி 2

  திமுகவும் – பாஜகவும் ஒன்னு! அரசியல் தற்குறிகளுக்கு காமாலைக் கண்ணு! | பகுதி 3

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here