காடோடி பதிப்பகத்தின் சார்பில் சூழலியலாளர் நக்கீரன் எழுதிய காடோடி புத்தகம் கீழைக்காற்று அரங்கில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
இந்த புத்தகம் ஆசியாவின் நுரையீரலான இந்தோனேசியாவின் போர்னியோ காடுகளை பற்றியது. கார்ப்பரேட் நிறுவனங்கள் தனது லாப வெறிக்காக எப்படி இயற்கையை சுற்றுச்சூழலை காட்டுவாழ் விலங்குகள், பறவைகள், பூச்சி இனங்களை அழிக்கின்றனர் என்பதை நம் மனம் வலிக்கும் வகையில், அற்புதமான மொழி நடையில் எழுதப்பட்டுள்ளது.
ஒரு வெட்டு மர நிறுவனத்தில் அதிகாரியாக கிணபத்தாங்கன் நதியில் நுழைவதில் இருந்து கதை தொடங்குகிறது. பரிணாம வளர்ச்சியில் மனிதனுக்கு முந்தைய கட்டங்களில் உள்ள, இப்போதும் வாழக்கூடிய பிரமேட்டுகளை உயிர்ப்போடு காட்சிப்படுத்துகிறது. அதுமட்டுமல்லாமல் சுற்றியுள்ள சின்னஞ்சிறு தீவுகள் முதல் ஆஸ்திரேலியா வரையிலான பல்வேறு நாடுகளில் இருந்து சட்ட விரோதமாக கொத்தடிமைகள் போல் அழைத்துவரப்பட்டு வேலை வாங்கப்படும் பல்வேறு இன மக்களைப் பற்றியும், அம்மலைகளிலேயே காலம் காலமாக வாழ்ந்து வரும் பூர்வகுடிகளான பல்வேறு இன மக்கள் நாகரீக வளர்ச்சியின் மோசமான எதிர்விளைவாக, தமது சொந்த காட்டையே அழிக்கும் வெட்டு மர நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்துள்ள அவலத்தையும் பதிவு செய்துள்ளது.
ஆசிரியர் நக்கீரன் தொல்குடி முதியவரான பிலியவ் என்ற பாத்திரத்தின் மூலம் இயற்கையை நேசிக்கும், மனிதர்களை பிரதிபலன் பாராமல் நேசிக்கும், தனது விருப்பத்திற்குரிய காட்டையே அழிப்பவர்களிடம்கூட அன்பு பாராட்டும் அற்புதமான மனிதராக படைத்து சாதித்திருக்கிறார். அவரின் மூலம் காடு பற்றிய பல்வேறு அறிய தகவல்களை நமக்கு காட்சிப்படுத்தியுள்ளார்.
காடுகள் அழிவதும், அங்கு செம்பனை தோட்டங்கள் முளைப்பதும், இந்தியா போன்ற நாடுகளில் பாமாயில் இறக்குமதி அதிகரிப்பதும் தானாக நடப்பதில்லை. அனைத்துக்கும் அடிப்படை கார்ப்பரேட் தொடர்புதான். ஆசியாவில் சுற்றுச்சூழல் கெடவும் இதுவே காரணம் என்பதை காடோடி கண்முன் நிறுத்துகிறது.
இதுவரை காட்டிற்குள், அதாவது அடர் காட்டிற்குள் நுழையாதவர்களை தனது எழுத்தின் மூலம் அழைத்துச் சென்று, அதன் அழிவையும் கண்முன் காட்டி கலங்க வைத்துள்ளார் நக்கீரன்.
புவி வெப்பமயமாதலால் பனிப்பாறைகள் உருகுவதால் சென்னை கடலில் மூழ்கும் என்ற ஆய்வாளர்களின் எச்சரிக்கையை பறைசாற்றும் விதமாக காடோடி திகழ்கிறது. கார்ப்பரேட்டுகளின் துரோகம் கழுத்தறுப்பு வேலைகள் இயற்கை கொடூரமாக திருப்பித் தாக்குவது என நாவல் ஒரு எதிர்மறை படிப்பினையுடன் முடிகிறது.
இந்நூலை வாசிப்பதன் மூலம் செடி, கொடி, இலை, மரம், விலங்குகள், பறவைகள் உள்ளிட்ட கானகத்தின் பல்லுயிர் சூழலை முழுமையாக உள்வாங்க முடிகிறது. இந்நூலை வாசித்து முடித்தவர்களால் காட்டை, மரங்களை, பழங்குடியின மக்களை, நேசிக்காமல் இருக்க முடியாது எனும் அளவிற்கு நம்முள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
இப்படி ஒரு அருமையான புத்தகத்தை உருவாக்கிய எழுத்தாளர் நக்கீரனுக்கு வாழ்த்துக்களும் நன்றியும்.
- இளமாறன்.