சச்சின்முதல் ஷாருக்கான் வரை; விளம்பரத்தில் நடிக்கும் நடிகர்களுக்கு சமூக பொறுப்பு உள்ளதா?

கோலிவுட் முதல் தமிழ்நாடு வரை சினிமாவிலும் , கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுக்கள் மூலமும் பிரபலமைடந்துள்ள பலரும் விளம்பரங்களில் நடித்து கோடிகளை அள்ளுகின்றனர். ஆனால் இவர்களுக்கு தனது ரசிகர்களான கோடிக்கணக்கான மக்கள்மீது துளியாவது அக்கறை உள்ளதா என்பதை கொஞ்சம் உரசிப்பார்ப்போம்!

ஷாருக்கானை வழிபடும் ரசிகர் கூட்டம்

பாலிவுட்டின் சூப்பர்ஸ்டாராக கொடிகட்டி பறப்பவர் ஷாருக்கான். இவர் A 23 பெட்டிங் நிறுவனத்தின் விளம்பரத்தில் ஆன்லைன் சூதாட்டத்துக்கு இளைஞர்களை சுண்டி இழுக்கும்படி நடித்தார். சூதாட்டத்தில் பணத்தை இழப்பவர்கள் திருட்டு குற்றவாளிகளாவதும், சூதாட வட்டிக்கு வாங்கி, கடன்பட்டு, தூக்கில் தொங்குவதும் அவ்வப்போது செய்தியாக வருவதை அவரும் பார்த்திருப்பார்தானே.

BYJU’S ஆன்லைன் கல்வி நிறுவனம் 22 பில்லியன் டாலர் ( சுமார் 1லட்சத்து 71 ஆயிரத்து 200 கோடி ரூபாய் ) மதிப்புடன் உலகில் முன்னணி நிறுவனமாக  வளர அதன் விளம்பர தூதரான ஷாருக்கான் முக்கிய காரணம்.  நாம் ஒன்றாக கூடி கற்றலை வலியுறுத்துகிறோம். பாடங்களை கற்பதை தாண்டி மாணவர்களுக்கு கல்வியுடன் சேர்த்து குழு விளையாட்டுக்கள் மூலம் சமூக உறவு, சமூக பண்பு, கூட்டு வாழ்வு, கட்டுப்பாடு என பலவற்றையும் அரசுப்பள்ளிகள்தான்  கற்றுத்தருகின்றன.

அரசு கல்லூரிகளில் நடைமுறைப்படுத்தப்படும் மாணவர் பேரவை தேர்வு உள்ளிட்டவை  மூலம் தலைமைதாங்கவும், உரிமைக்காக போராடவும் கூட பழகுகின்றனர். இதுவே நாளை இம்மாணவர்கள் தொழிலாளியாகவோ, அதிகாரியாகவோ மாறும்போது தன்னிடம் நவீன அடிமைகளாக இருக்கவிடாது என கார்ப்பரேட்டுகளும் நம் கல்வி முறையை வெறுக்கின்றனர். இப்படி பள்ளி, கல்லூரிகளையே ஒழிக்க ஏகாதிபத்தியங்கள் விரும்பும் நிலையில் ஷாருக்கான் தனது ரசிகர்களுக்கு ஆன்லைன் கல்வி விளம்பரம் மூலம் தவறாக வழிகாட்டியதை எப்படி ஏற்பது? கல்வி விசயத்தில் அமிதாப் இவரையும் தாண்டிவிட்டார்.

அமிதாப்பின் சமூக பொறுப்புணர்வு;

அமிதாப் பச்சன் வெறிபிடித்தபடி ஆளுயர கண்ணாடியை உடைத்துக்கொண்டு ஒரு அறையில் நுழைகிறார். அங்கு படித்துக்கொண்டிருந்த மாணவர்கள் பயந்து அலறுகிறார்கள். அமிதாப்போ ஒவ்வொரு அறையாக உள்ளே நுழைந்து லேப்டாப்களை அடித்து நொறுக்கி, கீ போர்டில் டீயை ஊற்றி மாணவர்களை ஓடவிடுகிறார். இப்படி அலறவிட்டு நடுங்கும் மாணவர்களிடம் பேசுவதாக ஒரு விளம்பரம். ஏன் படிப்பவர்களை அலறவிட்டார்?

வேறு ஒன்றுமில்லை; நாட்டை முன்னேற்றத்தானாம். அமிதாப் நம் நாட்டில் படிக்கும் மாணவர்களை அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியாவுக்கு போய் படித்து இந்தியாவுக்கு பெருமை சேர்க்க சொல்கிறார். அதற்கு சுலப வழியாக அப்கிரேடு அப்ராடு (upgrade Abroad) நிறுவனம் உதவுவதாக ஊக்குவிக்கிறார். நம் கல்லூரி, பல்கலைக்கழகங்களின் தரத்தை உயர்த்த குரல் கொடுக்காமல் படிக்க வெளிநாட்டுக்கு ஓடு என்று துரத்தும் அமிதாப்பின் இந்த நடிப்பை நாம் வரவேற்கலாமா?

மேக்ஸ்கிளீன் பயன்படுத்தி தரையை துடைக்கும் போது கொரோனோ வைரஸே அழிகிறது என்ற விளம்பரத்தில் அமிதாப் நடித்தார். கொரோனா தரைமூலமா பரவுகிறது என நாமும் கேள்வி கேட்டதில்லை.

படிக்க:

♦  பைஜுஸ் : இந்தியக் கல்வி அமைப்பில் என்ன பாதிப்பை உண்டாக்குகிறது?

♦  எச்சரிக்கை! உணவு துறையில் கால்பதிக்கும் கார்ப்பரேட் கும்பல்.

ஒரு புறம் போலியோவுக்கு எதிரான அரசு விளம்பரத்தில் நடித்தபோதும், பான்மசலா புகையிலை போடுவதை ஊக்குவித்தும் நடித்தார். காசுக்காக இப்படி நடிக்கலாமா என நீதிமன்றத்தில் வழக்கு போட்டு அமிதாப் உள்ளிட்ட நடிகர்களை தடுக்கவேண்டி வந்தது.

தமிழ் திரையுலக ஹீரோக்கள் விதிவிலக்கானவர்களா?

ஜீவா ரேப்பிடொ (rapido) விளம்பரத்தில் நடிக்கிறார். சட்டப்படி இரு சக்கர வாகனத்தை வாடகை வாகனமாக ஓட்ட முடியாது. ஆனால் பகிரங்கமாக வாடகை பைக் மூலம் கார்ப்பரேட் வியாபாரம் நடக்கிறது. நம் இளைஞர்கள் படிப்புக்கு ஏற்ற வேலைகிடைக்காமல் சுவிக்கி, சுமோட்டோவில் டிபன் கேரியர் சுமப்பதுபோல் இப்பொழுது கஸ்டமர்களை ஏற்றிக்கொண்டு பறக்கின்றனர். இதன் லாபம் மட்டும் வெறும் கணினி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தானே இயங்கும்படியான ஆப்பை (app) மட்டும் நிறுவிவிட்டு, எந்த உழைப்பையும் செலுத்தாத ரேப்பிடோவுக்கு. ஓலா, உபேர் வரிசையில்  வாடகை பைக்கை ஊக்குவித்து ஆட்டோ ஓட்டுனர்களின் வாழ்வுக்கு கொள்ளிவைக்கிறோம் என்பதை நடிகர் ஜீவா உணராமலா இருப்பார்?

ஈமு கோழி விளம்பரத்தில் நடித்து காசு பார்த்த பாக்கியராஜ், சத்தியராஜ், சரத்குமார் போன்ற நம் ஹீரோக்களின் பேச்சை நம்பிய சிறு விவசாயிகள் பலரும் ஈமு கோழிப்பண்ணை வைத்து போண்டியாகினர். அவர்கள் பணத்தை தொலைத்துவிட்டு கதறும்போது நடிகர்கள் எங்கே போயிருந்தார்கள்?

சினிமா நடிகர்கள்தான் இப்படி இருக்கிறார்கள் என்றால் கிரிக்கெட் வீர்ர் சச்சின் அனைவரையும் விஞ்சுகிறார்.

சச்சினின் நாட்டுப்பற்று!

உலகிலேயே பணக்கார கிரிக்கெட் வீரரான சச்சினின் சொத்து மதிப்பு 1,110 கோடி. இதற்கு காரணம் மைதானத்தில் நாட்டுக்காக விளையாடியது மட்டுமல்ல; கார்ப்பரேட்டுகளுக்கு இரவு பகல் பார்க்காமல் ஸ்டுடியோவுக்குள் கேமரா முன் கடுமையாக உழைத்ததுதான். இப்படி காசுக்கு தன்னையே விற்று சச்சின் வளர்த்துவிட்டவை அனைத்தும் கோக் போன்ற பன்னாட்டு, கார்ப்பரேட்டுகளின் பிராண்டுகளைதான். இப்படிப்பட்ட விளம்பரத்தைப்பார்த்து சச்சின் சொன்னபடி செய்த ரசிகர் பட்டாளத்தால் நம் பொருளாதாரமா வளர்ந்தது? இல்லை நம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தான் கிடைத்ததா?

Target Analysis 2 | malziano

நம்மூர் தல தோனி!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மகேந்திர சிங் தோனியின் சொத்து மதிப்போ 767 கோடிகள். நாம் இன்றும்கூட பார்க்கும் IPL கிரிக்கெட் போட்டிகளையும்கூட கார்ப்பரேட்டுகளுக்காகத்தான் நடத்துகிறார்கள். IPL போட்டியை போனில் பார்க்கவேண்டும் என்று தான் ஓட்டும் பேருந்தை நடுரோட்டில் நிறுத்திவிட்டு சக பயணிகளுடன் ரசித்து பார்க்கும் டிரைவராக தோனி நடித்திருந்தார். தன் விருப்பத்துக்கு நடு ரோட்டில் வண்டியை நிறுத்த ஊக்குவிக்கும் இதை, போக்குவரத்து விதிகளை மதிக்காமலும், வாகன நெரிசலால் அவதிப்படும் மக்களை கணக்கில் எடுக்காமலும் பொறுப்பற்று எடுக்கப்பட்ட விளம்பரம் என்று புகார் தரப்பட்டு தடை செய்ய வலியுறுத்தியதும் நடந்தது.

சாராய நிறுவன விளம்பரத்தில் தோனி

உழைத்து முன்னேறினால்தானே சமூக பொறுப்பு வரும்!

இப்படி விளம்பரங்களில் நடித்து நாம் எதை, எப்படி செய்து வாழவேண்டும் என கற்பிக்கும் நடிகர்கள் ஒருவரும் நம்மைப்போல் உழைத்து வாழ்பவர்களல்ல. சிலமாத கால்சீட்டில் பல கோடிகளை அள்ளுபவர்கள். விளையாட்டு வீரர்களோ 30 விநாடி ஓடும் விளம்பரத்துக்கு கோடிகளை வசூலிப்பவர்கள். இவர்களா நமக்கு வழிகாட்டிகள்? இவர்கள் சொல்வதை கேட்கும் நம் ரசிகர்களை திருத்த, இந்த மோகத்தை விரட்ட, எங்கு அழைத்துப்போய் வேப்பிலை அடிப்பது?

  • இளமாறன்.

1 COMMENT

  1. ரம்மி விளையாட்டை அறிமுகப்படுத்தி விளம்பரப்படுத்திய பொழுது, கோடிகசமூக கோடிகளில் புரண்டாலும் சமூக அக்கறையற்ற பொறுக்கிகளாக இருக்கிறார்கள் என முகநூலில் எழுதியது நினைவுக்கு வருகிறது.

    இவர்கள் எல்லாம் சமூக பொறுப்பு இல்லாமல் இருக்கிறார்கள். சமூக அக்கறையுடன் உள்ள கலைஞர்களையும் சொல்லியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.

    கோடி ரூபாய் தருகிறோம் என வேட்டி விளம்பரத்தில் ராஜ்கிரணை நடிக்க அழைத்த பொழுது, வேட்டி என்பது ஏழைகள் உடுத்துகிற ஆடை. எனக்கு கொடுக்கும் ஒரு கோடியையும் அதன் விலையில் தான் வைப்பீர்கள். ஆகையால் வேண்டாம் என சொன்னதாக ஒரு செய்தி படித்தேன்.

    ”நடிகர் விஜய் ‘கத்தி’ படத்தில் கோக் நிறுவனத்திற்கு எதிராக வசனம் பேசினார். ‘அதே கோக் விளம்பரத்தில் நீங்களும்தானே நடித்தீர்கள்?’ என ரசிகர் ஒருவர் கேட்ட நியாயமான கேள்விக்கு, ”அரசியல் கட்சிகள் கூட்டணி வைத்துக்கொள்ளும்போது இதே கேள்வியை எழுப்பினால் மகிழ்வேன். நானும், சச்சின், அமீர்கான் போன்ற பிரபலங்களும் கோக் விளம்பரத்தில் நடித்திருக்கிறார்கள். இப்போது நான் அதை விளம்பரப்படுத்துவதில்லை. நானும் சாதாரண மனிதன்தான். என் தவறுகளைத் திருத்திக்கொள்வேன்” எனப் பதில் கொடுத்தார் விஜய்.”

    – விகடன்

    ‘ஆரோக்கியம் இல்லாத குளிர்பான நிறுவனத்தின் விளம்பரத்தில் ஏன் நடிக்கிறீர்கள்?’ எனச் சிறுமி ஒருத்தி கேட்ட கேள்வியால், வெளிநாட்டு குளிர்பான நிறுவனத்தின் விளம்பரத்தில் நடிப்பதை நிறுத்தினார் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன். விளம்பரப் படங்களில் நடித்துக்கொண்டிருந்த நடிகர்கள் பலர் சில பல சர்ச்சைகளுக்குப் பிறகு, விளம்பரங்களில் தலை காட்டுவதே இல்லை. தமிழ் நடிகர்கள் பலரும் கட்டி மாய்ந்துவிட்ட வேட்டி விளம்பரத்தில், பெரிய தொகை சம்பளமாகப் பேசப்பட்டும், நடிக்க மறுத்தார் ராஜ்கிரண். ”வேட்டி என்பது ஏழைகளின் உடை. அதிகபட்சம் அவர்களால் ஒரு வேட்டியை 100 ரூபாய் மட்டுமே கொடுத்து வாங்க முடியும். இவர்கள் எனக்கே இவ்வளவு சம்பளம் தருகிறார்கள் என்றால், அதை யாரிடம் வசூலிப்பார்கள். ஏழைகளிடம்தானே? நான் வேட்டி விளம்பரத்தில் நடித்தால் எனக்கு லாபம்தான். என் சுய லாபத்திற்காக மற்றவர்களை கஷ்டப்படுத்துவது துரோகம்!” என்பதுதான் ராஜ்கிரண் சொன்ன பதில்.”

    – விகடன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here