மிகப்பெரும் சூதாட்ட வெறியனான தருமன் தனது சொத்துக்கள் ஒவ்வொன்றாக பணயம் வைத்து சூதாடி தோற்றுக் கொண்டே வருவான். இறுதியில் தன்னையும் உள்ளிட்டு பாண்டவர்கள் ஐவருக்கும் மனைவியாக இருந்த திரௌபதியையும் வைத்து சூதாடினான். எந்த கேடு கெட்ட மனிதனும் செய்யத் துணியாத இழிந்த செயலை செய்த தருமனை ‘உத்தமன்’ என்று போற்றுகிறது மகாபாரதம்.

மோடி கும்பல் இந்த கொரோனா கால கட்டத்தைப் பயன்படுத்தி நாட்டின் அதிமுக்கியம் வாய்ந்த உயர் பாதுகாப்புத் தன்மை கொண்ட பொதுத் துறைகளை ஒவ்வொன்றாக கார்ப்பரேட் கொள்ளைக்கு காவு கொடுக்கிறது. இதன் உச்ச கட்ட நடவடிக்கையாக 2020 மார்ச் மாதத்தில் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையில் 74% அந்நிய முதலீட்டை அனுமதிக்கிறோம் என்று அறிவித்ததன் மூலம் மகாபாரதத்தின் தருமனைப் மிஞ்சிவிட்டனர். ஒருபுறம் ’ஆத்ம நிர்பார் பாரத்’ என்று சுதேசி முழக்கமிடுகின்றனர்., மறுபுறம் தேசபக்திக் கூச்சலிட்டுக் கொண்டே அவர்களே முன்வைக்கும் பார்ப்பன இந்திய தேசியத்தின் பாதுகாப்பிற்கு ஆப்பறைந்து விட்டார்கள்.

ரபேல் விமானத்துக்கு பூஜை செய்யும் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங்

இராணுவம் மற்றும் பாதுகாப்புத் துறை என்றவுடன் உள்நாட்டுப் பாதுகாப்பு, எல்லைப் பாதுகாப்பு என்ற தேசபக்தி பஜனையில் நாம் இறங்க முடியாது. இராணுவம் உள்ளிட்ட பாதுகாப்புத் துறை யாருடைய நலனுக்கு? என்ற மையமான கேள்வி ஒருபுறமிருந்தாலும் ஏறக் குறைய 70 ஆண்டு காலம் இந்திய இராணுவத்திற்குத் தேவையான ஆயுத தளவாடங்கள் உள்ளிட்ட பல்வேறு இயந்திரப் பொருட்களை அதுவும் மொத்த தேவையில் 75% த்தை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்து கொடுத்த பாதுகாப்பு (defence) பொதுத் துறைகளை (DPSU) கார்ப்பரேட்டுகளிடம் வழங்கி நாட்டின் பாதுகாப்பையே கேள்விக்குள்ளாக்கி விட்டதை எதிர்த்து போராடாமல் இருக்கவே முடியாது.

இந்திய இராணுவத்திற்கு மட்டும் 2019-20 பட்ஜெட்டில் ரூ 4,54,497 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இதில் இராணுவ தளவாட உற்பத்திக்கு மட்டும் ரூ 2,45,906 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. இந்த செலவீனம் ஆர்டினஸ் பேக்டரிகள் (Ordinance factories) மற்றும் டிஆர்டிஒ துறை (DRDO) ஆகியவற்றையும் உள்ளடக்கியது தான். இராணுவ பட்ஜெட்டுக்கு 2020-21 ஆண்டில் ரூ 4,91,818 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இது 2019 ஆண்டை விட 7% அதிகமாகும்.  இதுவும் போதாது என்று நமது நாட்டில் உற்பத்தியாகும் அளவுக்கு சமமாக இராணுவ தளவாடங்கள் வெளிநாட்டிலிருந்தும் இறக்குமதி செய்யப்படுகிறது. (இது தனிக்கதை)

இந்தியாவில் 9 பொதுத் துறை நிறுவனங்கள் பாதுகாப்பு தளவாடங்களை உற்பத்தி செய்வதில் முக்கிய பங்களிப்பு செய்கிறது. அவையாவன: இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் (HAL), பாரத் எலக்ட்ரானிக்ஸ் (BEL), பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் (BDL), பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட் (BEML), மிஸ்ரா டாட்து நிகாம் லிமிட்டெட் (MIDHANI), மசாக்கான் டக் சிப் பில்டர்ஸ் லிமிடெட் (MDL), கார்டன் ரீச் பில்டர்ஸ் அண்ட் எஞ்சினியரிங் லிமிடெட் (GRSE), கோவா ஷிப் யார்ட் லிமிடெட் (GSL), ஹிந்துஸ்தான் ஷிப் யார்ட் லிமிடெட் (HSL) ஆகியனவாகும். இந்த 9 பொதுத்துறைகளின் மூலம் இந்திய ராணுவம் தனக்கு தேவையான ஆயுதங்களை உற்பத்தி செய்து வாங்கி கொண்டது. இவற்றின் மூலம் இராணுவத்திற்குத் தேவையான தளவாடங்கள், உதிரிப் பாகங்கள், போர்க் கருவிகள் போன்ற அனைத்தையும் இங்கு தயாரிக்கிறார்கள்.

2019 ஜூன் மாதம் பாராளுமன்றத்தின் இரு அவைகளையும் கூட்டி வைத்து நடத்திய கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் “அரசு விரைவில் புதிய தொழிற் கொள்கையை அறிவிக்க உள்ளது” என்ற அறிவிப்பை வெளியிட்டார். அதன் தொடர்ச்சியாக நாட்டின் முக்கியத் துறைகளான நிலக்கரி, மின்னுற்பத்தி, இராணுவ தளவாட உற்பத்தி மற்றும் விண்வெளித் துறை ஆகியவற்றை கார்ப்பரேட் மயமாக்குவதாக மோடி – நிர்மலா கூட்டணி அறிவித்தனர். 2020 மார்ச் மாதம், குறிப்பாக இராணுவ தளவாட உற்பத்தித் துறையில் அன்னிய முதலீடு 49% த்திலிருந்து 74% மாக உயர்த்தப்பட்டது. (இது வெறும் சதவிகித கணக்கு மட்டும்தான். உண்மையில் 100% அன்னிய முதலீடு என்பதே சரியானது) “கார்ப்பரேட்மயமாக்குவது என்பது தனியார்மயமாக்குவதல்ல” என்று புதிய சித்தாந்ததை, அதாவது பூ வேறு புஷ்பம் வேறு என்று பித்தலாட்டத்தை நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அவிழ்த்து விட்டார்.

மாறுவேடமாடும் மோசடி மோடி

சுய சார்பு பொருளாதாரத்தைக் கட்டியமைக்க போவாதாக பீற்றிய ’மேக் இன் இந்தியா’ திட்டத்திற்கும், பாதுகாப்பு துறையில் அன்னிய முதலீடு என்பதற்கும் என்ன தொடர்பு? அன்னிய முதலீட்டை 100 சதவிகிதம் (FDI) அனுமதிப்பது எப்படி ’மேக் இன் இண்டியாவாகும்’ என்ற கேள்வியை எந்த பார்ப்பன – சங்கி முட்டாளும் கேள்வி எழுப்பவில்லை. நாட்டின் பாதுகாப்புத் துறையில் அன்னிய முதலீடு என்பது பாலியல் வன்கொடுமை புரிந்த பொறுக்கியிடம் அந்தப் பெண்ணை பாதுகாப்பாக வைத்திரு என்று அனுமதிப்பதற்கு ஒப்பாகும். நாட்டை மறுகாலனியாகும் கொள்கைகளை உத்தரவிட்டு சாதிக்கும் அமெரிக்காவிடம் முழுமையாக சரணடையும் கோழைத்தனமாகும்.  இன்று மிகப் பெரும் இராணுவ வல்லரசாக உலகையே ஆதிக்கம் புரியும் அமெரிக்காவின் காலடியில் இந்தியாவின் பாதுகாப்பை போட்டு மிதிப்பது தான் இவர்கள் முன் வைக்கும் ’மேக் இன் இந்தியா’ திட்டமாகும்.  உலக அளவில் இராணுவ தளவாட உற்பத்தியில் ஆதிக்கம் புரியும் 10 நிறுவனங்களில் 6 அமெரிக்காவை சேர்ந்தது என்பது குறிப்பிடத் தக்கதாகும்.

இதுவரை சிறிய ரக இராணுவ ஆயுதங்களை உற்பத்தி செய்து வந்த பொதுத்துறைகளை ஒதுக்கிவிட்டு ‘பூன்ச் லாயிட்’ போன்ற கார்ப்பரேட்டுகளை அனுமதிகின்றனர்.  தனியார் உற்பத்தி நிறுவனமான இவர்கள் முதன் முதலாக சிறிய ரக இராணுவ ஆயுதங்களை தனது உற்பத்திகூடமான மத்திய பிரதேசம், குவாலியரில் உற்பத்தி செய்யத் தொடங்கி உள்ளனர். அதுமட்டுமில்லை, இந்த ’பூன்ச் லாயிட்’ இந்திய இராணுவத்தால் தடைசெய்யப்பட்ட ’இசுரேல் மிலிட்டரி இண்டஸ்டிரிஸ்’ (IMI) என்ற இசுரேலைச் சேர்ந்த நிறுவனம் தனது பெயரை ’இசுரேல் வெப்பன் இண்டஸ்டிரிஸ்’ (IWI) என்று பெயர் மாற்றிக்கொண்டு வந்தவுடன் அவர்களுடன் ஒப்பந்தம் போடுகிறார்கள்! அதையும் தேசபக்த மோடி கும்பல் அனுமதிக்கிறது.

இராணுவ தளவாட உற்பத்தியில் தனது நாட்டிற்குத் தேவையான அளவை விடக் கூடுதலாக உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் தனது பொருளாதாரத்தைத் தக்கவைத்துக் கொள்ளும் நாடுகளில் அமெரிக்கா, ரசியா, சீனா, ஜெர்மனி, பிரான்சு ஆகிய நாடுகள் ஆதிக்கம் செலுத்துகின்றன. இவைகள் உலகின் பிற நாடுகளுக்கு இராணுவ தளவாடங்களை விற்பனை செய்து கொள்ளை லாபம் ஈட்டுகின்றனர். இதன் மூலம் ஆண்டுக்கு 420 பில்லியன் டாலர் கல்லா கட்டுகின்றனர். (2018-SIFRI அறிக்கையிலிருந்து). இவர்களிடமிருந்து இராணுவ தளவாடங்களை இறக்குமதி செய்வதில் முன்னிலையில் இந்தியா, சௌதி அரேபியா, பாகிஸ்தான், யுனைட்டெட் அரபு எமிரேட்ஸ் மற்றும் சீனா உள்ளன.

தற்போது இந்திய ஒன்றிய அரசு அறிவித்துள்ள, ஒருபுறம் பாதுகாப்புத் துறையில் அன்னிய முதலீடு மறுபுறம் இருக்கும் பாதுகாப்பு பொதுத்துறைகளை ஒழித்துக் கட்டுவது என்ற கொள்கையின் மூலம் 9 பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்களின் 41 ஆலைகளின் மூலம் தனது இராணுவத்திற்குத் தேவையான தளவாடங்களை உற்பத்தி செய்த நிலைமை மாறி 74% அன்னிய முதலீட்டுக்கு வழி செய்து, மனைவியையே சூதாட்டத்தில் வைத்த ஆடிய தருமனின் செயலுக்கு ஒப்பானதாகிவிட்டது.

இந்த தேச பக்தர்கள் முதலில் 2016 அக்டோபர் மாதம் பாதுகாப்புத்துறையில் அன்னிய முதலீடு என்று பேசத் தொடங்கி 2017 சனவரியில் முதன் முதலாக பெங்களூருவில் இயங்கும் BEML நிறுவனத்தின் பங்குகளில் 26% த்தை விற்பனை செய்தார்கள். 1964 ல் ரூ 5 கோடி மூலதனத்துடன் உற்பத்தியை துவங்கி 2017 ல் 3500 கோடி முதலீடு கொண்ட நிறுவனமாக வளர்ந்து, லாபமீட்டும் பொதுத்துறையாக இயங்கி வந்த BEML முக்கிய பாதுகாப்பு கருவிகளை உற்பத்தி செய்து வந்தது. அதில் 26% பங்கு விற்பனை என்பது அதுவரை முழுக்க இந்திய அரசின் கட்டுப் பாட்டில் இருந்த இராணுவ தளவாட உற்பத்தியில் அன்னியர்கள் உள்ளே புகுந்து கட்டுப்படுத்துவதற்கு வழிவகுக்கிறது என்று பல்வேறு ஜனநாயக சக்திகள் தொழிற் சங்கங்கள் அப்போதே கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். அதன்பின் 2019 ஜனவரி 8, 9 தேதிகளில் மைய தொழிற்சங்கங்கள் நடத்திய பொது வேலை நிறுத்தத்தில் ’பாதுகாப்புத் துறையில் அன்னிய முதலீட்டை அனுமதிக்காதே!’ என்ற கோரிக்கை வலுப்பெற்றது.

உள்நாட்டில் ரபேல் விமான தயாரிக்க மோடியால் முறைகேடாக நுழைக்கப்பட்ட அனில் அம்பானி

ஏறக்குறைய 225 வகையான இராணுவ உபகரணங்களை உற்பத்தி செய்வதற்கு இந்தியாவில் 41 இராணுவ தளவாட உற்பத்தி தொழிற்சாலைகள் இயங்குகிறது. இந்த தொழிற்சாலைகளில் சுமார் 4 லட்சம் தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். இந்த அன்னிய முதலீடு என்பது இவர்களில், 25 தொழிற்சாலைகளில் உள்ள 85,000 தொழிலாளர்களின் வேலைகளை உடனடியாகப் பறித்துவிடும் என்று கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர் தொழிலாளர்கள். அதே ஆண்டு ஜனவரியில் 23,24,25 ஆகிய மூன்று நாட்கள் 4 லட்சம் தொழிலாளர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்த வேலை நிறுத்தத்திற்கு பாதுகாப்புத் தொழிலாளர்கள் மத்தியில் வேலை செய்யும் AIDF, INDWF, BPMS ஆகிய தொழிற் சங்கங்களின் கூட்டமைப்பு தலைமை தாங்கியது.

இந்த தொழிற்சங்கங்கள் எழுப்பிய முக்கிய கேள்வி ‘ஏறக்குறைய 70 ஆண்டுகளாக கடைப்பிடித்து வந்த ஒரு நடைமுறையை திடீரென்று எந்த முன்னறிவிப்புமின்றி மாற்றியது யார்? அதன் உள்நோக்கம் என்ன?  இதனால் ஆதாயமடையப் போவது யார்? பாதுகாப்புத் துறையில் அன்னிய முதலீடு என்பது தேசத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தும் செயல்பாடு இல்லையா? இது பற்றி தொழிலாளர்களை ஏன் எந்த பேச்சுவார்த்தைக்கும் அழைக்கவில்லை என்று கேள்வி எழுப்பினர்.

ஆனால் எந்த பதிலும் இல்லை, மாறாக அவர்களின் மீதே குற்றம் சுமத்தும் வகையில் நமது இராணுவ தேவைக்கு ஏற்ப உற்பத்தி செய்யும் ஆற்றல் இந்த பொதுத்துறைகளிடம் இல்லை. மேலும் உற்பத்தியில் இந்தியமயமாக்கம், நவீனமயமாக்கம் தேவை என்றால் அன்னிய முதலீடு அவசியம் என்று முழங்கினர். இதுதான் ’மேக் இன் இந்தியா’ என்று வேறு தம்பட்டம் அடித்தனர்.

1991 வரை ஐந்தாண்டுத் திட்டங்களின் மூலம் ரசிய பாணியில் இராணுவ தளவாட உற்பத்தியில் சுய சார்பைப் பேணி வந்த இந்தியா 1991 க்குப் பிறகு மறுகாலனியாக்க கொள்கைகளை கடைப்பிடிக்கத் தொடங்கியதன் விளைவு தேசத்தின் பாதுகாப்பு இன்று கேள்விக்குறியாகி விட்டது. மறுகாலனியாக்கத்தின் காரணமாக நாட்டின் இராணுவத் துறையையே தனியாருக்கு தாரை வார்க்கபட்டுவிட்டது. இராணுவமே அமெரிக்க பாணியில் தனியார்மயமாக போகிறது.

இராணுவ தளவாட உற்பத்தியில் கார்ப்பரேட்டுகளை அனுமதிப்பது என்பது வெறும் உள்நாட்டு பாதுகாப்பு பிரச்சனை என்பது மட்டுமல்ல. இத்தகைய இராணுவ உற்பத்தி மையங்களில் உற்பத்தியாகும் ஆயுதங்கள் ஒரு நாட்டின் அரசாங்கத்திற்கு மட்டுமின்றி பல்வேறு தீவிரவாதக் குழுக்கள், கிரிமினல் மாஃபியாக்கள் போன்றவர்களுக்கு எளிமையாக ஆயுதங்கள் கிடைக்க வழிவகுக்கும்., சட்ட விரோதமான ஆயுத விற்பனை நடத்தப் பயன்படும் என்பதும் கவனிக்கத் தக்கதாகும். ஏனென்றால் உலக அளவில் 875 மில்லியன் டாலர் மதிப்பிலான சிறிய ரக ஆயுதங்கள் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள ஆயிரக் கணக்கான தொழிற்சாலைகளில் உற்பத்தியாகிறது. இவை அனைத்தும் சட்ட விரோத ஆயுத விற்பனைக்கே உதவுகிறது.  பாதுகாப்புத் துறை தனியார்மயம் என்பது மேற்கண்ட சந்தையை குறிவைத்து லாப வெறியுடன் உற்பத்தி நடக்கும்.

இந்தியாவில் உள்ள பாதுகாப்பு பொதுத்துறைகள் இராணுவத்திற்க்கு செய்த அளப்பறிய சேவைகள் என்ன? உலகமயமாக்கம், கார்ப்பரேட் மயமாக்கம் எவ்வாறு நாட்டை மறுகாலனியாக்கப்போகிறது மற்றும் அதன் ஆபத்துக்களை தொடர்ந்து பார்ப்போம்!

— தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here