ஒன்றிய அரசே ! ஜி.எஸ்.டி என்ற பெயரில் மக்களிடம் அடிக்கும் வரிக்கொள்ளையை நிறுத்து!

வரி உயர்த்தப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தும் பெரும்பான்மை உழைக்கும் மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களே.

நாள் 5-7-2022

பத்திரிக்கைச் செய்தி!

ஒன்றிய அரசே !
ஜி.எஸ்.டி என்ற பெயரில் மக்களிடம் அடிக்கும் வரிக்கொள்ளையை நிறுத்து!
அனைத்து வகையிலும் மக்களிடம் வரியாக பிடுங்கி அம்பானி, அதானிகளுக்கு வாரி வழங்கும் பாசிச பா.ஜ.கவை அதிகாரத்திலிருந்து அகற்று !

டந்த ஜூன் 28, 29 தேதிகளில், 47-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தை சண்டிகரில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடத்தியது பாசிச ஆர் எஸ் எஸ்- மோடி அரசு. இக்கூட்டத்தில் உழைக்கும் மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்களுக்கான ஜி.எஸ்.டி வரியை உயர்த்தியுள்ளதுடன், பல்வேறு புதிய பொருட்களின் மீது புதிதாக வரிகளைப் போட்டுள்ளது. வருகின்ற ஜீலை 18 முதல் புதிய வரி உயர்வுடன் அமல்படுத்தப்படும் என்றும் அறிவித்துள்ளது.

ஒன்றிய அரசின் இந்த வரி விதிப்பை கோடிக்கணக்கான உழைக்கும் மக்கள் சார்பில் மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கிறது. உழைக்கும் மக்களின் அத்தியாவசிய பொருட்கள் மீது வரியை உயர்த்தியுள்ள கொடூரமானது, பாசிச மோடி அரசு உழைக்கும் மக்கள் மீது தொடுத்துள்ள துல்லிய தாக்குதலாகும். குறிப்பாக, விவசாயிகள் பயன்படுத்தும் தண்ணீர் எடுக்கும் மோட்டார் பம்புகள் மற்றும் சாதாரண மக்கள் வீட்டில் பயன்படும் எல்.இ.டி பல்புகள், சர்க்யூட் போர்ட் ஆகிய பொருட்களுக்கான வரியை 12 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாகவும், சோலார் வாட்டர் ஹீட்டர் மற்றும் தோல் பொருட்களுக்கு 5 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாகவும் உயர்த்தி உள்ளது.

சாமானிய மக்கள் பயன்படுத்தும் கிரைண்டர், அரிசி ஆலை இயந்திரங்களுக்கான வரி 5 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் கல்வி கற்க பயன்படுத்தப்படும் வரைபடங்கள், உலக வரைபடங்கள், சுவர் வரைபடங்கள், உலக உருண்டைகள், உட்பட அனைத்து வகையான விளக்கப்படங்களுக்கும் 12 சதவீதமும், பேனா, மை, ரப்பர், பென்சில் ஆகிய பொருட்களுக்கு 12 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாகஉயர்த்தப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் வரி விதிக்காமல் இருந்த பொருட்களுக்கும் வரி விதிக்கப்பட்டு உள்ளது. வங்கி காசோலைகளுக்கு 18 சதவீதமும் பாக்கெட்டில் விற்கப்படும் முன் லேபிளிடப்பட்ட பனீர், கோதுமை, மீன், பால், மோர், தயிர் மற்றும் அரிசி உள்ளிட்ட தானியங்களுக்கு 5%, அஞ்சல் சேவைகளுக்கு 5% வரி விதிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, ஹோட்டல்கள் ஒரு நாளைக்கு ₹1,000-க்கு கீழ் வாடகை உள்ள அறைக்கு 12 சதவீதமும் மேலும் ₹5,000-க்கு மேல் வாடகை உள்ள மருத்துவமனை அறைகளுக்கு 5% வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 65% சதவீதம் பேர் தனியார் மருத்துவமனையிலேயே மருத்துவம் பார்க்கும் நிலையில் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனைக்குச் சென்றாலும் அவர்களிடம் வரியைப் போட்டு கொல்வது மிக கொடூரமாகும்.

வரி உயர்த்தப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தும் பெரும்பான்மை உழைக்கும் மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களே. ஏற்கனவே, கொரானா நெருக்கடி, வேலையின்மை, வருவாய் இழப்பு, உணவுப்பொருட்கள் விலை உயர்வு போன்ற காரணங்களால் சாமானிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு ஒவ்வொரு நாளும் வாழ்க்கையே நடத்த முடியாமல் தள்ளாடும் நிலையில்,இந்த வரி உயர்வு மீண்டும் அவர்களது கழுத்தை இறுக்கும் சுருக்கு கயிறு.

உழைக்கும் மக்களின் மீதான வரிச்சுரண்டலைத் தீவிரப்படுத்தும் பாசிச மோடி அரசு, மக்களின் உழைப்பை சுரண்டி கொழுத்துப் போன கார்ப்பரேட் முதலாளிகள் மீது வரி விதிப்பதே இல்லை. கடந்த ஆண்டில் அதானி குழுமம் ஒரு நாளைக்கு 1002 கோடி வருமானம் ஈட்டியதுடன் 3.13 லட்சமாக கோடியாக இருந்த அவரது சொத்து மதிப்பு 6.72 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. அதேபோல் 2021ல் 99 ஆயிரம் கோடியாக இருந்த முகேஷ் அம்பானி சொத்து மதிப்பு 6 மடங்கு அதிகரித்து தற்போது 7.25 லட்சம் கோடி ஆக உயர்ந்துள்ளது. சென்ற ஆண்டு இந்தியாவில் உள்ள 142 பெரும் பணக்காரர்கள் சொத்து மதிப்பு 23.14 லட்சம் கோடியிலிருந்து 53.16 லட்சம் கோடியாக 100 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்துள்ளது. அதே வேளையில் 4.6 கோடி மக்கள் ஒருவேளை உணவு கூட இல்லாமல் தீவிர வறுமைக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.

சொத்து உயர்ந்துள்ள இந்தக் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு வரியை உயர்த்துவது பற்றி யோசிப்பது கூட இல்லை மோடி அரசு. ஆனால், மக்கள் மீது விதிக்கப்பட்ட ஜி.எஸ்.டி. வரியின் மூலம் ஜனவரி மாதத்தில் ரூ.1,40,986 கோடியும் பிப்ரவரி மாதத்தில் ரூ.1.33 லட்சம் கோடியும் மார்ச் மாதத்தில் ரூ.1.42 லட்சம் கோடியும் மக்களிடம் வரியாகப் பிடுங்கிக் கொள்கிறது. இந்த வரிக் கொள்ளை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. ஜி.எஸ்.டி வரிக் கொள்ளையை இது புதிய உச்சம் தொட்டுள்ளதாக பீற்றிக் கொள்கிறது ஒன்றிய நிதி அமைச்சகம்.

கார்ப்பரேட் முதலாளிகள் சொத்துக்கள் இரட்டிப்பாவதும் உழைக்கும் மக்களின் சிறு வருமானத்தையும் அதிகப்படியான வரி விதிப்பாக பிடுங்குவதும் ஏற்றத்தாழ்வை மேலும் அதிகரிக்கவே செய்யும். மக்களைப் பட்டினியில் தள்ளி கொல்லவே செய்யும். எனவே, அத்தியாவசிய பொருட்கள் மீது விதிக்கப்பட்ட ஜி.எஸ்.டி வரியை ஒன்றிய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று கோரிக்கை வைப்பதோடு நமது கடமை முடிந்து விடுவதில்லை. ஏனெனில், மக்களின் கோரிக்கைகளைக் காது கொடுத்தும் கேட்காத, மக்களின் துயரங்களைப் பற்றிக் கவலையே படாத பாசிசத்தையே தனது கொள்கையாகக் கொண்டு ஆட்சி நடத்தும் இந்த அரசை எதிர்த்து வீதியில் இறங்கி கலகம் செய்யாமல் நமக்கு வாழ்வே இல்லை.

தோழமையுடன்
வழக்கறிஞர் சி.ராஜு
பொதுச் செயலாளர், மக்கள் அதிகாரம்.
தமிழ்நாடு- புதுச்சேரி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here