சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை நீதிபதியான ஜி ஆர் சுவாமிநாதன் மீது மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளரான தோழர் வாஞ்சிநாதன் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கொடுத்த புகார் விசாரணைக்கு இன்னமும் வரவில்லை.

ஆனால் அவர் புகார் கொடுத்த விவகாரத்தை உச்சநீதிமன்றத்தில் உள்ள, ‘ கருப்பு ஆடுகள்’ வெளியிட்டுள்ளது என்பது மட்டுமின்றி புகார் கொடுத்த வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மீது நீதிமன்றத்தின் மாண்புகளை கேள்விக்குள்ளாக்கி விட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளார் திருவாளர் ஜி ஆர் சுவாமிநாதன். ஆனால் தன் மீது கொடுக்கப்பட்ட புகாருக்கும், வாஞ்சிநாதன் மீது தொடுக்கப்பட்டுள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடர்பில்லை என்று ‘ சனாதன தர்மத்தை’ நிலைநாட்டியுள்ளார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுவதும் வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு முதல் பல்வேறு இயக்கங்கள், புரட்சிகர, ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை திரும்ப பெற வேண்டும் என்று ஒரே குரலில் ஒலித்துள்ளனர்.

சட்டத்தை தனது கால் பாதத்தில் போட்டு மிதித்து கொண்டு, ‘ சனாதனவாதி’ என்று தன்னை பெருமையாக அறிவித்துக் கொண்டுள்ள சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை நீதிபதியான திருவாளர் ஜி ஆர் சுவாமிநாதன் இத்தகைய போராட்டங்களுக்கு அடிபணிந்து வழக்கினை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு அனுப்பியுள்ளார். இது போராட்டத்திற்கு கிடைத்துள்ள முதல் கட்ட வெற்றி என்ற போதிலும் இந்த சிக்கலின் மையப் பகுதியை தமிழக மக்களிடம் கொண்டு சேர்க்க தொடர்ச்சியாக போராட வேண்டி உள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் மதுரை கிளை நீதிபதியான திருவாளர் ஜி ஆர் சுவாமிநாதன் மீது முன் வைக்கப்பட்டுள்ள 14 அம்ச குற்றச்சாட்டுகள் மக்களிடம் கொண்டு சேர்க்கப்பட வேண்டும். மதச்சார்பின்மையின் பெயராலும், அரசியலமைப்பு சட்டத்தின் பெயராலும், ஒரு பக்க சார்பு இல்லாமல் நீதி வழங்குவாயாக கூறிக் கொள்கின்ற நீதிமன்ற மாண்புகளின் பெயராலும் தனது பதவியை ஏற்றுக் கொண்டுள்ள கொண்டுள்ள நீதிபதி ஒருவர் அதனை தூக்கிப் போட்டுவிட்டு ஒரு பக்க சார்பாகவும், சாதி, மதவெறியை ஊக்குவிக்கின்ற வகையிலும் கொடுக்கப்பட்டுள்ள தீர்ப்புகள் குறித்து முழுமையாக விசாரணை நடத்தி அவரை நீதிபதி பதவியிலிருந்து நீக்கி வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.

“அவருக்கு பிடித்தமான தொழிலான சனாதன தர்மத்தை, ஊர் ஊராக சென்று, பார்ப்பன தர்மத்தின் படி உஞ்சவர்த்தி பிச்சை எடுத்து தன்னை பராமரித்துக் கொண்டு கதாகாலட்சேபம் செய்வதற்கு அனுப்ப வேண்டும்” என்றும் பரிந்துரைக்கலாம்.

இவ்வளவு அம்பலப்பட்டு நாறிய பிறகும் சென்னை உயர்நீதி மன்றத்தின் நீதிபதிகள், வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தள்ளுபடி செய்யாமல் கள்ள மவுனம் சாதிப்பது ஏன் என்பதை புரிந்துக் கொள்ள இந்திய நீதிமன்றத்தின் யோக்கியதையை புரிந்துக் கொண்டால் தான் முடியும்.

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த தீபக் மிஸ்ரா கதை!

தற்போதைய உள்துறை அமைச்சரான அமித்ஷா மீது நீதிபதி லோயா எழுப்பிய குற்றச்சாட்டுகள் காரணமாக லோயா தீர்த்துக் கட்டப்பட்டார். அவ்வாறு அவர் தீர்த்துக் கட்டப்பட்ட வழக்கிலிருந்து அவரை விடுவிக்க முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா லஞ்சம் பெற்றது தொடர்பான வழக்கு 2018 ஆம் ஆண்டு அம்பலமாகி நாறியது.

படிக்க: 

உச்ச நீதிமன்றத்தில் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகள் ஒரே நீதிபதிக்கு ஒதுக்கப்படுவதன் மர்மம் என்ன?

ஜி.ஆர்.சுவாமிநாதன் நீதிபதி பதவிக்கு தகுதியானவர் தானா?

‘”தீபக் மிஸ்ரா தலைமையிலான ஒரு நீதிபதிகள் குழு, உச்ச நீதிமன்றத்தின் அதிகாரம் முழுவதையும் சட்டவிரோதமாகக் கைப்பற்றிக்கொண்டு, மோடி அரசுக்குத் துணை நிற்கிறது” என்பதே தற்போதைய தீர்மானத்தின் மையப்பொருள்.

உச்ச நீதிமன்றத்தின் நான்கு மூத்த நீதிபதிகள் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி, ‘‘ஜனநாயகத்துக்கு ஆபத்து” என்று பிரகடனம் செய்தபோது, அது இந்திய அரசியல் வரலாற்றில் இதுவரை காணாத நிகழ்வு என்று அதிர்ச்சியுடன் பேசப்பட்டது.” என புதிய ஜனநாயகம் மே 2018 ஆம் ஆண்டு இதழில் இந்தியாவின் நீதிமன்றம் தனது மாண்புகளை இழந்து நீதிக்கு எதிரான சக்தியாக மாறிவிட்டது என்பதை அம்பலப்படுத்தி எழுதியிருந்தோம்.

“உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி திருவாளர் தீபக் மிஸ்ரா வழக்கு குறித்து, “பிரசாத் மருத்துவ கல்லூரி வழக்கில் கல்லூரிக்கு சார்பாக தீர்ப்பு பெற லஞ்சம் கொடுக்கப்பட்டதாக செப்டம்பர்-19 2017 -இல் வழக்கு பதிவு செய்கிறது சி.பி.ஐ. அவ்வழக்கை விசாரித்த நீதிபதிகளில் ஒருவர் தான் தற்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா. இதனால் ஓய்வு பெற்ற நீதிபதி மேற்பார்வையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்று நவம்பர்-8 ஆம் தேதி பிரசாந்த் பூஷன் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்கிறார்.

ஜி ஆர் சுவாமிநாதன் பற்றி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் கொடுக்கப்பட்டுள்ள புகார் மீது விசாரணை நடத்து!
முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா

அச்சமயத்தில் அவசர வழக்குகளை விசாரிக்கும் அமர்வில் இருக்கிறார் நீதிபதி செல்லமேஸ்வர். இவ்வழக்கை விசாரித்த அவர் நவம்பர் 10-ஆம் தேதிக்கு தள்ளி வைக்கிறார்.

இந்நிலையில் நவம்பர் 8-ஆம் தேதி மதியமே பிரசாந்த் பூஷனுக்கு இவ்வழக்கை வேறு நீதிபதிகள் அமர்வுக்கு தலைமை நீதிபதி மாற்றிவிட்டார் என தகவல் வருகிறது.

இதனால் இந்திரா ஜெய்சிங் பெயரில் மறுநாளே நவம்பர் 9-ஆம் தேதி இதே காரணத்திற்காக மற்றொரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டு அவசர வழக்காக செல்லமேஸ்வர் அமர்வு முன் விசாரணைக்கு வருகிறது. இதை விசாரித்த செல்லமேஸ்வர் இப்பிரச்சினையின் தன்மை கருதி உச்சநீதிமன்றத்தின் மிக மூத்த நீதிபதிகள் ஐந்து பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என அறிவிக்கிறார்.

இவ்வாறு அவர் அறிவித்து சில மணி நேரங்களில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இவ்வழக்கை விசாரிக்க மூத்த நீதிபதிகள் இல்லாத அரசியல்சாசன அமர்வு அமைத்து விட்டார் என்றும், அதில் உடனடியாக இன்றே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் அவ்வமர்வை தானே தலைமை தாங்குவதாகவும் அறிவித்தார் தீபக் மிஸ்ரா. இவ்வழக்கில் உங்கள் மீதும் சந்தேகத்தின் நிழல் இருப்பதால் நீங்கள் விலக வேண்டும் என்று பிரசாந்த் பூஷன் கோரிய போது அதற்கு மறுத்து இவ்வாறு கூறியதற்காக நீதிமன்ற அவமதிப்பு ஏற்படும் என்று பிரசாந்த் பூஷனுக்கு அறிவுறுத்தப்பட்டது.” என்று அப்போதைய எமது இணையதளத்தில் எழுதி இருந்தோம்.

உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞரான பிரசாந்த் பூஷன் அப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக முன் வைத்திருந்த குற்றச்சாட்டுகள் முறையாக விசாரிக்கப்படவில்லை.

நீதிமன்றத்தின் மாண்புகளை கேள்விக்குள்ளாக்கும் வகையில் நடந்து கொண்டார் என்று அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.. ஊழல் முறைகேடுகள், சாதிவெறி, மதவெறி, லஞ்சம், பாலியல் வன்முறைகள், கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக தீர்ப்பளிப்பது என்று அனைத்து விதமான கிரிமினல் குற்ற செயல்களிலும் ஈடுபடும் நீதிபதிகள் மீது கேள்வியே எழுப்பக் கூடாது என்பதுதான் இந்திய ஜனநாயகம் பெரும்பான்மை மக்களுக்கு வழங்கியுள்ள உரிமை.

இந்திய ஜனநாயகத்திற்கு ஆபத்து என்று உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதிகள் ஐந்து பேரில் நான்கு பேர் முன்வைத்து ஏழாண்டுகள் ஆகிறது.. அந்த ஆபத்து என்னவென்றால் கீழமை நீதிமன்றங்கள் முதல் உயர் நீதிமன்றம், உச்சநீதிமன்றம் வரை உள்ள நீதிபதிகள் ஆர்எஸ்எஸ்- பாஜகவின் ஆதரவாளர்களாகவும், நாக்பூர் சித்தாந்தவாதிகளாகவும் உள்ளனர் என்பது தான் இன்றைய நிலைமையாக மாறியுள்ளது.

மதச்சார்பின்மையின் பெயரால் இயங்குகின்ற அரசியல் அமைப்புச் சட்டத்தை பாதுகாக்கின்ற வகையில் செயல்படுகின்ற நீதிபதிகள் அரிதிலும் அரிதாக மாறிவிட்டனர் என்பது மட்டுமின்றி அரசியலமைப்புச் சட்டத்தை காலில் போட்டு மிதித்து, ‘ நர்த்தனம் ஆடிக்கொண்டே’ பார்ப்பன மேலாதிக்கத்தையும், சனாதன மரபுகளையும் உயர்த்தி பிடித்து தீர்ப்புகளை வழங்கி பெருமை கொள்கின்றனர்.

இந்த வகையில் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் நீதிபதியாக உள்ள திருவாளர் ஜி.ஆர்.சுவாமிநாதன் மீது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் கொடுக்கப்பட்டுள்ள புகார் முறையாக விசாரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களிடம் கொண்டு சேர்க்கப்பட வேண்டும்.

நீதிபதிகள் அனைவரும் எந்த விசாரணை முறைகளுக்கும் அப்பாற்பட்ட ‘ அப்பாட்டக்கர்கள்’ என்ற பழம் பஞ்சாங்க கருத்துகள் அனைத்தும் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும்.

அதே சமயத்தில் நீதித்துறையின் உண்மையான முகத்தை பொதுமக்களுக்கு அவ்வப்போது வெளி கொண்டுவரும் நீதிபதிகளான, வீட்டில் பண மூட்டை சிக்கியதை பற்றி கவலைப்படாமல், அவரை நீதிபதி பதவியில் இருந்தே நீக்கிய பிறகும், அதை எதிர்த்து வழக்கு தொடுத்துள்ள யஷ்வந்த் வர்மா முதல் ஜி.ஆர்.சுவாமிநாதன் வரையிலான நீதிபதிகளுக்கு நீதித்துறையின் முகத்திரையை கிழித்தெறிய உதவியதற்காக பாட்டாளி வர்க்கம் நன்றி செலுத்த வேண்டும்.

  • பார்த்தசாரதி.

நன்றி: புதிய ஜனநாயகம் தினசரி

1 COMMENT

  1. நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் தோழர் வாஞ்சிநாதன் மீதான அவமதிப்பு வழக்கை உயர் நீதிமன்றத்திற்கு அனுப்பி கிடப்பில் போடப்பட்டுள்ளது இது நோக்கம் என்ன என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை ஆனால் நீதித்துறவனுடைய கடந்த கால நீதிபதிகளினுடைய ஊழல்கள் குற்றச்சாட்டுகள் எதுவாயிருந்தாலும் நீதிபதி மீது புகார் கொடுத்தால் அதற்கு எதிர்வினையாக பழிவாங்கும் நோக்கத்தோடு அவமதிப்பு வழக்கு தொடுத்து நீதிமன்ற மாண்பையும் மக்களுடைய நம்பிக்கையும் சீர் குலைக்கும் விதமாக நீதிபதிகள் செயல்படுகிறார்கள் என்பதை இந்த கற்றலின் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here