அமிர்தலிங்கம்

மன்னார்குடிக்கருகில் உள்ள சேரங்குளம் என்ற கிராமத்தில் விவசாயிகள் குடும்பத்தில் பிறந்தார். மன்னார்குடியில் பத்தாவது வரையில் படித்துவிட்டு மத்திய வர்க்கப் பழக்கப்படி வியாபாரத்தில் இறங்கினார். பெரிய நெல் வியாபாரம் நடத்தினார். எல்லா மிராசுதார்களும், கிராமங்களில் பல குடியானவர்களும் வியாபாரத்தின் மூலம் நல்ல பரிச்சயம் இவருக்கு. அவருடைய நெருங்கிய உறவினரான மணலி கந்தசாமியின் மூலம் அவருக்கு முதல் முதல் அரசியல் உணர்ச்சி ஏற்பட்டது. அதுவும் குறிப்பாக கம்யூனிஸ்டுக் கட்சியின் மேல் கவர்ச்சி ஏற்பட்டது. கட்சி பத்திரிகைகளும் புத்தகங்களும் படிக்க ஆரம்பித்தார்.

கட்சியின் சட்டவிரோதமான காலத்தில் நமது கட்சியின் முக்கியமான தோழர் ஒருவருக்குத் தனது மண்டியில் மறைவிடம் தந்தார். அந்தத் தோழரிடம் சில நாள் பழகியதன் காரணமாக அவருக்கு நமது கட்சியின்மேல் நம்பிக்கை அதிகம் வளர்ந்தது. பிறகு கொஞ்சம் கொஞ்சமாக வியாபாரத்தோடு கட்சி  வேலைகளும் செய்ய ஆரம்பித்தார். தென்பரை விவசாயிகள்  கஷ்டத்தைப் பார்த்து அந்த இயக்கத்தில் ஆரம்ப முதல் பங்கெடுத்துக் கொண்டார். இவரிடம் விவசாயிகளுக்கு நல்ல நம்பிக்கை ஏற்பட ஆரம்பித்தது. இவரை விவசாயிகள் தேடிக்கொண்டு வர ஆரம்பித்தார்கள். சங்க வேலை அதிகமானவுடன் வியாபாரத்தில் நஷ்டமேற்பட்டு, அதை நிறுத்திவிட்டு முழுநேரமும் கட்சி வேலை செய்ய முன்வந்தார்.விவசாயிகள் பிரச்சினையில் நன்கு தேர்ச்சியுடன் காரியங்கள் நடத்துவார். மிராசுதார்களுக்கும் அதிகாரிகளுக்கும் இவரிடம் வெகு கோபம். எல்லாவற்றிற்கும் காரணம் அமிர்தலிங்கம்தான் என்று அதிகாரிகள் குற்றம் சாட்டுவார்கள். எனினும் நேரடியாக நடவடிக்கை எடுக்க முடியவில்லை. தினம் குடியானவர்களை அழைத்துக்கொண்டுபோய் அதிகாரிகளை விடமாட்டார். கடைசியாக அதிகாரி வர்க்கம் இவரை ஜில்லாவுக்குள்ளேயே இருக்கக்கூடாதென்று வெளியேற்றிவிட்டது. இவரைத் தெரியாத விவசாயி ஜில்லாவில் கிடையாது. தஞ்சை ஜில்லா கிஸான் சபைத் தலைவராயும் மாகாண நிர்வாகக் கமிட்டி அங்கத்தினராயும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

1945இல் தஞ்சை மாவட்டத்தில் கிராமங்களில் செங்கொடி இயக்கம் புயலாகப் பரவியது. ஏழை எளிய விவசாயிகளும் விவசாயத் தொழிலாளர்களும் கொத்தடிமைத்தனத்தை எதிர்த்து களத்தில் இறங்கினார்கள். தஞ்சை மிராசுதார்களின் வேண்டுகோளுக்கிணங்கி, பிரிட்டிஷ் ஆட்சி, தோழர்கள் மணலி கந்தசாமியையும் அமிர்தலிங்கத்தையும் தஞ்சை மாவட்டத்திலிருந்து வெளியேற்றியது: திருச்சி பொன்மலையை விட்டு வெளியேறக்கூடாது என்று தடை விதித்தது. இத்தகைய நாடுகடத்தும் தண்டனையை எதிர்த்து பிரிட்டன் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் ஹாரிபாலிட், பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் கிளப்பினார்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மீது தொடுத்துள்ள தண்டனையை – பிரிட்டனிலேயே எதிர்த்தது, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு பெருமையைக் கொடுத்தது. இத்தண்டனையை பிரிட்டிஷ் ஆட்சியும் தளர்த்தியது.

தோழர் அமிர்தலிங்கம் அவர்கள் 1998 மே 11இல் காலமானார். அவர் இறுதிவரை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் உறப்பினராக இருந்தார். அவருக்கு ஆறு மகன்களும், மூன்று மகள்களும் உண்டு. அனைவரையும் நன்கு படிக்கவைத்தார்; அ. பிரகாசம், பி.ஏ.. அ. பரத்துவாஜ், பி.ஏ. அ. கேசவன், பி.இ., அ. ரவீந்திரரின் பி.இ., அ. மார்க்ஸ் (வழக்கறிஞர்). கடைசி மகன் தோழர் அ. மார்க்ஸ் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை- திருவாரூர் மாவட்டச் செயற்குழு உறுப்பினராக இருக்கிறார்.

கம்யூனிஸ்ட் கட்சியும் விவசாயிகளும்! – தொடர் 4 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here