இன்று…

சி.ராமச்சந்திரன்

ராமனாதபுரம் ஜில்லாவில் சிவகாசிக்குப் பக்கத்திலுள்ள ஆலமரத்துப்பட்டி என்ற சிறு கிராமத்தில் பிறந்தார். அவரது குடும்பம் சுமார் 2000 ரூபாய் பெறுமானமுள்ள சிறிய விவசாயக் குடும்பம்; தனது ஆறாவது வயதிலேயே தகப்பனை இழந்தார். தமிழ் நன்றாக எழுதப்படிக்கத் தெரியும். சிறு வயதிலேயே கிடைக்கும் பத்திரிகைகளைப் படிப்பதில் பிரியம். சைமன் கமிஷன் இந்தியாவுக்கு வந்ததும், அதை பகிஷ்கரித்து நடந்த ஆர்ப்பாட்டங்களும், அதை கவர்ன்மெண்டு அடக்க கையாண்ட அடக்குமுறைகளும் பத்திரிகையில் வாசித்தார். அதிலிருந்து அவருக்கு தேசபக்தி வலுவாகப் பிடித்துக்கொண்டு விட்டது. தேசிய இயக்க வேலைகளில் குறிப்பாகக் கதர் இயக்கத்தில் தீவிரப் பங்கெடுத்துக்கொண்டு அந்தப் பகுதியிலுள்ள கிராமங்களில் பிரசாரம் செய்து 700 ராட்டைகள் சுழலச் செய்தார். 1932-ம் வருடம் சட்டமறுப்பு இயக்கம் ஆரம்பமானவுடன் இவருக்குத் துடிதுடிப்பு ஏற்பட்டது. எப்படியும் போராட்டத்தில் கலந்துகொள்ள வேண்டுமென்று முடிவு செய்து வீட்டுக்குத் தெரியாமல் வெளியேறினார். மதுரையில் போராட்டத்தில் கலந்துகொண்டு கைதியாகி 6 மாதம் சிறைத் தண்டனை அடைந்தார். சிறையிலிருக்கும் போது அங்கே தண்டனை அனுபவித்துக்கொண்டிருந்த வங்காள பயங்கர இயக்கக் கைதிகளிடம் பழகினார். அவர்களது தேசபக்தியும், தைரியமும், தியாகமும் இவரைக் கவர்ந்தது. தண்டனை முடிந்ததும் வெளியே வந்தார். புதிய ரஷ்யாவைப் பற்றித் தெரிந்துகொள்ள ஆசைப்பட்டார். அதிகப் புத்தகங்கள் கிடைக்காததால் ரஷ்யாவைப் பற்றி விரும்பியதைப் போல் அதிகம் தெரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால் அந்த பிரேமை மாத்திரம் வளர்ந்து வந்தது.

1936-ம் வருஷத்தில் சேரமாதேவி குருகுலத்தில் சேர்ந்தார். ஜனங்களின் தொடர்பில்லாக் குருகுல வாழ்க்கை அவருக்குப் பிடிக்காததால் ஒரே மாதத்தில் அதைவிட்டு வெளியேறினார். பிறகு அவர் கிராமத்திலேயே சர்க்கார் சங்க மேனேஜராக கதர் தொண்டு செய்தார்.

இவருடைய மகன்களுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த பூரண் சந்திர ஜோஷியின் பெயர் வரக்கூடிய முறையில் “சந்திரன்” என்று முடியும் பெயர்களை சூட்டியிருக்கிறார். அனைவரும் கட்சியின் ஆதரவாளராக இருக்கிறார்கள்.

1942 ஆகஸ்டு குழப்பம் வந்தது. இவர் கைது செய்யப்பட்டார். கைது செய்யும்போது தன்னிடமிருந்த சில சட்டவிரோதமான பிரசுரங்களை மென்று தின்றதற்காக நன்றாகப் போலீஸாரால் உதைக்கப்பட்டார். வாயெல்லாம் காயம். பிறகு 1/2 வருடம் தண்டிக்கப்பட்டார். சிறையிலிருக்கும் போது நமது தோழர்களின் பரிச்சயம் ஏற்பட்டது. விவாதம் நடத்தியும் யோசனை செய்தும் கடைசியாக கம்யூனிஸ்டுக் கட்சியின் அரசியல் பாதைதான் சரியான சுதந்திரப் பாதை என்ற முடிவுக்கு வந்தார்.

சிறையிலிருந்து விடுதலை ஆனதும் கிராமங்களுக்குச் சென்று விவசாய சங்கங்களை அமைத்து வேலை செய்ய ஆரம்பித்தார். தனிநபர் சத்யாக்கிரகத்தில் சிறை சென்ற அவரது தமக்கையும் தம்பியுடன் விவசாய சங்க வேலை செய்ய ஆரம்பித்துப் பிறகு கட்சியிலும் அங்கத்தினரானார். அவரது மனைவியும் கணவனுடன் எல்லா நடவடிக்கைகளிலும் ஒத்துழைத்துக் கட்சியில் சேர்ந்தார். அவரது வயதான தாய் கட்சியின் பேரில் அபார விசுவாசம் உள்ளவர், நமது கட்சி அனுதாபி. ஒரு சாதாரண விவசாயியின் குடும்பம் பூராவுமே சிவப்புக் குடும்பமாகிவிட்டது. சென்ற இரண்டு வருடகாலமாக ஜில்லா விவசாய சங்கக் காரியதரிசியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு ராமனாதபுரம் ஜில்லாவையே ஒரு கிஸான் கோட்டையாக கட்டி வருகிறார் என்றால் மிகையாகாது.

தொடரும்…

முந்தைய பதிவு.

கம்யூனிஸ்ட் கட்சியும் விவசாயிகளும் – களப்பால் குப்பு!

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here