நேற்றைய தொடர்ச்சி:-

“சமூக விஞ்ஞானமான மார்க்சிய-லெனினியம் என்றுமே துவண்டு போகாது”- என்ற தலைப்பிலான பதிவு “மக்கள் அதிகாரம்” இணைய தளத் “தினம் ஒரு செய்தி”-யாக நேற்று வெளியிடப்பட்டிருந்தது.

ஆசான் லெனின் தமது 54-வது வயதில் மறைவுற்ற போது, இலக்கிய எழுத்தாளர் மக்சீம் கோர்க்கி எழுதிய “வி.இ. லெனின்: சொற்சித்திரம்” ” என்ற அற்புதமான நூலிலிருந்து ஒரு பகுதியை நேற்று வெளியிட்டிருந்தோம்.

அந்நூலின் முக்கியத்துவம் குறித்து Comments பகுதியில் தோழர் புதியவன் என்பவர் அந்நூலின் முக்கியத்துவம் குறித்து நாசூக்காகக் கருத்துப் பதிவு ஒன்று செய்திருந்தார். அதைப்போலவே நேற்று நாம் அறிவித்திருந்தபடி, அந்த நூலிலிருந்து மேலும் சில வரிகளை, வாசகர்கள் மென்மேலும் உணர்வு பெறுவதற்காகவும், அந்த நூலை தேடிப் பிடித்து முழுமையும் படிப்பதற்காகவும், கீழ்க்கண்டவாறு பதிவிடப்படுவதில் – ஆசான் லெனின் மறைவெய்திய கடும் சூழலை உணர்ந்திருந்தும் கூட- மகிழ்ச்சி கொள்கிறோம்.

எழில்மாறன்.

***

(வி.இ. லெனின்) விளதீமிர் லெனின் காலமாகிவிட்டார்.

(நேற்றைய தொடர்ச்சி)

“மால்த்ஸெய்த்.”

இது எனக்கு விளங்காத சொல், ஆனால் “மால்” என்னும் பிரெஞ்சுச் சொல் கெட்ட என்ற பொருள் கொண்டது என்பதை நான் அறிந்திருந்தேன். “த்ஸெய்த்” என்ற ஜெர்மன் வார்த்தை நேரம் என்று பொருள்படும். ஆகவே, கெட்ட காலம் என்பது கூட்டுச் சொல்லின் அர்த்தம்.

காவுத்ஸ்கி “கற்பனை ஆர்வம் மிக்கவர் ” என்று ஸீங்கர் இரண்டு தரம் சொன்னார். கழுகு மூக்கரான பெபெல் ஓரளவு சுய திருப்தி உள்ளவராக எனக்குத் தென்பட்டார். நாங்கள் ரைன் பிரதேச மதுவும் பீரும் பருகினோம். மது புளிப்பும் கதகதப்பும் கொண்டிருந்தது. பீர் நன்றாக இருந்தது. ருஷ்யப் புரட்சியையும் சமூக-ஜனநாயகக் கட்சியையும் பற்றியும் அவர்கள் சற்று அருவருப்புடனும் பெரிய மனிதப் பாங்குடனும் பேசினார்கள். தங்கள், ஜெர்மானியக் கட்சியைப் பற்றியோ, மிக நன்றாகப் பேசினார்கள். மொத்தத்தில் எல்லாவற்றிலும் சுய திருப்தி ததும்பியது. தலைவர்களின் பெருமதிப்புக்கு உரிய சதைகள் தங்களை அழுத்திக் கொண்டிருந்தது குறித்து நாற்காலிகள் கூட மனநிறைவு பெற்றிப்பவை போன்ற உணர்வு ஏற்பட்டது.

ஜெர்மானியக் கட்சியிடம் எனக்குச் சங்கடமான வேலை இருந்தது. அதன் பிரபல உறுப்பினரும் பின்பு பெரிய பெயர் பெற்ற வருமான பார்வுஸ் “அடித்தளத்தில்” என்ற எனது நாடகத்துக்கு நாடக மன்றங்களில் இருந்து கிடைக்கும் மதிப்பூதியத்தைத் திரட்டுவதற்கான சான்றுக் கடிதத்தை “ஸ்னானிய” பதிப்பகத்தில் இருந்து பெற்று இருந்தார். 1902 ஆம் ஆண்டில் அவர் மறைமுகமாக ‘ஸெவஸ்தோப்பல்’ வந்திருந்த போது அவர் ரெயில் நிலையத்தில் இந்தச் சான்றுக் கடிதம் அவருக்கு வழங்கப்பட்டது. அவரால் திரட்டப்படும் பணம் பின்வருமாறு பங்கிடப்பட்டது: மொத்தப் பணத்தில் 20% அவருக்குச் சேரும். மீதியில் நான்கில் ஒரு பகுதி எனக்கும், நான்கில் மூன்று பங்கு சமூக – ஜனநாயகக் கட்சி நிதிக்கும் அளிக்கப்படும். பார்வுஸ் இந்த நிபந்தனையை அறிந்திருந்தார்.

அது அவருக்கு வியப்புக்கூட அளித்தது. நான்காண்டுகளில் நாடகம் ஜெர்மனியின் எல்லா மன்றங்களிலும் அரங்கேறியது. பெர்லின் நகரில் மட்டும் அது 500 தடவைகளுக்கும் மேல் அரங்கேற்றப்பட்டது. பார்வுஸ் இடம் ஒரு லட்சம் மார்க்குகள் சேர்ந்திருந்தன என்று தெரியவந்தது. ஆனால் பணத்துக்குப் பதில் அவர் “ஸ்பானிய” பதிப்பகத்துக்கு க.ப.பியத்னீத்ஸ்கியின் பெயருக்கு ஒரு கடிதம் அனுப்பினார். ஒரு மங்கையுடன் இத்தாலியில் சுற்றுப்பயணம் செய்கையில் இந்தப் பணத்தை எல்லாம் தாம் செலவழித்து விட்டதாக அதில் ‘பெருந்தன்மையுடன்’ தெரிவித்திருந்தார். கட்டாயம் மிக இனிய இந்தப் பயணம் தனிப்பட என்னைக் கால்வாசி தான் பதித்தது ஆகையால் எஞ்சிய முக்கால்வாசிக்காக ஜெர்மானியக் கட்சி மத்திய கமிட்டிக்கு எழுத எனக்கு உரிமை உண்டு என்று நினைத்தேன். இ.ப.லதீழ்னிக்கவ் மூலம் எழுதினேன். மத்தியக் கமிட்டி பார்வுஸின் பயணம் குறித்து அசட்டை காட்டியது. கட்சியின் சில பதவிகளில் இருந்து பார்வுஸ் அகற்றப்பட்டதாகப் பின்னர் நான் கேள்விப்பட்டேன். உள்ளபடி சொன்னால், அவருடைய காதுகள் பிய்க்கப்பட்டு இருந்தால் எனக்கு அதிக மன நிறைவு ஏற்பட்டிருக்கும். இன்னும் சிறிது காலத்துக்குப் பிறகு பாரிசில் மிக அழகான மங்கையை அல்லது மாதை நண்பர்கள் எனக்குக் காட்டி, பார்வுஸ் அவளோடுதான் பயணம் செய்தார் என்று தெரிவித்தார்கள்.

“அருமையானவளே, எனக்கு அருமை உள்ள வளே” என்று எண்ணிக் கொண்டேன்.

இலக்கியவாதிகளையும் கலைஞர்களையும் கலைப் புரவலர்களையும் பிறரையும் பெர்லினில் நான் கண்டேன். சுயதிருப்தி மற்றும் தற்பெருமையின் அளவுகளில் தான் இவர்கள் ஒருவருக்கு ஒருவர் வேறுபட்டார்கள்.

நியூயார்க் மேயராகவோ கவர்னராகவோ இருக்க விரும்பிய மாரிஸ் ஹில்குவிட்டையும் தனிமையிலும் களைப்புடனும் எல்லாவற்றின் மேலும் எல்லோர் மீதும் எரிந்து விழுந்து கொண்டிருந்த முதியவர் டெப்சையும்– அவர் அப்போதுதான் சிறையில் இருந்து வெளிவந்திருந்தார்—— அமெரிக்காவில் மிக அடிக்கடி கண்டேன். மிகப் பலவற்றையும் மிகப் பலரையும் பார்த்தேன். ஆனால் ருஷ்யப் புரட்சியின் முழு ஆழத்தையும் புரிந்து கொண்ட ஒரு மனிதரைக் கூட காணவில்லை. அது “ஐரோப்பிய வாழ்க்கையின் தனிப்பட்ட நிகழ்ச்சி” என்றும், “சோசலிசத்தின் பால் அனுதாபம் கொண்டிருந்த” ஒரு “ஹண்ட்சம் லேடியின்” சொற்படி “எப்போதும் காலராவோ புரட்சியோ நடந்து கொண்டிருக்கும்” நாட்டில் வழக்கமான நிகழ்ச்சி என்றும் அமெரிக்கர்கள் கருதுவதை எங்கும் உணர்ந்தேன்.

“போல்ஷிவிக்குகளின்” நிதிக்குப் பணம் திரட்டுவதற்காக அமெரிக்கா செல்லும் யோசனையைச் சொன்னவர் ல.ப.கிராஸின் ஆவார். செயலர், சொற்பொழிவு களுக்கு ஏற்பாடு செய்பவர் என்ற வகையில் வ.வ.வரோஸ்கி என்னோடு வர வேண்டி இருந்தது. அவர் ஆங்கில மொழியை நன்கு அறிந்திருந்தார். ஆனால் கட்சி அவருக்கு வேறு வேலை கொடுத்து விட்டபடியால் மத்திய கமிட்டி (போ) போராட்டக் குழு உறுப்பினர் ந.யெ.புரேனின் என்னுடன் வந்தார். அவர் “மொழி அற்றவராக” இருந்தார், பயணத்தின் போதும் அமெரிக்க சேர்ந்த பின்பும் ஆங்கிலம் கற்றுக் கொள்ளத் தொடங்கினார். நான் எந்த நோக்கத்தோடு போகிறேன் என்பதைத் தெரிந்து கொண்ட சோஷலிஸ்டுப் புரட்சிக் கட்சியினர் இளைஞர்கள் போன்ற துடியுடன் பயணத்தில் அக்கறை எடுத்துக் கொண்டார்கள். நான் பில்லாந்தில் இருந்த போதே சைக்கோவ்ஸ்கியும் ழித்லோவாஸ்கியும் என்னிடம் வந்து, பணத்தை போல்ஷ்விக்குகளுக்காக இன்றிப் “பொதுவாகப் புரட்சியின் பொருட்டுத்” திரட்டும்படி யோசனை கூறினார்கள். “பொதுவாகப் புரட்சியும் பொருட்டுப்” பணம் திரட்ட நான் மறுத்தேன். அப்போது அவர்கள் “பிரெஷ்கோவ்ஸ்கயாவை (1844-1934)”(பிற்காலத்தில் இவர் சோவியத் ஆட்சியின் வன்மமுள்ள எதிரியாக விளங்கினார்) அங்கே அனுப்பினார்கள். விளைவாக அமெரிக்கர்களுக்கு முன் தோன்றினார்கள் இருவர் ஒருவரை ஒருவர் சாராமலும் சந்திக்காமலும், இரண்டு வெவ்வேறு புரட்சிகளுக் காகப் போல அவர்கள் பணம் திரட்டத் தொடங்கினார்கள். இவர்களில் யார் மேலானவர், அதிக நம்பகமானவர் என்று புரிந்து கொள்வதற்கு நேரமோ விருப்பமோ அமெரிக்கர்களிடம் இல்லை. “பிரேஷ்கோ”- வை அவர்கள் முன்பே அறிந்திருந்தார்கள் போலும். அமெரிக்க நண்பர்கள் அவளுக்கு நல்ல விளம்பரம் அளித்தார்கள். எனக்கோ ஜாரின் தூதரகம் அவதூறுக்கு வகை செய்திருந்தது. அமெரிக்கத் தோழர்களும் ருஷ்யப் புரட்சியை “வெற்றி வாய்ப்பில்லாத தனிப்பட்ட விவாகாரம்” என்று கருதினார்கள். பொதுக்கூட்டங்களில் நான் திரட்டிய பணத்தை ஓரளவு “மிதவாத நோக்கில்” மதிப்பிட்டார்கள். மொத்தத்தில் நான் மிகக் குறைந்த, ‘பதினாயிரம் டாலர்களுக்கும் குறைவான தொகையை திரட்டினேன். செய்தித்தாள்களில் “வேலை செய்து சம்பாதிக்க” முடிவு செய்தேன். ஆனால் அமெரிக்காவிலும் ஒரு பார்வுஸ் எதிர்ப்பட்டார். இவ்வாறாகப் பயணம் பயனளிக்கவில்லை. எனினும் “தாய்” என்ற நாவலை நான் அங்கே எழுதினேன். அந்த நூலில் உள்ள சில “தவறுகளுக்கும்” குறைகளுக்கும் காரணம் இதுவே.

மக்சீம் கோர்க்கி.

குறிப்பு:- படிக்கப் படிக்கத் திகட்டாத இப்புத்தகத்தை அனைவரும் படிக்கத் தவறாதீர்கள்.‌ “கீழைக்காற்று” வெளியீட்டகத்தில் இந்நூல் கிடைக்க வாய்ப்புண்டு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here