கத்சிங், தூக்கிலிடுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு வரை உலகப் பாட்டாளி வர்க்க ஆசான் லெனின் எழுதிய ‘அரசும் புரட்சியும்’ என்ற நூலைத் தீவிரமாக வாசித்துக் கொண்டிருந்தார். லெனினைத் தனது உயிரினும் மேலாக நேசித்த அவர், ஒடுக்கப்படும் நாடுகளின் தலைவராக லெனினைக் கருதினார்.

தூக்குமேடைக்குச் செல்லும் போது கூட, “ஏகாதிபத்தியத்துக்கு எதிரான…. இந்தப்போர் எங்களோடு தொடங்கவுமில்லை, எங்கள் வாழ்நாளோடு முடியப்போவதுமில்லை” என்ற தீர்க்கமான நம்பிக்கையோடுதான் அவர் சென்றார்.

1931 மார்ச் 23 அன்று பகத்சிங், ராஜகுரு மற்றும் சுகதேவ் ஆகிய மூவரும் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தால் தூக்கிலிடப்பட்டனர். இவர்கள் தூக்குமேடை ஏறியதற்கு முதன்மையான காரணம், 1929 ஏப்ரல் 8 அன்று இந்தியப் பாராளுமன்றத்தில் அவர்கள் நடத்திய குண்டுவீச்சு மற்றும் அவர்களது ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டமாகும்.

அவர்கள் குண்டு வீசியது யாரையும் கொல்வதற்காக அல்ல; மாறாக, இந்திய மக்களின் அடிமைத்தனத்தை உலகுக்குக் காட்டவும், “கேளாத செவிகளைக் கேட்கச் செய்யவும்” மட்டுமே.

அந்தப் பாராளுமன்றம் இந்திய மக்களின் உழைப்பைச் சுரண்டி, அடக்குமுறைச் சட்டங்களை இயற்றும் ஒரு “கேலிக்கூத்து” என்று அவர்கள் அம்பலப்படுத்தினர். தனிநபர்களைக் கொல்வதல்ல நோக்கம். வெடிகுண்டுகள் யாருடைய உயிருக்கும் தீங்கு விளைவிக்காத வகையில் காலி இடங்களிலேயே வீசப்பட்டன. “தனிநபர்களை அழிப்பதன் மூலம் கருத்துக்களைக் கொல்ல முடியாது” என்பதை ஏகாதிபத்தியவாதிகளுக்கு உணர்த்துவதற்காகவே அவர்கள் தாங்களாகவே முன்வந்து கைதாகினர்.

பகத்சிங்கைப் பொறுத்தவரை, புரட்சி என்பது வெறும் ஆயுதப் போராட்டம் மட்டுமல்ல. “மனிதனை மனிதன் சுரண்டும் சுரண்டல் இல்லாத சமுதாயம்” அமைப்பதே புரட்சியின் உண்மையான நோக்கம் என்று அவர் விளக்கினார்.

உழைக்கும் வர்க்கத்தைச் சுரண்டி, முதலாளிகள் ஊதாரித்தனமாகச் செலவு செய்யும் அநீதியான சமூக அமைப்பு மாற்றப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

ஏகாதிபத்தியம் என்பது தேசங்கள் தேசங்களைச் சுரண்டும் கொடுமை; இதை ஒழிக்காமல் உலகளாவிய அமைதி ஏற்படாது என்பது அவரது கருத்து. அதனை தற்போதைய ஈரான் போரின் மூலம் உணர்ந்திருப்போம். சமூக மாற்றத்திற்குப் பாட்டாளி வர்க்கத்தின் தலைமை அவசியமானது என்று அவர் மார்க்சிய அடிப்படையில் வாதிட்டார்.

இன்றைய இளைஞர்களும் நுகர்வு கலாச்சாரச் சீரழிவும்

அன்று பகத்சிங் தனது 23-வது வயதிலேயே நாட்டு விடுதலைக்காகத் தன் உயிரைத் தியாகம் செய்யத் துணிந்தார். ஆனால் இன்று, 20 வயது இளைஞர்கள் பலர் முதலாளித்துவ நுகர்வு கலாச்சாரத்திலும், கவர்ச்சி அரசியலிலும் சிக்கித் தவிக்கின்றனர்.

கார்ப்பரேட் முதலாளிகள் நாட்டின் இயற்கை வளங்களைச் சூறையாடுவதையும், வேலையில்லாத் திண்டாட்டம் எரிமலையாக வெடிக்கக் காத்திருப்பதையும் இளைஞர்கள் உணரவிடாமல் தடுக்கப்படுகிறார்கள்.

இன்றைய இளைஞர்கள் ஆபாசச் சீரழிவுகள், போதைப் பழக்கங்கள் மற்றும் நுகர்வுவெறி மோகத்தில் சிக்க வைக்கப்படுகிறார்கள். சினிமா மாயைகள் அவர்களை நிஜ வாழ்க்கையின் பிரச்சனைகளிலிருந்து கற்பனை உலகத்திற்கு மடைமாற்றுகின்றன. சினிமாவில் டூப் போட்டு சாகசம் காட்டிய நடிகன் ஒரே இரவில் நாட்டையும் மாற்றிவிடுவான் என கனவு காண்கிறார்கள். சதி வலையில் வீழ்கிறார்கள்.

பகத்சிங் வாழ்ந்த காலத்தை விட இன்று நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. ஒருபுறம் ஏகாதிபத்திய சக்திகளுக்கு நாட்டை இரையாக்கும் கார்ப்பரேட் சுரண்டல், மறுபுறம் மதவெறி அரசியல் என இளைஞர் சமுதாயம் தத்தளிக்கிறது.

நாட்டின் விடுதலைக்காகப் போராடிய மாவீரன் பகத்சிங் நேசித்த கம்யூனிசத் தத்துவத்தை “அந்நியத் தத்துவம்” என்று கூறி ஆர்.எஸ்.எஸ் மற்றும் பி.ஜே.பி கும்பல் அழிக்கப் பார்க்கிறது.

படிக்க:

 ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளி பகத்சிங் நினைவு கருத்தரங்கம் | மார்ச்-29

 பகத்சிங் பேசுகிறார்!

இன்றைய ஆட்சியாளர்களின் சித்தாந்தம் ஏகாதிபத்தியங்களின் “எடுபிடி சித்தாந்தம்” என்றும், அது உழைக்கும் மக்களுக்கு எதிரானது என்றும் பகத்சிங்கின் கருத்துக்களின் அடிப்படையில் நாம் அம்பலப்படுத்துவோம்.

பகத்சிங் இன்று இருந்திருந்தால், உழைக்கும் மக்களின் தத்துவமான கம்யூனிசத்தை ஏந்தி, இந்த மதவெறி மற்றும் கார்ப்பரேட் சுரண்டலுக்கு எதிராக வீதியில் இறங்கிப் போராடியிருப்பார். “புரட்சி என்பது மனிதகுலத்தின் பிரிக்க முடியாத உரிமை, சுதந்திரம் என்பது பிறப்புரிமை” என்ற அவரது முழக்கம் இன்றும் இளைஞர்களுக்குத் தேவையானது.

இன்றைய இளைஞர்கள் சுயநலமான வாழ்வைத் துறந்து, பகத்சிங் காட்டிய வழியில் அறிவியல் பூர்வமான புரட்சிகர அமைப்புகளில் இணைந்து, ஏகாதிபத்தியத்திற்கும் பாசிசத்திற்கும் எதிராக அணிதிரள வேண்டும். பகத்சிங் விதைத்த புரட்சிக் கனவை நனவாக்குவதே அவருக்கு நாம் செய்யும் உண்மையான அஞ்சலியாகும்.

“புரட்சி நீடூழி வாழ்க”

  • நலன்

1 COMMENT

  1. சரிதான் பகத்சிங் இன்று உயிரோடு இருந்திருந்தால் 140 கோடி மக்களின் துயரத்தை சரி செய்து இருப்பார் நாட்டை சோசியலிச வரியில் அறிவியல் ரீதியாகவும் சமத்துவமாகவும் முன்னேற்ற இருப்பார்.
    ஆனால் அவரின் கனவை நாம் நிறைவேற்ற வேண்டி இருக்கிறது குறிப்பாக இன்றைய இளைஞர்கள் பகத்சிங் முன்வைத்த சமத்துவ இந்தியாவை உருவாக்க அவரின் கம்யூனிச பாதையில் முன்னேறுவோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here