தோழர் டப்பு ரமேஷ் அவர்களுக்கு செவ்வணக்கம்!

“ஒருவர் கம்யூனிஸ்டாக மாறுவது ஒன்றும் அதிசயமானது அல்ல! வாழ்நாள் முழுவதும் கம்யூனிஸ்ட்டாக வாழ்ந்து மறைவது தான் அற்புதமானது” என்றார் தோழர் மாவோ.
சமூக ஒடுக்கு முறைகளை கண்டு கம்யூனிஸ்ட்டாக தன்னை மாற்றிக் கொள்பவர்கள் பலர். ஒரு குறிப்பிட்ட கட்டத்திற்குப் பிறகு ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி கொண்டு கம்யூனிச அமைப்புகளில் இருந்து விலகி நேர் எதிரான சுயநலமிக்க சொந்த வாழ்க்கையில் மூழ்கிப் போகின்றனர்.

கம்யூனிச வாழ்க்கையில் ஏற்படும் நெருக்கடிகள், இழப்பு, தியாகம் இவற்றால் உருவாகும் இன்னல்களை இன்முகத்துடன் ஏற்க மறுக்கின்ற “அதி புத்திசாலிகள்” தெளிவாக கம்யூனிச அமைப்புகளுக்கு உள்ளே வந்து வேலை செய்வதை தவிர்க்கின்றனர்.

சிலரோ வெளியிலிருந்து இவற்றையெல்லாம் பார்த்துவிட்டு குறிப்பிட்ட காலம் முற்போக்கு பேசி அதன்மூலம் பிரபலமடைந்து, சினிமா சின்னத்திரையில் காசு பார்ப்பது போன்ற இழி செயல்களை ஈடுபடுகின்றனர்.

இவர்களுக்கு மத்தியில் தன்னுடைய முகவரி வெளியில் தெரியாமல் புதிய சமுதாயம் உருவாவதற்கு வேர்களை போல் வாழ்கின்ற டப்பு ரமேஷ் போன்ற அரிய தோழர்களின் வாழ்க்கை நாம் அனைவருக்கும் முன்னுதாரணமானது.

000

தோழர் டப்பு ரமேஷின் தாளத்தோடு
புரட்சிப்பாடல் ஒலித்துக்கொண்டே இருக்கும் !

தோழர் டப்பு ரமேஷ் மறைந்துவிட்டார். எவ்வளவு தொலைவில் இருந்து அவரது ‘ தப்பு ‘ இசை , டோலக் இசை கேட்டாலும் அந்த வேகமும் லயமும் அவரது முத்திரைகள். தனியாக அறிந்துவிடலாம்.

” அது மேஜிக் தோழரே ” என்று நான் சொல்வேன். ரமேஷ் அழுத்தமான புன்சிரிப்போடு ” காதண்ணா ” என்று மறுத்துவிடுவார். கிராமங்களில் சுற்றி , மக்களுடன் கலந்து புரட்சிக்காக வேலை செய்வதும் ரகசியக்கட்சி வேலைக்காக இரவுப்பயணங்களின் போது முழு இருட்டிலும் முழு நிலவிலும் இசைப்பாடல்களை அசைபோட்டதும், தோழர்களோடு பல உணர்ச்சிப் பாடல்களுக்கு பல தாளங்களில் பயிற்சி எடுப்பதும் தான் காரணம் என்பார்.

ஆந்திரம் குண்டூரில் தெனாலி அருகே தலித் கிறித்தவக் குடும்பத்தில் எலியஸார் ஆகப் பிறந்தார்.சர்ச் தோத்திரப் பாடல்களுக்காக டிரம்ஸ் அடிக்கத் தொடங்கினார். பாடல்கள் பாடினார், எழுதினார். பட்டப் படிப்புக் கட்டத்திலேயே அரசியல் படிப்பிலும் முதிர்ந்தார். ஜனநாட்ய மண்டலியில் உறுப்பினரானார். சுப்பாராவ் பாணிக்கிராகி, செரபண்டராஜூ வழியில் கத்தர், வெங்க பண்டு பிரசாத், திவாகர் தோள்களோடு இணைந்து நின்று பயணப்பட்டார்.

1985 கரம்சேடு தலித் மக்கள் மீது தாக்குதல், கொலை, காயமடைந்தவர்களைப் பார்க்க ஆப்பிளோடு சென்ற ‘பகவான்’ என்.டி.ஆரைக் கேலிசெய்து விரட்டினர் மக்கள். அந்தப் போராட்டத்தையே “தலித புலூலம்மா ” ( தலித் புலிகள் ) என்று டப்பு ரமேஷ் காவியமாகப்பாடியதை இன்றும் பாடுகிறார்கள். ஹொக்கு கதாவில் ஒரு பாத்திரம் அவர். ” மீ தியாகம் உன்னதமைனதி — அதி சிகராலவண்டிதி ” என்பது அவர் தியாகிகளுக்காக எழுதிய பாடல். 1990களில் cpi –ml தடை செய்யப்பட்டது. ஆனால் சட்டப்படி தடைசெய்யப்படாத ஜனநாட்யமண்டலிக்கோ ஆயிரம் தடைகள்.

ரமேஷின் துணைவியார் குமாரியும் ஜனநாட்யமண்டலி உறுப்பினர்.காடுகளில் மலேரியாவுக்கு அவர் பலியானார். அவரது இரண்டாவது மனைவி ஜோதி தனித் தெலங்கானா போராட்ட சமயத்தில் ரமேஷோடு அரசியல் வாழ்க்கைக்கு வந்தார். ரமேஷ்தான் எழுதினார் என்று தெரியாமலேயே பல நூறு பாடல்களை நாம் புரட்சிக்கூட்டுத்துவத்தின் மேடைகளில் கேட்டிருக்கிறோம். 1990களின் “ஒரே ஒரே ஒரே கூலண்ணா”, ஆபரேசன் கிரீன் ஹண்ட் காட்டு வேட்டைக்கு எதிரான பாடல், “பல்லேர்ல சாமி ” பாடல், சட்டீஸ்கர் பழங்குடிகளிடம் பாடல் , நகரங்களில்
” அரசியல் கைதிகளை விடுதலை செய் ” என்ற மேடைகளில் பாடல் , 2018 அடக்குமுறைகளுக்கு எதிரான பாடல் இவைகள் ரமேஷின் இதயத் துடிப்பிலிருந்து பிறந்தவை.

“ஓ அருணபதாகமா,ஏ தனுமா ரெட்சல்யூட் ” ….ரமேஷ் குரலை லீட் குரலாகவும், புரட்சி அரசியலை டிஜிட்டல் தொகுப்பாக (1975—2017), 42 ஆண்டுகளைப் பதிவு செய்த அமைப்பாளர் என்ற பொறுப்பான உழைப்பாளியாகவும் இப்போது நாம் பார்க்கிறோம், அறிய வருகிறோம்.

கொடிய அடக்குமுறை தேசீய உளவுத்துறையோ ( n i a ), ரமேஷ் போன்றோரின் அத்தனை உழைப்பையும் (வீடுகள் மீது தாக்குதல் நடத்தி) அண்மையில் திருடிச் சென்றிருக்கிறது. கடந்த 10 ஆண்டு காலமாக இதய நோயால் துடித்துத் துடித்து நொந்த நிலையில் அரசின் தாக்குதலும் சேர்ந்துக் கொள்ள கடந்த 18 ( 18.3.2022) அன்று கடுமையான இதய வலி தாக்கி மீளமுடியாது மரணமடைந்தார் தோழர் டப்பு ரமேஷ்.

அடுத்த நாள்,இந்திய புரட்சிப்பண்பாட்டு மையம் மாநாட்டு நிகழ்ச்சி அல்லது “வி-ர-ச-ம் (விப்ளவ ரசயிதள சங்கம்) கூட்டங்கள் இருக்கலாம், பல்வேறு மாநில புரட்சிக் கலைக்குழுவினர் தங்கும் மண்டபத்தில் எல்லா மொழிகளுடனும் சங்கமிப்பது ரமேஷ் போன்ற தாளக் கலைஞர்களே. இதில் முன்னோடி, ஜனநாயக மண்டலிக் ( j n m ) கலைஞர்களே. அவர்கள் கூலி, ஏழை விவசாய வீட்டுப் பிள்ளைகள், ஒடுக்கப்பட்ட பழங்குடி, தலித், மிகப் பிற்படுத்தப்பட்ட சமூகம் சார்ந்தவர்கள். அவர்களிடம் விடுதலைக்கான ஆவல், வேகம் மிகமிக இயல்பானது. தோழர் ரமேஷ் சக கலைஞர்களையும் பல நூறு கிராமங்களையும் ஒன்றாகக் கட்டிப் போட்டார். இசை — தாளம் — இதயத்துடிப்பு.

அவர் பிறந்த சிற்றூரில் ஆயிரக்கணக்கான தோழர்கள் சூழ, தப்பு ஆட்டங்களோடு, சடங்குகளை உடைத்தெறிந்து, ரமேஷை வழியனுப்பினர்.

தோழர் டப்பு ரமேஷுக்குச் சிவப்பு அஞ்சலி !

ஆந்திரச் செய்தி மூலம் : வரலட்சுமி,
எழுத்தாளர், ” வி-ர-ச-ம்.

மறு ஆக்கம் : இராசவேல்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here