நிலக்கரி தட்டுப்பாடுமின் தடை!
மின் விலையேறும் அபாயம்!


இந்தியாவில் உள்ள சுமார் 135 அனல்மின் நிலையங்களில், நிலக்கரி பற்றாக்குறையால் மின் உற்பத்தி செய்ய பெரும் பிரச்சனையை எதிர்கொள்ள ஆரம்பித்துள்ளனர். உத்தரபிரதேசம், அரியானா, குஜராத், டெல்லி ஆகிய மாநிலங்கள் தற்போது மின் தடையை எதிர்கொண்டு வருகிறது.. பிற வட இந்திய மாநிலங்களில் நிலக்கரி சுரங்கங்கள் அதிகம் உள்ள ராஜஸ்தான், பீகார், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் கூட மின்சார தேவைக்கும் மின் உற்பத்திக்கும் இடையேயான இடைவெளி 15% அதிகரித்துள்ளது.

இந்தியாவின் மொத்த மின் உற்பத்தி 388 கிகா வாட் ஆகும். இதில் 54% ஆன 208.8 கிகா வாட் அனல் மின் நிலையங்கள் மூலம் தான் நடக்கிறது. அதிலும் குறிப்பாக நாடு முழுவதும் கொரானா பாதிப்பில் இருந்து தொழில்துறை மீண்டு வரும் நிலையில் மின்சார தேவை 10% அதிகரித்துள்ளது. அதாவது சென்ற ஆண்டு (2020) அக்டோபரில் 169 கிகா வாட்டாக இருந்த தேவையானது, இந்த ஆண்டு அக்டோபரில் (2021) 174 கிகா வாட்டாக உயர்ந்துள்ளது.

பொதுவாக மின் உற்பத்திக்கு அனல் மின்நிலையம், புனல் மின்நிலையம், காற்றாலை மின்சாரம், சூரிய சக்தி மின்சாரம் மற்றும் அணு மின் நிலையங்கள் போன்றவை நடைமுறையில் இருந்தாலும், நிலக்கரி மூலம் உற்பத்தி செய்யப்படும் அனல் மின்சாரம் தான் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஏறக்குறைய ஒரு நூற்றாண்டு காலமாக அனல் மின் நிலையங்களே மின் உற்பத்தியில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.

தூத்துக்குடி அனல்மின் நிலையம்

நிலக்கரி மூலம் மின் உற்பத்தி நடத்தப்படும் நாடுகளில் “இயற்கை எரிவாயு மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் இருந்து மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இதற்கான செலவு குறைவு என்பதால் பல நாடுகளின் பொருளாதாரத்தில் நிலக்கரியிலிருந்து மின்சாரம் தயாரிப்பது பெரிதாக எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது” என லண்டனிலிருந்து வெளியாகும் ஸ்கூல் ஆப் எக்னாமிக்ஸ் இதழில் பருவநிலை மாற்றம் மற்றும் சுற்றுச் சூழல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

திடீர் நிலக்கரி பற்றாக் குறைக்கு சர்வதேச அளவில் கடந்த சில வாரங்களாக நிலக்கரியின் விலை கணிசமாக அதிகரித்துள்ளது தான் முக்கிய காரணம். உலகின் நிலக்கரி தேவை 40 சதவீதம் அதிகரித்துள்ளது. உலகில் அதிகம் நிலக்கரி இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா 2 வது இடத்தில் உள்ளது. இந்தியாவிற்கு தேவையான நிலக்கரி இந்தோனேசியா, தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி ஆகிறது. அந்த நிலக்கரி நிறுவனங்களில் இருந்து அதிக விலை கொடுத்து இறக்குமதியும், இந்திய நிலக்கரி வயல்களில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் நிலக்கரி குறைந்த விலைக்கும் ஏற்றுமதியாகிறது. அங்கிருந்து வாங்குபவனும், இங்கிருந்து ஏற்றுமதி செய்பவனும் ஒரே ஆள்தான் அவர்களில் முக்கியமானவர் தான் இந்தியாவின் இரண்டாம் பணக்காரர் அதானி. புரிகிறதா? இந்த சூட்சமம்.

Adani may abandon Australian coal mine project citing delays: report
ஆஸ்திரேலியாவில் அதானி வாங்கியுள்ள நிலக்கரி சுரங்கம்

“கடந்த காலங்களில் இது போன்ற நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்றாலும் இந்த முறை நிலக்கரியின் விலை அதிகமாகவே அதிகரித்துள்ளது. இதனால் நிலைமை மோசமாகி உள்ளது” என்கிறார் பொருளாதார நிபுணரும், நேமுரா நிறுவனத்தின் துணைத் தலைவருமான டாக்டர் ஆரோதீப் நந்தி. “விலை உயர்ந்த நிலக்கரியை இறக்குமதி செய்வதால் மின்சாரத்தின் விலை அதிகரிக்கும் இந்த விலை உயர்வு நுகர்வாளர்களை பாதிக்கும்” என்கிறார் அவர்.

இங்கே தான் நுகர்வாளர்களாகிய நமது பிரச்சனை துவங்குகிறது. அந்த காரணங்களை முன்வைத்து மின்சாரத்தின் விலையை பல மடங்கு உயர்த்துவதற்கு தயாராகி விட்டார்கள் என்பதுதான் அந்த அபாயம். ஏற்கனவே பெட்ரோல் விலை உயர்வு, கேஸ் விலை உயர்வு, உணவு பொருட்களின் விலை உயர்வு போன்றவைகளால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள உழைக்கும் மக்கள் இனி மின் கட்டண உயர்வினாலும் பாதிக்கப்படுவார்கள் என்பது தான் நிலைமை.

பொதுத்துறை நிறுவனமான கோல் இந்தியாவின் முன்னாள் தலைவர் ஜோரா சட்டர்ஜி “இதே நிலைமை நீடித்தால் இந்தியா பொருளாதார ரீதியாக பெரிய பாதிப்பை அடையும்” என்று எச்சரிக்கிறார் ஏனென்றால் இந்தியா முழுவதும் செயல்படுகின்ற மின் உற்பத்தி நிலையங்களுக்கு தேவையான நிலக்கரியை பூர்த்தி செய்வதில் 80%, இந்த கோல் இந்தியா நிறுவனம் தான் ஈடுசெய்கிறது. இந்த கோல் இந்தியாவின் சொத்துக்களை 2006 முதல் 2009 வரை 64 நிலக்கரி வயல்களை டாடா, எஸ்ஸார், அம்பானி, ஜிண்டால், பிர்லா ஆகிய தேசங்கடந்த மற்றும் உள்நாட்டு தரகு முதலாளிகள் சூறையாடி கொழுத்து வருகின்றனர்.

2014 ஆம் ஆண்டு மோடி ஆட்சிக்கு வந்த பின், 1970 மூதல் தேசியமயமாகி இருந்த நிலக்கரி வயல்கள் மற்றும் சுரங்க துறையை தனியார் மயமாக்கியது. இதன் மூலம் மோடியின் புரவலரான கெளதம் அதானியின், அதானி பவர் தனது நிலக்கரி தேவைக்கு கோல் இந்தியாவை மொட்டையடித்து வருகிறது. இந்த கொள்ளைக் கூட்டம் இந்தியாவின் நிலக்கரி வளங்களை அகழ்ந்தெடுத்து, ஏற்றுமதி செய்து கொழுத்தனர். கார்ப்பரேட் அடிமை மோடி உலகில் இந்தியா தனியார்மயம் மூலம் நிலக்கரி ஏற்றுமதி செய்யும் 4 வது இடத்திற்கு தாவி விடும் என்று குதூகலித்தார். இன்று அதன் விளைவை நாம் அனுபவிக்கிறோம். தேசத்தின் சொத்துக்கள் தனியாரிடம், கார்ப்பரேட்டுகளிடம் வாரி கொடுக்கப் படுவதால் தேசத்தின் பொருளாதாரம் திவால் ஆகிறது. (மேலே உள்ள 3 பாராக்களை மீண்டும் நினைவில் கொள்க!)

“திடீரென்ற இந்த நிலக்கரி நெருக்கடிக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், குறிப்பாக கொரானா காலகட்டத்தில் மின்சார தேவை குறைந்து, பல அனல் மின் நிலையங்கள் உற்பத்தியை குறைத்தன. சூரிய மின்சக்தி மற்றும் காற்றாலை மின் நிலையங்களில் இருந்து கிடைக்கும் மின்சாரத்தின் விலை குறைவாக இருந்ததால் அனைவரும் அதையே நாட ஆரம்பித்தனர். தற்போது கொரானாவில் இருந்து மீண்டு வருவதால் உலகம் முழுவதுமே மின் தேவை அதிகரிக்கின்றது. இந்தியாவில் பல அனல் மின் நிலையங்களில் நிலக்கரியை போதுமான அளவுக்கு இருப்பு வைத்துக் கொள்ளவில்லை. உலகம் முழுவதும் விலை அதிகரிப்பதால் இறக்குமதியும் சாத்தியமில்லாமல் இருக்கிறது” என்று உண்மையை அம்பலப்படுத்துகிறார் தமிழ்நாடு மின் துறை பொறியாளர்களின் சங்கத் தலைவரான திரு. எஸ்.காந்தி.

இந்த சூழலில் திமுக ஆட்சிக்கு வந்த சில வாரங்களில் மே மாதம் முதல் மாநிலம் முழுவதும் 3 முதல் 5 மணி நேரம் வரை மின்தடை ஏற்பட்டது. அதற்கான காரணமாக மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி புதிய மின்மாற்றிகள் மற்றும் கம்பி வழித் தடங்களை சீரமைக்கும் பணி நடைபெற்று வருவதாகவும், ஒரு மாதத்திற்குள் இந்த நிலைமை மாறிவிடும் என்றும் மின்மாற்றிகளில் அணில்கள் ஓடி விளையாடுவதும், சென்னை போன்ற பெருநகரங்களில் புதைவட கம்பிகளை பெருச்சாளிகள் கடிப்பதாலும் திடீர் மின்தடை ஏற்படுகிறது. இது போன்ற உயிரிகளால் மின் உற்பத்தி மற்றும் விநியோகத்தில் பல தடைகள் ஏற்படுவதாக ’அறிவியல்பூர்வமாக’ முன்வைத்தார்.

தமிழ்நாட்டில் மத்திய மற்றும் மாநில அரசுகள், தனியார் மின் நிலையங்கள் மூலம் அன்றாடம் 13,500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த மின் உற்பத்தியில் எண்ணூர், தூத்துக்குடி, நெய்வேலி, மேட்டூர், வல்லூர் ஆகிய இடங்களில் அனல் மின்நிலையங்கள் மூலம் 4320 மெகாவாட் உற்பத்தி செய்யப்படுகிறது

தமிழ் நாட்டின் தேவைக்கான மொத்த மின்சார உற்பத்தியில் கிட்டத்தட்ட 25 சதவீதம் மின்சாரம் அனல்மின் நிலையங்களின் மூலம் தான் ஈடுகட்டப்படுகிறது. இந்த மின்சாரம் ஆறு மணி நேர தேவையை பூர்த்தி செய்ய போதுமானதாக மட்டுமே உள்ளது. பாசிச மோடி அரசு கடந்த செப்டம்பர் முதல் கோல் இந்தியா மூலம் தமிழகத்திற்கு கொடுக்கின்ற நிலக்கரியின் அளவு 40 சதவீதம் குறைத்துள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டில் அன்றாட தேவை 62 ஆயிரம் டன் என்ற நிலைமையில் 42 ஆயிரம் டன் மட்டுமே மத்திய அரசு கொடுத்து வந்தது 20 ஆயிரம் டன் நிலக்கரி குறைவாகவே வழங்கியுள்ளது. இதே நிலைமை நீடித்தால் தமிழகம், புதுச்சேரியில் தொடர்ந்து மின்வெட்டு ஏற்படும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவதுடன் பொருளாதாரமும் வீழ்ச்சி அடைந்து விடும். இதனால் நாம் அடையும் துன்பங்களுக்கு அளவே இல்லை.

கூடங்குளம் அணுமின் நிலையம்

எனினும் இந்த நிலக்கரி பற்றாக்குறை என்பது முழுவதும் உண்மையாக இல்லை. செயற்கையாகவே தெரிகிறது. இதற்கு மாற்றாக இந்திய அமெரிக்க இராணுவ ஒப்பந்தம் மூலம் போடப்பட்டுள்ள அணு உலைகள் மூலம் அணு மின் நிலையங்களை திறப்பதற்கு முகாந்திரத்தை தேடுகின்றனர் என்பதே அனைத்தையும் விட முக்கியமான அபாயமாகும். விழிப்புடன் இருந்து முறியடிப்போம்.

  • பா.மதிவதனி.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here