பத்திரிக்கை செய்தி
நாள் : 27.08.2022


அனைத்து சாதி அர்ச்சகர் தீர்ப்பு : தேவை புதிய சட்ட திருத்தம்

இந்து சமய அறநிலையத்துறை விதிகள் ஆகமக் கோயில்களுக்கு பொருந்தாது; குறிப்பாக பிராமண சமூகத்தின் உட்பிரிவினராய் இருந்து ஆகமக் கோயில்களில் பணியில் உள்ள அர்ச்சகர் நியமனத்தைப் பொருத்து செல்லாது.ஆகம முறைப்படி இல்லாத கோயில்களுக்கே அறநிலையத்துறை விதிகள் பொருந்தும்!

அரசியல் சட்டம், சபரிமலை தீர்ப்பிற்கு எதிராக கருவறை தீண்டாமையை உறுதி செய்த சென்னை உயர்நீதிமன்றம்

அனைத்து சாதி அர்ச்சகர் நியமனத்தை வரவேற்பதாகச் சொன்ன பா ஜ க – வின் நிலைப்பாடு என்ன?

தந்தை பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளாய் இருந்த கருவறைத் தீண்டாமையை, அகற்றும் விதமாக, கடந்த ஆகஸ்ட்.14, 2021 அன்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர், தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கினார். தமிழக அரசு அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளில் படித்த 22 அர்ச்சக மாணவர்கள் உட்பட 57 மாணவர்களுக்கு முறையான நேர்காணல் மூலம் பணிநியமனம் வழங்கப்பட்டது.கடந்த அதிமுக ஆட்சியில் அர்ச்சகர் உள்ளிட்ட கோயில் பணியாளர்களுக்கான பணிவரன்முறை விதிகள் வரையறுக்கப்பட்டன. மேற்படி விதிகளின்படியே அர்ச்சகர் நியமனம் மேற்கொள்ளப்பட்டது.

சென்னை உயர்நீதிமன்றத்தில், அர்ச்சகர் மற்றும் கோயில் ஊழியர்களுக்கான, தமிழ்நாடு இந்து சமய நிறுவனப் பணியாளர்கள் பணிவரன்முறை விதிகள்,2020 (CHALLENGING G.O.Ms.No.114 – TAMIL NADU RELEGIOUS INSTITUTIONS EMPLOYEES (CONDITIONS OF SERVICE) RULES,2020- ஆகமத்தை மீறுகிறது என்று சொல்லி ஆதி சைவ சிவாச்சார்யார்கள் சேவா சங்கம் , தென்னிந்திய வைகாசன அர்ச்சகர்கள் சங்கம், கோயில் வழிபாட்டாளர் சங்கம் உள்ளிட்ட பலர் வழக்குகள் தொடுத்து தற்போது தீர்ப்பு வந்துள்ளது.

பிராமண அர்ச்சகர்கள் முன்வைத்த வாதங்கள்:
ஆதி சைவ சிவாச்சாரியார்கள் என்ற தனி மத உட்பிரிவினர் 25000 குடும்பங்கள் தமிழகத்தில் வசித்து வருகின்றனர்.இவர்கள் மட்டுமே சைவக் கோயில்களில் பூஜை செய்யும் உரிமை படைத்தவர்கள்; ஆகமப்படி மற்ற சாதி இந்துக்கள் சாமி சிலையைத் தொட்டால் தீட்டாகிவிடும் என சேசம்மாள் வழக்கின் தீர்ப்பு உள்ளது.ஆகமக் கோயில்களில் அர்ச்சகர் நியமனம் குறித்து விதி உருவாக்கும் அதிகாரம் அரசுக்கு இல்லை;அரசின் விதிகளில் கடவுளின் மொழியான சமஸ்கிருதம் படிப்பது, எழுதுவது தொடர்பான ஆற்றல் குறித்த விதிகள் ஏதும் இல்லை; அர்ச்சக மாணவர்களுக்கான பாடத்திட்டம் வகுக்கும் உரிமை அரசுக்கு இல்லை; அர்ச்சகர்கள் மற்றும் ஓதுவார்களுக்கான பணி வயது,சம்பளம்,ஓய்வு பெறும் வயதை அரசு நிர்ணயம் செய்ய முடியாது; மரபு,பழக்க,வழக்கம்,ஆகமங்களின்படி எல்லோரும் அர்ச்சகர் ஆக முடியாது. தமிழக முதல்வர் அவர்கள் பெரியாரின் நெஞ்சில் தைத்த முள் என்று சொல்லி நாத்திகரான பெரியாரின் பெயரில் நியமனம் செய்துள்ளார்.இது உள்நோக்கமுடையது. அர்ச்சகர் நியமனங்கள் சேசம்மாள் , ஆதி சைவ சிவாச்சார்யார்கள் வழக்குகளின் தீர்ப்புகளுக்கு எதிரானது. தமிழகத்தின் ஒவ்வொரு கோயிலும் தனித்துவமானது; அரசு பொதுவான விதியை இயற்ற முடியாது; கோயில்களுக்கு நிர்வாக அதிகாரிகள் நியமிப்பதே அரசியல் சட்டத்திற்கு முரணானது. தமிழக அரசின் நடவடிக்கை அரசியல் சட்டத்தின் பிரிவுகள் 19, 25, 29-க்கு எதிரானது.எனவே, அர்ச்சகர் நியமனம், விதிகளை ரத்து செய்து,பயிற்சிப் பள்ளிகளை மூட வேண்டும்.

மேற்படி வாதத்தை ஏற்குக் கொண்ட சென்னை உயர்நீதிமன்றம், கீழ்க்கண்டவாறு கூறியிருக்கிறது:

“ஆகமக் கோயில்களுக்கு அறநிலையத்துறை விதிகள் வகுக்க முடியாது. ஆகமக் கோயில்களில் அர்ச்சகர் நியமனம் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் ஆகமம், பழக்கம், வழக்கம், மரபுப்படியே நடைபெற வேண்டும். உச்சநீதிமன்றத்தின் சேசம்மாள், ஆதி சைவ சிவாச்சாரியார்கள் வழக்கின் தீர்ப்புகள் இதையே வலியுறுத்துகின்றன. குறிப்பாக சேசம்மாள் வழக்கில்

“ The Agamas contain elaborate rules as to how the temple is to be constructed, where the principal deity is to be consecrated, and where the other Devatas are to be installed and where the several classes of worshippers are to stand and worship.
“Pollution or defilement may take place in variety of ways. According to the Agarnas, an image becomes defiled if there is any departure or violation of any of the rules relating to worship. In fact, purificatory ceremonies have to be performed for restoring the sanctity of the shrine [1958 S.C.R. 895 (910)].

DR. Kane has quoted the Brahmapurana on the topic of Punah-pratistha (Re-consecration of images in temples) at page 904 of his History of Dharmasastra referred to above. The Brahmapurana says that “when an image is broken into two or is reduced to particles, is burnt, is removed from its pedestal, is insulted, has ceased to be worshipped, is touched by beasts like donkeys or falls on impure ground or is worshipped with mantras of other detities or is rendered impure by the touch of outcastes and the like-in these ten contingencies, God ceases to indwell therein.” The Agamas appear to be more severe in this respect.

Shri R. Parthasarthy Bhattacharya, whose authority on Agama literature is unquestioned, has filed his affidavit in Writ Petition No. 442 of 1971 and stated in his affidavit, with special reference to the Vaikhanasa Sutra to which he belongs, that according to the texts of the Vaikhansa Shastra (Agama), persons who are the followers of the four Rishi traditions of Bhrigu, Atri, Marichi and Kasyapa and born of Vaikhanasa parents are alone competent to do puja in Vaikhanasa temples of Vishnavites. They only can touch the idols and perform the ceremonies and rituals.

தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இத்தீர்ப்பின் சாரமே ஆதிசைவ சிவாச்சாரியாகள் வழக்கிலும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

எனவே, ஆகமக் கோயில்களுக்கு, குறிப்பாக அர்ச்சகர் நியமனத்திற்கு அறநிலையத்துறை வகுத்த விதிகள் செல்லாது. ஆகமக் கோயில்கள், ஆகம முறைப்படி அமையாத கோயில்கள் என்பதைப் பிரிக்க தமிழ்நாடு அரசு மேனாள் உயர்நீதிமன்ற நீதிபதி.சொக்கலிங்கம் தலைமையில் குழு அமைக்க வேண்டும்.குழுவில் சென்னை சமஸ்கிருத கல்லூரி பேராசிரியர் கோபால்சாமி உள்ளிட்ட அய்வர் இருக்க வேண்டும். ஆகமக் கோயில்களை அடையாளம் கண்ட பின்பு, அர்ச்சகர் நியமனம் ஆகமங்கள் அடிப்படையிலேயே இருக்க வேண்டும்.மீறினால், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம்.இத்தீர்ப்பு ஆகமம் அல்லாத கோயில்களுக்கு பொருந்தாது.அக்கோயில்களில் அறநிலையத்துறை விதிகள் செல்லும்”
என்கிறது தீர்ப்பு.

சாரமாக, “ பிராமண உட்பிரிவினர், தனிப்பிரிவினர் அர்ச்சகர்களாக இருக்கும் ஆகமக் கோயில்களுக்கு, தமிழக அரசு சட்டம் இயற்ற முடியாது.மற்ற இந்து சாதியினர் இருக்கும் காளியம்மன், மாரியம்மன் கோயில்கள் தொடர்பாக சட்டம் இயற்றலாம்-என்பதுதான் தீர்ப்பின் பொருள்.

“பிறப்பால் பிராமண உட்சாதியினர் மட்டுமே ஆகமக் கோயில்களில் அர்ச்சகராக இருக்க முடியும்” எனவும்- “பிராமணர்கள்தான் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட வேண்டும்” என்று ஆகம நூல்கள் எதிலும் கூறப்படவில்லை” என்றும் இரண்டு கருத்துகள் உள்ளன. ஆகம விதி என்று சொல்லும் இடங்களிலெல்லாம் மரபு – பழக்க வழக்கம் என்ற சொற்றொடர்களையும் சேர்த்துத்தான் எப்போதும் பயன்படுத்துகின்றனர்.

2015 அர்ச்சகர் தீர்ப்பிற்குப்பின் சபரிமலை அய்யப்பன் கோயில் தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு வழங்கிய தீர்ப்பு மிகவும் முக்கியமானது. இத்தீர்ப்பில் “ இந்திய அரசியல் சட்டம் சமூக மாற்றம், சமூக சமத்துவத்திற்கான ஓர் ஆவணம்; அரசியல் சட்ட அடிப்படையிலான முன்னுரிமை என வரும்போது ஒரு தனி நபர், குழுவின் மத உரிமை – சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், தனி மனித கண்ணியம் உள்ளிட்டவைகளை முன்னிருத்தும் அரசியல் சட்ட அறங்களுக்குக்கு உட்பட்டே செயல்பட முடியும்.பிறப்பு, உடற்கூறு வகைப்பட்ட பாகுபாடுகள் அரசியல் சட்டத்திற்கு எதிரானது.தனி மனித கண்ணியத்தை, மற்ற குடிமக்களை கீழானதாகக் கருதும் எதையும் ஏற்க முடியாது. பிரிவு. 26-ன் கீழான மத உட்பிரிவுகளின் உரிமை, பிரிவு 25 (2) (ஆ)-வுக்கு உட்பட்டே இயங்கும்.

தனி நபரின் சுதந்திரம்,கண்ணியம்,சமத்துவத்தை மீறி எந்த மதக் கோட்பாடு, பழக்க வழக்கம், மரபுகள், நம்பிக்கைகள் இருக்க முடியாது. அவ்வாறு இருந்தால் அவை அரசியல் சட்டப் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.அரசியல் சட்டத்திற்கு அர்த்தம் உள்ளதென்றால் மதம், தனி மனித நம்பிக்கையாகவோ, மதக் கோட்பாடாகவோ யாரையும் இழிவு படுத்த முடியாது” மிகவும் ஆணித் தரமாகக் குறிப்பிடப்படுகிறது.

2002-ல் உச்சநீதிமன்றம் வழங்கிய N.Adithyan – Vs – Travancore Devaswom Board (2002) 8 SCC 106 வழக்கின் தீர்ப்பு “மலையாள பிராமணர்கள் மட்டுமே கேரள கோயில்களில் அர்ச்சகராக முடியும் என்ற வாதம் மறுக்கப்பட்டு- உரிய கல்வித் தகுதிகளுடன் உள்ள எல்லா இந்துக்களும் அர்ச்சகராகலாம்” என்ற தீர்ப்பு சென்னை உயர்நீதிமன்றத்தால் புறக்கணிக்கப்பட்டுள்ளது.

1972 சேசம்மாள் தீர்ப்பிற்குப்பின் நிறைய சமூக,சட்ட மாற்றங்கள் வந்துள்ளது.இவற்றை கருத்தில்கொண்டே 2018-ல் சபரிமலை 5 நீதிபதிகளால் வழங்கப்பட்டது. எனவே சபரிமலைத் தீர்ப்பின் ஒளியிலேயே, அர்ச்சகர் தீர்ப்பு பொருள் விளக்கம் கொள்ளப்பட்டிருக்க வேண்டும். மேலும் சேசம்மாள் வழக்கு முதல் 2015 மதுரை ஆதி சைவ சிவாச்சாரியார்கள் வழக்கு வரை கூறப்பட்ட தீர்ப்புகளில் “அர்ச்சகர் நியமனம் என்பது அரசின் மதச் சார்பற்ற நடவடிக்கை“ என்று மிகத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழக அரசும், மற்ற அரசு ஊழியர்களுக்கு இருப்பதுபோல், அர்ச்சகர் மற்றும் கோயில் ஊழியர்களுக்கான, தமிழ்நாடு இந்து சமய நிறுவனப் பணியாளர்கள் பணிவரன்முறை விதிகள்,2020-அய் உருவாக்கியுள்ளது.

ஆனால், அரசின் எந்தச் சட்டம், விதிகளின் கீழும் சிவாச்சார்யார்களும், பட்டாச்சாரியார்களும் வரமாட்டார்கள்- ஆகமம் மட்டுமே தங்களை கட்டுப்படுத்தும் என்று சொல்கிறார்கள். ஒன்றிரண்டைத் தவிர மற்ற ஆகமங்கள் எழுத்து வடிவில் இல்லை என்பதையும், அவை பற்றி சான்று கூறத்தக்க வல்லுநர்களும் (பார்ப்பனர்கள்) இல்லை என்றும் நீதிமன்றங்களே ஒப்புக்கொண்டிருக்கின்றன. இந்நிலையில் ஆகம விதி என்று அர்ச்சகர்கள் எதைக் கூறுகிறார்களோ அதை ஒப்புக்கொள்ளும் நிலையே உள்ளது.

அதாவது அவர்கள் அரசமைப்பு சட்டத்துக்கும் கட்டுப்பட மாட்டார்கள், ஆகம விதிகளையும் கண்ணில் காட்ட மாட்டார்கள். அவர்கள் என்ன சொல்கிறார்களோ அதுதான் சட்டம். அவர்கள் எல்லா சட்டங்களுக்கும் அப்பாற்பட்டவர்கள் என்பதுதான் நடைமுறையில் நீதிமன்றத் தீர்ப்பின் பொருள்.

அரசுப் பொதுக் கோயில்களில் பணிபுரியும் இவர்கள் இப்படிச் சொல்ல முடியுமா? இவர்களைப் போல், அரசின் வேறுதுறைப் பணியாளர்கள் சட்டம்,விதிகளுக்கு கட்டுப்பட மறுத்தால் என்னவாகும்? சிவாச்சார்யார்களும், பட்டாச்சாரியார்களும் அரசியல் சட்டத்திற்கு மேற்பட்டவர்களா? ஆனால், சிவாச்சாரியார்களின் வாதம் நீதிமன்றத்தால் ஏற்கப்பட்டுள்ளது.

எல்லோரும் இந்துக்கள், இந்துக்களில் பாகுபாடு இல்லை, தீண்டாமை இல்லை, விநாயகர் சதுர்த்திக்கு பாகுபாட்டைக் களைய பிரச்சாரம் செய்வோம் என்று பேசும் ஆர்.எஸ்.எஸ் – பாஜக – இந்து முன்னணி – விசுவ இந்து பரிசத் அமைப்பினர் ஆகமக் கோவிலில் அனைத்து இந்துக்களும் அர்ச்சகராக முடியாது என்ற தீண்டாமையைத்தான் ஆதரிக்கிறார்கள். ஆர்எஸ்எஸ் சார்ந்த அமைப்புகள்தான் பார்ப்பனரல்லாத அர்ச்சகர்களுக்கு எதிராக வழக்கும் தொடுத்திருக்கிறார்கள்.

சிவாச்சார்யார்களுக்கு எதிராக வலுவான வாதத்தை முன்வைத்திருக்க வேண்டிய தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் திரு.சண்முக சுந்தரமும், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மூத்த வழக்aகறிஞர்களை நியமித்து, அனைத்து சாதி அர்ச்சகர் நியமன வரலாற்றை, அரசியல் சட்ட உரிமையை, அரசின் உரிமையை பேசியிருக்க வேண்டும். ஆனால் அவரோ சிவாச்சாரியார்களின் கோரிக்கையை ஏற்கும்விதமாக பேசியுள்ளதாக நீதிபதிகள் தீர்ப்பின் பத்தி 15, 19, 20, 21 மற்றும் 49-களில் குறிப்பிடுகின்றனர். தலைமை வழக்கறிஞர், “அரசு வகுத்துள்ள விதி அர்ச்சகர் நியமனத்துக்கும் பொருந்தும்” என்று வாதிட்டிருக்க வேண்டும். அவ்வாறின்றி, “ஊழியர் விதிகளிலிருந்து ஆகமக் கோயில் அர்ச்சகர்களுக்கு மட்டும் நீதிமன்றம் விதிவிலக்கு அளிக்கலாம்” என்று “சண்டை” தொடங்குவதற்கு முன்னரே சரணைந்திருக்கிறார் தலைமை வழக்கறிஞர். இதை தீர்ப்பின் பத்தி 19 இல் காணலாம்.

“if it (the rules) offends any usage and practice given under the Agamas, this court may clarify that to that extent the Rules may not be applicable for appointment of Archakas. It is, however, with a clarity that the aforesaid arrangement would be applicable only to the temple or group of temples, which were constructed as per the Agamas and not for any other temple”

இவ்வாறு அரசின் தலைமை வழக்கறிஞர் அரசின் கொள்கைக்கு நேர் எதிராகப் பேசியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அறநிலையத்துறையின் முக்கியப் பொறுப்புகளில் உள்ளவர்கள் தந்தை பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரின் சமத்துவக் கொள்கைகளுக்கு எதிரானவர்களாகவும், காவி சிந்தனையின் காவலர்களாகவும் உள்ளனர் என்பதையே இது காட்டுகிறது. ஆலய நுழைவு, கருவறை நுழைவுக்காக திராவிட இயக்கம் நூற்றாண்டு காலமாக நடத்தி வரும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த போராட்டத்துக்கு உள்ளிருந்தே குழி பறிக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து அறநிலையத்துறை அமைச்சர் எவ்வித விளக்கமும் அளிக்காதது அதிர்ச்சியளிக்கிறது.,

இதனை அறியாமல் நடந்த பிழை என்றோ அதிகாரிகளின் அலட்சியம் என்றோ எங்களால் நம்ப முடியவில்லை. அனைத்து சாதி அர்ச்சகர் நியமனத்துக்கு எதிராக சுமார் 20 க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடுக்கப்பட்டிருக்கின்றன என்றும், நியமனத்துக்கு ஆபத்து என்றும் பிப்ரவரி 2022 இலேயே நாங்கள் பத்திரிகை செய்தி கொடுத்திருக்கிறோம். ஊடகங்களில் பேசியிருக்கிறோம். அறநிலையத்துறை தலைமை அதிகாரிகளிடம் பலமுறை எச்சரித்திருக்கிறோம்.

இந்த வழக்கில் அரச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் சார்பில் எங்களை இணைத்துக்கொள்ள (implead) கோரினோம். நியமனம் பெற்ற பார்ப்பனரல்லாத அர்ச்சகர்கள் 12 பேர் தங்களையும் வழக்கில் இணைத்துக்கொள்ளக் கோரி மனுச்செய்தனர். இந்த கோரிக்கைகள் மீது விசாரணை கூட நடத்தாமல், “ அத்தனை பேரின் வாதங்களையும் கேட்டதாகவும், இவர்கள் யாரும் இந்த வழக்கிற்கு அவசியமான நபர்கள் அல்ல என்பதால் நிராகரிப்பதாகவும்” யாரும் அறியாமல் ஒரு உத்தரவை பிறப்பித்தனர்.

பணி சார்ந்த விதிகள் (service rules) தொடர்பான வழக்குகளில் சம்மந்தப்பட்ட ஊழியர்கள் தவிர, வெளியார் பொதுநல வழக்கு (PIL) தொடரமுடியாது என்று இதே தலைமைநீதிபதி அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பளித்திருக்கிறார். ஆனால் வழக்கிற்கு எந்த தொடர்பும் இல்லாத வடமாநில மனுதாரர்கள் வாதிகளாக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

ஒரு வழ்க்கிற்கு நேரடியாகத் தொடர்புள்ள, அதனால் பாதிக்கப்படுகின்ற ஊழியர்களை விசாரிக்காமல் வழங்கப்படும் தீர்ப்பு செல்லாது என்று பல உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் கூறுகின்றன. ஆனால், இந்த வழக்கின் முடிவினால் பாதிக்கப்படுபவர்களான பார்ப்பனரல்லாத அரச்சகர்களை “வழக்கிற்கு தொடர்பில்லாதவர்கள்” என்று கூறி, விசாரணையே இல்லாமல் வெளியேற்றியிருக்கிறது உயர்நீதிமன்றம்.

உயர்நீதிமன்றத்தின் உண்மைக்குப் புறம்பான, இயற்கை நீதிக்கே முரணான இந்த நடவடிக்கை இந்த தீர்ப்பையே செல்லத் தகாததாக்குகிறது. ஆனால் இப்படி ஒரு அநீதி நிகழ்ந்திருப்பது குறித்து அரசு வழக்கறிஞரோ, அறநிலையத்துறை சார்பான வழக்கறிஞரோ ஒரு வார்த்தை கூட நீதிமன்றத்தில் பேசவில்லை.

இந்த வழக்கில் ஸ்ரீரங்கம் முரளிதர பட்டர் என்பவர் தாக்கல் செய்துள்ள W.P.No.20489 of 2021 இல் எண் 3 முதல் 14 வரையிலான எதிர்மனுதாரர்களுக்கு வழக்கறிஞர் வரவில்லை என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. எதிர்மனு தாக்கல் செய்து விட்டு வழக்காடுவதற்கு வக்கீல் வைக்காத இவர்கள் அனைவரும் பல்வேறு கோயில்களைச் சேர்ந்த இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

நடந்திருக்கும் தவறுகளை குற்றமுறு அலட்சியம் என்று கருதுவதா, அல்லது இது எதிர் தரப்பினருடனான குற்றமுறு கூட்டணியா (criminal negligence or criminal collusion) என்ற ஐயத்தையே இந்த நிகழ்வுகள் அனைத்தும் எழுப்புகின்றன. தந்தை பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளை முதல்வர் அகற்றினார் என்று சென்ற ஆண்டு நாம் அனைவரும் கொண்டாடி மகிழ்ந்தோம். அந்த இடத்தில் ஒரு குத்தீட்டியைப் பாய்ச்சியிருக்கிறது உயர்நீதிமன்றம். அறநிலையத்துறையும் அரசு வழக்கறிஞரும் அதனைத் தடுப்பதற்கும், முதல்வரின் முயற்சியைப் பாதுகாப்பதற்கும் எள்ளளவும் முயற்சிக்கவில்லை என்பது கசப்பான உண்மை.

சனாதனத்துக்கு எதிரான சமர் நீண்டது, நெடியது என்பதை நாம் அறிவோம். அந்தச் சமரில் வீடணர்களை நண்பர்களாக நம்பி ஏமாந்து விடக்கூடாது என்பதே எம் அக்கறை. எனவே நடந்துள்ள தவறுகள் குறித்து விசாரணை செய்து, தவறிழைத்தோர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதற்கு முதல்வர் உத்தரவிட வேண்டும் என்று கோருகிறோம்.

சல்லிக்கட்டு, தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை சட்டம் ஆகியவற்றுக்கு எதிராக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த போது, அவற்றை எதிர்த்து ஒன்றிய அரசு சட்டங்கள் இயற்றியுள்ளது. நீட் பிரச்சனையைப் போன்றே இது தொடர்பாகவும் தமிழக சட்டமியற்ற சட்ட வல்லுநர்களின் ஆலோசனையை தமிழக அரசு பெற வேண்டும். புதிய சட்டத்தை ஆளுநர் முடக்கி வைத்தால், பாரதிய ஜனதா அரசு பெரும்பான்மை இந்துக்களுக்கு எதிரானது என்ற உண்மையை மக்கள் மன்றத்துக்கு கொண்டு செல்வோம். சனாதனத்துக்கு எதிராக சமத்துவத்தை நிலைநாட்டும் போராட்டத்தில் தமிழகம்தான் முன்நிற்கிறது. என்றைக்கும் அவ்வாறு முன்நிற்க நாங்கள் துணை நிற்போம்.

வா.ரங்கநாதன் ,தலைவர்
அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம்- தமிழ்நாடு
128, கோகுலம் இல்லம், அரசமரத் தெரு திருவண்ணாமலை மாவட்டம் – 90474 00485

வழக்கறிஞர் சே.வாஞ்சிநாதன்
மாநில ஒருங்கிணைப்பாளர்
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்
384, முதல் தளம்,கிழக்கு 8-வது தெரு, கே.கே.நகர், மதுரை-20.
9865348163

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here