ஹிஜாப் பிரச்சனை அல்ல ! பகுதி – 1

தொடர்ச்சி…

இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணியாமல் தடுப்பதன் மூலம் என்ன சாதிக்க விரும்புகிறார்கள் இவர்கள்? என்ன கூற வருகிறார்கள்?

சென்ற தலைமுறையில் ஐந்தாம் வகுப்பைத் தாண்டி வராத இஸ்லாமிய பெண்கள் இன்று அறிவியலும், பொருளாதாரமும், அரசியலும்  சட்டமும், தொழில்நுட்பமும் கற்று அனைத்து தளங்களிலும் நிமிர்ந்து நிற்கத் தொடங்கியிருக்கிறார்கள். இஸ்லாமிய பெண்களின் முன்னேற்றம்தான் இஸ்லாமிய சமூகத்தின் முன்னேற்றம். இஸ்லாமியப் பெண்கள் கல்வி கற்பதைக் கண்டு பார்ப்பனியம் பதைபதைக்கிறது; வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு ஓலமிடுகிறது. அவர்களிடம் குற்றம் கண்டு பிடிக்கிறது. ஹிஜாப்பைக் கைவிட  மறுப்பார்கள் என்பதால், கல்லூரிக்கு வருவதை நிறுத்திக் கொண்டு கல்வியையே துறப்பார்கள் என்று எதிர்பார்க்கிறது.

ஹிஜாப் உடை இஸ்லாமியப் பெண்களுடைய முன்னேற்றத்தைத் தடுத்து விடவில்லை. அது ஒரு பாதுகாப்பான உடை என்பதால் அனைவரிடமும் ஆதரவு பெற்றிருக்கிறது. சக மாணவ மாணவியர் அவர்களுடைய உடையை இயல்பாகவே எடுத்துக் கொண்டார்கள். இதுவரை யாருக்குமே எந்த வேற்றுமை உணர்வும் தோன்றவில்லை. உடை ஒரு தடையோ அல்லது வேற்றுமையை உருவாக்கும் பொருளோ அல்ல. பெண்கள் தங்களுக்கு வசதியான, பாதுகாப்பான உடையை தீர்மானிக்க வல்லவர்கள். இஸ்லாமியப் பெண்கள் கூடுதலாக தங்கள் மரபுசார்ந்த உடையைப் பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தி வருபவர்கள், இப்போது அவர்களின் உடலை மறைக்கும் நல்ல உடையைத் தானே அணிகிறார்கள்? அதை ஒழுங்குபடுத்த வேண்டிய தேவைதான் என்ன?

காவி துப்பட்டாவை அணிந்து  ஏதுமறியாத மாணவர்களை கையகப்படுத்திக் கொண்டு, இந்துத்துவவாதிகள் கல்லூரிக்குள் கலவரம் செய்த நிலையில், தை எதிர்த்து சனநாயக உணர்வுள்ளவர்கள் களத்திற்கு வந்து சேர்ந்திருக்கிறார்கள். நீல நிறத் துண்டுகளை அணிந்துகொண்டு “ஜெய் பீம்” என்ற முழக்கத்தோடு இஸ்லாமிய மாணவிகளுக்கு ஆதரவாக மாணவர்கள் அணிவகுத்து விட்டார்கள். கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களும்கூட இப்போது “அல்லாஹு அக்பர்” என்ற முழக்கத்தை எழுப்பி, முஸ்கான் என்ற மாணவிக்கு ஆதரவாகக் களம் இறங்கினார்கள்.

ஹிஜாப் பற்றி பேசுகிறவர்கள் இவற்றைப் பற்றி பேசத் தயாரா?

நீங்கள் அணியும் ஹிஜாப் உடை மற்றவர்களிடமிருந்து  வித்தியாசமாக இருக்கிறது, வேறுபடுத்தி காட்டுகிறது. ஆகவே அதை அணியக்கூடாது என்று எவராவது வாதம் செய்வதாக இருந்தால், அதையும் ஏற்று ஆய்வு செய்ய வேண்டியுள்ளது.

ஹிஜாப் உடை மாணவிகளில் ஒரு பிரிவினரை வேறுபடுத்தி காட்டுகிறது என்றால், இங்கே இந்து சமூகத்திலேயே பஞ்சகச்சம் கட்டிக் கொண்டு இருக்கிறார்களே! அது ஒரு பகுதியினரை ஒரு சமயத்துக்குள்ளேயே வேறுபடுத்தி, உயர்வானவர்களாகக் காட்டுகிறது. பஞ்சகச்சத்தை பறித்தெடுக்க ஏன் இவர்கள் முயற்சிக்கவில்லை? பார்ப்பன சமூகத்துப் பெண்கள் பிற சமூக பெண்களை போலன்றி, மடிசார் புடவை என்று கட்டுகிறார்கள். அதை ஏன் இவர்கள் தடுக்கவில்லை?

“எல்லோரும் ஒருமுறை பிறந்தவர்கள்; பூணூல் அணியக்கூடிய நாங்கள் மட்டும் இருமுறை பிறந்தவர்கள்! உங்களை விட உயர்ந்தவர்கள், பூவுலகில் நடமாடும் தெய்வங்கள் நாங்கள்!” என்று அறிவிக்கக் கூடிய பூணூலை நீக்கும்படி இவர்கள் ஏன் போராடவில்லை?  எமக்கு இல்லாத பூணூல் இவர்களுக்கு எதற்கு? என்று என்றைக்காவது கேள்வி எழுப்பியிருக்கிறார்களா?

ஹிஜாப் என்பது மத அடையாளம் என்று கருதினால், சீக்கியர்கள் அணியும் தலைப்பாகை மத அடையாளமா இல்லையா? பள்ளி, கல்லூரிகளில் படிக்கின்ற, வேலை பார்க்கிற சீக்கியர்களின் தலைப்பாகையையும், தாடியையும் பிடுங்கி எறிய இவர்கள் தயாரா? இந்திய இராணுவத்தில் அனைத்து வீரர்களும் இரும்புத் தொப்பி அணியும்போது, சீக்கியர்கள் மட்டும் தலைப்பாகை அணிகிறார்களே,   இந்த வேறுபாடு கூடாது! என்று என்றைக்காவது காவிக்காரர்கள் குரல் கொடுத்தது உண்டா? எங்கு சென்றாலும் உறைவாளை கையில் எடுத்துச் செல்ல சீக்கியர்களுக்கு மட்டும் அப்படி என்ன உரிமை? நாங்களும் உறைவாளோடுதான் தான் வருவோம் என்று என்றைக்காவது இந்த காவிக் கூட்டம் அடம்பிடித்தது உண்டா?

இந்திய மக்களுள் வேறுபாடே இருக்கக்கூடாது என்று கதறுகிறார்கள். காவிக்கொடியைத் தூக்கிக் கொண்டு கலவரம் செய்யும் இவர்களை, முதலில் ஒற்றைச் சுடுகாட்டில் புதைப்பானா? பிறப்பில் ஏற்றத்தாழ்வு கூடாது, இறக்கும் போதாவது ஏற்றத்தாழ்வு எங்களுக்கு வேண்டாம் என்று  ஒற்றைச் சுடுகாடு கோரியது உண்டா? ஒடுக்கப்பட்டவர்களுக்கு ஒரு தெரு, பார்ப்பனர்களுக்கு ஒரு தெரு என்று பாகுபாடு காட்டக் கூடிய இந்த நிலையை எதிர்த்து என்றைக்காவது இந்தக் காவிகள்  களத்திற்கு வந்ததுண்டா? சிறுமிகள் அணியும் ஹிஜாப் -தான் இவர்களுக்கு பிரச்சனையா? சீக்கியர்களுடைய தலைப்பாகையையும், வாளையும் பிடுங்கி எறிய போகிறீர்களா, இல்லையா? அதைத் தொடுவதற்கு அச்சமாக இருந்தால் ,சிறுமிகளின் ஹிஜாபைப் பற்றிப் பேச உங்களுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது?

நெற்றியில் நாமமும், பட்டையும், கழுத்தில் கொட்டையும் மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டாதா? இவை மதச் சின்னங்கள் இல்லையா?

ஹிஜாப் அணிவதால்தான் இந்திய சமூகம் ஒற்றுமையை இழந்து போய் விட்டதா? நெற்றி நிறைய நாமம், பொட்டு, குங்குமம், விபூதி என்று இந்துமதக் சின்னங்களோடு வரக்கூடிய மாணவர்களையும், பேராசிரியர்களையும், அலுவலகத்திற்கு வரக்கூடிய அதிகாரிகளையும், என்ன செய்வதாக இருக்கிறீர்கள்?

பெண்கள் பொட்டு வைப்பது  சமயக் குறியீடு அல்லவா?  அனைவருமே பொட்டு வைப்பதை மறுக்க வேண்டும் அல்லவா?

ஐயப்பசாமி மாலை போட்ட மாணவர்கள் கல்லூரிக்கு வரும்போது ஏதும் சொல்லாமல் அவர்களை  அனுமதித்துக் கொள்கிறோம் என்பது உண்மைதானே!

இந்துமத குறியீடுகளையும், உடைகளையும் அனுமதிக்கக் கூடிய நாம், இஸ்லாமிய சிறுமிகள் ஹிஜாப் அணிந்து வருவதை ஏன் தடுக்க வேண்டும்?  இஸ்லாமிய சிறுவர், சிறுமிகள் மீது குறிவைத்து இந்திய அரசு, பாஜக கர்நாடக அரசு, அதிகாரிகள், பள்ளி நிறுவனங்கள் தாக்குவதன் நோக்கம் என்ன?

கல்லூரிகளில் மற்றும் சிறைச்சாலைகளில் அரசு அலுவலகங்களில் இந்து மத கடவுள்களின் படங்களும், சிலைகளும், சிறு கோயில்களும் இருக்கின்றனவே, மதச்சார்பற்ற ஒரு நாட்டில் கல்வி நிறுவனங்களில் இதுபோல சாமி சிலைகள் இருக்கலாமா என்று அவற்றை உடைத்து அள்ளியிருக்க வேண்டும் என்று இந்த ஒற்றுமை, -ஒருமைப்பாட்டு பாதுகாவலர்கள் குரல் கொடுத்தது உண்டா?

இந்து சமூகத்தில் ஒரு பிரிவினர் கருவறைக்குள் நுழைகிறார்கள்; பிறர் மண்டபம் வரை வருகிறார்கள்; சிலர் வாசல் வரை வந்து கோயிலை வெளியில் இருந்து கும்பிடுகிறார்கள். ஒருவன் அதிகாரம் செய்கிறான்; மற்றவர்கள் கைகட்டி வெளியில் நிற்கிறார்கள். இந்த பாகுபாட்டை நீக்குவதற்கு காவிக்கும்பல் என்றைக்காவது குரல் கொடுத்தது உண்டா?

வர்ணாசிரமம்

 

பிறப்பின் அடிப்படையில் பாகுபாட்டை காட்டுகின்ற பூணூலை கழற்றச் சொல்லாத ஒருவனுக்கு, ஹிஜாபைப் பற்றிப் பேச உரிமை உண்டா? பிறவி அடிப்படையில் பாகுபாட்டை நிலைநிறுத்தும் வர்ணாசிரமத்தின் அடையாளமாக பூணூல் விளங்குகிறது. ஆனால் அது சட்டைக்கு உள்ளேதானே  இருக்கிறது என்று பேசுகிற அளவிற்கு நம்மில் மூடர்கள் இல்லை.

கடந்த காலத்தில் பல சாதிப்பெண்களின் மார்பை ஆடை கொண்டு மறைக்க அனுமதித்தார்களா?

உடை கட்டுப்பாடு பற்றி பேசுகிற இந்த காவி புண்ணியவான்கள் கடந்தகாலத்தில் எப்படிப்பட்ட உடை விதிமுறைகளை (dress code) வகுத்துக் கொடுத்திருந்தார்கள் என்பதை அறிந்து கொள்ள அதிர்ச்சியாக இருக்கும். திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட திருவிதாங்கூர் மன்னரின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பதினெட்டு சாதிகளைச் சேர்ந்த பெண்களுக்கு இடுப்புக்கு மேலே உடலை மறைக்க அனுமதி இல்லை. உயர் சாதிக்காரர்கள் வரும்போது, பெண்கள் தங்கள் உடலை மறைக்காமல் நிற்பது உயர்சாதியினருக்கு அளிக்கும் மரியாதை என்று வரையறுக்கப்பட்டது. இந்த புண்ணியவான்களின் உடை கட்டுப்பாட்டை எதிர்த்து, 1822 இல் கொத்தளாவிளை என்ற இடத்தில் போராட்டம் தொடங்கியது.

படிக்க:

ஹிஜாப் பிரச்சனை அல்ல ! 

பெண்களின் மார்பகங்களை மறைக்க அனுமதி கோரும் போராட்டம் 1859 இல் முடிவடைந்தது. ஆங்கிலேயர் 1865 இல் சட்டம் இயற்றி  அனைத்து சாதிப் பெண்களும் தங்கள் மார்புப் பகுதியை துணி கொண்டு மறைக்கலாம் என்று அனுமதி கொடுத்தார்கள்.  இன்று காவிக் கொடி பிடிக்கும் இவர்களின் பாட்டன், பூட்டன்களை, பாட்டி, பூட்டிகளைப் படாதபாடுபடுத்தினார்கள். அதே காவி புண்ணியவான்கள்தான் இன்றளவும் பிரச்சனைகளைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்.  மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தாங்கள் ஒரு மதத்தைச் சேர்ந்தவர்கள் என்று கருதிக்கொண்டு, இவர்களுடைய ஏவல் கருவிகளாகப் பயன்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரே சுடுகாடு கேட்பீர்களா?

ஹிஜாப் உடையால் வேற்றுமை வந்துவிட்டது என்று வேதனைப்பட்டு, காவிக் கொடியை தூக்கிக் கொண்டு கலவரம் செய்த செய்ய வந்த இளைஞர்கள்-மாணவர்கள் ஒன்றை உணர வேண்டும். ஒரே சுடுகாடு வேண்டுமென்று கேளுங்கள். உங்களை எவரும் ஒரு சுடுகாட்டில் புதைக்கப் போவதில்லை. ஒவ்வொருவருக்கும் சாதி இருக்கிறது. ஏற்றத்தாழ்வு இருக்கிறது. சுடுகாடு வசதி கூட இல்லாத சில சாதிகள் இருக்கின்றன. உங்கள் மதத்துக்குள் வேற்றுமையை நீக்கப்பாடுபடாத நீங்கள், சிறுமிகளின் உடையால்  வேற்றுமை வந்துவிட்டது என்று கலவரம் செய்ய வருவது என்ன நியாயம்? இஸ்லாமியப் பெண்களிடம் வம்பு செய்கின்ற கலவரக்காரர்களுக்கு ஒரு கேள்வி. உங்களைத் தூண்டி விடுகிற மனிதன் நீங்கள் இறந்தால் உங்களை முதலில் ஒரு சுடுகாட்டில் புதைக்க அனுமதிப்பானா?

விதிமுறைகளின்படி சீருடைதான் அணிகிறார்கள்!

விதிமுறைகளின்படி இஸ்லாமிய பெண்கள் பள்ளி சீருடையை தான் அணிகிறார்கள். கூடுதலாக தலையையும், கழுத்துப் பகுதியையும் மறைக்கக் கூடிய ஹிஜாபை அந்த பள்ளி சீருடையின் நிறத்திலேயே அணிகிறார்கள். அருவருக்கத்தக்க உடை அணிந்தால் அதை கட்டுப்படுத்த கல்லூரி நிர்வாகம் முயற்சிப்பது சரியானது. ஆனால் உடலை மறைக்கும் ஆடை அணியும் போது, அதை நீக்கச் சொல்வது என்ன நியாயம்?

நியாயத்தை யார் சொன்னாலும் சண்டைக்கு வருகிறார்கள் இவர்கள். மலாலா யூசுப்சாய் முஸ்லிம் பெண்களை ஒடுக்குவதை இந்தியத் தலைவர்கள் நிறுத்தவேண்டும் என்று கருத்து கூறியிருக்கிறார். இதற்கு பாஜக தேசிய செயலாளர் சி. டி ரவி இந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிடுவதற்கு இவர் யார் என்று கேள்வி எழுப்புகிறார். அதாவது இங்கு உள்ள மக்களின்  சனநாயக உரிமைகளை இவர்கள் ஒழித்துக் கட்டுவார்கள். இது குறித்து வேறு எவருமே எந்தக் கருத்தையும் உலக அளவில் கூறக் கூடாதா?  இது இவர்களுக்கு இந்தியாவின் உள் விவகாரமாம்.

இந்திய அரசியல் சட்டம் ஹிஜாப் உரிமையை உறுதி செய்வதாக வாதிடும் இஸ்லாமிய மாணவியர்!

போராடும் இஸ்லாமிய மாணவியர் தெளிவாகவே இருக்கிறார்கள், ஹிஜாப் அணிவது இந்திய அரசமைப்புச் சட்டம் எங்களுக்கு வழங்கிய உரிமை என்று கூறுகிறார்கள். இந்திய அரசமைப்பு சட்டத்தின் உறுப்பு- 14 இந்திய குடிமக்களின் சமத்துவத்தைக் கூறுகிறது. சட்டத்தின் முன் சமநிலை மற்றும் சட்டங்களின் சமபாதுகாப்பு ஆகியவற்றை உறுதி செய்கிறது.  அரசியல் சட்டக் கூறு-25  இந்திய நாட்டில் வாழும் அனைவருக்கும் எந்த சமயத்தையும் தழுவவும், தழுவியபடி வாழவும், அதைப் பரப்பவும், உரிமை உண்டு என்று கூறுகிறது. ஆனால் பொது ஒழுங்கு, ஒழுக்கநெறி, நலவாழ்வு ஆகியவற்றுக்கு பங்கம் வராதபடி பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறுகிறது. ஹிஜாப் அணிவது என்பது இஸ்லாமியப் பண்பாட்டின் ஒரு கூறு. அதை கடைபிடிக்க அவர்களுக்கு முழு உரிமை உண்டு. இது பொதுஒழுங்கு, ஒழுக்கநெறி, நலவாழ்வு ஆகியவற்றை எந்த வகையிலும் பாதிக்கவில்லை. கடந்த காலத்திலும் பாதிக்கவில்லை. இப்போதும் பாதிக்கவில்லை. இனிவரும் காலத்திலும் பாதிக்க வாய்ப்பில்லை.

பிரச்சினையை பிரச்சினையை தொடங்க காரணம் தேடி அலைகிறார்கள்!

பிரச்சனையை எங்கிருந்து தொடங்குவது என்று ஆர்எஸ்எஸ் அமைப்பு கவலை கொள்கிறது. இப்போது ஹிஜாப் அணிவதில் பிரச்சனையை தொடங்குகிறது.

ஹிஜாப் அணிய கூடாது என்று கல்லூரி நிர்வாகம் தடைவிதித்தது தவறு  என்று ரேஷம் என்ற பெண் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். 2 மாதத்தில்  வர இருக்கும் தேர்வு வரையிலாவது ஹிஜாப் பற்றிய உத்தரவை நிறுத்தி வைக்க வேண்டினார்கள். ஆனால் நீதிமன்றம் மறுத்துவிட்டது. சட்டத் துறையிலும், நிர்வாகத் துறையிலும் மட்டுமின்றி, நீதித்துறையிலும் இந்துத்துவவாதிகள் நிரம்பி இருக்கிறார்கள். நீதிமன்றம் போனாலே நியாயம் கிடைத்துவிடும் என்று கருதுவது ஒரு மூடநம்பிக்கை. அதிக எண்ணிக்கையில் நீதிபதிகள் உள்ள நீதிமன்ற அமர்விற்கு இப்போது அந்த வழக்கு தள்ளி விடப்பட்டிருக்கிறது.

போராடும் பெண்கள் அறிவு குறைவானவர்கள் என்ற செய்தியை இந்துத்துவவாதிகள் பரப்புகிறார்கள். முஸ்காம் சைநாம் பத்தாம் வகுப்பில் 87.52% மதிப்பெண் பெற்றவர். ரேஷம் சமூக அறிவியலில் 80% மதிப்பெண்கள் எடுத்தவர். ஆலியா ஆஸாடி அறிவியலில் 83% மதிப்பெண் பெற்றவர். இவர்கள் குடும்ப சூழலை சுட்டிக்காட்டி இழிவு செய்கிறது காவிக்கும்பல்.

ஆஸாடியின் தந்தை ஒரு ஆட்டோ ஓட்டுநர். தனியார் பள்ளியில் படிக்கும் அளவிற்கு வசதி இல்லாததாலேயே அரசுக் கல்லூரிகளில் இவர்கள் படிக்கிறார்கள். மதவாத உணர்வுள்ள கல்லூரி நிர்வாகத்தின் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

இஸ்லாமிய மாணவிகளுக்கு ஆதரவாக இந்தியாவில் எழும் குரல்கள்!

இன்று போராடும் இஸ்லாமிய மாணவிகளுக்கு ஆதரவாக, இந்தியா முழுவதும் ஆதரவு பெருகியிருக்கிறது. கர்நாடக ஹிஜாப் தடையை எதிர்த்து கல்கத்தாவில் பல்கலைக்கழக மாணவர்கள் பேரணியாகச் சென்றார்கள். கல்கத்தா பல்கலைக் கழக மாணவர்கள், மாணவியர் ஆதரவு குரல் எழுப்பி உள்ளார்கள். ஹைதராபாத்தில் யுனானி டிப்பி கல்லூரி, அன்வாருல் உலூம் கல்லூரி ஆகியவை போராட்டத்தை ஆதரித்து   ஆதரவு போராட்டங்களை நடத்தின.

இந்து ராஷ்டிரக் கனவில் காவிக்கொடியை ஏற்றுகிறார்கள்!

இந்நிலையில் “எதிர்காலத்தில் மூவண்ணக் கொடியை நீக்கி, காவிக் கொடி அவ்விடத்தை ஏற்கும் சாத்தியம் உள்ளதாக” ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் கே.எஸ். ஈஸ்வரப்பா O9.02.2022 அன்று தெரிவித்திருக்கிறார். இதுதான் அவர்களுடைய நோக்கம். இந்த நோக்கத்தை வெளிகாட்டும் வகையில் தான் இந்திய நாட்டின் கொடி பறந்த கம்பத்தில் அது இறக்கப்பட்டு, காவி கொடியை இவர்கள் ஏற்றினார்கள்.

Karnataka Hijab Row: Big Karnataka Protests Over Hijab Row, Court Appeals  For Peace: 10 Points

டெல்லியில் 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து  ஓராண்டுக்கு மேலாக போராட்டம் நடந்தபோது, செங்கோட்டையில்  இந்தியக்கொடியின் அருகில் விவசாய கொடியை ஏற்றியவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுத்த அரசு, இப்போது இந்தியக் கொடி கம்பத்தில் காவி கொடியை ஏற்றியவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் சும்மா இருப்பது ஏன்?

இந்துராஷ்டிரத்தைப் படைத்து விடுவதற்காக இந்துக்களை ஒருங்கு திரட்ட இஸ்லாமியர்களை எதிரியாகக் காட்டுகிகிறார்கள். அவர்களுடைய உத்திகளைப் புரிந்து கொண்டதால்தான், இஸ்லாமியர் அல்லாத இந்துக்களும், இறை நம்பிக்கை இல்லாதவர்களும் கூட “அல்லாஹு அக்பர்” என்றும் “ஜெய்பீம்” என்றும் முழக்கமிட்டு போராட்டக் களத்திற்கு வந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்துராஷ்டிரக் கனவில் மிதக்கும் காவிக் கூட்டம் ஒரு காலத்திலும் வெற்றி பெற முடியாது. காவியை எதிர்த்து, கருப்பு, சிவப்பு,வெண்மை, பச்சை, நீலம் – கடும் சமர் புரிய களத்துக்கு வரும். எல்லை மீறி ஆட வேண்டாம். எச்சரிக்கை!

முற்றும்.

பேராசிரியர் செயராமன்
நெறியாளர்,
தமிழ்மண் தன்னுரிமை இயக்கம்,

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here