பத்திரிக்கை செய்தி


புதுச்சேரி மின் துறையை தனியார்மயமாக்கும் சதியை முறியடிப்போம்!
போராடும் தொழிற்சங்கங்களுக்குத் தோள் கொடுப்போம்!
போராட்டத்தை வெற்றி பெறச் செய்வோம்!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே,

மின் துறையை தனியார்மயமாக்கும் நடவடிக்கையை மோடி தலைமையிலான மத்திய அரசு விரைவுபடுத்தியுள்ளது. இந்தியாவில் உள்ள 8 யூனியன் பிரதேசங்களில் மின் விநியோகத்தை தனியாருக்கு விடுவது என்ற மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கடந்த 16.05.2020 அறிவிப்பின் அடிப்படையில் புதுச்சேரி NR காங்கிரசு மற்றும் பாஜக கூட்டணி அரசு வேகம் காட்டி வருகிறது.

மோடி தலைமையிலான மத்திய அரசு மின்சார சட்ட திருத்த மசோதா – 2020 நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதாக அறிவிப்பு செய்ததில் இருந்தே புதுச்சேரி மின் ஊழியர்கள் பல்வேறு கட்டங்களாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர். தற்போது ரங்கசாமி தலைமையிலான புதுச்சேரி அரசு பொறுப்பேற்ற பின், புதுச்சேரி மின் துறையை தனியார்மயமாக்கும் நடவடிக்கைகள் தீவிரமெடுத்தன. இதன் விளைவாக இன்று (01.02.2022) முதல் காலவரையற்ற போராட்டத்தை அறிவித்துள்ளனர், மின் துறை ஊழியர்கள் மற்றும் பொறியாளர் சங்கங்கள். இந்தப் போராட்டத்தை நசுக்க வேண்டும் என்ற முனைப்போடு, போராடும் தொழிலாளர்கள் மீது வழக்கு, கைது, சிறை, பணி நீக்கம் என புதுச்சேரி அரசு மிரட்டி வருகிறது.

தற்போது அறிவித்துள்ள இந்தப் போராட்டம், அரசு ஊழியர்களாக உள்ள மின் துறை தொழிலாளர்களுக்கான போராட்டம் மட்டுமல்ல. மின்சாரத்தை பயன்படுத்தும், மின் நுகர்வோரான ஒட்டுமொத்த உழைக்கும் மக்களின் போராட்டம். மின்சாரம் தனியார்மயமானால், நாடே இருள்மயமாகும் என்பதற்கு நமது நாட்டிலேயே பல உதாரணங்களைச் சொல்லலாம்.

1990-களில் தனியார்மய, தாராளமய, உலகமய நடவடிக்கைகள் அமுல்படுத்தப்படுவதற்கு முன்பு வரை, மின் கட்டணங்களில் எந்தவித பெரிய மாற்றங்களும் இன்றி, சாதாரண மக்களும் பயன்பெறும் வகையில் மின் துறை சேவை நோக்கோடு செயல்பட்டு வந்தது.

தனியார்மய நடவடிக்கைகள் வேகமெடுக்கத் துவங்கிய 2000 ஆண்டுகளின் துவக்கத்தில், மகாராஷ்ட்ரா-வின் தபோல் மின் நிலையத்தைத் துவங்கிய என்ரான் தனியார் மின் உற்பத்தி நிறுவனம், மின்சாரத்தின் உற்பத்தி விலையை ஆரம்பத்தில் படிப்படியாக உயர்த்திய நிறுவனம், போகப்போக தாறுமாறாக உயர்த்தியதால், 920 கோடி லாபத்தில் இயங்கி வந்த மகாராஷ்ட்ரா மின் துறை, அந்நிறுவனத்துக்கு மின் கட்டணமாகவும், மானியமாகவும் 725 கோடி தர வேண்டிய நிலை ஏற்பட்டது. அதனால், அந்த நிறுவனத்திடம் இருந்து மின்சாரம் வாங்குவதையே நிறுத்தியது மகாராஷ்ட்ரா அரசு. எனினும், மின்சாரம் வாங்காவிட்டாலும், நிலைக்கட்டணம் செலுத்த வேண்டும் என்ற ஒப்பந்தத்தின் மூலம் வாங்காத மின்சாரத்திற்கு கோடிக்கணக்கில் நிலைக்கட்டணம் செலுத்தியே திவாலாகிப் போனது மகாராஷ்ட்ரா மின்துறை.

நமது அண்டை மாநிலமான தமிழ்நாடு மின்சார வாரியம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகமாக மாற்றப்பட்ட பிறகு, அதாவது, சமீபத்திய ஆண்டுகளில் மின் கட்டணங்கள் தாறுமாறாக உயரத் தொடங்கியது என்பதையும், அதே வகையில் புதுச்சேரியிலும் மின் கட்டண உயர்வு அமுலாகியது என்பதையும் பொருத்திப் பார்க்கலாம்.

தனியார்மயம் அமுலாகத் தொடங்கியது முதல், மின் உற்பத்தியில் ஈடுபட்டிருந்த அரசு நிறுவனங்கள், கொஞ்சம் கொஞ்சமாக விலக்கப்பட்டு, தனியாரிடம் மின்சார கொள்முதல் நடந்தது. அது வரையில் லாபத்தில் இயங்கி வந்த மின் துறை, தனியார் நிறுவனங்களின் கொள்ளை லாபத்திற்காக விலை உயர்த்தப்பட்டு, அந்த சுமை முழுவதும் உழைக்கும் மக்கள் மீது திணிக்கப்பட்டது. எனவே, மின் விநியோகத்தில் மக்கள் நலன் என்ற சேவை நோக்கம், தற்போது லாபம் பார்ப்பது என்ற வியாபாரமாக மாற்றப்பட்டு விட்டது. அதனால் தான், கோரோனாவில் மக்கள் கொத்து கொத்தாக செத்துக் கொண்டிருந்த போதும், புதுச்சேரியில் மூன்று முறை மின்கட்டணம் உயர்த்தப்பட்டது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

தனியார்மயத்தின் இந்த சட்டப்பூர்வக் கொள்ளையை மறைத்து, அரசின் மின் துறையில் நிகழும் லஞ்சம், ஊழல், முறைகேடுகள் போன்றவற்றை அரசு தடுக்க வேண்டும் என்பதற்குப் பதிலாக, அரசும், துறை அதிகாரிகளும் அதை வளர விட்டு விட்டு, இன்று தனியார்மயமாக்குவதற்கு அதையே ஒரு காரணமாக மக்கள் முன் வைத்து மக்களை ஏமாற்றுகின்றனர்.

உண்மையில், மின்சார உற்பத்தி தனியாருக்குக் கொடுத்ததன் விளைவை இன்று மக்கள் ஒவ்வொருவரும் மின் கட்டண உயர்வு என்ற வகையில் அனுபவித்து வருகின்றனர். தற்போது மின் விநியோகமும் தனியாருக்கு மாற்றப்படுமானால் ஏற்படும் விளைவுகளைக் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது.

ஏற்கனவே மின் கட்டணங்களை நிர்ணயிக்கும் அதிகாரம் அரசிடமிருந்து, மின்சார ஒழுங்கு முறை ஆணையம் எனும், அரசுக்குக் கட்டுப்படாத அமைப்பிடம் தாரை வார்க்கப்பட்டு விட்டது. மின் கட்டண உயர்வோ, மின் நுகர்வோர் குறையோ எதையும் இனி இந்த ஆணையத்திடம் முறையிட்டுத் தான் தீர்க்க முடியும். ஆனால், அரசு மற்றும் தனியார் மின் நிறுவன அதிகாரிகளை உள்ளடக்கிய ஆணையத்தில் முறையிட்டு மின் உயர்வையோ, மக்கள் குறையையோ தீர்த்து விட முடியும் என்பது கேழ்வரகில் நெய் வடிகிற கதை தான்.

இந்த நிலையில், அடிக்கடி விலையேற்றம், 100 யூனிட்டுக்களுக்கு ஒரு விலை, வணிகப் பயன்பாடு, வீட்டுப் பயன்பாடுகளுக்கு ஒரு விலை என்ற நிலைமைகளை விட மோசமாக மாறும். குறிப்பாக, வீட்டிலிருந்தே மின் கட்டணத்தைக் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்படும். அவை, நேரடியாக ஜி.பி.எஸ். இணைப்பு மூலம் செயல்படுத்தப்படும். கேபிள் டிவி, போன் ரீசார்ஜ் போல முன் கூட்டியே பணம் செலுத்திப் பயன்படுத்தும் (PREPAID SYSTEM) முறை அமுல்படுத்தப்படும். இவை அனைத்தும் முறைகேடுகளையும், மின் திருட்டையும் தடுப்பதற்காக என்று நியாயப்படுத்தப்படுகிறது. உண்மையில், ஒட்டுமொத்த மின் துறையும் தனியார்மயமானால், மின்சாரத்தின் விலை, உற்பத்தி மற்றும் விநியோக நிறுவனங்களின் பங்குச் சந்தை ஏற்ற இறக்கத்திற்கு ஏற்பவும், பண்டிகைக் காலம், மழைக்காலம் எனவும், காலை, மாலை, இரவு எனவும் பயன்பாட்டு நிலை மற்றும் பருவ நிலைக்கு ஏற்பவும் மாற்றங்கள் அடையும். எனவே, மின்துறை தனியார்மயமாவதால் சில ஆயிரம் மின் ஊழியர்கள், பொறியாளர்கள், தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதை விட, புதுச்சேரியின் லட்சக்கணக்கான அடித்தட்டு மக்கள் தான் பாதிக்கப்படுவார்கள்.

எனவே, மின் துறை தனியார்மயத்திற்கு எதிரான போராட்டம் என்பது மின்சாரத்தைப் பயன்படுத்தும் நாம் ஒவ்வொருவரின் போராட்டம் என்பதை உணர்ந்து, இப்போராட்டத்திற்குத் துணை நிற்போம்! போராட்டத்தை வெற்றி பெறச் செய்வோம்!

 

இப்படிக்கு,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
புதுச்சேரி.
தொடர்புக்கு: 95977 89801

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here