டந்து முடிந்த பஞ்சாப், உத்திரபிரதேசம், உத்திரகாண்ட், கோவா, மணிப்பூர் உள்ளிட்ட 5 மாநில தேர்தல்களில் உத்திரபிரதேசம், உத்திரகாண்ட், கோவா, மற்றும் மணிப்பூர் ஆகிய 4 மாநிலங்களில் பா.ஜ.க. ஆட்சியை தக்கவைத்துள்ளது. பஞ்சாபில் காங்கிரசை வீழ்த்தி ஆம் ஆத்மி கட்சி ஆட்சியைப் பிடித்துள்ளது.

2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு ’முன்னோட்டம்’ என்று கார்ப்பரேட் மற்றும் பாசிச ஆர்.எஸ்.எஸ் கும்பலின் கைக்கூலி ஊடகங்களால் பரப்பப்பட்டு நாடே பெரிதும் எதிர்பார்த்த உத்திரபிரதேசத்தில் மொத்தமுள்ள 403 தொகுதிகளில் 274 தொகுதிகளை வென்று பா.ஜ.க. கூட்டணி மீண்டும் ஆட்சியமைக்கிறது. இம்மாநிலத்தில் ஆட்சியமைக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்ட அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சி கூட்டணி 124 தொகுதிகளை வென்றுள்ளது. காங்கிரஸ் வெறும் 2 தொகுதிகளை மட்டுமே வென்று அதலபாதாளத்திற்கு சென்றுவிட்டது.

உத்திரப் பிரதேச மாநிலத்தின் முக்கியமான பிரச்சினைகளான பசுவதை தடை சட்டத்தால் ஆங்காங்கே சுற்றித்திரிந்து வயல்வெளிகளை நாசம் செய்யும் மாடுகள், வேலையின்மை, மக்களுக்கான எந்தவித வளர்ச்சித்திட்டமும் இல்லை, மேற்கு உ.பி.-யில் உள்ள லக்கிம்பூர் கேரியில் விவசாயிகள் படுகொலை, உன்னாவ், ஹத்ரா பாலியல் வன்கொடுமைகள் போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு நடுவிலும் பா.ஜ.க. -வின் வெற்றி என்பது, பாஜக ஆட்சியில் நீடிக்க கூடாது என்று கருதும் அனைவருக்கும் ஒரு எச்சரிக்கை மணியாகும்.

பா.ஜ.க. யோகியின் 5 வருட ஆட்சியில் மக்களுக்கு பெரிதாக ஒன்றுமே செய்யவில்லையானாலும், கொரோனா ஊரடங்கு காலத்தில் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் நடக்க வைக்கப்பட்ட புலம்பெயர் தொழிலாளிகள் மற்றும் கொரோனா இரண்டாம் அலையில் சுடுகாட்டில் இடம் கிடைக்காமல் கங்கை ஆற்றில் வீசப்பட்ட பிணங்களின் உறவினர்களின் அமோக ஆதரவுடன் மீண்டும் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்திருக்கிறது.

மக்களை மிகச் சுலபமாக பிரச்சினைகளிலிருந்து திசைதிருப்பி, மத/சாதிவாரியாக சிந்திக்கவைக்கமுடியும் என்று நிரூபித்துள்ளது. குறிப்பாக விவசாயிகள் போராட்டம் நடந்த மேற்கு உத்திரபிரதேசம் மற்றும் முஸ்லிம்கள் செறிவாக இருக்கக்கூடிய தொகுதிகளிலும் அக்கட்சி வெற்றிபெற்றிருப்பது “Counter Polarization” எனப்படும் யாதவ மற்றும் முஸ்லீம் வெறுப்பு ஓட்டுக்கள் மூலம்தான் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்க்கட்சிகள் தனித்தனியாக போட்டியிட்டது, அவர்களின் பலவீனம் போன்றவை காரணம் என்றாலும், இந்த “Counter Polarization” என்ற கோணத்திலும் பா.ஜ.க.-வின் வெற்றியை கவனிக்க வேண்டியுள்ளது.

இந்துமத மாநாட்டில் வெளிப்படையாக முஸ்லிம்களின் மீது இனப்படுகொலைக்கு அழைப்பு விடுக்கப்பட்ட உத்திரகாண்ட் மாநிலத்தில் மொத்தமுள்ள 70 இடங்களில் பா.ஜ.க. 48 இடங்களை வென்று தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை தக்கவைத்துக்கொண்டுள்ளது.

கிறிஸ்துவர்கள் பெரும்பான்மையாக உள்ள கோவாவில் மொத்தமுள்ள 40 இடங்களில் 20 இடங்களை பா.ஜ.க. வென்றுள்ளது. ஆட்சியமைக்க 21 MLA-க்கள் வேண்டுமென்ற நிலையில் 3 சுயேச்சைகளின் ஆதரவுடன் பா.ஜ.க. மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது. சென்ற 2017 தேர்தலில் 13 இடங்களை மட்டுமே பெற்றிருந்த பா.ஜ.க., காங்கிரஸ் MLA-க்களை கடத்தி 20 இடங்களை வென்ற காங்கிரசை ஆட்சியமைக்கவிடாமல் தான் ஆட்சியில் அமர்ந்தது.

இந்தியாவின் பிற பகுதிகளிலிருந்து முற்றிலும் வேறுபட்ட இன, கலாச்சார, மத வழக்கங்கள் கொண்ட, இந்தியாவின் மேலாண்மையை எதிர்த்து ஆயுதப் போராட்டங்கள் மற்றும் சிறப்பு ஆயுதப்படை சட்டத்தை நீக்கக்கோரி பல்வேறு போராட்டங்கள் நடந்த வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் மொத்தமுள்ள 60 இடங்களில் 32 இடங்களை பா.ஜ.க. வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை தக்கவைத்துள்ளது. சென்ற 2017 தேர்தலில் நாகா பீப்பிள் ப்ரோண்ட், நேஷனல் பீப்பிள் பார்ட்டி போன்ற கட்சிகளுடன் கூட்டணிவைத்து 21 இடங்களை பிடித்து, 28 இடங்களை வென்ற காங்கிரசை ஆட்சியமைக்க விடாமல் பல்வேறு தகிடுதத்தங்களை செய்து பா.ஜ.க. ஆட்சியமைத்து. தற்போது தனித்து போட்டியிட்டு 32 இடங்களை வென்றுள்ளது.

கேரளா, தமிழ்நாடு, பஞ்சாப், தெலுங்கானா போன்ற சில மாநிலங்கள் தவிர இந்தியாவின் பிற மாநிலங்களில் பாசிச பா.ஜ.க. வெறும் போட்டோஷாப், கோவில்கள், சிலைகள் ஆகியவற்றை வளர்ச்சித் திட்டங்களாகக் காட்டியும், மக்களிடையே நிலவும் அறியாமை, மத/சாதி வாரியான பாகுபாடுகளை கிளறிவிட்டு தேர்தல்களில் ஆட்சியைப் பிடித்து வருகிறது. அதிலும் குறிப்பாக இந்த 5 மாநில தேர்தல்களில் வளர்ச்சி, வல்லரசு, 5 டிரில்லியன் பொருளாதாரம் போன்ற பொருளாதார அம்சங்கள் பிரதானமாக முன்னெடுக்கப்படவில்லை. மாறாக தீவிர இந்துத்துவா கொள்கைகள் மற்றும் மாநிலத்தின் தன்மைக்கு ஏற்ப கவர்ச்சி முழக்கங்கள் முன் வைக்கப்பட்டு பிரச்சாரம் செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா போன்ற பல்வேறு மொழி, இன, மதம், சாதி, பண்பாடு, கலாச்சாரங்களை கொண்ட மக்களிடையே ஓற்றை மொழி, ஒற்றை மதம், ஒற்றை கலாச்சாரத்தை வலியுறுத்தும் ஒரு பாசிச கட்சியின் அதிகரித்து வரும் செல்வாக்கு நிச்சயமாக சிந்திக்கக்கூடியது.  அதே சமயம் பாசிச ஆர்.எஸ்.எஸ்- பாஜகவை பிற அரசியல் கட்சிகளைப் போல மதிப்பீடு செய்து, தேர்தல் அரசியல் மூலம் மட்டுமே வீழ்த்தி விடலாம் எனக கருதுவது பாமரத்தனமானது என்பதையே இந்த தேர்தல் முடிவுகள் மீண்டும் எடுத்துக்காட்டுகின்றன..

பாஜகவின் அரசியல், பொருளாதாரக் கொள்கைகள் அனைத்தும் ஏகாதிபத்திய முதலாளித்துவ நாடுகள் மற்றும் உள்நாட்டு கார்ப்பரேட்டுகளுக்கு சேவை செய்வதையும், அதற்கு பார்ப்பன மேலாதிக்கத்தை நிறுவும் காவியமாக்குவதையும் தான் அடிப்படையாக கொண்டது என்பதை முன்னிறுத்தி அவர்களுக்கு எதிராக போராடும் அனைவரையும் ஒரு முனையில் இணைப்பது தான் காலத்தின் கட்டாயம். ஆனால் எதிர்கட்சிகள் நெல்லிக்காய் மூட்டைகள் போல சிதறிக் கிடப்பதும், மக்கள் மத்தியில் அரசியல் ரீதியாக பிரச்சாரம் செய்வதைக் காட்டிலும் சாதிய, இன, மத அடிப்படையில் கூட்டணிக் கணக்குகளை போடுவதிலும் கவனத்தை குவிப்பது பாஜகவை வீழ்த்த ஒரு போதும் உதவாது.

மக்களுக்கு விரோதமான என்ன திட்டம், சட்டம் கொண்டுவந்தாலும், மக்களுக்கு எதுவுமே செய்யவில்லை என்றாலும், பா.ஜ.க. தொடர்ந்து ஆட்சியில் இருந்து வருவதும், தேர்தல்களில் வெல்வதும் ஒன்றை மட்டும் தெளிவாகக் காட்டுகிறது. இந்தியாவின் சமூக கட்டமைப்பு பாசிசத்தின் விளைநிலமாக உள்ள சாதி அடுக்குகளினால் அதைக் கட்டிக் காக்கும் அரை நிலப்பிரபுத்துவ உறவுகளைக் கொண்டு கோட்டையைப் போல கட்டப்பட்டுள்ளது. அந்த கோட்டைக்குள் புகுந்து உடைக்க பொருத்தமான சித்தாந்த பார்வை வேண்டும், இல்லையென்றால் 20 ஆண்டுகளில் ஜெர்மனியை பாசிச நாடாக்கிய ஹிட்லருக்கும், அதன் அடியொற்றி 100 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் அனுபவம் வாய்ந்த ஆர்.எஸ்.எஸ் க்கும் உள்ள நெருக்கமான உறவை புரிந்துக் கொண்டு வீழ்த்தவும் முடியாது.

இதை இன்னும் புரிந்துகொள்ளாத எதிர்க்கட்சி தலைவர்கள் அடுத்து 2024-ஆம் ஆண்டு வர இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் எப்படி கூட்டணி அமைக்கலாம் என்று கணக்குப் போட்டுக்கொண்டு இருக்கிறார்கள். பாசிஸ்டுகளை தேர்தல் களத்தின் மூலமாகவே வீழ்த்தி விட முடியும் என்று நினைப்பவர்களை யோகி ஆதித்யாநாத் 2024-ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பின் அமைய இருக்கும் இந்து “ராஷ்டிராவுக்கு” அதன் பிரதமர் என்ற முறையில் வரவேற்பார் என்பது மட்டும் திண்ணம். இந்திய நாட்டு மக்களுக்கு எதிரான இந்த மிகப்பெரும் அபாயத்தை, கார்ப்பரேட்- காவி பாசிசத்தை வீழ்த்த என்ன செய்யப் போகிறோம் என்பதே நாட்டின் முன் நிற்கும் முக்கிய கேள்வி?

  • ஜூலியஸ்

(குறிப்பு: மேலும் தரவுகளுடன் விரிவான கட்டுரை விரைவில் வருகிறது)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here