தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்
பத்திரிக்கை செய்தி


தமிழ்நாடு முழுவதும் அபரிமிதமாக பெய்த மழையினால் சுமார் நான்கு லட்சம் ஏக்கர் வேளாண் பயிர்கள் அழிந்து போய் விட்டது. பாதிப்பு குறித்து கணக்கெடுப்பு நடத்தி பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் இழப்பீடு வழங்க வேண்டுமென்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் உட்பட பல்வேறு அமைப்புகளும் வலியுறுத்தின.

 

நிவாரணம் தொடர்பாக முதலமைச்சரின் இன்றைய அறிவிப்பு விவசாயிகளுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சுட்டிக்காட்டுகிறது. அரசின் இப்போதைய அறிவிப்பால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான விவசாயிகளுக்கு எந்த நிவாரணமும் கிடைக்காது. ஏக்கருக்கு 20 ஆயிரம் செலவழித்து நட்ட பயிர் முற்றிலும் அழிந்து போய் கை முதலை இழந்தும், கடன் வாங்கியும் செலவழித்த விவசாயிகள் மீள முடியாத துயரத்தில் உள்ளனர்.
அறுவடைக்கு தயாராக இருந்த சார் பருவ நெற்பயிருக்கு ஏக்கருக்கு எட்டாயிரம் என்று அறிவிக்கப்பட்டுள்ளதும் மிகச் சொற்பமானது. மறு நடவு செய்பவர்களுக்கு ஏக்கருக்கு 2400 ரூபாய் மதிப்புள்ள விதை, உரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஏற்கனவே நட்ட பயிர் அழிந்து போனதற்கு எவ்வித நிவாரணமும் அறிவிக்காதது சரியல்ல என்பதை சுட்டிக்காட்டுகிறோம்.

மறு நடவு செய்வது காவிரி நீரை நம்பி இருக்கக்கூடிய டெல்டா மாவட்டத்திற்கு உதவி செய்யாது. ஏனென்றால், ஜனவரி 28ந் தேதி மேட்டூர் அணை மூடப்படும் என்ற நிலையில், கதிர் வரும் நேரத்தில் நீரின்றி கருகிவிடும் ஆபத்தை மறுப்பதற்கில்லை.

எனவே, தமிழ்நாடு அரசு தனது அறிவிப்பை மறுபரிசீலனை செய்து, அறிவிக்கப்பட்டுள்ள நிவாரண தொகையை அதிகரிப்பதுடன், பயிர் அழிந்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் இழப்பீடு வழங்க முன்வர வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்துகிறது. ,

பெ.சண்முகம்
மாநில பொதுச்செயலாளர்
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here