அன்பார்ந்த தோழர்களே!
மக்கள் அதிகாரம் ஊடகம் முகநூல் பக்கத்தில் இணைந்த 2 மாதத்தில் ஐயாயிரம் பேர் எமது நட்பு வட்டத்தில் இணைந்தனர். தனிப்பட்ட முகநூல் கணக்கில் 5000 பேருக்கு மேல் இணைக்க சாத்தியமில்லை என்பதால் தனியே ஹோம் பேஜ் ஒன்றை துவக்கினோம். அதில் சில நாட்களுக்குள் 800-க்கும் அதிகமானோர் இணைந்தனர். மக்களுக்கான மாற்று ஊடகம் என்ற பெயரில் தனிநபர்கள், சில பிரபலங்கள் நடத்துகின்ற ஊடகங்களைப் போல எமது முகநூல் பக்கம் கிடையாது. ஏனென்றால் மாற்று சோசலிசம், கம்யூனிசம் தான் என்பதில் எந்த ஊசலாட்டமும் இன்றி முன்வைக்கிறோம். அதே சமயத்தில் மார்க்சிய- லெனினிய சித்தாந்தத்தை வெறும் வரட்டு கோட்பாடுகளாக முன்வைப்பதற்கு பதில் அது சென்றடைய வேண்டிய மக்களின் சிந்தனை ஓட்டத்தை அடைகின்ற வகையிலும், வடிவத்திலும் நாங்கள் முயற்சி செய்து வருகிறோம். எங்கள் ஊடகத்தில் பிரபலங்கள், பிரமுகர்கள் யாரும் இல்லை. எமது அரசியல், சித்தாந்த கருத்துக்கள் தான் எமது அடையாளம். இதனை அங்கீகரித்து குறுகிய காலத்திற்குள் ஆயிரக்கணக்கானவர்கள் எம்முடன் இணைந்தது பற்றி ஆளும் வர்க்கமும், குறிப்பாக பேஸ்புக் என்ற ஏகாதிபத்திய நிறுவனமும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்னால் உங்களது பதிவுகள் எங்களது வரம்புகளுக்கு மேல் செல்கிறது என்று கூறி எமது முகநூல் பக்கத்தை முடக்கி வைத்தனர். எமது மேல்முறையீடு மற்றும் பல்வேறு தரப்பில் இருந்தும், வாசகர்களிடம் இருந்தும் எழும்பிய கண்டனக்குரல் ஆகியவற்றின் அடிப்படையில் மீண்டும் எமது ஹோம் பேஜ் இயங்குவதற்கு அனுமதி கொடுத்துள்ளனர். இது எத்தனை காலம் நீடிக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் வலதுசாரி பாசிஸ்டுகள் அதிகாரத்தில் அமர்ந்துகொண்டு ஜனநாயகத்திற்கு சவால் விட்டும், குழி தோண்டி புதைத்துக் கொண்டும் வருகின்றனர். இந்த வரம்புகளுக்கு உட்பட்டு எவ்வளவு நாள் அனுமதிப்பார்கள் என்று கூற இயலாது. எனினும் நாங்கள் ஏற்றுக் கொண்ட பொறுப்புணர்ச்சி அடிப்படையில் தொடர்ந்து நடத்துவோம். கார்ப்பரேட்- காவி பாசிசம் ஏறித்தாக்கி வரும் சூழ்நிலையில் அதற்கு அஞ்சாமல் எமது கருத்துக்களை முன்வைத்து பிரச்சாரம் செய்வோம். உங்கள் ஆதரவை தொடர்ந்து வழங்க வேண்டும் என்று கோருகிறோம்.

தோழமையுடன்,
ஆசிரியர் குழு,
மக்கள் அதிகாரம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here