கேரள மாநிலத்தில் உள்ள விழிஞ்சம் பகுதியில் கன்டெய்னர்களைக் கப்பல்களில் ஏற்றி இறக்குவதற்கான துறைமுகத்தை அமைக்கும் திட்டத்தை கடந்த 2015-ம் ஆண்டில் அப்போதைய காங்கிரஸ் அரசு தொடங்கியது. ரூ. 7,525 கோடி மதிப்பிலான இந்தப் பணிகளை செய்வதற்கான ஒப்பந்தத்தை அதானி நிறுவனம் எடுத்துள்ளது. இப்பணிகளை அதானி குழுமம் தொடங்கியதிலிருந்தே அப்பகுதிமக்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இது பேரழிவுத் திட்டம். எனவே, அரசு உடனடியாக கைவிட வேண்டும் என குரல் எழுப்பி வந்தனர். ஆனால், அப்போதைய காங்கிரஸ் அரசும் தற்போதைய சிபிஎம் அரசும் திட்டத்தை கைவிட மறுத்து தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வருகிறது.

அரசுக்கு நட்டம்!
அதானிக்கு கொள்ளை லாபம்!

25 ஆண்டுகளுக்கு முன்பு இந்த துறைமுகம் பற்றிய முதல் திட்ட அறிக்கை கொடுத்த போது, அது PPP (Private Public Partnership) மாடலில் தான் செயல்படுத்த உத்தேசித்தனர். அதன்பிறகு 2015-ல் அப்போதைய காங்கிரஸ் அரசு அதானி குழுமத்துடன் சலுகை ஒப்பந்தம் (Concession Agreement) என மாற்றியது. சலுகை திட்டம் என்பது, மக்களின் வரிப்பணத்தை நிதியாகவும், சில சிவில் உரிமைகளையும் அரசே உதவியாக தனியார் நிறுவனத்திற்கு கொடுத்து தொடங்கப்படும் திட்டமாகும்.

இத்திட்டத்தின் படி, அதானி நிறுவனத்துக்கு 40 வருடங்களுக்கு இந்தத் துறைமுகத்தில் உரிமை இருக்கும். திட்டச் செலவான ரூ. 7,525 கோடியில் 67% தொகையை மத்திய மற்றும் மாநில அரசும் 33% தொகையை அதானி நிறுவனமும் செலவிடும்.

அரசின் 67% செலவு தொகையில் மாநில அரசு ரூ. 3,436 கோடி செலவு செய்து நிலம் கையகப்படுத்துதல், நிலம் சமநிலைப்படுத்துதல், அகழ்தல் (துறைமுகம் 18 மீட்டர் ஆழத்துக்கு திட்டமிடப்பட்டு இருக்கிறது), தூர்வாருதல், கட்டுமானத்துக்கு ஏற்றவகையில் அந்தப் பகுதியை உறுதிப்படுத்துதல், கால்வாய் சுவர் அமைத்தல், ரயில் மற்றும் துறைமுகத்திற்கு சாலை வசதிகள் அமைத்தல் செய்ய வேண்டும்.

இதுமட்டுமின்றி, இந்தத் திட்டம் காரணமாக இடம் மாறும் கிராமங்களுக்கு மாற்று ஏற்பாடு செய்தல், வாழ்வாதாரம் பாதிக்கும் மீனவர்களுக்கான மாற்று தொழில் ஏற்பாடுகள், நஷ்ட ஈடுகள் என பல செலவுகள் மாநில அரசுக்கு இருக்கும் நிலையில், திட்டம் தொடங்கிய போது இருந்த நிலையை விட தற்போது புதிதாக நிலம் கையகப்படுத்துவதற்கான செலவு 2829 கோடி ரூபாயாகவும், சாலை அமைப்பதற்கான செலவு 2039 கோடி ரூபாயாகவும் அதிகரித்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. புதிய ரயில் பாதை அமைப்பதற்கான செலவு 2104 கோடி ரூபாய் என ரயில்வே அமைச்சகம் மதிப்பிட்டுள்ளது.

இந்த மதிப்பீடுகளின் படி, சாலை ரூபாய் 4868 கோடிகள் மற்றும் இரயிலுக்கு ரூபாய் 2104 கோடிகள் என மொத்தம் 6972 கோடிகள் தேவைப்படுகிறது. அதாவது, கேரள அரசு சாலை மற்றும் இரயில் திட்டங்களுக்கு முந்தைய மதிப்பீட்டில் 1973 கோடி ரூபாய்க்கு பதிலாக 4999 கோடி ரூபாய் கூடுதலாக ஒதுக்க வேண்டும். இதனால் மொத்த முதலீட்டில் 5000 கோடி ரூபாய் நிகர அதிகரிப்பு இருக்கும். இதனால் இத்திட்டத்தின் மொத்த மதிப்பீடு ரூ.12500 கோடி என மாறுகிறது. இதனால் ஏற்கனவே கடன் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் கேரள அரசின் கடன் சுமை அதிகரித்து, மக்கள் நலன் சார்ந்த மற்ற சமூக நலத் திட்டங்களை செயல்படுத்த பணமில்லாத நிலை உருவாகும்.


இதையும் படியுங்கள் : எச்சரிக்கை. ஊழல்  + மோசடி= கௌதம்  அதானி குழுமம்.


மறுபுறம், மத்திய மற்றும் மாநில அரசுகள் பொது-தனியார் திட்டங்களுக்கான (பிபிபி) வைபிலிட்டி கேப் ஃபண்டிங் (வி.ஜி.எஃப்) திட்டத்தின் கீழ் அதானி குழுமத்திற்கு ரூ.1,635 கோடி மானியமாக வழங்கும்.மேலும், துறைமுகத்திற்காக தரப்பட்ட 190 ஏக்கர் நிலத்தை நிதிதிரட்டுவதற்கு அதானி குழுமம் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற விதியும் ஒப்பந்தத்தில் உள்ளதால் நிலத்தை வங்கிகளில் அடமானம் வைத்து நிதி திரட்டவும் செய்யும் அதானி குழுமம் .

அதானி செலவிடும் 33% தொகையான ரூ.2,454 கோடி என்பது கன்டெய்னர் யார்ட் மற்றும் டெர்மினல் கட்டிடங்கள் கட்டுமானம், சரக்கு கையாளும் கருவிகளை வாங்குதல் – இயக்குதல், துறைமுகத்தை இயக்குதல் மற்றும் பராமரித்தல் ஆகிய செலவுகளுக்கு என பிரிக்கப்பட்டுள்ளது.

ஆனால், துறைமுகம் அமைக்கப்பட்ட பிறகு வரும் வருமானத்தில் 90% அதானிக்கும் 10% அரசுக்கும் கிடைக்குமாம். அதாவது, ரூபாய் 6,972 கோடி செலவிடும் அரசுக்கு 40 ஆண்டுகளில் 2,181 கோடியும், மொத்த செலவில் ரூபாய் 2,454 கோடி மட்டுமே செலவிடும் அதானிக்கு அதே 40 ஆண்டுகளில் 21,346 கோடியும் வருவாயாக கிடைக்குமாம். அதாவது 21,346 கோடி அதானிக்கும் 2,181 கோடி அரசுக்கும் வருவாய் பங்குத் தொகையாக கணக்கிடப்பட்டு உள்ளது.

அதானி மோடியின் நெருங்கிய நண்பர் என்பதால் அதானி குழுமத்தின் செலவுத் தொகையும் ஏதோ ஒரு வகையில் அரசு வங்கிகளில் கடனாகப் பெற மத்திய அரசு ஏற்பாடு செய்யும் என்பதே நிதர்சனமான உண்மை. சுருக்கமாகச் சொன்னால் ஒரு நயா பைசா செலவில்லாமல் துறைமுகத்தின் மொத்த நிர்வாகமும், 40 வருட லாபமும் அதானிக்கு சுளையாகக் கிடைக்கும். மக்களின் வரிப்பணத்தை செலவு செய்த அரசுக்கு பட்டை நாமம் மட்டுமே கிடைக்கும்.

வளர்ச்சி என்ற பெயரில்
சுற்றுச்சூழல் நாசம்!

இந்திய துணைக்கண்டத்தில் உள்ள சர்வதேச கப்பல் வழித்தடங்களுக்கு அருகில் அமைந்துள்ள ஆழ்கடல் துறைமுகமாகவும், இந்தியாவின் முதல் மிகப்பெரிய பரிமாற்றக் கொள்கலன் முனையமாக (Mega Transhipment Container Terminal) விழிஞ்சம் துறைமுகம் அமைக்கப்படுவது வளர்ச்சி என்று பெருமைப்பட்டு கொள்கிறது மோடி அரசு.

இத்துறைமுகம் செயல்பாட்டுக்கு வந்தால் கொழும்பு செல்லும் கப்பல்களை விழிஞ்சத்துக்கு ஈர்க்க முடியும். சென்னை, தூத்துக்குடி, கொச்சி துறைமுகங்களிலிருந்து இப்போது கொழும்பு வழியாக செல்லும் நமது சரக்குகள் விழிஞ்சம் வழியாக செல்ல முடியும். அது இந்தியப் பொருளாதாரத்தை அதிவேகமாக உயர்த்தும். கிழக்கு – மேற்கு கடல் வழித்தடத்தில் பயணிக்கும் கப்பல்களுக்கான முக்கிய நிறுத்தமாக விழிஞ்சம் உருவாகும். மத்திய தரைக்கடல் பகுதி நாடுகளுக்கும் அதன் நீட்சியாக ஐரோப்பிய நாடுகளுக்கும் புதிய விரைவான கடல் வழித்தடம் உருவாகும். எனவே, இது இந்தியப் பொருளாதாரத்தில் வளர்ச்சியையும் உருவாக்கும் என்கிறது மோடி அரசு.

வளர்ச்சி என்ற பெயரில் இத்துறைமுகம் அமைக்க கடலின் அடிப்பகுதியை 120 ஹெக்டேர் பரப்பளவு துளைக்கப்பட உள்ளது. மீனவ மக்களின் நிலம் சுமார் 450 ஹெக்டேர் கையகப்படுத்தப்படுகிறது. துறைமுகத்தில் நிறுத்தப்படும் கப்பல்களை, அலைகள் மற்றும் புயல்கள் தாக்காமல் இருக்க கடலலை வரும் திசைக்கு செங்குத்தாக பிரேக் வாட்டர்கள் 3.2 கி.மீ. தூரம் கடற்கரைக்கு செங்குத்தாக அமைக்கப்பட உள்ளது.

கடலின் அடிப்பகுதியை துளைப்பது, பிரேக் வாட்டர்கள் அமைப்பது மற்றும் இதர கட்டுமான பணிகள் ஆகியவற்றின் மூலம் கடல் அரிப்பு அதிகமாகி பேரழிவு ஏற்படும் என்கின்றனர் சுற்றுச்சூழல் நிபுணர்கள்.

குறிப்பாக, பிரேக் வாட்டர் கட்டப்படுவதால் அவை கடல் நீரோட்டத்தின் திசையே மாற்றுகிறது. இதனால் அடிக்கடி கடல் கொந்தளிப்புகள், சீற்றம் ஏற்படுவதுடன் கடலில் விபத்துகளும், சில நேரங்களில் உயிரிழிப்புகளும் ஏற்படுகிறது என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு அவர்களது வாழ்வாதாரமும் பெரிதும் பாதிக்கப்படுகிறது என்கின்றனர் சுற்றுச்சூழல் நிபுணர்கள்.

துறைமுக கட்டுமான பணிக்கு தேவையான கற்களை எடுப்பதற்கு குவாரிகளை அமைக்க அதானி குழுமத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது தேசிய வனவிலங்கு வாரியம். அதானி குழுமம் குவாரிகளை தொடர்ந்து நடத்துவதால் சுற்றுச்சூழலை முற்றிலும் பாதிப்படையச் செய்யும் என்கிறார் கோஸ்டல் வாட்ச் (Coastal Watch) என்ற தன்னார்வ தொண்டு நிறுவன உறுப்பினரும் விழிஞ்சம் திட்டத்தை ஆரம்பத்தில் இருந்து எதிர்த்து வருபவருமான ஏ.ஜெ.விஜயன்.

மேலும், மேற்கு தொடர்ச்சி மலைகள் உள்ள இந்த மாநிலத்தில் அதிகளவில் மலைச் சரிவுகள் இயல்பான ஒன்று தான். ஆனால் இங்கிருக்கும் 30-க்கும் மேற்பட்ட குவாரிகளால் மலைச் சரிவுகள் அதிகளவில் ஏற்பட்டுள்ளன. கடந்த 2019 ஆம் ஆண்டில் ஏற்பட்ட மலைச்சரிவில் சிக்கி சுமார் 50- க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். அது மட்டுமின்றி, திருவனந்தபுரத்திற்கு நீராதாரமாக இருக்கும் பகுதிகளான பெப்பரா மற்றும் நெய்யாறு இங்கு தான் உள்ளது. இதனால் குவாரிகளால் நிலத்தடி நீரும் பெரிதளவில் பாதிக்கப்படும் என்கிறார் ஏ.ஜெ.விஜயன்.

மறுபுறம், துறைமுகம் அமைக்கப்படும் பகுதி மீனவர்களின் கிராமங்களான அடிமலத்துறை, சொவ்வாரா, சபத்து, அழிமலா, புளியங்குடி, முல்லூர், நெல்லிக்குன்னு, தோட்டம், கரிம்பள்ளிக்கரா, கொட்டாப்புரம் ஆகிய சுமார் 40 கிராமங்கள் பாதிக்கப்பட்டு அவர்களுக்கான வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகியுள்ளது. சுற்றுச்சூழல் நாசமாக்கி சொந்த நாட்டு மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குள்ளாகி அழிவதுமே வளர்ச்சி என்கிறது மோடி அரசு.

மக்களின் போராட்டமும்!
சி.பி.எம் துரோகமும்!

அதானியின் துறைமுகத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது எனக் கூறும் 40 கிராமங்களைச் சேர்ந்த மீனவ மக்கள் கடந்த ஜூலை 20 போராட்டத்தைத் தொடங்கினர். அப்போராட்டம் ஆகஸ்ட் 16 ஆம் தேதி தீவிரமடையத் தொடங்கியது.

போராடும் மீனவ மக்கள் தங்களுக்கு நிரந்தரத் தீர்வு வேண்டும் என்பது உள்ளிட்ட 7 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்துப் போராடி வந்தனர். கேரள அரசு போராட்டத்தை ஒடுக்க மக்களின் மீது வன்முறையை ஏவியது. இதனால், அக்டோபர் 27 அன்று மீனவர்கள் மீன்பிடி படகுக்கு தீவைத்தும், போலீஸ் தடுப்புகளை கடலில் வீசியும் போராட்டத்தை ‌இன்னும் கூடுதலாக தீவிரப்படுத்தினர்.


இதையும் படியுங்கள் : விவசாயிகளின் வருமானம் அழிகிறது! அதானிக்கு செல்வம் கொழிக்கிறது! இதுவே கார்ப்பரேட் பாசிசம்!


குறிப்பாக, மக்கள் இரு குழுக்களாகப் பிரிந்து ஒரு பிரிவினர் தங்களின் மீன்பிடி படகுகளைக் கொண்டு கடலுக்குள் இறங்கி கடல் வழியாகவும் துறைமுக கட்டுமானப் பணிகளை நடத்த விடாமல் முற்றுகையிட்டனர். மற்றொரு பிரிவினர் மீனவர்கள் பெண்கள் குழந்தைகள் வயதானவர் உள்ளிட்டவர்கள் துறைமுக வாயிலில் போடப்பட்டிருந்த தடுப்புகளை உடைத்துக் கொண்டு துறைமுகத்தை நோக்கி அணிவகுத்துச் சென்று கௌதம் அதானியின் உருவபொம்மையை எரித்தனர். இதன் விளைவாக துறைமுகத்திற்கு தேவையான கட்டுமானப் பொருட்கள் எடுத்துச் செல்வது தடுத்து நிறுத்தப்பட்டது. இதன் பிறகே போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை தொடங்கியது கேரள அரசு.

போராட்டக்காரர்களுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில், தற்காலிக தீர்வாக வசிப்பிடத்தை இழப்பவர்களுக்கு ரூ.₹5,500 வாடகையும், படகுகளுக்கு எரிபொருளுக்கான மானியமும் மற்றும் தற்போது நடைபெற்று வரும் மறுவாழ்வு அடுக்குமாடிக் குடியிருப்புகளை ஓராண்டில் முடிக்கவும் மாநில அரசு உறுதியளித்தது.

இதனைத் தொடர்ந்து 130 நாட்களாக நடந்த போராட்டம் டிசம்பர் 06 அன்று தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது. போராட்டத்திற்கு தலைமை தாங்கிய விகார் ஜெனரல் யூஜின் பெரேரா, போராட்டத்தைத் தள்ளி வைப்பதாக அறிவித்துள்ளார்.

எனினும், கேரள துறைமுகத் துறை அமைச்சர் அகமது தேவர் கோயில், “பல பணிகள் முடிந்து விட்டதால், விழிஞ்சம் துறைமுகத் திட்டத்தை தற்போது நிறுத்த முடியாது. நிறுத்தினால் மாநில அரசுக்கு பெரும் நிதி இழப்பு ஏற்படும்” என அறிவித்துள்ளார். கேரள முதல்வர் பினராயி விஜயனோ, “அதானியின் துறைமுகத் திட்டத்தை கைவிட முடியாது. கைவிட்டால் கேரளாவின் நம்பகத்தன்மை போய்விடும்” என்கிறார். அதானி உள்ளிட்ட கார்ப்பரேட் முதலாளிகள் கேரள அரசின் மீது வைத்துள்ள நம்பிக்கை கெட்டுவிடக் கூடாது என்பதற்காக திட்டத்தைக் கைவிட மறுக்கிறார்.

மாநில சி.பி.எம். கட்சியோ, அதானி துறைமுகம் அமைக்கப்பட வேண்டும் அதுதான் வளர்ச்சி என நடத்தப்பட்ட பேரணியில் பாஜக கட்சியுடன் கைகோர்த்துக் கொண்டு கலந்து கொண்டது. இதன் மூலம் தங்களது வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என நம்பிக்கையுடன் ஓட்டுப் போட்ட மக்களுக்கு துரோகத்தைச் செய்துள்ளது.

உம்மன் சாண்டி ஆட்சியின் போது இத்திட்டம் தொடங்கிய போது வழிப்பறிக் கொள்ளை, சுற்றுச்சூழல் பாதிப்படையும், மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்படையும் என எதிர்த்த சி.பி.எம். கட்சி, தற்போது ஆட்சிக்கு வந்தவுடன் ஒப்பந்தத்தை இரத்து செய்வதே சரியானது. ஆனால், ஒப்பந்தத்தை மீறினால் ஏற்படும் சிக்கல்களை எதிர்கொள்ள தைரியம் இல்லாமல் கையாலாகாத்தனத்துடன் நிற்கிறது.

தேவை மாற்றுக் கட்சியா?
மாற்று அரசியல் அமைப்புச் சட்டமா?

மக்களின் வாழ்வாதாரத்தை பறித்து, சுற்றுச்சூழலை நாசப்படுத்தும் பேரழிவுத் திட்டமான விழிஞ்சம் துறைமுக திட்டத்தைக் கைவிட கேரள அரசு மறுப்பதற்கு காரணமே அதானியுடன் போடப்பட்ட ஒப்பந்தத்தை மீறினால் உலக முதலீட்டாளர்கள் கேரள மாநிலத்திற்கு வரமாட்டார்கள் என்ற அச்சம் மட்டுமே. இதனை வெளிப்படையாக சொல்லாமல் திட்டத்தை நிறுத்தினால் நம்பகத்தன்மை போய்விடும் என்கிறார் பினராய் விஜயன்.

ஆம். சுயசார்புப் பொருளாதாரத்தைக் கைவிட்டு, கார்ப்பரேட் கொள்ளையை தாங்கிப் பிடிக்கும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைக் கொண்டு கட்டியமைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற, சட்டமன்ற முறைகளின் மூலம் ஆட்சியைப் பிடிக்கும் எந்த ஒரு கட்சியும் முதலாளிகளின் நலன்களுக்கான தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் உள்ளிட்ட மறுகாலனியாக்கக் கொள்கைகளைக் கடைப்பிடித்தே ஆக வேண்டும். சி.பி.எம். மட்டுமல்ல, எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இதுதான் நிலை.

மக்களுக்கு விரோதமான, மக்கள் வாழ்வாதாரத்தைப் பறிக்கின்ற பேரழிவுத் திட்டங்களை நிராகரிக்கும் விதமான அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்க வேண்டும். இச்சட்டம் உருவாக்குவதற்கான அரசியல் நிர்ணய சபை தேர்தல் நடத்தப்பட வேண்டும். இதன் பிறகு அமைகின்ற அரசு மட்டுமே மக்கள் நல அரசாக அமைந்து மக்கள் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும். இதற்கான போராட்டங்களை முன்னெடுப்பதே உடனடித் தேவை.

மதிவாணன்

புதிய ஜனநாயகம் (மா.லெ)
டிசம்பர்- ஜனவரி மாத இதழ்

படியுங்கள்
பரப்புங்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here