டெல்​லி​யில் செங்​கோட்டை அருகே கடந்த 10-ம் தேதி கார் குண்டு வெடித்த​தில் 13 பேர் உயி​ரிழந்​தனர். போலீசாரின் சோதனையில் அமோனியம் நைட்ரேட் போன்ற வெடிபொருட்கள் பெருமளவில் கைப்பற்றப்பட்டுள்ளன. நாடு மிகப்பெரிய தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலில் இருந்து தப்பித்துள்ளது என்று மோடி அரசு செய்திகளை வெளியிட்டு வருகிறது.

டெல்லி செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டு வெடிப்பைத் தொடர்ந்து, நாடு முழுவதும் தேடுதல் வேட்டைகள் தீவிரப் படுத்தப்பட்டது. தமிழகத்தில் குறிப்பாக கோவைக்கும் டெல்லி வெடிப்புக்கும் தொடர்பு உள்ளதா என்று விசாரிப்பதாக சங்கி மீடியாக்கள் பீதியை கிளப்புகின்றன . NIA விசாரணையில் சங்கிலித் தொடர் கார் குண்டுவெடிப்பு திட்டங்கள் பயங்கரவாதிகளால் தீர்மானிக்கப்பட்டு இருந்ததாகவும், அதற்காகவே வெடிமருந்துகள் பதுக்கப்பட்டதும், பழைய கார்கள் விலைக்கு வாங்கப்பட்டதும் தெரிய வந்துள்ளதாக பத்திரிகைகளில் செய்திகள் வருகின்றன. இத்தகைய பயங்கரவாத வேலைகளில் வெள்ளை காலர் நபர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

“வெள்ளை காலர்” பயங்கரவாதமா?

தற்போது ஒரு புதிய வார்த்தை பிரபலமாக பேசப்படுகிறது. அதுதான் வெள்ளை காலர் பயங்கரவாதம். உடல் உழைப்பில் ஈடுபடும் தொழிலாளர்களை நீலக்காலர்கள் என்று குறிப்பிடுவார்கள். படித்து சிறப்பான உயர் பதவிகளில் இருப்பவர்கள் வெள்ளை கலர் என்று அழைக்கப்படுகின்றனர். மருத்துவர்களும் அப்படி உயர் அடுக்குகளில் வகைப்படுத்தப்பட்டவர்கள்தான். தற்போது மருத்துவர்கள் குண்டுவெடிப்பு போன்ற தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருப்பதாக செய்திகள் பரவுகின்றன. குண்டுவெடிப்பின் மூளையாகக் செயல்பட்டது டாக்டர் உமர் முகமது என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

கார் குண்டு வெடிப்பில் தொடர்புடையவர்கள் ஹரியானா மாநிலம் பரிதாபாத் அருகே உள்ள அல் பலா பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியில் பணியிலுள்ளனர் என்று தேசிய புலனாய்வு முகமையானது அல்ஃபலா மருத்துவக் கல்லூரியை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளது. அங்கு நேரில் சென்ற அதிகாரிகள் மருத்துவர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தியுள்ளது.

அல் ஃபலா மருத்துவப் பல்கலைக்கழகத்தில் உமர் நபி தங்கி இருந்த அறை எண் 4-ல் சதித் திட்டம் தொடர்பான வரைபடங்கள் வரையப்பட்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், அந்த அறையில் இருந்து கண்டெடுக்கப்பட்ட டைரி மற்றும் நோட்டு புத்தகங்களில் பல்வேறு “கோட் வோர்டு”, 25 முதல் 30 பேரின் பெயர்கள் இருந்ததும் தெரியவந்துள்ளது. இவர்களின் பெயர்கள், நவம்பர் 8 முதல் 12 வரை ஒவ்வொரு தேதியுடன் குறிப்பிட்டு இருந்தது தொடர் தாக்குதலுக்கு திட்டமிட்டதை உறுதி செய்வதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது நியூஸ் 18 தமிழ்நாடு.

எல்லை கடந்த பயங்கரவாதம்!

கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் துருக்கியில் இருந்து இதற்கான சதித் திட்டம் தீட்டப்பட்டு வந்தது என்றும் அண்மையில் உமர் துருக்கி சென்று வந்தார் என்றும், உமரின் பெயர், உகாஸா என்ற புனைப்பெயரில் தகவல் பரிமாற்றம் நடந்திருப்பதும் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது என்றும் புலனாய்வு அமைப்புகள் மூலம் செய்திகள் பரப்பப்படுகின்றன.

இந்தியாவின் மீது பிற நாட்டினருக்கு அப்படி என்ன வன்மம்? எதற்காக இப்படி கூடி சதி செயல்களை திட்டமிடுகிறார்கள்? அதை நிறைவேற்றுவதற்காக இந்தியாவில் குறிப்பாக காஷ்மீரில் உள்ள இஸ்லாமியர்கள் ஏன் தமது உயிரையே பணயம் வைக்கிறார்கள் – தற்கொலை படையாகவும் மாறுகிறார்கள்? அதிலும் குறிப்பாக ஒயிட் கலர் பயங்கரவாதம் என்று அழைக்கப்படும் அளவிற்கு நன்றாக படித்து பணியில் உள்ள மருத்துவர்கள் ஏன் இந்த ரத்தக்கவிச்சி வீசும் பயங்கரவாத பாதைக்குள் நுழைகின்றனர்? இதுதான் நமது பரிசீலனைக்குரிய கேள்வி.

மோடி தலைமையிலான காவி பாசிச அரசானது இந்தியாவை இந்துராஷ்டிரமாக மாற்றுவதற்கும், அதை ஏற்காதவர்களை வெளியேற்றுவதற்கும் மத சிறுபான்மையினருக்கு எதிராக ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்கிறது.

குடியுரிமை திருத்தம் உள்ளிட்டவற்றால் கோடிக்கணக்கான மத சிறுபான்மையினரை – குறிப்பாக இஸ்லாமியர்களை நாடற்றவர்களாக ஆக்குவதையும் தொடங்கி வைத்துள்ளது. தற்போது நடைபெற்று வரும் சிறப்பு வாக்காளர் திருத்தமும் இந்த அச்சத்தைக் கூட்டி உள்ளது.

படிக்க:

 ஆபத்து! குடியுரிமைக்கான சான்று வழங்கும் அதிகாரம் ஆர்.எஸ்.எஸ்.கையில்!

 கார்ப்பரேட்-காவிப் பாசிசத்தை வீழ்த்த ஐக்கிய முன்னணி மற்றும் மக்கள் முன்னணியைக் கட்டியமைப்போம்

மதத்தின் பெயரால் இப்படி தாக்குதல் தொடுப்பதால், அந்த மதத்தை கடைபிடிக்கும் உலகின் பிற நாட்டில் உள்ளவர்கள் பாதிக்கப்படும் இந்திய இஸ்லாமியர்களுக்காக எதையாவது செய்ய வேண்டும் என்று சிந்திப்பதற்கு அடிப்படை உள்ளது. இங்கு இஸ்லாமியர்கள் மீது ஏவப்படும் ஒவ்வொரு தாக்குதல் மற்றும் படுகொலைகளுக்கும் பதிலடி தர வேண்டும் என்று துடிப்பதற்கும் அடிப்படை உள்ளது. மேலும் இந்தியாவை பூகோள அரசியல் ரீதியாக கட்டுக்குள் வைத்திருக்கும் ஏகாதிபத்திய அமைப்புகளும் இதற்கு உதவும். காவி பாசிஸ்டுகளுக்கு எதிர்வினை ஆற்ற ஜனநாயக வழிகள் அனைத்தும் அடைபட்டு இருக்கும் நிலையில் இஸ்லாமிய இளைஞர்கள் தவறான பயங்கரவாத வழிகளுக்குள் தள்ளப்படுகின்றனர்.அவர்கள் இடதுசாரி அமைப்புகளுடன் இணைந்தால் அரசியல் வழிபட்ட போராட்டங்களில் ஈடுபடுத்தப்படுவர்.

ஆனால், சில மதவாத அமைப்புகள் அல்லது இயக்கங்கள் பாசிச மோடியின் ஆட்சிக்கு எதிராக தமது எதிர் வினையை காட்ட இத்தகைய வேலைகளில் ஈடுபடுவதையும்,ஏகாதிபத்திய மற்றும் தேசங் கடந்த கார்ப்பரேட்டுகள் தமது சுரண்டல் மற்றும் கொள்ளையை மடைமாற்ற, இத்தகைய தீவிரவாத இயக்கங்களை ஸ்பான்சர் செய்து வளர்த்து விடும் வரலாறு கொண்டவை என்பதையும் சேர்த்து புரிந்து கொள்ள வேண்டும்.

அதாவது இந்தியாவில் பயங்கரவாத செயல்கள் நடப்பதற்காக வெளிநாடுகளில் சில இயக்கங்கள் திட்டமிடுகின்றன; ஏற்பாடுகளை செய்கின்றன; வழிநடத்துகின்றன. அவற்றில் இந்திய இளைஞர்கள் பங்கெடுப்பதை வினை என்று பார்க்க முடியாது. “எதிர் வினை” என்றுதான் பார்க்க வேண்டும். காவி பயங்கரவாதிகளின் தாக்குதலின் எதிர்வினையாகவே இத்தகைய இந்திய இளைஞர்களால் இஸ்லாமிய பயங்கரவாத தாக்குதல்கள் முன்னெடுக்கப்படுவதை புரிந்து கொள்ள வேண்டும்.

இதைப்பற்றி ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா பேசும்போது “பயங்கரவாதத்தை எந்த போர்வையிலும் ஏற்க முடியாது; ஆனால், 370 ரத்து செய்தது பயங்கரவாதத்தை ஊக்குவிக்கவே செய்யும் என்று முன்பே எச்சரித்தேன்” எனப் பேட்டியளித்துள்ளார்.

பரப்பப்படும் இஸ்லாமிய வெறுப்புணர்வு!

சமீப காலமாக இந்தியாவில் இஸ்லாமியர்களாக பிறந்து வளரும் ஒவ்வொருவரும் பல்வேறு வகையான சமூக புறக்கணிப்புகளையும், ஒதுக்குதல்களையும், இழிவுபடுத்தப்படுதல்களையும் எதிர்கொண்டுதான் வளர்கின்றனர்.

இந்தியாவில் பார்ப்பனர்கள் குடுமி வைத்துக் கொள்ளலாம், பஞ்சகட்சமும், மடிசாரும் கட்டிக்கொண்டு சுற்றலாம்; சீக்கியர்கள் தலைப்பாகை கட்டிக் கொள்ளலாம், ஆனால், கிறிஸ்தவர்கள் வெள்ளை கவுனை அணிந்து சிலுவை தொங்க விட்டுக்கொண்டு வலம் வரக்கூடாது. மதமாற்றம் செய்பவர் என குற்றஞ்சாட்டப்படுகிறது. ஒரு இஸ்லாமியர் லுங்கி கட்டிக்கொண்டு தலையில் குல்லாவை வைத்துக் கொண்டு வந்தால், உடனே சுற்றி இருப்பவர்களின் பார்வை மாறுகிறது. அவரை தீவிரவாதியாக பயங்கரவாதியாக சந்தேகத்திற்கு உரியவராக பார்க்கும் போக்கு திட்டமிட்டு வளர்த்தெடுக்கப்பட்டு விட்டது . இஸ்லாமியர்களுக்கு வீடு வாடகைக்கு விடவும் தயங்கும் போக்கும் திட்டமிட்டு அதிகரித்து வருகிறது .

எங்கெல்லாம் ஆர்எஸ்எஸ் வளர்கிறதோ, எங்கெல்லாம் சங்கப் பரிவாரங்கள் உள்நுழைக்கின்றனவோ, அங்கெல்லாம் இஸ்லாமியர்கள் இந்துக்களோடு இயல்பாக பழகி வந்த உறவு திட்டமிட்டு அறுத்தெறியப்படுகிறது. ஒருவரை ஒருவர் விலக்கி வைத்து, சந்தேகத்திற்கு உரியவராக, நம்பிக்கைக்கு உகந்தவர்கள் அல்ல என்பதாக காவி பாசிஸ்ட்டுகளால் திட்டமிட்டு மாற்றி அமைக்கப்படுகிறது.

படிக்க:

 பிரதமரின் வெறுப்புப் பேச்சுகள்! கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம்! நீதிமன்றம் அமைதி காக்கலாமா? 

 பாசிச மோடி பேசுவது வெறுப்பு அரசியல் மட்டுமல்ல! கார்ப்பரேட் காவி பாசிச பயங்கரவாதம்!

இத்தகைய சமூக சூழலில், இஸ்லாமிய சிறுவர்கள் பள்ளி கல்வியை முடித்து உயர்கல்வியை தொடுவது என்பது எதிர்நீச்சல் போடுவதாகவே அமைகிறது.

மருத்துவர்கள் உயிரைக் காப்பவர்களா – பறிப்பவர்களா?

தனது பிள்ளை மருத்துவராக வேண்டும் என்பது கணிசமான பெற்றோர்களின் விருப்பம். இந்தத் தொழில் சமூகத்தில் மதிப்பிற்குரியதாக இருப்பதுதான் அதற்கு காரணம். நீட்டின் திணிப்புக்குப் பிறகு, மருத்துவப் படிப்பு கனவாகி போய் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதையும் நாம் பார்க்கிறோம்.

அப்படி இருக்க மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்து, மருத்துவத்தையும் முடித்து, சமூகத்தில் மருத்துவராக மதிப்புமிக்க பணியாற்றும் சிலர் ஏன் பயங்கரவாதிகளாக மாறியுள்ளனர்?

“நீங்கள் எவ்வளவுதான் எதிர்நீச்சல் போட்டு முன்னேறினாலும், தடைகளை தாண்டி பட்டம் பதவி வேலைகளை பெற்றாலும், உங்களை நாங்கள் வாழ விட மாட்டோம்” என்று தொடர்ந்து அடிக்கிறது பாசிச மோடி அரசு. ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களில் கணிசமானோர் இஸ்லாமியர்கள். தற்போதும் கூட ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர் சங்கத் தலைவர்களில் ஒருவரான உமர் காலித் உபா வில் கைது செய்யப்பட்டு விசாரணை கைதியாகவே ஆண்டுக்கணக்கில் சிறையில் வாடுகிறார். அப்படி என்றால் அவரின் படிப்பு எதிர்காலம் என்னவாவது? சூனியம்தான்.

சங்கிகள் வளர்த்தெடுத்துள்ள இத்தகைய சூழல்தான் ஒரு இஸ்லாமியர் படித்து மருத்துவராகவே ஆன பின்னரும் கூட, அதிலும் குறிப்பாக பெண்கள் படித்து மருத்துவராக வந்த பின்னரும் கூட, அந்த தொழிலில் மனம் ஒன்றி ஈடுபட முடியாத வகையில் குறுக்கிடுகிறது.

கும்பல் படுகொலைகள், பாலியல் வல்லுறவுகள், புல்டோசர் தாக்குதல்கள் என காவி பாசிச தாக்குதல்கள் இஸ்லாமிய மக்களின் மீது அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. எனவே தான் மருத்துவர்கள் பயங்கரவாதத்தை நோக்கி திசை மாறுகின்றனர். அல்லது காவி பயங்கரவாதிகளால் இந்த ஒரு பாதையை தவிர உனக்கு வேறு இல்லை என்று திட்டமிட்டு பயங்கரவாதத்திற்குள் நெட்டி தள்ளப்படுகிறார்கள்.

நீதிமன்றத்தால் நீதியை தர முடியாதா ?

ஒருவேளை இந்திய நீதித்துறை நேர்மையாகவும், நடுநிலையாகவும், சட்டத்தின் படியும் நடந்து கொள்வதாக இருந்தால், இந்த அவலத்தை தவிர்த்து இருக்க முடியும். ஆனால், உண்மை கசப்பானதாகவே உள்ளது.

ஏற்கனவே நடந்த பாராளுமன்ற தாக்குதலின் போது பேராசிரியரான அப்சல் குருவை அள்ளிக் கொண்டு போய் இவர் தான் குண்டு வைத்தார் என்று சிறையில் அடைத்தது ஒன்றிய அரசு. போலியாக ஒரு விசாரணையும் நடத்தி அப்சல் குரு மீது எவ்வித குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படாத நிலையிலும் கூட தூக்கில் ஏற்றியது உச்சநீதிமன்றம் . நீதிமன்றமானது காவி மன்றமாக மாறிவிட்டது. இதன் விளைவுதான் இத்தகைய பயங்கரவாதத்தை நோக்கி படித்தவர்களும் நகர்வதற்கான அடிப்படை என்பதை புரிந்து கொள்ள வேண்டும் .

மும்பையைச் சேர்ந்த ஒரு பெண் கிரிக்கெட் வீரரின் தந்தை மதமாற்ற பிரச்சாரம் செய்தார் என்று குற்றம் சாட்டப்பட்டார். சங்கிகளால் இதற்கான ஆதாரத்தை தர முடியவில்லை . அப்படி இருந்தும் அவரின் மகள் கிரிக்கெட் கிளப்பில் இருந்து நீக்கப்பட்டார் . ஆனால் அந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ்தான் மகளிர் கிரிக்கெட்டில் இந்தியா பதக்கம் வெல்வதற்கு மிக முக்கிய காரணமாக மாறினார்.

லீக் போட்டியில் வென்றால்தான் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி அரையிறுதிக்குச் செல்ல முடியும் என்ற நெருக்கடியான போட்டியில் ஜெமிமா நாட் அவுட் வீராங்கனையாக 76 ரன்கள் அடித்தார்.

அடுத்து அரையிறுதியில், அதிக முறை சாம்பியன் பட்டத்தை வென்ற ஆஸ்திரேலியா அணி நிர்ணயித்த 339 ரன்கள் டார்கெட்டை நோக்கிக் களமிறங்கிய இந்திய அணியில் 48 ஓவர்கள் களத்தில் நின்று நாட் அவுட் வீராங்கனையாக 127 ரன்கள் அடித்து அணியை இறுதிப் போட்டிக்கும் கொண்டு சென்றார்.

ஒருவேளை இந்த ஜெமிமாக்கு இந்திய மகளிர் அணியில் வாய்ப்பு கிடைக்காமல் போயிருந்தால் அவரின் எதிர்வினை என்னவாக இருந்திருக்கும்? தன்மீது மத வெறுப்பை ஏவி, திட்டமிட்டு ஒதுக்கும் காவிகளுக்கு எதிராக அல்லது இத்தகைய ஒதுக்கல்களை கண்டும் காணாமலும் மௌனமாக கடந்து செல்லும் இந்துக்களின் பொது புத்திக்கு எதிரான கோபமாகத்தானே வெளிப்படும் .

பிற மதத்தினர் மீது மட்டும் வெறுப்பை கக்குவது அல்ல பாசிஸ்டுகளின் இயல்பு. இந்து மதத்திலேயே நான்கு வர்ண சாதிப் பிரிவினையை உயர்த்திப் பிடித்து தாழ்த்தப்பட்டவர்களை கேவலமாக கருதி ஒதுக்குவதைத்தான் எப்போதும் செய்கின்றது. கண்ணகி நகர் கார்த்திகா கபடியில் எதிர்நீச்சல் போட்டுத்தான் ஜொலித்துள்ளார். ஆனால் அவரின் குடியிருப்பு திட்டமிட்டே புறக்கணிக்கப்பட்ட ஒன்று. அவரின் தாயார் முன்னர் செய்து வந்த துப்புரவுத் தொழில் என்பது பார்ப்பன கண்ணோட்டத்தில் மிகவும் இழிந்த தொழிலாகத்தான் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

“எரிவதை பிடுங்கினால் கொதிப்பது அடங்கும்!”

தகுதி,திறமை இருந்தாலும் காவி கும்பல்களால் திட்டமிட்டு சந்தேக முத்திரை குத்தப்பட்டு, வெறுப்பு பிரச்சாரம் ஏவப்பட்டு, புறக்கணிப்பையும் அவமானங்களையும் சகித்துக் கொண்டு, எத்தனை நாளைக்குத்தான் – எவ்வளவு தூரத்திற்கு தான் இவர்கள் எதிர்நீச்சல் போடுவார்கள்? உடலும் மனதும் சோர்ந்து களைத்துப் போன சூழலில்தான் இவர்கள் தீவிரவாதிகளின் பிடிக்குள் விழுகிறார்கள்.

கண்முன்னே தனது குடும்ப உறுப்பினர்களையோ, நண்பர்களையோ, ஊர்க்காரர்களையோ காவி பயங்கரவாதம் வேட்டையாடும் பொழுது, படுகொலை செய்யும் பொழுது, பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கிக் கொல்லும் போது, அதையெல்லாம் கண்டும் காணாமலும், கண்ணையும் காதையும் மூடிக்கொண்டு எவ்வளவு நாளைக்குத்தான் பயணிக்க முடியும். இந்தக் கொடுமைகளை சகிக்க முடியாதவர்கள்தான் – தடுக்க முடியாதவர்கள்தான் பதிலடி தருவதற்காக இத்தகைய பயங்கரவாதத்தை நாடுகின்றனர். அதற்காக தமது உயிரையும் தரத்துணிக்கின்றனர். அந்த அளவிற்கு காவி பாசிசம் மத ரீதியாக இஸ்லாமியர்களை, கிறிஸ்தவர்களை, தாழ்த்தப்பட்ட மக்களை ஏறி அடிக்கிறது . உலையில் கொதிப்பதை நிறுத்த வேண்டும் என்றால், அடுப்பில் எரியும் கொள்ளிக்கட்டையைத்தான் முதலில் உருவ வேண்டும். இந்தியாவுக்குள் தலையெடுக்கும் இஸ்லாமிய பயங்கரவாதத்தை வேரோடு பிடுங்க வேண்டும் என்றால் எரியும் கொள்ளியான கார்ப்பரேட் காவிப் பாசிசத்தை முதலில் வீழ்த்தி ஆக வேண்டும். அதற்கு காவிப் பாசிசத்தால் ஒடுக்கப்படும் இஸ்லாமியர்கள், தலித்துகள், தொழிலாளர்கள் என அனைத்து மக்கள் பிரிவினரும் ஓரணியில் திரண்டு மாபெரும் எழுச்சியை உருவாக்குவதுமே தீர்வை தரும்.

  • இளமாறன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here