கொடுக்கின்ற காசுக்கு வேடம் கட்டி ஆடி வரும் ரஜினியின் உண்மை முகம் தெரியாமல் அவரது ரசிக குஞ்சுகள் திரைப்படத்தில் அவர் நடிக்கும் கதாபாத்திரங்களையும் நிஜ வாழ்க்கையில் அவருடைய யோக்கியதையும் முரண்பாடாக இருப்பதை புரிந்து கொள்ளாமல் கூப்பாடு போட்டு வருகின்றனர்.

ஆர்எஸ்எஸின் திரையுலக அடியாள் படைகளில் ஒருவரான ரஜினியை பற்றி நாம் எழுதுவதற்கு நமது கை கூசுகிறது. ஆனால் என்ன செய்து தொலைவது, இமயமலைக்கு சென்று திரும்பும் வழியில் ஆர்எஸ்எஸ் கார்ப்பரேட் சாமியார்கள் நடத்துகின்ற ஆசிரமங்களிலும், உச்சகட்டமாக உத்தர பிரதேசத்தின் முதலமைச்சராக உள்ள பாசிச சன்னியாசி யோகி ஆதித்யநாத் காலிலும் விழுந்ததன் மூலம் ரஜினி கிறுக்கன் போல் நடிக்கின்ற ஆர் எஸ் எஸ் கும்பலில் ஒருவர் என்பதை நிரூபித்து வருகிறார்.

காலா திரைப்படத்தில் கொடுக்கின்ற கூலிக்கு ரஜினி பேசுகின்ற வசனங்களை எல்லாம் உண்மை என்று கருதிக் கொண்டு வானத்திற்கும் பூமிக்கும் குதித்த ரஜினி ரசிகர்கள் யோகி காலடியில் விழுந்தவுடன் செய்வதறியாமல் திகைக்கிறார்கள்.

“காந்தி சட்டையை கழற்றியதற்கும், அம்பேத்கர் கோட் போட்டதற்கும் அரசியல் இருக்கிறது” என்ற வசனத்தை நடிகர் ரஜினி பேசியபோது, தான் சினிமாவிற்கு வந்ததற்கான பலனை அடைந்ததாக இயக்குநர் பா.ரஞ்சித் குண்டு திரைப்படத்தின் வெளியிட்டு விழாவின்போது புளகாங்கிதம் அடைந்தார்.  கபாலி, காலா போல இதற்கும் ஒரு வசனத்தை எழுதி சமாளிக்கலாம் அது தனியே விமர்சிக்க வேண்டிய கதை.

 

ரஜினியின் இமயமலை டூர் மற்றும் ஆர்எஸ்எஸ் பாஜகவின் அரசியல் தூதராக பல்வேறு நபர்களிடம் பேசி ஐக்கியத்தை உருவாக்குகின்ற முயற்சியில் முன்னேறி வருவதை கண்டு ஊடகத்துறையில் உள்ள அக்ரஹாரத்து அம்பிகள் கூடாரம்  சொல்ல முடியாத மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருக்கிறது.

காலில் விழும் கலாச்சாரம் என்பது திராவிட இயக்கங்களின் சீரழிந்த பண்பாடு என்ற விதத்தில் வருகின்ற பார்ப்பன கும்பல் ரஜினி யோகியின் காலடியில் விழுந்தவுடன் கொள்கை முடிவை பற்றி வாயைத் திறக்கவில்லை.  காலில் விழுவதைப் பற்றி ரஜினி உதிர்த்த முத்து தற்போது சமூக வலைதளங்களில் வெளிவந்து சந்தி சிரிக்கிறது.

“காலில் விழுந்தது என்று சொல்கிறார்கள் இல்லையா? 3 பேரின் காலில் விழுவோம்.

அது கடவுள், தாய், தந்தை. உயிர் கொடுத்த கடவுள். அந்த உயிருக்கு உயிரூட்டி சாப்பாடு ஊட்டி இந்த உடம்பை கொடுத்த தாய், தந்தை. இந்த உடம்பில்தான் நாம் எல்லா சுகங்களையும் அனுபவிக்கிறோம். அந்த உடம்பு இல்லை என்றால் எதுவுமே இல்லை.” என்று பேசினார். இந்த வீடியோவை பகிர்ந்து ஊருக்கு மட்டும்தான் உபதேசமா என்று பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

இதையும் படியுங்கள்: ரஜினியை பின் தொடரும் ஊடக மாமாக்கள். சிஏஜி அறிக்கைக்கு தலை காட்டுவார்களா?

கேள்வி எழுப்புகின்றவர்களுக்கு ரஜினி ஒருபோதும் நேர்மையாக பதில் கூறியதே இல்லை. ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு முதல் ஜெயிலர் பட புரமோஷனுக்காக பேசிய பேச்சுகள் வரை அனைத்திலும் பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்கு எதிராகவும், ஆர்எஸ்எஸ் பாரதிய ஜனதா கட்சியின் அடியாள் படையை போல பாசிச வெறியை காட்டி வரும் ரஜினி ஆதித்யநாத் காலில் விழுந்தது ஒன்றும் அதிசயம் இல்லை.

ஆனால் திரைப்படத்தில் முண்டா தட்டிய ரஜினியை ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக குரல் கொடுக்கின்ற கதாநாயகன் போல, சித்தரித்த திரையுலக பிழைப்புவாதிகள் தான் நேர்மையாக பதில் சொல்ல வேண்டும். ஆனால் அவர்களும் இது போன்ற தருணங்களில் மௌனம் ஒன்றையே பதிலாக அளிப்பார்கள்.

சிஏஜி அறிக்கை, தேர்தலில் எதிர்க்கட்சிகளை ஒழிக்க நினைக்கின்ற ஆர்எஸ்எஸ் பாஜகவின் அரசியல், நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடரில் எந்த விவாதமும் இன்றி நிறைவேற்றப்பட்ட பல்வேறு மசோதாக்கள், நீட் தேர்வில் அடுத்தடுத்து பலியாகும் தமிழக மாணவர்கள் என்று நமக்கு ஏகப்பட்ட பிரச்சனைகள் பேசுவதற்கு இருக்கும்போது ஏன் ரஜினியை பற்றி பேச வேண்டும் என்று கேட்பவர்களுக்கு ஒரே வாரத்தில் 500 கோடி கொள்ளையிடும் ஆற்றல், அதுவும் உழைக்கும் மக்களின் உதிரத்தில் விளைந்த பணத்தை சுருட்டுகின்ற ஆற்றல் கொண்ட வக்கிரமான மனநிலையை ஆராதிக்கும் பாசிச உளவியலை எதிர்த்து போராட வேண்டியது அவசியம்.

இல்லையென்றால் சமகாலத்தில் நிகழ்கின்ற கொடூரமான செயல்களுக்கு எதிராக எதுவும் பேசாமல் போய்விடுவார்கள். இதற்கு நல்ல உதாரணம் நீட் தேர்வில் தனது சக நண்பனையும் அவரது தந்தையையும் இழந்த மாணவன் ஃபயாசுதீன், இந்திய ஒன்றிய பாஜக ஆர் எஸ் எஸ் ஐ அம்பலப்படுத்த துவங்கியவுடன் அவர் மீது உ பி என்று முத்திரை குத்தி இழிவுபடுத்த துவங்குகின்ற மனநிலை தான் நாம் எதிர்த்து முறியடிக்க வேண்டிய பாசிச உளவியல் ஆகும்.

  • கணேசன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here