ஏப்ரல் தலையங்கம்

ந்தியாவில் 2024 நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டு நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் பற்றிய அறிவிப்பு வெளிவந்த உடன் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளில் ஒன்றான இந்தியாவில் தேர்தல் திருவிழா துவங்கிவிட்டது என்று ஊடகங்களும், தேர்தல்பற்றி கருத்துகளை வெளியிடும் அறிஞர்களும், திடீர் ஆய்வாளர்களும் சாமியாட துவங்கிவிட்டனர்.

1952-ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் நிலவிவரும் நாடாளுமன்ற அமைப்பு, அதன் போலி ஜனநாயக உள்ளடக்கத்தையும், அதற்கு பொருத்தமான வடிவத்தையும் தூக்கியெறிந்துவிட்டு 2014 முதல் படிப்படியாக பாசிச உள்ளடக்கத்தையும், அதற்கு பொருத்தமான வடிவத்தையும் முன்வைத்து செயல்படுகிறது என்பதை மார்க்சிய- லெனினிய புரட்சியாளர்கள் வரையறுத்து அம்பலப்படுத்தி வருகின்றனர். நாட்டின் நடப்புகள் அதனை நிரூபித்து வருகின்றன.

2024 நாடாளுமன்றத் தேர்தல் ஏற்கனவே நடந்த தேர்தல்களைப் போல குறைந்தபட்ச போலி ஜனநாயக வழிமுறைகளை அதாவது பிரச்சாரம் செய்யும் உரிமை; வேட்பாளர்களாக போட்டியிடும் உரிமை; தேர்தலை ஆதரிக்கவோ, புறக்கணிக்கவோ உள்ள உரிமை ஆகியவை அனைத்தும் சட்டபூர்வமாக தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.

தேர்தல் ஆணையம் ஒரு சுதந்திரமான அமைப்பு என்று ஓயாமல் பிரச்சாரம் செய்யப்படுகிறது. தலைமை தேர்தல் ஆணையர், குடியரசுத் தலைவரால் தேர்வு செய்யப்படுகிறார். அவருடன் இணைந்து பணியாற்றுவதற்கு இரண்டு தேர்தல் ஆணையாளர்களை குடியரசுத் தலைவர் நியமிக்கின்றார். இந்த மூவரும் சம அளவு அதிகாரம் கொண்டவர்கள், ஒருவரை ஒருவர் கலந்து ஆலோசித்துக்கொண்டு நாடு முழுவதும் உள்ள நாடாளுமன்ற இடங்களுக்குத் தேர்தல் தேதியை அறிவிப்பது; அதில் போட்டியிடும் வேட்பாளர்களின் தகுதிகளை பரிசீலித்து அங்கீகரிப்பது அல்லது நிராகரிப்பது; தேர்தல் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் நடப்பதற்கு உத்தரவாதம் அளிப்பது போன்றவை இவர்களின் பணி என்று பொதுவாக வரையறுக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையராக இருந்த அருண் கோயல், பாசிச பாஜகவின் அழுத்தம் தாங்க முடியாமல் தனது பதவியை ராஜினாமா செய்து ஓட்டமெடுத்தார். மற்றொரு ஆணையர் அனூப் சந்திர பாண்டே, 2024 பிப்ரவரி மாதம் ஓய்வு பெற்றார். அதன் பிறகு புதிதாக இரண்டு தேர்தல் ஆணையர்களை நியமிப்பதற்கு சட்டபூர்வமாக வாய்ப்பு இல்லாத போதிலும், பாசிச மோடி அரசு அதனை துச்சமாக தூக்கியெறிந்துவிட்டு தனது விசுவாசிகாளான இரண்டு தேர்தல் ஆணையர்களை நியமித்துள்ளது. இதிலிருந்தே இந்திய தேர்தல் ஜனநாயகம் கேள்விக்குறியாக துவங்கியது.

மற்றொருபுறம் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் நாடாளுமன்றத் தேர்தலுக்கு 97 லட்ச ரூபாய் செலவு செய்யலாம் என்றும், சட்டமன்றத் தேர்தலுக்கு 47 லட்ச ரூபாய் செலவு செய்யலாம் என்றும் இந்த தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதிலிருந்தே இதன் கண்காணிப்பு யோக்கியதையை நாம் புரிந்துகொள்ள முடியும். 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு 60,000 கோடி செலவு செய்தனர் என்ற புள்ளிவிவரம் இந்த யோக்கியவான்களின் கண்காணிப்பின் உண்மைத் தன்மையைக் காட்டுகிறது. இது இந்தத் தேர்தலில் லட்சம் கோடியாக உயர வாய்ப்புள்ளது.

இந்தியாவில் 1947 போலி சுதந்திரம் பெற்ற காலகட்டத்தில் ஏறக்குறைய 28 கட்சிகள் தேசிய கட்சிகளாக அங்கீகரிக்கப்பட்டு முதல் தேர்தலில் போட்டியிட்டனர். ஆனால் 2024 தேர்தலிலோ வெறும் 6 கட்சிகள் மட்டுமே தேசிய அங்கீகாரத்தை பெற்றுள்ளன. மாநில அளவில் உள்ள 56 கட்சிகளும் தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. இவை இல்லாமல் நாடு முழுவதும் 2796 அங்கீகரிக்கப்படாத கட்சிகள் உள்ளன. தன்னை எதிர்த்துப் போட்டியிடுவதற்கு கட்சிகள் இருந்தால்தானே சிக்கல் என்று அவர்களின் அங்கீகாரத்தைப் படிப்படியாக ஒழித்துக்கட்டி வருகிறது பாசிச பாஜக. இந்தச் சூழலில் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் நாடு முழுவதும் போட்டியிடுவதற்கு ஆறு கட்சிகளுக்குத்தான் தகுதியே உள்ளது.

தேர்தல் காலங்களில் தேர்தல் ஆணையத்திடம் பதிவு செய்துகொள்ளாத புரட்சிகர, ஜனநாயக இயக்கங்கள் தேர்தலை ஆதரித்தோ, புறக்கணித்தோ பிரச்சாரம் செய்வதற்குக்கூட சட்டபூர்வமாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் சுவிதா ஆப் மூலமாக ஆன்லைன் முறையில் மட்டுமே பிரச்சாரம் செய்ய அனுமதி பெற முடியும் என்ற சூழலில், அதில் உள்ள படிவத்தில் குறிப்பிட்ட வேட்பாளர்களை ஆதரித்தால் மட்டும்தான் பிரச்சாரமே செய்ய முடியும் என்று நிலைமை உள்ளது. தேர்தலில் யாருக்கும் ஓட்டு போடமாட்டோம் என்றும், நோட்டாவிற்கு ஓட்டு போடுபவர்கள்கூட இத்தகைய விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டுத்தான் பிரச்சாரம் செய்ய முடியுமா என்றும் தேர்தல் ஆணையம் பகிரங்கமாக அறிவிப்பதில்லை.

தேர்தல் ஆணையம் நடுநிலைமையானது என்ற பிரமையை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு பம்பரம் சின்னமும், நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னமும் ஒதுக்காத நிலையில், தமிழகத்தில் அங்கீகாரம் இல்லாத தமிழ் மாநில காங்கிரசுக்கு சைக்கிள் சின்னமும், டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு குக்கர் சின்னமும், வன்னிய சாதிவெறி அமைப்பான பாட்டாளி மக்கள் கட்சிக்கு மாம்பழம் சின்னமும் ஒதுக்கப்படுகிறது.

ஆர்.எஸ்.எஸ்-பாஜகவின் பாசிச வெறியாட்டங்கள் தலைவிரித்தாடுகிறது. தேர்தலில் எதிர்க்கட்சிகள் போட்டியிடுவதைத் தடுத்து நிறுத்துகின்ற வகையில் மாநிலத்தை ஆளுகின்ற முதலமைச்சர்களே கைது செய்யப்படுகின்றனர். குறிப்பாக ஜார்கண்ட் மாநிலத்தின் முதல்வர் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதேபோல மோடியை அம்பலப்படுத்திப் பேசிய ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லியின் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகரராவின் மகள் கவிதா சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்: அரவிந்த் கெஜ்ரிவால் கைது: எதிர்கட்சிகளை அழிக்கும் பாசிஸ்டுகளின் நடவடிக்கை!

எதிர்க்கட்சி அமைச்சர்கள், முதல்வர்கள் போன்றவர்களை வருமானவரித்துறை மூலமும், சொத்துக்குவிப்பு வழக்குகள் மூலமும் கைது செய்வது போன்றவை அன்றாட நிகழ்வுகளாகிவிட்டது. குறிப்பிட்ட கார்ப்பரேட் நிறுவனங்களையும், ஷெல் நிறுவனங்களையும் ஈடி மூலம் மிரட்டி பல்லாயிரம் கோடி ரூபாய் தேர்தல் பத்திரநிதியாக பெற்றுள்ளனர் என்பது உலகிலேயே மிகப்பெரிய ஊழலாக உருவெடுத்துள்ளது.

தேர்தல் நிதி பத்திர பரிவர்த்தனை நாட்டின் முதன்மை வங்கியான ரிசர்வ் வங்கி மூலம் நடப்பதை தடுத்துவிட்டு திட்டமிட்டே பாரத ஸ்டேட் வங்கி மூலம் நடத்தப்பட்டது. இந்த தேர்தல் நிதி பத்திரங்கள் பாசிச பாஜகவிற்கு பல்லாயிரம் கோடிகளை வாரி வழங்கியுள்ளது என்பது வெளியில் அம்பலமான பின்னரும் உச்சநீதிமன்றம் தலையிட்டு கண்டிக்காத வரையில் பாரத ஸ்டேட் வங்கி நிர்வாகத்தை பணிய வைத்து ஆவணங்களை வெளியிடக்கூடாது என்று தடுத்து நிறுத்தியுள்ளது. இவை அனைத்தும் சட்டத்தின் மூலமாகவே நிகழ்த்தப்படுகிறது என்பது தான் குறிப்பிடத்தக்கது.

உயர்நீதிமன்றம் துவங்கி உச்சநீதிமன்றம் வரை நீதிபதிகள் மிரட்டப்படுகின்றனர் அல்லது விலைபேசப்படுகின்றனர் அல்லது மாநில கவர்னர் பதவி கொடுப்பதாக ஆசை காட்டப்படுகின்றனர். பாசிச பாஜகவின் இதுபோன்ற நடவடிக்கைகளால் இந்தியாவின் ‘சுதந்திரமான அமைப்பு’ என்று கூறிக்கொள்ளப்படும் நீதித்துறை அம்பலப்பட்டு நாறி வருகிறது.

இத்தகைய சூழலில் நாடாளுமன்ற ஜனநாயகம் இன்னமும் பழைய வடிவத்திலேயே நீடிப்பதாக கருதிக்கொண்டு தேர்தலை புறக்கணிப்பது அபத்தமான முடிவாகும். அதே சமயத்தில் தேர்தலில் மூலம் கார்ப்பரேட் காவி பாசிசத்தை வீழ்த்திவிட முடியும் என்பதும் பாமரத்தனமான முடிவாகும். இவை இரண்டையும் தவிர்த்து தேர்தலில் பாசிச பாஜகவை தோற்கடிப்பதும், தெருவில் ஆர்எஸ்எஸ் பாஜக உள்ளிட்ட கார்ப்பரேட் காவி பாசிச பயங்கரவாத அமைப்பை முறியடிப்பதும் இன்றைய முதன்மை கடமையாக மாறியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here