UPSC  தலைவராக இந்துத்துவவாதி!


UPSCக்கு  இதற்கு முன்பு வரையில் இந்தியாவில் புகழ்பெற்ற கல்வியாளர்களையும், சிறந்த ஐஏஎஸ் அதிகாரிகளையும் தலைவராக நியமித்துள்ளது.

இன்று சர்வீஸ் கமிஷன் தலைவராக பாஜகவுடனும், ஆர்.ஸ்.எஸ்வுடனும் நெருங்கிய உறவுக் கொண்டுள்ள இந்துத்துவவாதி மனோஜ் சோனியை தலைவராக நியமித்துள்ளது ஆளும் பாசிச மோடி அரசு.

2014-ல் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு அரசு அதிகாரத்தில் உயர்மட்டத்தில் உள்ள பொறுப்புகளில் ஆர்.எஸ்.எஸ் தொடர்புடையவர்களுக்கு வழங்கியது. ஆர்.எஸ்.எஸ் ஆட்சி அதிகாரத்தில் இல்லையென்றாலும் கூட தான் நினைத்ததை சாதிக்கவும், தனது இந்துராஷ்டிர கனவை நோக்கி செல்லவும் அவர்களை பயன்படுத்திக் கொண்டது.

இந்தியாவில் உள்ள முக்கியமான பல்கலைகழகங்களில் ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவவாதிகளை நியமித்துள்ளது. சென்ற மாதம் ஜெ.என்.யு (JNU) பல்கலைகழகத்தில் துணைவேந்தராக சாந்திஸ்ரீ துளிப்புடி பண்டிட் என்ற இந்துதுவவாதியை  நியமித்தது. இது பெரும் சர்ச்சைக்குள்ளானது.

JNU துணைவேந்தராக நியமிக்கபட்டுள்ள சாந்திஶ்ரீ துளிப்டி பண்டிட்

தனக்கு சாதகமாக செயல்படும் நீதிபதிகளுக்கு ராஜ்யசபா, ஆளுநர் பதவிகளை வழங்குவதும், எதிராக செயல்படும் நேர்மையான நீதிபதிகளை கொல்வதும் அல்லது சிறையிலடைப்பதும் ஆர்.எஸ்.எஸ் கும்பலின் கை வந்த கலை.

மனோஜ் சோனி என்பவர் ஆர்.எஸ்.எஸ்-க்கும் , பாஜகவுக்கும் நெருக்கமானவர். குஜராத் முதல்வராக மோடி இருந்த போது, மோடிக்கு நெருக்கமாக அறியப்பட்டவர். அவரை “சோட்டா மோடி” என அழைக்கப்பட்டுள்ளார்.

மனோஜ் சோனி

இதற்கு முன்பு வதோதரா பல்கலைகழகத்தில் துணைவேந்தராக பணியாற்றிய சோனி, நாட்டிலேயே இளம் துணைவேந்தர். அந்த பல்கலைகழகத்தில் ஆர்.எஸ்.எஸ் , பாஜக ஆட்கள் செல்வாக்கு செலுத்த அனுமதித்துள்ளார். மறுபுறம் “ IN SEARCH OF A THIRD SPACE” என்ற புத்தகத்தில் குஜராத் 2002 கலவரத்தை திரித்து இந்துத்துவா நிலைபாட்டுக்கு ஏற்ப முன்வைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவரது பள்ளிக் காலத்திலிருந்தே குஜராத்தில் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள சுவாமி நாரயனண் பிரிவின் அனூபம் மிஷனின் இணைப்பில் இருந்தார். 2020 ஆம் ஆண்டில் “நிஷ் கர்ம கர்மயோகி” துறவியாக தீட்சை பெற்றுள்ளார்.

ஒரு இந்துத்துவா துறவியை தான் IAS, IPS அதிகாரிகளை சேர்ப்பதற்கான மேற்பார்வையாளராக  பாசிச மோடி அரசு நியமித்துள்ளது. இதில் அரசியல் தலையீடு இருக்காது என்று யாராலும் உத்திரவாதம் அளிக்க முடியாது. இனிவரும் காலங்களில் தேர்ந்தெடுக்கப்படும் IAS, IPS அதிகாரிகள் நிச்சயம் இந்துத்துவா சார்புடையவர்களாகவே இருப்பர். சோனி தேர்ந்தெடுக்கப்பட்ட விசயத்தில் ஜனநாயகவாதிகளும், அரசியல்வாதிகளும் தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

தில்லி பல்கலைகழகத்தின் ஆசிரியரும், கட்டுரையாளருமான அபூர்வானந்தா தனது டிவிட்டர் பக்கத்தில் IAS, IPS பதவிகளை பிடிக்க வலதுசாரி அமைப்புகள் சார்பில் ஒருங்கிணைந்த முயற்சி நடந்து வருவதாக கூறியுள்ளார். மேலும் ‘தி வயர்’ இணையதளத்திடம் கூறுகையில் வதோதரா மகாராஜா சாயாஜிராவ் பல்கலைகழகத்தின் துணைவேந்தராக சோனி இருந்த போது பல்கலைகழகம் தரத்தில் கடும் சரிவை கண்டதாக கூறியுள்ளார்.

திரிணாமுல் காங்கிரஸ் ராஜ்யசபா எம்பி ஜவஹர் சிர்கார் சோனியின் நியமனத்துக்கு தனது டிவிட்டர் பக்கத்தில் எதிர்ப்பை தெரிவித்துள்ளார். இவர் முன்னாள் IAS அதிகாரியும் ஆவார்.

கல்வியும், பல்கலைகழகங்களும் காவிமயமாக்கப்படுவதை தொடர்ந்து தற்போது IAS, IPS அதிகாரிகளும் இந்த பட்டியலில் இணைந்துள்ளனர். சோனி நியமனத்திற்கு எதிராக பல்வேறு எதிர்ப்புகள் எழுந்துள்ள நிலையில் RSS கும்பல் அவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தில் இருந்து வந்துள்ளதால் தான் அவரை எதிர்க்கிறார்கள் என்று மடைமாற்றுகிறார்கள். இந்துத்துவா கருத்துடையவர்கள் எந்த சமூகத்தை சேர்ந்தவர்களாயினும் அவர்கள் ஆபத்தானவர்களே!

வரும் காலங்களில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை போன்றே பல IPSக்கள் உருவாக்கப்படலாம். போராடும் மக்களை ஈவு இரக்கமின்றி ஒடுக்கவும், தனது இந்துராஷ்டிர கனவை நிறைவேற்றிக் கொள்ளவும் RSS, பாஜக கும்பல் துணிந்து வேலை செய்கிறது. இதனை எதிர்கொள்ள அனைத்து தரப்பட்ட மக்களும், இயக்கங்களும் இணைந்து குரல் கொடுப்போம்.

  • நந்தன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here