மே நாளில் சூளுரைப்போம்!
மக்களின் வாழ்வை சூறையாடும்
பாசிச பா.ஜ.க-வின்
கார்ப்பரேட் காட்டாட்சிக்கு முடிவு கட்டுவோம்!


பேரணி – ஆர்ப்பாட்டம்.

அன்பார்ந்த உழைக்கும் மக்களே,

1886 – ஆம் ஆண்டில் அடக்குமுறை, உழைப்புச் சுரண்டல் ஆகியவற்றை எதிர்த்தும், 8  மணிநேர வேலைக்காகவும் இரத்தம் சிந்தி, உயிர்த்தியாகம் செய்து தொழிலாளி வர்க்கம் உரிமைகளைப் பெற்றதை பறைசாற்றுவதே மேநாள்! 136-ஆண்டுகளுக்கு முன் இருந்த கொடியநிலைமை இன்றைக்கு மீண்டும் வந்துவிட்டது. அடக்குமுறையும், சுரண்டலும் அப்போது இருந்ததைவிட பலமடங்கு நவீனப்படுத்தப்பட்டு வஞ்சகமானதாகவும் கொடூரமானதாகவும் அமுல்படுத்தப்படுகிறது.

தனியார்மயம்-தாராளமயம்- உலகமயம்  உள்ளிட்ட மறுகாலனியாக்கக் கொள்கையால் உழைக்கும் மக்கள் சிறிது சிறிதாக வாழ்வாதார உரிமைகளை இழந்து வந்தனர். இந்துமதவெறி பாசிஸ்டான மோடி ஆட்சிக்கு வந்த பின்னர், மறுகாலனியாக்க நடவடிக்கைகளைத் தீவிரமாக அமுல்படுத்தி வருகின்றது. கார்ப்பரேட் முதலாளிகளின் நலனுக்காக அனைத்து சட்டங்களும் மாற்றி திருத்தப்படுகின்றன; போராடிப் பெற்ற உரிமைகள் பறிக்கப்படுகின்றன. ஏட்டளவில் இருந்த தொழிலாளர் நலச் சட்டங்களை ஒழித்து நான்கு சட்டத்தொகுப்புகளாக மாற்றியதன் மூலம் சங்கம் வைக்கும் உரிமை, பணிப் பாதுகாப்பு, நிரந்தர வேலை உரிமை உள்ளிட்டவற்றைப் பறித்து எந்த உரிமைகளும் அற்ற கூலி அடிமைகளாக்கப்பட்டுள்ளனர் தொழிலாளர்கள்.

லாபமீட்டும் பொதுத்துறை நிறுவனங்களும் அதன்சொத்துக்களும் வரன்முறையின்றி சூறையாடப்படுகின்றன. பணமயமாக்கல் திட்டத்தின் மூலம் சாலைகள், இரயில் நிலையங்கள், மைதானங்கள் என நாட்டின் உள் கட்டமைப்பு அனைத்தும் கார்ப்பரேட்டுகளுக்கு தாரைவார்க்கப்படுகின்றன.  பூமிக்கடியில் இருக்கும் இயற்கை வளங்களைச் சூறையாடவும், சூறையாடப்பட்ட பொருட்களைக் கொண்டு செல்ல ஆறுவழி, எட்டுவழிச்சாலை அமைக்கவும், விவசாயத்தை கார்ப்பரேட் மயமாக்கவும் விவசாயிகள் விவசாயத்திலிருந்தே விரட்டியடிக்கப்படுகின்றனர். இதுதான் வளர்ச்சி என்பதுடன், காட்டுவளம், தாதுவளம், நீர்வளம், கடல்வளம் ஆகிய அனைத்தும் கார்ப்பரேட்டுகளின் இலாபத்துக்காகவே என்று மாற்றப்பட்டுவிட்டது. இதற்காக சுற்றுச்சூழலும் அழிக்கப்படுகிறது.

நவீன வாழ்க்கைக்கு உயிர் மூச்சாக விளங்கும் கல்வியும் இதிலிருந்து தப்பவில்லை. காசு உள்ளவனுக்கே கல்வி என்ற நிலையைத் தாண்டி, பன்னாட்டு – கார்ப்பரேட் முதலாளிகளின் லாப நோக்கத்திற்கேற்ப கல்விக்கொள்கையை கொண்டு வருவது மட்டுமல்லாமல் நீட், க்யூட் நுழைவுத் தேர்வுகளை உருவாக்கி ஏழை, எளிய மாணவர்களின் கல்வி உரிமையைப் பறிக்கிறது பாசிச மோடி அரசு. இத்தனைத் தடைகளைத் தாண்டி படித்து முடிக்கும் கோடிக்கணக்கான இளைஞர்களை வேலையில்லா ரிசர்வ் பட்டாளமாக வீதியில் நிறுத்தியுள்ளது, படிப்புக்குப் பொருத்தமில்லாமல் ஸ்விக்கி, சொமோட்டோவில் சோத்து மூட்டை தூக்க வைத்துள்ளது கார்ப்பரேட் முதலாளித்துவம்.

 நாட்டின் பெரும்பான்மை மக்களுக்கு வேலையும் வாழ்வும் அளித்து வந்த சிறுதொழில்கள், சிறுவணிகம், நெசவு, மீன்பிடிப்பு என அனைத்தும் கார்ப்பரேட்டுகளால் சூறையாடப்பட்டு வருகிறது. சொந்த நாட்டு மக்களைவிட கார்ப்பரேட் கம்பெனிகளது இலாபவேட்டை தான் முக்கியம் என்கிறது பாசிச மோடி அரசு.

கார்ப்பரேட் சுரண்டலால் வாழ்வதாரங்கள் பறிக்கப்பட்ட நிலை ஒரு புறம், அரசின் வரி சுரண்டலும் விலைவாசி உயர்வும் மறுபுறம் என உழைக்கும் மக்களின் வாழ்வைப் படுகுழிக்குள் தள்ளியுள்ளது ஒன்றிய பா.ஜ.க அரசு.

கடந்த ஏழு ஆண்டுகளில் ஒன்றிய அரசு பெட்ரோல், டீசல் மீதான வரியாக மட்டும் ரூ.26 லட்சம் கோடி வசூல் செய்துள்ளது.

பெட்ரோல், டீசல், கேஸ் விலை மற்றும் சுங்கக் கட்டண உயர்வும், இதனால் ஏற்பட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வும் மக்களை மூச்சு முட்டச்செய்கிறது. கடந்த ஏழு ஆண்டுகளில் ஒன்றிய அரசு பெட்ரோல், டீசல் மீதான வரியாக மட்டும் ரூ.26 லட்சம் கோடி வசூல் செய்துள்ளது. மக்கள் மீது சுமையை ஏற்றும் மறைமுக வரியான GST வருவாய் அதிகரித்து சாதனை இலக்கை எட்டியதாக மார்தட்டிக் கொள்கிறது. அதே வேளையில், கார்ப்பரேட்டுகளுக்கு ரூ.10 லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்துள்ளது. மக்களின் வயிறு சுருங்கும் அதே காலத்தில் அதானியின் சொத்து மதிப்பு 1830 சதவீதம் அதிகரித்து உலகின் ஏழாவது பெரும்பணக்காரராக மின்னுகிறார். உழைத்து உழைத்து அரசுக்கும் கார்ப்பரேட்டுகளுக்கும் கொடுத்து விட்டு அன்றாட சோத்துக்கே கையேந்த வைத்த அம்பானி, அதானிகளின் வளர்ச்சி நமது பசியைப்போக்க உதவாது. இவர்களின் வளர்ச்சியை நாட்டின் முன்னேற்றம் என்று பெருமிதம் கொள்ளவும் முடியாது. நாட்டுக்காக ‘தியாகம்’ செய்யச்சொல்லி நம் மீது தொடுக்கப்படும் அடக்குமுறைகளை சகித்துக்கொள்ளவும் முடியாது.

அதானியின் வளர்ச்சி

கார்ப்பரேட் சுரண்டலும்  அரசின் அடக்கு முறைகளும் கோரத்தாண்டவமாடும் நிலையில் ஆர்.எஸ்.எஸ் – காவி கும்பல் உழைக்கும் மக்களை தேசபக்தி – மதவெறி போதையில் மூழ்கடித்து கலவரம் செய்கிறது. தொழிலாளர்கள் மற்றும் உழைக்கும் மக்களின் ஒற்றுமைக்கு வேட்டு வைக்கிறது. ஒரே தேசம், ஒரே மொழி, ஒரே தேர்தல் என மாநில உரிமைகளைப்பறிக்கிறது. சிறுபான்மை மக்களை ஒடுக்கி இந்துராஷ்டிரம் என்ற பார்ப்பனப்பேரரசை அமைக்கத் துடிக்கிறது.

கார்ப்பரேட் காட்டாட்சியும் அதைத் தாங்கி நிற்கும் பாசிச மோடி அரசும் நாட்டையும், வீட்டையும் நாசப்படுத்திக் கொண்டிருப்பதை எவ்வளவு காலம்தான் பொறுப்பது?முதலாளித்துவத்தின் மூலஸ்தானமான அமெரிக்காவிலேயே தேசங்கடந்த கார்ப்பரேட்டான அமேசானில் தொழிற்சங்கம் வைக்கும் உரிமையை போராடிப் பெற்றுள்ளனர் அமெரிக்க தொழிலாளர்கள்.சங்கம் சேரும் உரிமை மீட்கப்பட்டுள்ளதை தொழிலாளி வர்க்கம் வரித்துக்கொள்ள வேண்டும்.

அமேசானில் தொழிற்சங்கம் உதயம்

இலங்கையிலும், பெருவிலும், இன்னும் பல நாடுகளிலும் மறுகாலனியாக்கக் கொள்கையால் பாதிக்கப்பட்ட மக்கள் இலட்சக்கணக்கில் வீதிக்கு வந்து தங்கள் நாட்டு அரசுகளை மிரளச் செய்துள்ளனர்.

“கோத்தபயவே வெளியேறு” என்ற இலங்கையின் வீதியெங்கும் எழுப்பப்படும் முழக்கம் மறுகாலனியக்கத்தை அமுல்படுத்தும் அரசுகளை கலங்கச் செய்துள்ளது.பாசிச பாஜகவின் கார்ப்பரேட் காட்டாட்சியால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய மக்களும் வீதிக்கு வந்து “பாசிச மோடியே பதவி விலகு” என முழங்குவோம். கார்ப்பரேட்-காவி பாசிசத்தை வீழ்த்துவோம்! ஜனநாயக கூட்டரசை நிறுவுவோம்!

தோழமையுடன்,

மக்கள் கலை இலக்கியக் கழகம்,
விவசாயிகள் விடுதலை முன்னணி,
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி.
தமிழ்நாடு – புதுச்சேரி.

தமிழகத்தில் மதுரை, திருச்சி, கோவை, சென்னைமற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 5 மையங்களில் ஊர்வலம் ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளது.

விவசாயிகளே,தொழிலாளர்களே, மாணவர்களே, சிறு குறு தொழில் முனைபவர்களே,நாட்டுப்பற்றாளர்களே அனைவரும் அணிதிரண்டு வாருங்கள்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here